முகப்பு

3.2 பேசுதல் திறன்

பேசுதல் திறன்

பேசுதல் திறன், பேச்சுத் திறன் ஆகிய இரு சொல்லாட்சிகள் உள்ளன. பேசுதல் என்பது தகவல் பரிமாற்றச் செயலைக் குறிப்பதாகும். செய்திகளை வெளிப்படுத்தல் என்றளவிலேயே பேசுதல் நிறைவு பெறும். பேச்சுத்திறன் என்பது, பிறரை ஈர்க்குமாறு கருத்துகளை வெளிப்படுத்துதல்.

ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது பேசுதல் நிகழ்கிறது. மேடையில் பேச்சு நிகழ்கிறது. பேச்சுத் திறன் வளர, பேசுதல் திறன் அடிப்படையாகும். அவ்வடிப்படையிலிருந்து இலக்கியக் கூறுகளை இயற்சிப் பெறப்படுவதே பேச்சுத் திறன். தொடக்க நிலை மொழிக்கல்வியில் இன்றியமையாததாகக் கருதப்படுவது பேசுதல் திறனாகும்.

மொழி கற்பித்தலின் நோக்கம் அவரவர் தமிழ்மொழியை நன்றாகப் படிக்க, எழுதப் பயிற்சியளிப்பதே ஆகும். மாணவர்களைத் தெளிவாகவும் திருத்தமாகவும் தமிழ் மொழியில் பேசப் பழக்குவது ஆசிரியருடைய கடமையாகும். மொழி கற்றலில் அடிப்படைத் திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகியவற்றில் சிறந்து விளங்க வேண்டும். மொழி கற்பித்தலின் நோக்கம் மாணவர்களை நன்றாகப் பேச, நன்றாகப் படிக்க, நன்றாக எழுதப் பயிற்சியளிப்பதேயாகும். இவற்றுள் படிப்பின் முதல்நிலை பேச்சாகும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் தன்னை உணர்த்துவதும் பிறரை உணர்வதும் பேச்சின் அடிப்படையில்தான்; ஒருவரின் அறிவுக்கூர்மையை அவரின் பேச்சின் மூலம் மதிப்பிடமுடியும். மாணவர்களைத் தெளிவாகவும், திருத்தமாகவும் தமிழில் பேசப் பழக்குவது ஆசிரியருடைய கடமையாகும்.

பேசுதல் திறனின் முதன்மை நோக்கமே திருத்தமாகவும், அழுத்தமாகவும், தெளிவாகவும், அச்சம் கூச்சமின்றி அளந்தறிந்து பேசுதல் ஆகியவற்றைக் குறிப்பாதாகும்.

• திருத்தமாகப் பேசுதல்

கருத்துச்செறிவும், சொற்கோவையும் பொருத்தமான ஒலிப்பும் செம்மையாக இருப்பின் பேச்சில் திருத்தம் தாமாகவே ஏற்படும். வாய்மொழிப் பயிற்சியின் வாயிலாக மாணவர்கள் பிழையின்றிப் பேச இயலும். பிறர் தமது கருத்துகளை எளிதில் உணர்ந்து கொள்ளும் வகையில் தெளிவாகவும், இனிமையாகவும் பேசுவதே திருத்தமான பேச்சின் நோக்கமாகும்.

• அழுத்தமாகப் பேசுதல்

ஒலிக்கு அழுத்தம் கொடுக்காவிடில் பொருள் மாறுபடும். சொல்வதை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதினால் கேட்போருக்குச் சொல்லும் செய்தி எளிதில் விளங்கும்; சில சொற்களுக்கு மட்டும் அழுத்தம் கொடுத்துப் பிறருடைய கவனத்தை விரைவில் கவர முடியும்.

• தெளிவுடன் பேசுதல்

பேச்சில் தெளிவு இல்லையேல் கூறுவதொன்று கொள்வதொன்றாக இருக்கும். எளிய சொற்களில் கேட்போர் மனங்கொள்ளும் வகையில் ஏற்ற எடுத்துக்காட்டுகளுடன் இயல்பாய், இனிமையாய், விரைவின்றி, முன்னுக்குப் பின் முரணின்றி, விளக்கமாய், தெளிவாய்ப் பேசுதலே தெளிவான பேச்சாகும்.

• அச்சம் கூச்சமின்றிப் பேசுதல்

தெளிவாகப் பேசுதலுக்கு அச்சம், கூச்சம் இருக்கக் கூடாது. சிலர் ஆசிரியர்கள் முன் அல்லது புதிய மனிதர்களிடம் பேசும்போது அச்சப்படுவார்கள். அச்சம், கூச்சம் தவிர்த்தல் உச்சரிப்பை நன்கு திருத்தும். அதன் காரணமாய்ப் பேச்சும் தெளிவடையும். பேச்சுத்திறனை வளர்ப்பதன் நோக்கமே அச்சம் கூச்சமின்றிப் பேசுதலேயாகும்.

