3.3 படித்தல் திறன்
படித்தல் திறன்
தாய்மொழிப் பயிற்சியில் வாய்மொழிப் பயிற்சிக்கு அடுத்த முக்கியம் வாய்ந்தது படிப்பாகும். “ஓதுவதொழியேல்” என்ற ஔவை பாட்டின் வாக்கில் ஓதுவது என்பது படிப்பதைக் குறிக்கும். கையெழுத்தின் வளத்தைக் கண்ணால் பார்த்து, வாயால் உச்சரித்துப் பொருள் உணர்வதைப் படிப்பு என்கிறோம். படிக்கும் பழக்கத்தை முதல் வகுப்பிலிருந்தே தொடங்க வேண்டும்.
மாணவர்கள் வகுப்பில் திறமையாகப் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், தானாகப் படிக்கும் பழக்கத்தையும் உண்டாக்க வேண்டும். அதற்குக் கீழ்க்காணும் இயல்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
- சிறந்த ஒலிப்பு
- திருத்தம்
- ஒலியமைப்பு
- உணர்ச்சியுடன் படித்தல்
- நிறுத்தற் குறியீட்டு உணர்வு
முதலான செயல்பாடுகளில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும்.
படித்தல், திறன் பிற அடிப்படைத் திறன்களைப்போல, கற்றல் காலத்தில் எல்லா நிலைகளிலும் வளருவதாகும். கல்வியியல் அணுகு முறையில் இத் திறன் தளிர் நிலை, வளர் நிலை என இருவகைப்படுத்திக் காணப்படுகின்றன. சரளமாகப் படிக்கும் திறன் பெறும் வரையில் தளிர் நிலை, அத்திறன் பெற்ற பின்னர் வளர்நிலை, தொடக்கப் பள்ளி வகுப்புகளில் இவ்விரு நிலைகளும் கருதத் தக்கனவாகும்.
எழுத்துகளையும், சொற்களையும் இனங்காணுதல், வாக்கியங்களை படித்துப் பொருளுணர்தல், பொருள் சூழல் கொண்டும் இலக்கண அமைப்புச் சூழல் கொண்டும் பொருளறியாச் சொற்களுக்குப் பொருளுணர்தல் ஆகியன படித்தலின் தளிர் நிலையாகும். இந்நிலையில் தோற்றுவாயினைச் செம்மைப்படுத்தல் படித்தலுக்குரிய கண் காண் அளவை வளர்த்தல், பொருள் உணர்விரைவினை மேம்படுத்தல் ஆகியன இடம்பெறும்.
படித்தலுக்குத் தோற்றுவாய் எழுதிய பகுதியாகும். எழுதிய பகுதிகளின் அளவும் தெளிவும் படித்தலுக்கு ஊக்கமூட்டுவதாக அமைதல் வேண்டும், தொடக்க வகுப்புக் குழந்தைகளுக்குரிய எழுத்தளவு 14- புள்ளி, பதினான்கும் அதற்கு மேலுமுள்ள புள்ளியளவைக் கொண்ட எழுத்துகளே பாட நூல்களில் பெறுகின்றன.
கரும்பலகையில் எழுதும் போதும் மின் அட்டைகளைப் பயன்படுத்தும் போதும் 20 புள்ளிக்கும் குறையாத எழுத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும் எழுத்துத் தெளிவும் இன்றியமையாததாகும். குழந்தைகளுக்கு வழங்கப்படும் படிப்புப் பகுதிகளிலும் எழுத்தின் அளவும் தெளிவும் உரியவாறு அமைய வேண்டும்.
படித்தல் திறனின் உட்கூறுகளாகக் குறிக்கப் பெற்ற ஏனைய வளர்நிலைக்கு உரியனவாகும். வளர்நிலையில், குழந்தைகள் சரளமாகப் படிக்கும் ஆற்றலைப் பின் புலமாகக் கொண்டுள்ளனர். இந்நிலை படித்தல் திறனின் உட்திறனை வளர்ப்பதற்காக ஆர்வமூட்டும் பழகு செயல்களை வளர்க்க வேண்டும். படித்தல் பகுதிகளை மீண்டும் மீண்டும் படிக்கச் செய்வதால் படித்தல் திறன் வளராது. ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்வதால் சோர்வும், செயலில் பின்னடைவும் ஏற்படும். எனவே ஊக்குவிக்கத் தக்க செயல்களையும் இணைத்துப் படித்தல் திறன் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும்.
