4.3 தமிழ் மொழி வடிவங்கள் (செய்யுள், உரைநடை, இலக்கணம், பிற)
தமிழ் மொழி வடிவங்கள் (செய்யுள், உரைநடை, இலக்கணம், பிற)
தமிழ்மொழிப்பாடத்தில் பாடம் கற்பிக்கின்ற பாடப்பொருளாகச் செய்யுள், உரைநடை, கட்டுரை, இலக்கணம் முதலியவை திகழ்கின்றன.
தமிழ் மொழிப்பாடத்தில் செய்யுள் பகுதி சிறப்பிடம் பெறுகிறது. ஏனெனில், தமிழ்மொழிக் கல்வியில் செய்யுள் இலக்கியம் உயிர்நிலையான பகுதியாகும். செய்யுளிலுள்ள பனுவல்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை செய்யுள், கவிதை, அருட்பாடல் என்பனவாம்
பாடப்பகுதியாய் அமைந்த செய்யுளைக் கற்பிப்பதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிய பின்னர், அறிமுகப்படுத்தும்போது அதனை இசையுடன் பாடுதல் சிறந்தது. சீர்பிரித்துச் சந்த அமைப்போடு குரல் ஏற்றத்தாழ்வுடன் படித்துக்காட்ட வேண்டும். செய்யுட் கருத்தை, பாடலின் உணர்ச்சியை, மாணவர்கள் அறியச்செய்வதுடன், அதன் நயத்தினையும் உணரத் தூண்டுதல் வேண்டும். இதுவே செய்யுள் கற்பித்தலின் மிகச்சிறந்த, சுவை மிகுந்த பகுதியாகும்.
பண்டைக் காலத்தில் எச்செய்யுளைக் கற்பிப்பதாயினும் அதனைப் படைத்த ஆசிரியர் வரலாற்றைக் கூறியே கற்பிக்கத் தொடங்குவர். 'இவ்வளவு சுவைமிகுந்த பாடலைப் பாடியவர் யார் தெரியுமா?' என்ற வினாவை எழுப்பி ஆர்வமூட்டி, அவர் வரலாற்றைக் கூறலாம். தொடக்கநிலை வகுப்புகளில் ஆசிரியர், அவர் காலத்துப் பிற புலவர்கள், நூல் இயற்றிய வரலாறு போன்ற குறிப்புகளை விரிவாகக் கூறுதல் நன்று.
செய்யுளைக் கற்பித்துக்கொண்டு செல்கின்ற நிலையில், பாடலின் கருத்தை உணர்ந்து போற்றுவதற்கேற்ற வகையில், அதில் கையாளப்பட்டுள்ள அருஞ்சொற்களின் பொருளை உணர்த்துதலே நன்று.
செய்யுளைப் படித்துப் பதவுரை, பொழிப்புரை, கருத்துரை, இலக்கணக்குறிப்பு, தொடை நயம், அணி நயம் எனப் பிரித்துச் செய்யுளைக் கற்பிக்கும் முறையைப் பிரித்துக்கூறும் முறையென்பர்.
செய்யுளை மனப்பாடம் செய்தலின் இன்றியமையாமை குறித்துப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. கருத்துணர்ந்து மனப்பாடம் செய்யும் பகுதிகளிலுள்ள அழகும், அவற்றைத் துய்ப்பதால் வளரும் நுண்ணறிவும் உள்ளத்தில் என்றும் நிலைத்த இடம் பெறும்.
செய்யுளைக் கற்பித்து முடித்த பின்னர், சில வினாக்களை மாணவர்களிடம் எழுப்புவதன் மூலம், பாடலின் கருத்து, உவமையைப் பொருளோடு பொருத்துதல், அருஞ்சொற்களுக்கான பொருள் போன்றவற்றை அவர்களிடமிருந்து பெறமுடியும்.
செய்யுள் பகுதியைக் கற்பிப்பதற்குத் தயாரித்த துணைக்கருவிகளை உரிய இடத்தில் பயன்படுத்திப் பாடத்தைக் கற்பித்தல் வேண்டும்.