• அளந்தறிந்து பேசுதல்

பேச்சின் கருத்துகளைப் பிறர் உணர்ந்து கொள்ளக் கூடிய அளவிற்கு பொறுமையாக அளந்தறிந்து பேசவேண்டுவது இன்றியமையாததாகும். எங்குக் கருத்து சொல்லப் போகின்றோம் என்பதை அறிந்து, அங்குச் சொற்களால் அளந்து பேச வேண்டும்.

கேட்டலைப் போன்றே அடிப்படைத் திறன்களுள் ஒன்றாகக் கருதப்படுவது பேசுதல். இது வெளியிடுதிறனாகும். கீழ்வரும் பகுதிகள் அதன் சிறப்புத் தன்மைகளை விளக்குகின்றன.

• கேட்டல் வழியே பெறப்படுவது

மொழியின் அடிப்படைத் திறன்களை வளர்ப்பதற்குப் பல முறைகள் உள்ளன. ஆனால் பேசுதல் திறன் கேட்டல் வழியே மட்டுமே பெறப்படுவதாகும். கேட்டலும் பேசுதலும் ஒன்றுக்கொன்று துணை புரிபவனவாகும். இவ்விரண்டும் இணைந்த நிலை முன்னரே விளக்கப்பட்டது. கேட்டல் வாய்ப்புகலைப் பெருக்கப் பெருக்க பேசுதல் திறனும் வளர வாய்ப்புண்டு.

• பழகப் பழகப் பெருகும்

செந்தமிழும் நாப்பழக்கம் எனும் முதுமொழிக்கிணங்க. பேசுதல் திறன் எழுத்தறிவாலோ, படிப்பறிவாலோ பெறுவதன்று. பேசிப் பழகினாலன்றிப் பேசுதல் திறனைப் பெற இயலாது. ஒரு மொழியைப் பேசிக் கொண்டிருப்பவர் நீண்ட காலமாக அதைப் பேசாதிருப்பாராயின் அம் மொழியில் பெற்றிருந்த பேசுதல் திறனை இழப்பார். தாய்மொழிக்கும் இந்நிலை பொருந்தும்.

• ஒலிப்பு உறுப்புகள் சார்பு

பேசுதல் ஒலிப்பு உறுப்புகளைச் சார்ந்த செயலோடு இணைந்ததாகும். நா, பல், இதழ், அண்ணம் ஆகியன ஒலிப்பு உறுப்புகள். இவற்றின் இயக்கங்களை உயிரியல் பாங்கில் முறையாக இல்லாதிருப்பின் பேசுதல் திறன் பாதிப்புக்குள்ளாகும். இவற்றின் இயக்கங்கள் இயற்கையாக அமையுமாயினும் அவற்றை நெறிப்படுத்தப் பழகு செயல்கள் இன்றியமையாதன.

• நேருக்கு நேர் தகவல் பரிமாற்றம்

எழுத்து மொழியும் தகவல் பரிமாற்றத்திற்கு உரியதாயினும், நேருக்கு நேர் தகவல் பரிமாற்றம் பேசுதலால் நிகழ்கிறது, நேருக்கு நேர் தகவல் பரிமாற்றத்திற்குரிய பேசுதல் பிறவகைத் தகவல் பரிமாற்றத்தை விடச் செயல் விளைவு மிக்கது. ஒருவர் நேரில் தரும் தகவல்கள் எழுத்து வழி தரும் தகவல்களைவிடப் பாதிப்பை அதிகமாக்கும். பேசும்பேச்சு காற்றோடு சென்றாலும் உள்ளத்தை ஊடுருவவல்லதாகும்.

• சொற்களஞ்சியச் சார்பு

பேசுதலுக்கு மிகவும் இன்றியமையாதது சொற்களஞ்சிய அறிவு. தகவல்களை வெளிப்படுத்தச் சொற்கள் தேவை,

• உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகம்

எழுத்தின் வழி பெறப்படுகின்ற உணர்வினைவிடப் பேசுதல் வழி பெறப்படுகின்ற உணர்வின் அளவு மிகுதி, இலக்கியச் சுவையுணர் திறன் கொண்டவர்களே, எழுத்து வழி உணர்வைப் பெற முடியும். ஆனால் பேசுதல் திறன்மிக்க பேச்சில் வெளிப்படும் உணர்வுகளை கல்லாதாரும் உணர இயலும். குரல் ஏற்றத்தாழ்வு, அழுத்தம், நிறுத்தம் போன்ற மொழியியல் கூறுகள் பேசுதலிலும் பேச்சிலும் காணப்படும்.