வாய்விட்டுப் படித்தல், மனத்திற்குள் படித்தல் எனப் படித்தல் திறன் இருவகைப்படும். இந்த இரண்டு நிலைகளிலும் படிக்கும் திறமையை வளர்த்தல் வேண்டும்.
நூலிலிருக்கும் எழுத்துகளைக் கண்ணால் பார்த்து வாயால் உச்சரித்துப் பொருள் உணர்தலையே வாய்விட்டுப் படித்தல் என்கிறோம்.
- பேசுவதற்கு இது துணை யுரியும்.
- பேசுவதற்குப் பல சொற்களை நூலிலிருந்து எடுத்துக் கொள்ளும்போது இயல்பாகப் பேசுவதற்குப் பயிற்சி ஏற்படுகிறது.
- ஒரு நாடகத்தைப் பார்த்து அதில் வரும் கதைமாந்தர்களைப் போல் நடித்துப் பேசும் போது வாய்மொழிப் பயிற்சி பயன்படுகிறது.
- ஓசை நயத்தையும் செய்யுள் இன்பத்தையும் நன்கு அறிய முடிகிறது.
- உணர்ச்சியை எழுப்புவதற்குப் படிப்பு துணை செய்கிறது.
- பெருங்கூட்டத்தில் கூச்சமின்றிப் பேசவும் பழகவும் படிக்கவும் வழிவகைச் செய்கிறது.
- முதல் இரண்டு வகுப்புக்கு மேல் இத்திறனை வளர்ப்பதில் முயற்சி எடுப்பதில்லை.
- முதல் இரண்டு வகுப்புக்கு மேல் இத்திறனை வளர்ப்பதில் முயற்சி எடுப்பதில்லை.
- சொற்களைத் தவறாக உச்சரித்தலும், தெளிவற்ற பேச்சும் குறைகளாகக் காணப்படுகின்றன.
ஓலைச்சுவடிகள், கைச்சுவடிகள், அச்சு நூல்கள் ஆகியவற்றை மனத்திற்கு உள்ளேயே வாய் திறக்காமல் உதடுகள், அசையால், தொண்டையின் அசைவு கூட இல்லாமல், ஒலிப்புச் சத்தமின்றிப் படித்தலைத்தான் மனத்திற்குள் படித்தல் என்கிறோம்.
- படிப்பின் நோக்கம் கருத்துணர்தலே ஆகும். இதற்குப் பெருந்துணை புரிவது வாய்க்குள் படித்தலாகும்.
- விரைவும், விரிவும் அமைந்த இவ்வகைப் படிப்பில்தான் கருத்துணர்தல் எளிதில் கைவரப் பெறுகின்றது.
- பேச்சுக்கருவிகளுக்கு வேலையின்மை. எனவே உடல் உறுப்புகள் சோர்வடைவதில்லை.
- படிக்கும் பொருளில் அதிக கவனம் செலுத்தலாம்.
- படிப்பு விரைந்து செல்வதுடன் கருத்துணரும் ஆற்றலும் வளரும்.
- அதிகப் பகுதிகளைப் படிக்கலாம்.
- குரல் பயிற்சிக்கும் உச்சரிப்பில் திருத்தம் பெறுவற்கும் வாய்ப்பு இல்லை.
- நடித்தல், உரையாடல், பேச்சு சொற்பொழிவுகள் முதலியவற்றிற்குத் துணை செய்யாது.
- செய்யுள், இலக்கிய நயங்களைப் படித்து இன்புற முடியாது.
சொல்முறையைக் கண்டறிந்தவர் “காமெனியஸ்” சொல்லின் பொருளை முதலில் கற்பிப்பதால் இது சொல்முறைப் படிப்பு என்று அழைக்கப்படுகிறது. சொற்களை முழுமையாகக் கற்ற பின்னர் அவற்றைக் குறிக்கும் எழுத்துகளைக் கற்கின்றனர்.
- சொற்கள் பொருள் உணர்ந்து படிப்பதால் படிப்பில் ஆர்வம் ஏற்படுகின்றன.
- தெரிந்ததைக் கொண்டு தெரியாததைக் கற்பித்தல் எனும் கொள்கையை ஏற்றுள்ளது.