படைப்பவரின் எண்ணங்களையும் கருத்துகளையும் அவர்களுக்கே உரிய நடையில் கோவையாகவும் கட்டுக்கோப்பாகவும் எடுத்துரைப்பதே உரைநடையாகும். அனைவராலும் எளிதில் பொருள் கொள்ளக்கூடியதாகவும், அன்றாடம் பேசிப் பயில்வதாகவும் அமையும் நடையே 'உரைநடை' ஆகும்.
உரைநடைப்பாடம் கற்பித்தலில் மொழித்திறன் வளர்ச்சி, பொதுஅறிவு, தேசிய விழுமம், வாழ்வியல் திறன்கள், பிற விழுமம் ஆகியன கருதத்தக்கனவாகும். உரைநடைப்பாடங்கள், மொழித்திறனைக் கற்பிப்பதற்கு உகந்த வளமூலமாகும்.
வகுப்பறையில் உரைநடைப்பாடத்தைக் கற்பிக்கத் தொடங்கும்முன், மாணவர்களுடன் இயல்பான சூழ்நிலையில் உரையாடத் தொடங்கிப் பாடத்திற்கேற்ற கருத்துகளை நினைவூட்டலாம். பாடக்கருத்துகளை விரும்பி ஏற்றுக் கொள்வதற்கேற்ற செய்திகளைக் கூறி ஆர்வமூட்டலாம். எடுத்துக்காட்டாக, ‘மாமல்லபுரம்’ என ஒரு பாடம் இருப்பதாகக் கொள்ளலாம். பல அழகான சிற்பங்களின் படங்களைக் காட்டிச் சிற்பக்கலைச் சிறப்பு பற்றி மாணவர்களிடம் உரையாடுதல் மாணவர்களுக்கு ஆர்வமூட்டுவதாக அமையும்.
ஒருவர் செய்திகளையும் கருத்துகளையும் அறிந்துகொள்வதற்கு உதவும் சொல்தொகுதியை, ‘அறிந்த சொற்களஞ்சியம்’ என்பர். கருத்துகளையும், உணர்ச்சியையும் வெளியிடவும், செய்திகளைக் கூறவும், எழுதவும் ஒருவர் பயன்படுத்தும் சொல்தொகுதியைப் ‘பயன்படுத்தும் சொற்களஞ்சியம்’ என்பர்.
ஆர்வமூட்டி, முன்னுரையை முடித்த பின்னர், ஆசிரியர் இருமுறை படித்துக்காட்டுதல் நன்று. பின்னர், பத்தி பத்தியாகப் படித்துக் கற்பிக்கத் தொடங்க வேண்டும். இவ்வாறு ஒருபத்தியைப் படிக்கத் தொடங்குமுன், மாணவர்களிடம் “நான் முதற்பத்தியைப் படித்ததும், அதன் மையக்கருத்து யாது என உங்களைக் கேட்பேன். பகுதியை நன்கு கவனிக்க” என்று கூறிப் படித்தல் நன்று.
பாடப்பகுதியின் கருத்து, செய்யுட்பகுதியில் இருப்பின் அத்துடன் இணைத்தும், இலக்கணவிதிகளைக் கற்பிப்பதற்கு ஏற்றதாக இருப்பின், இலக்கணப்பாடத்துடன் இணைத்தும் கற்பித்தல் வேண்டும்.
ஒரு பாடவேளையில் கற்பிக்க வேண்டிய பகுதியைக் கற்பிக்கும்பொழுதே, அரிய சொற்களை வாக்கியங்களில் அமைக்கச் செய்தல், தொடர்களை வாக்கியங்களில் அமைக்கச் செய்தல், மரபுத்தொடர்கள், பழமொழிகள், உவமைகள் இருப்பின் அவற்றைக் கொண்டு வாக்கியங்கள் எழுதச்செய்தல் முதலிய மொழிப்பயிற்சிகளை அளித்தல் வேண்டும்.
உரைநடைப்பாடம் கற்பிக்கும்பொழுது ஆசிரியர் இயன்ற அளவுக்குத் துணைக்கருவிகளையும் பயன்படுத்துதல் வேண்டும்.