• ஊக்கமூட்டும் வலிமை

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்; மதுரைக்கு வழி வாயிலே; வாளினை விட நா வலியது போன்ற முதுமொழிகள் பேச்சின் வலிமையினை வெளிப்படுத்துவனவாகும்.

அரசியல், வணிகம், நீதி போன்ற துறைகளில் பேச்சின் பங்களிப்பு அளப்பரியது. பேச்சு ஒருவரது நினைவினைத் தூண்டுவது போல, நினைவைப் போக்கவும் துணையாகும். நினைவு நீக்க மருத்துவம் (Hypnotheraphy), ஆற்றுப்படுத்தல் (Counselling), வழிகாட்டுகை (Guidance) போன்ற மனவியல் சார்ந்த துறைகளில் பேச்சுத்திறன் பெரிதும் பயன்படுவதாகும்.

• எழுத்து தேர்வால் அளக்க இயலாமை

கல்வியில் பல திறனை அளப்பதற்கு எழுது முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பேசுதல் திறனை அளப்பதற்குப் பேச்சுதான் ஊடகம். தேர்வுக்கு உட்படுவோரின் பேசுதலை உற்று நோக்கியே மதிப்பிட வேண்டும்.

குழந்தைகள் பேசுதலை மேற்கொள்ள உருவாக்கப்படும் சூழல்கள் அனைத்தும் பேசுதல் திறன் வளர்க்கும் செயல்பாடுகளாகும். படம் பார்த்துக் கதை சொல்லுதல், வகுப்புத் தரத்திற்கேற்ற தலைப்புகளில் கருத்தாடல், குழுவில் ஒவ்வொருவராகப் பேசுதல் போன்றன பேசுதல் திறன் வளர்க்கும் செயல்பாடுகளில் சிலவாகும். பேசுதல் சூழலை ஏற்படுத்தும்போது குழந்தைகள் தயக்கமில்லாமல் பேசவும், ஆர்வத்துடன் ஈடுபடவும், அனைவரும் பங்கேற்கவும் ஆசிரியரின் ஊக்குவிப்பு தேவை.

கேட்டலுக்கு வழங்கப்படும் செயல்பாடுகளில் ஒருபுறம் பேசுதல் நிகழ்கிறது. மறுபுறமே கேட்டல் நிகழ்கிறது. அந்நிகழ்ச்சிகளில் ஆசிரியரின் செயலளவு மிகுதியாகும். ஆனால் பேசுதலுக்காக வழங்கப்படும் செயல்பாடுகளில் குழந்தைகளின் (மாணவர்கள்) பங்கேற்பே மிகுதியாக அமைகிறது. ஆசிரியர் ஊக்குவிப்பவராகவும் நெறிப்படுத்துபவராகவும் இயங்குகிறார்.

• ஆசிரியர் வழிகாட்டல்

தொடக்க வகுப்புகளில் வழங்கப்படும் செயல்பாடுகளில் குழந்தைகள் மழலை ஒலிப்பைத் தவிர்ப்பதற்கு ஆசிரியரே பேசிக் காட்ட வேண்டும்.

மழலை ஒலிப்பு என்பதை எளிதாக வரையறுக்க இயலாது. சொற்களின் ஒலியை நீட்டியும், இலக்கணத் தொடர் அமைப்பினை மீறியும், தெளிவு குறைந்த ஒலிப்புடனும் பேசப்படுவதே மழலை எனக்கொள்ளலாம். தம் குழந்தையின் மழலையைக் கேட்கப் பெற்றோர்கள் விரும்புவர். எனினும் அம் மழலையினை ஐந்து அகவைக்கு மேற்பட்ட குழந்தை பேசுதலை விரும்பார். பேசுதலில் முதிர்ச்சியில்லையே என வருந்துவர். வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் குழந்தையின் பால் பற்றுக் கொண்டோர் குழந்தையைப் போன்றே பேசி மகிழ்வர். ஆகவே வீட்டுச் சூழலில் குழந்தைகள் மழலையாகப் பேசுதலைத் திருத்துவதற்கு வாய்ப்புகள் குறைவு. வகுப்பறையில் ஆசிரியர் தெளிவாகப் பேசுவதாலும் அவர்கள் மழலையாகப் பேசுதலைத் திருத்துவதாலும் குழந்தை தெளிவாகப் பேசும்.

