முகப்பு

4.1 கற்பித்தல் முறைகள்

கற்பித்தல் முறைகள்

தமிழ் மொழியைக் கற்பிக்க பல்வேறு முறைகள் உள்ளன. அவற்றுள் விளையாட்டு முறை, நடிப்பு முறை, வினாவிடை முறை, மாண்டிசோரி முறை, விரிவுரை முறை போன்றன குறிப்பிடத்தக்கவை.

விளையாட்டு வாயிலாகக் கற்பிப்பது விளையாட்டு முறை ஆகும். இது தொடக்கநிலை வகுப்புகளுக்கு மிகவும் ஏற்புடையது. இதன்வழி எல்லாப் பாடங்களையும் எளிதில் கற்கமுடியும். விளையாட்டு வழியில், கற்பித்தலை வடிவமைத்துத் தருவது ஆசிரியரின் தலையாயக் கடமையாகும். விளையாட்டுகளின் வழியேதான் குழந்தையின் இயல்புகள் தெளிவாக வெளிப்படுகின்றன. வெளித்தூண்டல்களோ, பிறரது கட்டாயமோ இன்றித் தாமாகவே சில மகிழ்ச்சியூட்டும் செயல்களில் ஈடுபடுவதே விளையாட்டு முறையைக் குறிக்கும். இதற்கான எடுத்துக்காட்டுகள் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளன.

படங்களுக்கான பெயர்களில் விடுபட்டிருக்கும் எழுத்துகளை நிரப்பச் செய்தல்

- வல் என இருக்கும் 'சே' என்னும் எழுத்தை இட்டு நிரப்பிச் 'சேவல்' என்னும் பெயரை வருவித்தல்;
படங்களையும் பெயர்களையும் பொருத்துதல்

ஒரு வரிசைக் குழந்தைகளிடம் படங்களையும், மற்றொரு வரிசைக் குழந்தைகளிடம் பெயர்களையும் கொடுத்துப் படத்தையும் சொல்லையும் இணைக்கச் செய்தல். எடுத்துக்காட்டாக, ‘அணில்’ என்றதும் அணில் படமுள்ள குழந்தையும் ‘அணில் சொல்’ உள்ள குழந்தையும் ஒன்றாக வந்து நிற்றல்.

பொது எழுத்தோடு சேர்த்து வாசித்தல்
கா
பா
வா
ய்
ஓர் எழுத்து சேர்த்துச் சொல்லாக்குதல்
ப - ம் = படம் பழம் பயம்
- ரம் = ஈரம், வீரம், மரம், காரம், தூரம், ஆரம் ….

கற்பிக்கின்ற பொருளை நடிப்பின் வாயிலாக எடுத்துக் காட்டுவதாகும். கற்றல் பகுதிகளை நடித்தலுக்குரிய பொருளாக்கிக் குழந்தைகளை நடிக்கச் செய்து அவர்களுடைய நடிப்புவழிக் கற்றலை நிகழ்த்துவது இம்முறையின் அடிப்படைக் கோட்பாடாகும். மொழிப் பாடங்களில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சித் துணுக்குகள், கதைப் பகுதிகள் போன்றவற்றை நாடகமாக்கி அதில் மாணவர்களைக் கதை மாந்தர்களாக மாறி நடிக்கச் செய்வதாகும். எடுத்துகாட்டு : சிலப்பதிகாரத்தில் மன்னனிடம் கண்ணகி ஆவேசமாகப் பேசுவதாகிய கற்றல் பகுதியை நாடக வடிவமாக்கி, நடிப்புத் திறன்கொண்ட குழந்தைகளை ஈடுபடுத்தி நடிக்கச் செய்தல் வேண்டும்.

வினாவிடை முறையில், கற்றல் பகுதியில் உள்ள இயன்மைகள், பொருண்மைகள், கருதுமைகள், பொதுமைகள் ஆகியன வினாக்கள்வழி மாணவரிடமிருந்து வரவழைக்கப்படுகின்றன. மாணவர்களிடம் வினா விடுத்தல், வினாவிற்கு மாணவர்களிடமிருந்து பெற்ற விடைகளைச் செம்மையாக்க மேலும் வினாக்களைத் தொடுத்தல் ஆகியன இம்முறையில் ஆசிரியரின் கற்பிப்புச் செயல்களாகும்.