உரைநடைப்பாடத்தை முழுமையாகக் கற்பித்து முடித்த பின்னர், கற்பித்த பகுதியை மாணவர்கள் அறிந்தும் புரிந்தும் கொண்டனரா எனத் தேர்ந்தறிய வினாக்களைக் கேட்டல் வேண்டும். இதனையே பாடத்தைத் திருப்புதல் என்பர்.
கற்பிக்க வேண்டிய பாடத்திற்குரிய ஆர்வமூட்டலை நிகழ்த்திய பின்னர் பாடத் தலைப்பினைக் கரும்பலகையில் எழுதுதல் வேண்டும். பத்தியின் மையக்கருத்தை எழுதுதல், அருஞ்சொற்களும் பொருளும் எழுதுதல், சொற்களைப் பிரித்துக் காட்டுதல், ல, ள, ழ, ஒலிவேற்றுமையால் பொருள் வேறுபடும் சொற்களை எழுதிக்காட்டுதல் போன்றவற்றை செய்தல் வேண்டும்.
பாட இறுதியில், திருப்புதல் வினாக்களாகக் கேட்டவற்றிற்கு, மாணவர்கள் வாய்மொழியாக விடைகூறுவர். அவ்வினாக்களுக்கு வீட்டில் விடை எழுதிவருவதை வீட்டு வேலையாகக் கொடுக்கலாம்.
ஒருவரின் கருத்தினை, அவர் கருதியவாறே அறிந்து கொள்ளுதற்பொருட்டு, எழுதும்பொழுது பிழையின்றித் தெளிவாக எழுதுதல் வேண்டும். அங்ஙனம் எழுதுவதற்கு வேண்டிய விதிகளைக் கூறுவதே ‘இலக்கணம்’ ஆகும்.
“எள்ளினின்றும் எண்ணெய் எடுப்பதுபோன்று இலக்கியத்தினின்றும் எடுக்கப்படுவது இலக்கணம்” என்று ‘பேரகத்தியம்’ என்னும் நூல் கூறுகின்றது. நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவரும் “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்” என்று கூறியுள்ளார்.
மொழிமரபை மாறாமல் பாதுகாத்தலுக்கும், மொழியில் பெருத்த மாறுதல்கள் ஏற்பட்டுப் பிந்திய மரபினருக்கு விளங்காதநிலை ஏற்பட்டுவிடாதபடி தடுத்தலுக்கும் இலக்கணம் இன்றியமையாததாகிறது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணிகளும் அவற்றோடு தொடர்புடைய ஏனையவையும் இலக்கணப் பகுதிகளாக அமைகின்றன.
இலக்கணம் கற்பிக்கும்பொழுது விதிவருமுறை, விதிவிளக்குமுறை ஆகிய இரு முறைகளைப் பின்பற்றுகின்றோம். அவ்விரு முறைகளையும் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
மாணவர்களுக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுகளைக் கொண்டு அவற்றிடையேயுள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்ந்து, ஒரு பொதுவிதியினை வருவித்துக் கற்பித்தல் ‘விதிவரு முறை’யாகும். விதியினை முதலில் கூறாமல் ஆசிரியர் ஒரு நிகழ்ச்சியைக் கூறித் தொடங்கலாம்.
“வரும் வழியில் ஒரு சிறுவன் மாமரத்தின்மீது கல்லெறிந்தான்; தோட்டக்காரன் வருவது கண்டு ஓடினான்; கீழே விழுந்தான். அவன் காலொடிந்தது...”