• அச்சம் கூச்சம் ஆகியனவற்றை நீக்கல்

அச்சம், கூச்சம் ஆகியன உளவியல் சார்ந்த மனப்பாங்குகளாகும். இவற்றைப் போக்க ஒத்தநிலை அல்லது உள்ளப் பாங்குடைய குழந்தைகளைக் குழுவாக இணைத்துப் பேசுதல் செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். குழந்தைகள் தங்களுக்குப் பழக்கமானவரிடையேயும், நட்புக் கொண்டவர்களிடையேயும் அச்சம், கூச்சம், தயக்கமின்றிப் பேசுவர். படிப்படியாகப் பேசுகின்ற மன உறுதியை வளர்ப்பதற்குப் பாராட்டல், பொறுப்பு வழங்கல் போன்ற உத்திகளை ஆசிரியர் கையாள வேண்டும்.

தேவையான சொல்லறிவு இல்லாத போதும் பேசுதல் செயல்பாடுகளில் ஈடுபடக் குழந்தைகள் தயங்குவர். குழந்தைகளிடம் போதிய அளவு சொற்களஞ்சியப் பெருக்கம் ஏற்பட்டுள்ளதா என்று ஆசிரியர் உறுதி செய்வதோடு, குழந்தைகளின் சொற்களஞ்சிய வட்டத்திற்குள் அமையத்தக்க பேசுதல் செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும்.

• ஊக்குவிப்பு உத்தி

மாணவர்களைக் குழுச் செயலில் ஈடுபடுத்தும்போது ஆசிரியர் மேற்கொள்ளும் ஊக்குவிப்பு உத்திகள் பல.

  1. ஆர்வமூட்டல்
  2. எடுத்துக்கொடுத்தல்
  3. கனிவான பேச்சு
  4. நகைச்சுவைப் போக்கு
  5. நெறிப்படுத்து திறன்
  6. பரிவுணர்வு
  7. திருத்தமான பேச்சு
  8. பாட அறிவு
  9. பாராட்டல்

என்பன அவற்றுள் சிலவாகும்.

சொற்களஞ்சியத்தைப் பெருக்கும் வழிகளில் பல பேசுதல் திறனை வளர்க்கப் பயன்படுவனவாகும். அவையன்றி.

  1. படம் பார்த்து விளக்குதல்
  2. செயலெதிராகப் பேசுதல்
  3. தொடர் நிகழ்வாகப் பேசுதல்
  4. சொல் விளக்கப் புனைவு
  5. சூழ்நிலைப் பேச்சு
  6. பாத்திரப் புனைவு
  7. பட்டிமன்றம்

ஆகிய பழகு செயல்களும் பேசுதல் திறனை வளர்ப்பனவாகும். இவை வகுப்பிற்கேற்பத் தரப்படுத்தப்பட்டு வழங்கப்பட வேண்டும். நடைமுறையில் பாடத்திட்டத்தில், தொடக்க வகுப்புகளுக்கே பேசுதலுக்குரிய பழகு செயல்கள் வழங்க வழியுள்ளது. பேசுதல் திறனும் பேச்சுத் திறனும் எல்லா நிலையிலும் மொழிப்பாடத்தின் வழி வளர்க்கப்பட வேண்டிய திறனாகும்.

• படம் பார்த்து விளக்குதல்

தொடக்க வகுப்புகளில் நெடுங்காலமாக மேற்கொள்ளப்பெறும் பழகு செயல்களுள் ஒன்று படம்பார்த்து விளக்குதல் ஆகும். குழந்தைகளின் ஆர்வத்திற்கேற்ற படங்கள் காட்டப்படும். குழந்தைகள் அவற்றைப் பார்த்து, தங்கள் கற்பனைக்கு ஏற்ப, புனையுரையாகக் கதை கூறுவர். தொடக்க வகுப்புகளில் இச்செயல்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தும்போது அவர்களிடம் காணப்பெறும், தொடக்கநிலைக் குறைபாடுகளைக் களைய வேண்டும். (வெற்றொலி, பிறழ்ந்த ஒலிப்பு போன்றன).

இப்பகுழ செயல் பேசுதல் திறனை வளர்ப்பதற்காக மட்டுமன்றிக் குழந்தைகளின் கற்பனை ஆற்றலை வளர்க்கவும் பயன்படும். குழந்தைகளுக்குக் காட்டப்படும் படங்கள் அவர்களுடைய கற்பனை எல்லைக்கும், காட்சியறிவுக்கும், பொருளறிவுக்கும் உட்பட்டதாக அமைய வேண்டும்.

படம் பார்த்து விளக்கம் சொல்லும் பழகு செயல் தொடக்க வகுப்புகளுக்கு மட்டுமல்லாமல் நடுநிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படலாம். அவர்களுக்கு வழங்கப்படுவன அவர்களுடைய அறிவுத் தரத்திற்கு உட்பட்டதாக அமைதல் வேண்டும்.

