அ | : | நாகரிகத்துக்கும் பண்பாட்டுக்கும் உள்ள வேறுபாடு யாது? |
மா | : | நாகரிகம் என்பது புற ஒழுக்கம். பண்பாடு என்பது எல்லோருக்கும் பொதுவான அக ஒழுக்கம். |
ஆ | : | நாகரிகம் என்பது புற ஒழுக்கம் ; பண்பாடு என்பது அக ஒழுக்கம். புறஒழுக்கம் நாட்டுக்கு நாடு வேறுபடும். அக ஒழுக்கம் மனித இனத்துக்கே பொதுவானது. |
4.2 கற்பித்தலுக்கான பழகு செயல்கள்
கற்பித்தலுக்கான பழகு செயல்கள்
நுண்ணிலைக் கற்பித்தல் பயிற்சி, உற்று நோக்கல் பயிற்சி, பாடம் கற்பிப்புத் திட்டம் எழுதுதல் ஆகியவற்றில் பயிற்சி பெறுதலே கற்பித்தலுக்கான பழகு செயல்களாகும். அவற்றை விரிவாகக் காண்போம்.
மாணவருக்கு அறிவைப் புகட்டும் நோக்கில், ஆசிரியர் மாணவருக்கிடையே நிகழும் ஊடாட்டமே "கற்பித்தல்” என வரையறுக்கப்படுகிறது. கருத்துகள் மாணவன் மனத்தில் நிலைபெறச் செய்யவேண்டுமாயின், ஐம்புலன்களும் உணருமாறு கற்பித்தல் வேண்டும்.
“கற்பித்தல் நடத்தையினை ஒருமுகப்படுத்தும்போக்கில், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், பழக்கப்படும் செயல்முறை நுண்ணிலைக் கற்பித்தல் பயிற்சி ஆகும்” என ஆலன் என்ற கல்வியாளர் நுண்ணிலையை வரையறுக்கிறார்.
செயற்கைச் சூழலில் ஒரு சிறு குழுவை ஏற்படுத்தி, உடன்பயிலும் மாணவர்களுக்கு இடையே கற்பித்தலுக்கான ஒரு நுட்பத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் திறனை பழகுதலே நுண்ணிலைக் கற்பித்தல் பயிற்சி எனப்படும். இப்பயிற்சியில் ஒரேஒரு திறன் அல்லது நுட்பத்தைக் கொண்டு சிறிய காலளவில், சிறு குழுவில் ஏதேனும் ஒரு பாடப்பொருளைக் கொண்டு திறன்களுக்குரிய கூறுகளுக்கு ஏற்ப பாட நிகழ்வைத் தயாரித்துப் பயிற்சிப் பெறுதல் இதன் பாற்படும்.
நுண்ணிலைக் கற்பித்தலில் வகைப்படுத்தப்பட்ட திறன்கள் ஆய்வாளர்கள் கருத்திற்கேற்ப மாறுபட்ட எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கில் உள்ளன. ஆனால் நாம் இன்றியமையாத ஆறு திறன்களை மட்டும் நம் பயிற்சிக்காக எடுத்துக்கொள்கிறோம்.
- தொடங்குதல் திறன்
- விளக்குதல் திறன்
- வினாக் கேட்டல் திறன்
- பல்வகைத் தூண்டல் திறன்
- வலுவூட்டல் திறன்
- முடிக்கும் திறன்
கற்பித்தல் செயல்முறையில் பாடத்தைத் தொடங்கும் முறை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. பாட அறிமுகம் செய்யும் தன்மையால் சில ஆசிரியர், மாணவர்களின் மனத்தை அப்பாடம் முழுவதும் ஈர்த்து விடுகின்றனர். "நல்ல தொடக்கம் பாதிப் பணியை முடிப்பதற்கு ஒப்பாகும்" என்பது கற்பித்தலிலும் பொருத்தமாக அமைகிறது.
புதிய அறிவுப்பகுதியைக் கற்பிக்கத் தொடங்கும் பொழுது மாணவர்களது முந்தைய அறிவையும் தகுந்த முறையில் இணைத்துத் தருதல் வேண்டும்.
முன்பு பெற்ற அறிவை நினைவூட்டுதலுக்காக வினாக்கள் கேட்கப்படும்பொழுது, ஏற்ற விடையைத் தரவேண்டும். ஏற்ற விடை தருதல் மிகுதியாயிருப்பின் பாடம் நன்கு தொடங்கப்படுவதாகப் பொருள்.
ஆசிரியர் கூறும் தொடர்கள்மூலம் மாணவர்கள் பெறும் புதிய அறிவு, அவர்கள் ஏற்கெனவே பெற்ற அறிவின் தொடர்ச்சி போன்றவை அமைதல் வேண்டும்.