இவ்வாறு, நிகழ்வு ஒன்றைச் சொல்லி நிறுத்தி, சிறுவன் என்ன செய்தான்? அவனுக்கு என்ன நேர்ந்தது? என்னும் வினாக்களை எழுப்பி, அவ்வினாக்களுக்கு முறையே ‘கல்லெறிந்தான்’, ‘காலொடிந்தது’ என்பனவற்றை விடையாகப் பெறவேண்டும். இவ்விடைகளைத் தனித்தனியே கரும்பலகையில் எழுதிப் பின்னர்ப் பிரித்து எழுதச்செய்யலாம். கல் + ல் + எறிந்தான். கால் + ஒடிந்தது எனவும் எழுதுவார். நிலைமொழியில் தனிக்குறிலின்பின் வரும் ஒற்று (மெய்), வருமொழிமுதலில் உயிர்வந்தால் இரட்டிக்கும் தன்மையை அவர்களையே கூறச்செய்தல் வேண்டும். இறுதியில் “தனிக் குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்னும் விதியினைக் கூறச்செய்யலாம்.
மாணவர்கள் எளிதில் கண்டுணர முடியாத சில விதிகளை, ஆசிரியர் ‘விதிவிளக்கு முறை’யில் கற்பிக்கலாம். இலக்கண விதியொன்றைக் கூறி, அதனைப் பல எடுத்துக்காட்டுகள்மூலம் விளக்குதல் ‘விதிவிளக்கு முறை’யாகும்.
மெய்யீற்றுப் புணர்ச்சியில் ணகர, னகர ஈற்றுப் புணர்ச்சியைக் கூறும் நன்னூல் விதி,
“ணன வல்லினம் வரட்டறவும், பிறரிவன்
இயல்புமாகும் வேற்றுமைக்கு; அல்வழிக்கு
அனைத்து மெய்வரினும் இயல்பாகும்மே”
என்று கூறி, அதன்பின்னர் ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டு கொடுத்தல் வேண்டும்.
வேற்றுமைப் புணர்ச்சியில், வருமொழிமுதலில் வல்லினம் வந்தால், நிலைமொழிஈற்று ணகரமெய், டகர மெய்யாகவும் னகரமெய், றகரமெய்யாகவும் மாறும்.
மண் + குடம் = மட்குடம்
பொன் + குடம் = பொற்குடம்
வேற்றுமைப் புணர்ச்சியில், வருமொழிமுதலில் மெல்லினமும் இடையினமும் வந்தால், ணகரமும் னகரமும் இயல்பாகவே இருக்கும்.
மண் + மலை = மண்மலை
பொன் + வன்மை = பொன்வன்மை
அல்வழிப் புணர்ச்சியில், வருமொழிமுதலில் மூவினமும் வர ணகரமும், னகரமும் இயல்பாகவே இருக்கும்.
பொன் + சிறந்தது = பொன் சிறந்தது
விண் + நிறைந்தது = விண் நிறைந்தது.
இவ்வாறு விதியைக்கூறி எடுத்துக்காட்டின்மூலம் விளக்கிச் செல்லுவதே விதி விளக்கு முறையாகும்.
- வாழ்க்கையோடு இணைந்த எடுத்துக்காட்டுகள் கூறுதல்.
- உரைநடை, செய்யுள் பாடங்களோடு இணைத்துக் கற்பித்தல்.
- சுழலட்டைகள், விளக்க அட்டைகள் பயன்படுத்துதல்.
- இலக்கண விதிகளை விரும்பும் மெல்லிசை மெட்டுகளில் அமைத்துக் கூறுதல்.
- இலக்கணம் கற்பிக்க விளையாட்டுமுறைகளைப் பயன்படுத்துதல்.
“உள்ளத்தில் தோன்றுவதைக் கட்டுரைப்பது கட்டுரை”. அழகு நிரம்பிய தன்மையைக் கட்டழகு என்று சொல்வது போன்று அமைப்பழகு நிரம்பிய உரையைக் கட்டுரை என்கிறோம். சுருக்கமாகக் கூறினால், குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி ஒரு கட்டுக்கோப்புடன் யாவரையும் கவரும் முறையில் அமைக்கப்படுவதைக் கட்டுரை எனலாம்.
மாணாக்கரைக் கட்டுரை எழுதச் செய்தலுக்கு ஆசிரியர் சில வழிமுறைகளைக் கையாளுதல் வேண்டும். முதலில் வகுப்பு நிலைக்கேற்ற கட்டுரைத் தலைப்புக்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அத்தலைப்புப் பற்றி மாணவருடன் உரையாடி வாய் மொழிக் கட்டுரையாக அமைத்தல் வேண்டும்.