• செயலெதிராகப் பேசுதல்

பேசுதல் திறனை வளர்க்க மேற்கொள்ளப்படும் பழகு செயல்களில் மேம்பட்ட நிலையினைக் கொண்டது செயலெதிராகப் பேசுதல் (4, 5 வகுப்புகள்).

செயலெதிராகப் பேசுதல் எனும் பழகு செயலில் இருவர் பேசவேண்டும். ஒருவர் பேசுவதற்கு மாற்றுரையாக இன்னொருவர் பேச வேண்டும்.

மாற்றுரை.

எதிர்மறைக் கூற்று

எதிர்ச்சொல் கூற்று

அந்தாதிக் கூற்று

வாக்கிய அளவு மாற்றம்

போன்றனவாக அமையலாம். மாற்றுரையைப் பாடப் பொருள் தேவைக் கேற்ப உருவாக்கலாம்.

(எ.கா) எதிர்மறைக் கூற்று:

ஒருவர் : நேற்று நான் பாடம் படித்தேன்
மற்றொருவர் : நேற்று நான் பாடம் படிக்கவில்லை
ஒருவர் : எனக்கு முறுக்குத் தின்ன விருப்பம்
மற்றொருவர் : எனக்கு முறுக்குத் தின்ன விருப்பம் இல்லை

எதிர்ச்சொல் கூற்று

ஒருவர் : நேற்று நான் பாடம் படித்தேன்
மற்றொருவர் : இன்று நான் பாடம் படிப்பேன்
ஒருவர் : எனக்கு முறுக்குத் தின்ன விருப்பம்
மற்றொருவர் : எனக்கு முறுக்கு தின்ன வெறுப்பு

அந்தாதிக் கூற்று

ஒருவர் : நீ எங்கே போகிறாய் ?
மற்றொருவர் : போகும்போது சொல்லுகிறேன் ?
ஒருவர் : சொல்லுவதை இப்போது சொல்
மற்றொருவர் : சொல்ல மாட்டேன்
ஒருவர் : மாட்டாயா ?
மற்றொருவர் : மாட்டேன்
ஒருவர் : ஏன் ?
மற்றொருவர் : ஏன் என்று கேட்காதே
ஒருவர் : கேட்டால் என்ன குறை ?
• வாக்கிய அளவு மாற்றம்

வாக்கிய அளவு மாற்றத்தில் ஒருவர் இரண்டு சொற்களில் ஒரு வாக்கியத்தைச் சொன்னால் எதிரிலிருப்பவர் மூன்று சொற்கள் கொண்ட வாக்கியத்தைச் சொல்ல வேண்டும். இச்செயலை மேலும் 4 சொற்கள் 5 சொற்கள் எனக் கூட்டிக் கொண்டே செல்லலாம்.

(எ.கா)

ஒருவர் : நான் மாணவன்
மற்றொருவர் : நான் நல்ல மாணவன்
ஒருவர் : நான் மிகச் சிறந்த மாணவன்
மற்றொருவர் : எனக்கு இந்த ஊர் முன்பே தெரியும்

இப் பழகு செயலை விளையாட்டாகவும் கொள்ளலாம். தேர்ந்தறி முறைகளில் ஒன்றாகவும் மேற்கொள்ளலாம்.

• தொடர் நிகழ்வாகப் பேசுதல்

இருவர் பங்கேற்கத் தக்கவாறு மேலே காட்டப்பெற்ற பழகு செயல்களைக் குழுவிற்கும் வடிவமைக்கலாம். வரிசை முறையில் ஒவ்வொருவராக வரையறுத்த முறைப்படி பேசுதல் வேண்டும். இப்பழகு செயலில் அந்தாதியாகப் பேசுதல் மிகவும் விறுவிறுப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.

• சொல் விளக்கப் புனைவு

ஒரு சொல் கூட்டப் படும்போது அதைப் பார்ப்பவர் தமக்குத் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் செயல், சொல் விளக்கப் புனைவு எனப்படும்.

(எ.கா) முடியாது

சொல் விளக்கப் புனைவு : எனக்கு இச்சொல் பிடிக்காது ;
எதையும் : முடியாது என்று எண்ணக் கூடாது ;
முயன்றால் முடியாததில்லை.

சொல் விளக்கப் புனைவில், சொற்பொருள், சொல் தொடர்பான விளக்கம் சொல்லுக்குரிய எதிர்ச்சொல், அடங்கு சொல், அடக்கு சொல் போன்றனவும் இடம்பெறலாம். இச்செயல்பாடு பேசுதல் திறனை வளர்ப்பதோடு சொற்களஞ்சியப் பெருக்கத்தை ஏற்படுத்திப் பேச்சுத்திறனுக்கும் அடிகோலும்.