சொற்றொடர் முறைப் படிப்பு என்பது கதைமுறை எனவும் அழைக்கப்படுகிறது. எளிய சொற்றொடர்கள் பலவற்றைக் கற்றபின், அச்சொற்றொடர்களால் அமைந்த சொற்களையும் கற்பதே சொற்றொடர் முறைப் படிப்பாகும். மொழியின் உறுப்பாகச் சொற்றொடர் காணப்படுகிறது. இது குழந்தைகளுக்கு ஏற்ற இயற்கை முறை ஆகும்.
- இயற்கையோடு இணங்கிய முறை
- சொற்றொடர்களைக் கற்பது மூலம் பொருளைத் தெளிவாக உணருகின்றனர்.
- படிப்பில் ஆர்வம் ஏற்படும்.
- தொகுதியினின்று பகுதிக்குச் செல்லல் எனும் உளவியல் முறைக்கு ஏற்ற முறையாகும்.
ஒரு மொழியின் அமைப்புகளை முழுமையாக நுணுக்கமாக ஆழ்ந்தும் ஊன்றியும் நன்கு தெளிவாகக் கற்பதே ஆழ்ந்த படிப்பாகும். நுனிப்புல் மேயும் பழக்கம் இம்முறையில் இல்லை. மொழியின் ஒலி அமைதி, சொல் மரபு, தொடர் மரபு, பக்தி மரபு, நடைமுறை இலக்கணம், சொற்களஞ்சியப் பெருக்கம், இலக்கண கூறுகளை உணர்தல், மொழி இயல்பை அறிதல் போன்றவற்றை ஆழ்ந்த படிப்பு நல்கும்.
- சொல்லகு, பொருளழகுகளை உணர்ந்து இன்புறுதல்.
- கருத்துகளின் இனிமையை அறிதல்.
- மக்களின் குணவியல்புகளை ஆராய்தல்.
- பாட அமைப்பின் ஒழுங்கையும் தன்மையையும் அறிதல்.
ஆழ்ந்து படிக்கின்ற பாட நூல்களுடன் விரைவாகவும் வாய்க்குள்ளும் படிக்க வேண்டிய கதைப்புத்தகங்கள், துணைப்பாட நூல்கள், நூலக நூல்கள் ஆகியனவற்றைப் படிக்கும் பிறிதொரு வகை படிப்பிற்கு அகன்ற படிப்பு என்று பெயர்.
- பிறர் துணையின்றி விரும்பியவாறு பல நூல்களைப் படித்தல்
- மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைதல்
- விரைவாகப் படிக்கும் திறன் வளர்த்தல்
- பொது அறிவும் உலக அறிவும் பெறுதல்
- கற்பனை ஆற்றலையும் படைப்பாற்றலையும் வளர்த்தல்.
- சொற்களஞ்சியப் பெருக்கம் உண்டாதல்.
நூலகம் = நூல் + அகம்; பல்வேறு வகையான நூல்களைத் தன்னகத்தே கொண்டுள்ள பகுதியை நூலகம் என்கிறோம். நூலகம் என்பது பல்வேறு தலைப்புகளில் அமைந்த நூல்களை ஓர் ஒழுங்கு முறைப்படி சேகரித்துப் பாதுகாத்து வைக்கும் இடமாகும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் வளர்ச்சியிலும் மாணவர்களின் அறிவு வளர்ச்சியிலும் நூலகங்களே இதயப்பகுதியாகவும் மூளையாகவும் இய‘ங்குகின்றன.
நூலகத்தில் படிப்பதற்கெனத் தனிப்பாட வேளைகளை ஒதுக்கிவைப்பது ஆசிரியர் கடமையாகும். வகுப்பு நூலகம் தனியாக இருக்க வேண்டும். நூலகப் பாடவேளையில் அந்நூலகப் புத்தகங்களை வகுப்பிற்கு எடுத்து வந்து அவற்றை மாணவர்கள் தம் அறிவு நிலைக்கேற்ப அவரவர் விரும்பும் துறை பற்றிய கதை நூல்களை அவர்களுக்கு வழங்கிப் படிக்கச் சொல்ல வேண்டும். கதை படித்து முடிந்த பின் அக்கதை பற்றிய சுருக்கத்தையோ கருத்துகளையோ அதன்வழிப் பெற்ற அறநெறிகளையோ முதலில் கூறுமாறும் பின்னர் எழுதுமாறும் பயிற்சி தரவேண்டும். இப்பயிற்சி பிற்காலத்தில் அச்சிறுவர்களின் வாழ்க்கையில் பெரும் பயனளிக்கும்.