ஓர் இடத்தில் பயிற்சி எண்ணும், நாளும் குறிப்பிட்ட பின்னர், கட்டுரைத் தலைப்பைப் பக்கத்தின் நடுப்பகுதியில் சற்றுப் பெரிய எழுத்துகளில் எழுதச் செய்தல் வேண்டும். அடிக்கோடிட்டும் காட்டலாம்.
கட்டுரை பாடவேளை இருபாடவேளைகளாக அமையலாம். முதல் பாடவேளையில் தலைப்புப் பற்றிக் குழந்தைகளிடம் உரையாடிக் கட்டுரைப்பொருளைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அனைவரும் அறியச்செய்தல் வேண்டும்.
கட்டுரையில் இடம்பெற வேண்டிய செய்திகளைப் பற்றி உரையாடும்பொழுது மேலும் தேவையான செய்திகளை எந்தெந்த நூல்களைப் பார்த்துத் திரட்டிக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுதல் நன்று. எடுத்துக்காட்டாக, 'செய்தித் தாள்கள்' பற்றிக் கட்டுரை எழுதுவதாயின், முதன் முதல் செய்தித்தாள் எப்பொழுது வெளியிடப் பெற்றது, வெளியிட்டவர் யார் எனக் கலைக் களஞ்சியம் பார்த்துச் செய்தி திரட்டச் செய்தல் வேண்டும்.
செய்தியைத் திரட்டிய பிறகு கட்டுரையைப் பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுதல் வேண்டும். முன்னுரை, பொருள், முடிவுரை என மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
மேற்கூறியவாறு பத்தியமைக்கும் பொழுது மிகமிக முக்கியமான இடங்களில் எவ்வகையான சொற்றொடர் அமைக்க வேண்டும் எனக் குறித்துக் கொள்ளுதல் நன்று. வியப்பு வாக்கியம், வினா வாக்கியம், உடன்பாடு - எதிர்மறை வாக்கியங்கள், உவமைகள், பழமொழிகள் போன்றவற்றைக் குறித்துக் கொள்ளலாம்.
கட்டுரையின் மொழிநடை நன்கமைய வேண்டும். கட்டுரைப்பொருளை நன்குணர்ந்து உரையாடும் பொழுது (வாய்மொழிப் பயிற்சியின்போது) பயன்படுத்திய சொற்களையும், தொடர்களையும் பயன்படுத்துதல் வேண்டும். அவ்வாறு எழுத முற்படின் தம் உணர்ச்சிக்கும் சொல் வளத்துக்கும் ஏற்பத் தனிநடை அமையும்.
கட்டுரையில் தாம் எழுதும் கருத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆங்காங்கே தக்க மேற்கோள்களைப் பயன்படுத்துதல் வேண்டும். மேற்கோளை எழுதிய பிறகு அடைப்புக்குறியில் நூல் அல்லது ஆசிரியர் பெயரைக் குறிப்பிடலாம்.
எப்பொருளைப் பற்றிக் கட்டுரை எழுதினாலும், எழுதி முடித்தபின் அதனைப் படித்துப் பார்க்க வேண்டும். மரபுப் பிழை, இலக்கணப் பிழை, எழுத்துப் பிழை, சந்திப் பிழை ஆகியவை இருப்பின் அவற்றை நீக்குவதற்கு மீள்பார்வை பயன்படும். ஆதலின் மீள்பார்வையிடுதலை ஓர் இன்றியமையாப் பணியாகக் கொள்ள வேண்டும்.
கட்டுரையில் சொல்லப்படும் கருத்து எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும், எழுதுவோரின் கையெழுத்து நன்றாக அமையவில்லையாயின் அது பயனற்றதாகி விடும். கருத்தோடு கையெழுத்தும் சிறப்பாக இருப்பின் 'பொன்மலர் நாற்றம் பெற்றது' போல் கட்டுரை மேலும் சிறப்புடையதாகும்.