• சூழ்நிலைப் புனைவுப் பேச்சு

சூழ்நிலைப் புனைவுப் பேச்சும், பேசுதல் திறனில் மேம்பட்ட நிலையாகும். ஒரு சூழலைச் செயற்கையாகக் கொண்டு பேசப்படும் பேச்சு, சூழ்நிலைப் பேச்சு ஆகும்.

கடைக்காரர் - பொருள் வாங்குபவர்
பேருந்து ஒட்டுநர் - நடத்துநர்
ஆசிரியர் - மாணவர்
நேர்காண்பவர் - நேர்காணி

போன்று. இருவர் எதிர்ப்படும் சூழலைச் செயற்கையாகக் கொண்டு அச் சூழலில் மாணவர்களைப் பேசச் செய்து பேசுதல் திறனை வளர்க்கலாம்.

• பாத்திரப் புனைவுப் பேச்சு

பாத்திரப் புனைவுப் பேச்சும் சூழ்நிலைப் புனைவுப் பேச்சினைப் போன்றதாகும். சூழ்நிலை புனைவுப் பேச்சில் நடைமுறை வாழ்க்கை நிகழ்ச்சிகள் கற்பனையாகக் கொள்ளப்படுகின்றன, பாத்திரப் புனைவு நாடகப் பாங்கினைப் போன்றது. பேச்சோடு மெய்ப்பாடும் இணைந்தவாறு செயல் நிகழ்கிறது. இச்செயல்பாட்டினைத் தனியாள் செயலுக்கும் குழுச் செயலுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கலாம். பேசுதல் சார்ந்த உளவியல் குறைபாடுகளை நீக்கவும் இச்செயல்பாடு பயனுடையதாகும்.

• பட்டி மன்றம் போன்றன

பள்ளிகளில் நடைபெறும் பட்டிமன்றம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்து பேச்சுத் திறனை வளர்க்கலாம். தொடக்க வகுப்புகளில், வகுப்பறை அளவில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி, குழந்தைகளைப் பங்கேற்கச் செய்யலாம்.

இலக்கிய மன்றம் போன்ற கலை நிகழ்ச்சிகளில் பேசும் குழந்தைகள் அல்லது மாணவர்கள் தொடக்க நிலையில் மனப்பாடம் செய்து பேசுகின்றனர். மனப்பாடத்தைவிடக் குறிப்புகளைக் கொண்டு பேசுதல் சிறப்பு. குறிப்புகளை விரித்துப் பேசும்போதுதான் பேசுதல் திறனும் பேச்சுத் திறனும் வளரும் வாய்ப்பு மிகுதி.

பேசுதல் நிறனை அளக்க வாய்மொழித் தேர்வே ஊடகமாக அமையும். எழுதுமுறை பயன்படாததால் நடைமுறையில் இத்திறன் தேர்வு செய்யப்படாமலுள்ளது. தேர்வில் இடம் பெறாததால் மொழிக் கற்பிப்பில் இத்திறன் தவிர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் பேசுதல் திறன் எழுதுதல் திறனினும் முதன்மை வாய்ந்ததாகும். எனவே பேசுதல் திறனை அளப்பதற்குரிய அளவைகள் வரையறுக்கப்பட வேண்டும். பேசுதல் திறனை வளர்ப்பதற்காக வழங்கப்படும் செயல்பாடுகளில் அந்த அளவீடுகளைப் பொருத்திப் பேசுதல் திறனை அளவிடலாம்.

கருத்தாடல், பட விளக்கம் கூறுதல், பாத்திரப் புனைவில் பேசுதல் போன்றன பேச்சுத் திறனை வளர்க்கும் செயல்பாடுகளாகும். பேச்சுச் சரளம் ஆகியன பேசுதல் திறனை அளக்கும் அளவீடுகளாகும். துல்லியம், சரளம் ஆகியனவற்றை அளவீடாகக் கொள்ளும் போது இவற்றின் உட் கூறுகளை வரையறுக்க வேண்டும்.

முறையான ஒலிப்பு

பொருத்தமான சொல்லாட்சி

இலக்கணமுடைமை

ஆகியன பேச்சுத் துல்லியத்தின் கூறுகள்

உரிய விரைவு (தயக்கமின்மை)

முன்பின் தொடர்பு

உடனுக்குடன் பதிலுரைத்தல்

ஆகியன சரளத்திற்குரிய கூறுகளாகும். பேசுதல் திறனை அளக்க மேற்காட்டப்பட்ட கூறுகளைக் கொள்வதுபோல,

மொழிநடை

மெய்ப்பாடு

கருத்து

ஆகியனவற்றைப் பேச்சுத் திறனை அளப்பதற்கான அளவுக் கூறுகளாகக்கொள்ளலாம். இவற்றைப் பற்றிய மிகை விளக்ங்களைச் சொற்பொழிவுக் கலை தொடர்பான நூல்களிலிருந்து அறியலாம்.