தளர் நிலையில் காணப்படும் வாய்விட்டுப் படித்தல் முறையான ஒலிப்பை அறியப் பயன்படுவதாகும். எனினும் ஒலிப்பு முறை பேசுதல் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே ஒலிப்புத் திறனைத் தேர்ந்தறியப் படித்தலைத் தேர்ந்தறியும் முறைகள் தேவையில்லை.
படித்தலை ஊக்குவிப்பதற்கும், படித்தலைத் தேர்ந்தறிவதற்கும் கீழ்வரும் முறைகள் பயனுடையனவாகும். இவற்றில் பலவற்றைப் பழகு செயல்களாகவும் வழங்கலாம்.
எந்தப் பகுதியைப் படிக்க வேண்டுமோ அந்தப் பகுதிக்காள வினாக்கள் முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும். படித்த பின்னர் அவ்வினாக்களுக்கான விடைகளை எழுதச் செய்ய வேண்டும். முன்னரே வழங்கப்படும் வினாக்கள், அறிதல், புரிதல், பயன்படுத்துதல், பகுத்தல், தொகுத்தல், மதிப்பிடல் ஆகிய பல்வேறு திறக் கூறுகளையும் அளப்பதாக அமைதல் வேண்டும்.
ஒரு படித்தல் பகுதியை மாணவர்களுக்கு வழங்கி, அதிலிருந்து பல்வேறு வினாக்களை வடிவமைக்குமாறும் அவ்வினாக்களுக்கு விடையெழுதுமாறும் செய்யவேண்டும். வடிவமைக்கும் வினாக்களின் அளவிற்கேற்ப் மதிப்பெண்கள் வழங்கப்படலாம். இம்முறையினைக் கற்பிக்கும்போது பழகு செயல்களாவும் வழங்கலாம்.
ஒரு படிப்புப் பகுதி அளவு ஓர் எல்லைக்கு உட்பட்டது. ஆனவு அதிலிருந்து வடிவமைக்கக் கூடிய வினாக்களின் எண்ணிக்கை அளவில்லாததாகும். சிந்தனைத் திறத்திற்கேற்ப, படித்தலின் ஆழ்மை அமையும் எனும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இச்செயல் மேற்கொள்ளப்படுகிறது,
படித்தல் பகுதியை வழங்கி அதற்குப் பொருத்தமான தலைப்பினை எழுதச் சொல்லுதலே இச்செயல். ஒரு தலைப்பினையோ, பல தலைப்புகளையோ வழங்க செய்யலாம். கருத்துத் தொடர்ச்சி அறிந்து படித்தல் பகுதி, படிக்கப்படுவதை அத்தலைப்போடு துணைத் தலைப்புகளும் வழங்கச் செய்யலாம். இது போன்ற முறை கேட்டல் திறனை வளர்க்கப் பயன்படுத்தப்படுவதாகும். ஆனால் கேட்டலில் பின் படித்தல் நிகழ்கிறது. இங்குக் கற்பவரே படிக்கிறார்.
படித்தல் பகுதியில் அடங்கியுள்ள இன்றியமையாத கருத்துகள் படிக்கப்படுவதை அறிய அதன் பொழிப்பினை எழுதச் செய்து திறனை அளவிடலாம். படித்தலின் பல்வேறு திறக்கூறுகள் முன்னர்க் குறிக்கப்பட்டன. அவற்றுள் பொருத்தமான கருத்துகளைத் தேர்ந்தெடுத்தல், பொழிப்பிற்குரிய கருத்துகளைத் திரட்டுதல் ஆகியனவற்றை அளந்தறியப் பொழிப்பு எழுதுதல் முறை பயன்படுகிறது.
இம்முறையில், தொடர் நிகழ்ச்சிகள் அடங்கிய ஒரு பகுதியை வழங்கி, மாணவர்களைப் படிக்கச் செய்ய வேண்டும். அதன் தொடர்ச்சியாக நிகழத்தக்க பிற நிகழ்ச்சிகளை மாணவர்கள் பட்டியலிட வேண்டும்.