எந்த மாணவரும் எந்த நிலையிலும் ஒன்றுமறியா வெற்று நிலையில் இருப்பதில்லை. அவர் முன் அறிவுக்கும் சிந்தனைத் திறத்திற்கும் ஏற்ப வினாக்களைக் கேட்டுக் கற்பிக்க இயலும்.

எடுத்துக்காட்டு :

“வாழை மிகவும் பயனுள்ளது. அதற்கு கிளைகள் இல்லை” எனும் பகுதியைக் குழந்தையிடம் எம்முறையிலாவது (கரும்பலகை, தனித்தாள் போன்றன) வெளிப்படுத்தி, வினாத்தொகுத்து விடையைப் பெறுதல்.

கோடிட்ட இடத்தைத் தகுந்த சொல்லால் நிரப்புக.

வினா 1 : வாழைக்கு ----------- இல்லை
வினா 2 : கோடிட்ட இடத்தில் அமைய வேண்டிய சொல் எது ?
வினா 3 : கிளைகள் எந்த மரத்திற்கு இல்லை ?

மாண்டிசோரி கல்வி முறை என்பது கற்றல் நெகிழ்ச்சியை உடையது. கற்போரின் கற்றல் உரிமையினை வரையறைக்குள் கொண்டுவந்து, இயல்பான உளவியல், உடல், சமூக வளர்ச்சி ஆகியனவற்றைக் கருதுவதாக அமைகிறது. அவற்றைக் கீழ்வரும் கொள்கைகள் உணர்த்துகின்றன.

  • குழந்தைகள் உரிமையுடன் தாமே செயலாற்றும் சூழ்நிலையை அமைத்துக் கொள்வர்.
  • ஆசிரியர் குறுக்கீடு அதிகமின்றிக் குழந்தைகள் தாமே செயற்படுகின்றனர்.
  • புலன்களுக்குத் தாமே பயிற்சி பெறுதல்
• மாண்டிசோரியில் பின்பற்ற வேண்டியவை
  • புலப்பயிற்சியின் மூலம் அறிவு வளர்ச்சி ஏற்படச் செய்தல்.
  • பரிசு வழங்குதலோ, தண்டனையளித்தலோ இல்லை.
  • குழந்தைகளுக்குத் தகுந்த சூழ்நிலையமைத்துத் தருதல்.
  • கற்பிக்கும் கருவிகள் மூலமாகக் குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி தருதல்.

மிகத் தொன்மைக் காலத்திலிருந்தே சொற்பொழிவு முறை கல்வியில் பயன்பட்டு வருகிறது. கற்பிக்கப் புகும் பாடப்பொருள் மாணவர் கொள்திறனுக்கும் உளநிலைக்கும் ஏற்ப விளக்கி உரைத்தல் விரிவுரை முறையாகும். 1. கற்பனவற்றை வகைதொகை செய்கிறார். 2. வாய்மொழியாகப் பாடப்பொருளை வெளிப்படுத்துகிறார். 3. மாணவர்களின் முன்னறிவு, ஆர்வநிலை, புரிதிறன் போன்றவற்றிற்கு உகந்தவாறு பாடப்பொருளை வெளிப்படுத்த எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். இம்முறையில் கற்பித்தலின் அழகுகளாக நன்னூலார் குறிப்பிடும் பத்தும் விரிவுரை முறைக்குரிய இலக்கணமாகத் திகழ்கிறது . 1. சுருங்கச் சொல்லல், 2. விளங்க வைத்தல், 3. நவின்றோர்க்கு இனிமை, 4. நன்மொழி புணர்த்தல், 5. ஓசையுடைமை, 6. ஆழமுடைத்தாதல், 7. முறையின் வைப்பு, 8. உலகம் மலையாமை, 9. விழுமியது பயத்தல், 10. விளங்கு உதாரணத்தாதல் ஆகிய பத்தும் நன்னூலார் குறிப்பிடும் அழகுகள் ஆகும். இவை விரிவுரை முறைக்குப் பொருந்தி வருவனவாகும்.