திருத்தமாகவும், தெளிவாகவும் பேசுதல் திறனைப் பெறுவதற்குக் கீழ்க்காணும் பயிற்சிகளை வழங்க வேண்டும்.

• ஆசிரியர் பேச்சு

ஆசிரியரின் பேச்சு திருத்தமாகவும், தெளிவாகவும் இருத்தல் வேண்டும். திருந்திய பேச்சின் நல்லியல்புகள் யாவும் ஆசிரியரின் பேச்சில் பொருந்தியிருப்பின் மாணவர்களும் அவற்றைப் பின்பற்றக் கூடும். எனவே ஆசிரியரின் பேச்சு முன் மாதிரியாக விளங்க வேண்டும்.

• நா பிறழ் பயிற்சிகள்

ஏறத்தாழ ஒத்த ஒலியுடைய சொற்கள் அடுத்தடுத்து வரும் சொற்கள் அமைந்த தொடர்களை விரைவாகவும் பிழையின்றியும் கூறுமாறு பயிற்சியளிப்பதுதான் நா பிறழ் பயிற்சியாகும். எடுத்துக்காட்டாகக் கீழ் உள்ள தொடர்களைக் கூறச் செய்யலாம்.

  1. அவனும் அவளும் அவலும் தெள்ளு மாவும் தின்றார்
  2. மேல் ஏழு ஓலை, கீழ் ஏழு ஓலை ஆகப் பதினான்கு ஓலை
  3. வில்லேருழவர் பகை கொளினும் கொள்ளற்க சொல்லேருழவர் பகை,
  4. பலாப்பழம் பழுத்துப் பள்ளத்தில் விழுந்தது.
  5. மனம் இசைந்த மணம்.
  6. பணம் பழம் பணம், பழம் பணம் பழம்.
  7. இயேசுவின் மலை மொழி இனிய மணிமொழி
  8. களையெடாதவன் விளைவெடான்,
  9. தொழிலாளி வாழ்வு உயரட்டும்

எழுத்துகளின் ஒலி வேறுபாட்டால் பொருள் வேறுபடும். அதனை மாணவர் நன்கு அறிந்து கொள்வதற்கு தவலை. தவளை எனச் சொற்களைக் கூறச்செய்வதுடன் அவற்றின் பொருள் உணரும் வண்ணம் தொடர்களின் அமைத்துக் கூறச் செய்தல் வேண்டும்.

தண்ணீர் எடுப்பது தவலை

தண்ணீரில் இருப்பது தவளை

வாளை என்பது மீனின் பெயர்

வாழை என்பது மரத்தின் பெயர்

இவை போன்று வலை. வளை. வலி/வளி/வழி, ஒலி/ஒளி/ஒழி. கூரை/கூறை, இரங்கு/இறங்கு முதலானவற்றை வாக்கியங்களில் அமைத்துக் கூறினால் ஒலிப்பு அறிவதுடன் பொருளும் அறிவர்.

• நா நெகிழ் பயிற்சிகள்

ஒரே வகையான சொற்கள் அல்லது ஒலிகளைப் பலமுறை கூறுமாறு செய்தல் நா நெகிழ் பயிற்சியாகும். இதனால், நாவின் நுனி மேலும் கீழுமாக அசைந்து அவ்வொலிக்குரிய இடத்தில் அமையும் பயிற்சி பெறும். ஒலியை எழுப்பும் முறை திருத்தமடையும்.

ர ர ர ர ர ர ரா

ல ல ல ல ல ல லா

ள ள ள ள ள ள ளா

என்று அகர ஒலியுடனும், பின்னர்

ரி ரி ரி ரி ரி ரி ரீ

ழி ழி ழி ழி ழி ரி ழீ

னி னி னி னி னி னி னீ

ணி ணி ணி ணி ணி ணி ணீ

என்று இகர ஒலியுடனும் இவ்வாறு வெவ்வேறு உயிரெழுத்துடன் சேர்த்துக் கூறச்செய்து பயிற்சியளிக்க வேண்டும்.

2. ஒரே ஒலி பலமுறை அமைந்த சொற்கள் கூறல்

  1. 'ல' ஒலி
  2. அவன் நல்லவன் அல்லன்

    சொல்லொன்று சொல்லேன்

    கல்லிலிருந்து எடுத்தான்

  3. 'ள' ஒலி
  4. தள்ளும் உள்ளம்

    தள்ளாடித் தள்ளாடிச் சென்றான்

    பள்ளத்தில் உள்ள முள்ளெடு

  5. 'ழ' ஒலி
  6. கீழே விழுந்து அழுதான்

    ஏழைக்கிழவன் வாழைப்பழம் வழுக்கி விழுந்தான்

    கொழு கொழுத்த வாழை

  7. 'ர' ஒலி
  8. கூரிய அரம்

    சீரிய உருவம்

    இரவு நேரம்

  9. 'ற' ஒலி
  10. காற்றில் கீற்று விழுந்தது.