இம்முறையால், பொதுக்கருத்துகளைப் புரிதல், பொருள் தொடர்பினைக் காணுதல், பொருள் நுணுக்கம் காணுதல் போன்ற திறக் கூறுகள் அளக்கப்படுகின்றன, கேட்டல் திறனை வளர்க்கவும் இம் முறை பயன்படுத்தப் படுகிறது. ஆனால் குறுகிய வேறுபாடு உள்ளது. படித்தலில் மீண்டும் படிக்க வாய்ப்புண்டு. கேட்டலில் மீண்டும் கேட்பதற்கில்லை.
படித்தல் பகுதி ஒன்றை வழங்கி, அதற்குரிய முன்னுரையை எழுதச்செய்தல், முன்னுரை வழங்கல் எனப்படும். இம் முறை ஆழந்து படிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்துவதோடு, எழுது திறனையும் வலுப்படுத்துவதாகும்.
இம்முறை கேட்டல் திறனைப் பழகுவிக்கவும் அளக்கவும் பயன்படுத்தப்பட்டதாகும். கேட்டல் திறன் தொடர்பில் இம்முறையைப் பயன்படுத்தும் போது ஆசிரியர் உரைப் பகுதியைப் படிப்பார். ஆனால் இங்குப் படித்தல் பக்தி மாணவர்களிடமே வழங்கப்படுகிறது. கேட்டல் நிலையில் நடத்தப்படும் தேர்வுக்கு உட்படும் மாணவர்கள் கேட்டலின் அடிப்படையிலும், வழங்கப்பட்ட கேட்டல் பகுதியிலுள்ள பிற செய்திகள், இலக்கண அமைப்பு ஆகியனவற்றின் அடிப்படையிலும் அளவிடப்படுகின்றர். இம் முறை கேட்டல் திறனை மட்டும் அளவிடுவதாகக் கருத முடியாது. படித்தல் நிலையில் இத்தேர்வு படித்தலை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது.
தவறுகளைச் சுட்டல் முறையும் கேட்டல் திறன் தொடர்பில் கூறப்பட்டதாகும். கேட்டல் பகுதியின் இடத்தை இங்குப் படித்தல் பகுதி பெறுகிறது. படித்தல் நிலையில் வேறுபட்ட படித்தல் திறன் கூறுகளைப் பழகுவிப்பதற்கும் தேர்ந்தறிவதற்கும் இம்முறை பயன்படுகிறது.
ஒரே தலைப்பிலுள்ள வெவ்வேறு உரைப்பகுதிளை மாணவர்களுக்கு வழங்கி அவற்றில் வெளிப்படும் செய்தி, இலக்கண அமைப்பு போன்றவற்றின் ஒற்றுமை, வேற்றுமைக் கூறுகளை எழுதச் சொல்லுதல் ஒப்பிடு செயலாகம். இச் செயல் இடைநிலை, மேல் நிலை மாணவர்களுக்கு உரியதாகும். இம்முறையில் பழக்கம் ஏற்பட, தொடக்கத்தில் எதிர்பார்ப்பு வினாக்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
தற்போதைய நடைமுறையில், பொருளுணர் படித்தல் செயல் வழங்கப்படுகிறது. ஆனால் படித்தல் பகுதிக்கான வினாக்கள் பெரும்பாலும் அறிதல் திறன் சார்ந்ததாகவே காணப்படுகின்றன. உயர்நிலை வினாக்கள் வழங்கி பொருளுணர் படித்தலைக் கிளர் துலங்கல் வழி தேர்ந்தறியலாம்.
ஒரு படித்தல் பகுதியை மாணவர்களுக்கு வழங்கி அதன் முறைவைப்பை மாற்றியோ மாற்றாமலோ, வேறு உட்தலைப்புகளுக்குள் எழுதுதல் மாற்றி அமைத்தல் ஆகும். படித்தலில் மேம்பட்ட திறனைப் பழகுவிப்பதாகவும் அளப்பதாகவும் இம் முறை அமையும்.