    ஊற்று நீர் கொண்டு வா

    காற்று திசை மாறி மாறி வீசியது.

  11. 'ன' ஒலி
  12. மன்னன் என்னென்ன கேட்டான்?

    பொன்னார் மேனியனே

    இன்னொன்று கேட்டான்.

இம்முறைகளைப் பின்பற்றி மாணாக்கருக்கு வாய்மொழி பயிற்சியளித்து பேச்சில் வல்லவராக்குதல் வேண்டும்.

மனிதனின் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளையும் கருத்துகளையும் பிறர்க்குத் தெரிவிக்கவே மொழி தோற்றுவிக்கப்பட்டது. பேசப் பெறுகின்ற மொழி செம்மையாகவும் திருத்தமாகவும் இருந்தால்தான் கேட்பவரின் உள்ளத்தில் தெளிவாகப் பதியும்.

• ஒலிப்பு

செந்தமிழ் மொழியில் மயக்கந்தரும் ஒலியுடைய எழுத்துகள் (மயங்கொலி எழுத்துகள்) சில உள்ளன. ல, ள, ழ, ர, ற, ந, ன, ண போன்ற எழுத்துகள் இடம்பெறும் மயங்கொலிச் சொற்களை ஒலிக்கும்போது கவனத்துடன் ஒலிக்க வேண்டும். எனவே, பேசுகின்ற பொழுது திருத்தமான உச்சரிப்புடனும் தெளிவான ஒலிப்புடனும் பேசப் பழகுதல் சாலச் சிறந்தது.

• குரல்

குரலில் படுத்தல், எடுத்தல் முதலான ஏற்றத்தாழ்வுகளை உணர்ச்சி நிலைகளுக்கும், இடத்திற்கும் ஏற்றவாறு அமைத்துப் பேசுதல் வேண்டும். மேலும், கேட்போர் மனம்கொள்ளும் வகையில் குரல் இனிமை பெற்று இயல்பாய் அமைதல் வேண்டும்.

• வேகம்

பேசும்போது விரைவாகவும், மெதுவாகவும் இல்லாமல் நிதானத்தைப் பின்பற்றிப் பேசுதல் வேண்டும்.

• உணர்ச்சி

“உணர்ச்சியற்ற பேச்சு உப்பில்லா உணவிற்குச் சமம்”; சிறந்த பேச்சனாது உயிரும், உணர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும். பேசும் பொருளின் ஆழத்தையும், இன்றியமையாமையையும் மாணவர்கள் உணருமாறு கருத்திற்கேற்ற உணர்ச்சியுடன் பேசப் பழகுதல் வேண்டும்.

• அமைதி

அச்சமோ கூச்சமோ இன்றியும், படபடப்பு இல்லாமலும் அமைதியாகப் பேசுதல் வேண்டும். நல்ல பேச்சில் அமைதியுடன் கூடிய பேச்சின் பண்புகள் நிறைந்திருக்க வேண்டும்.

  • திருந்திய பேச்சு, திருந்திய படிப்பிற்கும் திருந்திய எழுத்திற்கும் வழி வகுக்கும்.
  • மொழியை உயிருள்ளதாக்கி மாணவர்களிடத்தே பற்றையும் பாசத்தையும் உண்டாக்கும்.
  • குறைந்த காலத்தில் நிறைந்த செய்திகளை அறிந்து கொள்ள உதவும்.
  • மொழியின் தனிச்சிறப்புகளை அறிந்து சுவைக்க உதவும்
  • அச்சமும், கூச்சமும் நீங்கி மாணவர்கள் தன்னம்பிக்கை பெறவும் உதவும்
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
  1. கேட்டல் திறக் கூறுகள் - குறிப்பு வரைக.
  2. வளர்ச்சியின் படிநிலைகளை எழுதுக.
  3. கேட்டல் திறனின் பயன்கள் யாவை?
  4. பேசுதல் திறனின் நோக்கம் யாது?
  5. மாணவர்களைக் குழுச்செயலில் ஈடுபடுத்தும்போது ஆசிரியர் மேற்கொள்ளும் ஊக்குவிப்பு ஊத்திகள் யாவை?
  6. பேசுதல் திறனில் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து எழுதுக.
  7. பேசுதல் திறனின் பயன்கள் யாவை?