- கற்றலில் ஆர்வத்தைப் பெருக்குதல்
- பொதுஅறிவை வளர்த்தல்
- கற்றலில் மகிழ்ச்சியையும் ஈடுபாட்டையும் உண்டாக்குதல்
- குறிப்பெடுக்கும் பழக்கம் உண்டாதல்
- பிற்கால வாழ்க்கைக்கு நூலகப் படிப்பு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
நூலகப் படிப்பில் நிறைகளும், குறைகளும் உண்டு.
கல்வியியல் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் போன்றன இடம் பெறுகின்றன. எனினும் கல்வி பெற்றவர்களைக் குறிக்க படித்தவர் எனும் சொல்லே பயன்படுத்தப்படுகிறது. கல்வியில் படித்தல் மேன்மையாகக் கருதப்படுவதை இப் பயன்பாடு உணர்த்துகிறது. ஒருவருக்குப் படித்தல் ஆர்வம் இருப்பின் அவர்,
- அறிவுத் தொகுதிகளைப் பெறுதல்
- ஓய்வு நேரங்களையும் பயனுறக் கழித்தல்
- பிறருக்கு வழிகாட்டல்
போன்ற செயல்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள இயலும். ஆகவே கல்வித் தொடக்க காலத்திலிருந்து எல்லா நிலைகளிலும் படித்தலில் மாணவர்களை ஊக்குவிக்கப்பட வேண்டும்.
தொடக்க நிலையில் வாய்விட்டுப் படிக்கப் பழக்கம் கொண்டிருக்கும் குழந்தையை வாய்க்குள் படிக்கப் பழக்குதல் வேன்டும். வாய்க்குள் படிக்கும் பழக்கம் ஏற்பட்ட பின்னர், படித்தலின் அளவு. விரைவு ஆகியனவற்றை பெருக்கும் வழிவகைகளைக் கானவேண்டும். பாட நூல்களை மட்டுமே படித்தல் பொருளாகக் கருதாமல் இதழ்கள், அறிக்கைகள், துணை நூல்கள் ஆகியனவற்றையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
- படித்த பகுதியிலுள்ள மொழிநடையைப் புரிதல்
- அதன் கண் வெளிப்படும் கருத்துகளை எழுதியவர் நிலையிலிருந்து புரிதல்,
- நிமிடத்திற்கு 200 முதல் 300 சொற்களைப் படித்தல்,
- படிக்கும் போக்கில் தேவையான இடங்களில் மேலோட்டப் படிப்பினையும் உள்ளோட்டப் படிப்பினையும் மேற்கொள்ளல்
- படிக்கும் போக்கில் எதிர்வரும் மொழியமைப்பினையும் செய்தித் தொடர்பினையும் ஏரண முறையில் ஊகித்தல்.
- அறிமுகமில்லாச் சொற்களுக்கும் பொருத்தமான பொருளை ஊகித்தல்.
- படித்தல் பகுதிக்குரிய பின்புலச் செய்திகளை அறிதல்.
- ஆர்வமுடனும் உட்பொருள் அறி முனைப்புடனும் படித்தல்
- மன நிறைவுடனும் எழுச்சியுடனும் படித்தல்
- படிப்புப் பகுதிக்கேற்ப படித்தல் முறைகளை மாற்றுதல்
ஆகியன சரளமாகப் படித்தலுக்குரிய பண்புகளாகும். இவற்றை மாணவர்களிடை வளர்ப்பதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் முதிர்ச்சிக் கேற்ற முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
- பேசுவதற்கு இது துணைபுரியும்.
- பேசுவதற்குப் பல சொற்களை நூல்களிலிருந்து எடுத்துக்கொள்ளும்போது இயல்பாகப் பேசுவதற்குப் பயிற்சி ஏற்படுகிறது.
- பொருள் உணர்ந்து சொற்களைப் படிப்பதால் படிப்பில் ஆர்வம் ஏற்படுகின்றது.
- தெரிந்ததைக் கொண்டு தெரியாததைக் கற்பித்தல் எனும் கொள்கையை ஏற்றுள்ளது.
- இயற்கையோடு இணங்கிய முறை
- சொற்றொடர்களைக் கற்பதன் மூலம் பொருளைத் தெளிவாக உணருகின்றனர்.
- படிப்பில் ஆர்வம் ஏற்படும்.
- தொகுதியினின்று பகுதிக்குச் செல்லல் எனும் உளவியல் முறைக்கு ஏற்ற முறையாகும்.