பொருத்தமான தொடர்கள் மிகுதியாக வரும்படியும், பாட நோக்கத்திற்குப் பொருத்தமில்லாத தொடர்கள் வராதபடியும் திட்டமிட்டுக் கொள்ளுதல் வேண்டும்.
- புதிய பாடத்துடன் ஒப்புமையுடைய கருத்துகளைக் கூறித் தொடங்குதல்
- வினாக்கள் கேட்டல், விளக்குதல், வருணித்தல், சொற்பொழிவுகள் மூலம் தொடங்குதல்.
- துணைக்கருவி, செய்துகாட்டல், கதை, நடித்தல் முறை மூலம் தொடங்குதல்
ஆசிரியர் பாடம் கற்பித்தலில், விளக்குதல் திறன் சிறப்பிடம் பெறுகிறது. வகுப்பறையில் விளக்குதலுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ‘எவ்வாறு, எப்போது, யார், எவை, ஏன், எப்படி, எது' என்னும் வினாக்களை எழுப்பி விளக்குவதால், அவற்றிற்குரிய விடையைச் சொல்லுவதால் மாணவர்கள் விளக்கம் பெறுகின்றனர்.
பாடப்பகுதி எவையாயினும் சரி, விளக்கும்போது தொடங்குதொடர் மையக்கருத்தை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். எதனைப்பற்றி விளக்க இருக்கிறோம் என்பதனைத் தொடங்கும்பொழுதே அறிதல் வேண்டும்.
ஒன்றை விளக்கும்போது, ஒரு கருத்தோடு மற்றொரு கருத்தை இணைக்க இயைபுபடுத்திக் கூறுவதற்கு கீழ்க்கண்ட சொற்களைப் பயன்படுத்தவேண்டும். அவை : ஆனால், ஆகவே, அவ்வாறு, இவ்வாறு, அதோடு, ஆகையால், எனவே, பின்னர், ஏனெனில், எப்படியெனில், எவ்வாறெனில், இதன் காரணமாக, இதிலிருந்து, அத்தகைய, இதனால், இப்படியிருப்பின், இல்லாதிருந்தால், இருந்திருந்தால், அதோடுகூட.
கற்பித்தல் பகுதியில் எப்படி நல்ல தொடக்கம் அமைகிறதோ, அதேபோன்று தெளிவான முடிவும் அமைதல் வேண்டும். முடிவுபெறுதல் திறம்பட அமைந்தால் தான் மாணவர்கள் கற்றவற்றைத் தொகுத்துக்கொள்ள முடியும்.
விளக்குதலில் அமைந்த வினாக்கள் அனைத்தும் ஏற்ற விடைகள் பெறுமாயின், விளக்குதல் திறம்பட நடைபெற்றது எனக் குறிப்பிடப்படுகிறது.
ஆசிரியர் கற்பித்தலுக்கு உறுதுணையாக அமைவது வினாக் கேட்டல் திறன் ஆகும். பாடப்பொருளைக் கற்பிப்பதற்கு அவர் வினாக்கள் கேட்கின்றார். அவற்றைக் கற்பித்தல் வினாக்கள் என்பர். எதிர்பார்க்கும் விடைகளைப் பொறுத்து வினாக்களைப் பின்வருமாறு அமையும். அவை;
எளிய நிலை வினாக்கள் நினைவாற்றலை மையமாகக் கொண்டு விடை பெறுவன. ஏற்கெனவே இருக்கும் அறிவு நிலையைச் சோதிப்பன.
இவை கருத்துணர்தல் நிலையில் விடைகளைப் பெறுவன. ஒரு தொடரின் பொருளை விளக்குதல், தொடரின் பொருள் உணர்ந்து ஒப்பிடல் போன்றவை இவ் வகையைச் சாரும்.
உயர்நிலை வினாக்கள் மாணவர் அறிந்ததிலிருந்து அதற்கு அப்பாற்பட்ட அறிவுப் பகுதிகளை அடையத் தூண்டுவனவாகும். தாங்கள் பெற்ற அறிவினின்று மேலும் சென்று பகுத்தல், தொகுத்தல், மதிப்பிடுதல் போன்றவற்றைச் செய்து விடை தரும்படியாக இவை அமையும்.
கவனத்தை ஈர்ப்பதற்காக ஆசிரியர் செயல்பாட்டில் ஈடுபட வைத்து கற்பிப்பதே பல்வகைத் தூண்டல் எனப்படும். இதை கீழ்க்கண்ட திறக்கூறுகள் வழி கையாள முடியும்.
ஆசிரியர் ஒரே இடத்தில் நிலையாக நின்று கற்பிக்காமல் நகருதல் வேண்டும். கரும்பலகையில் எழுதுதல், மாணவர்கள் அருகே சென்று பாராட்டல், ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் செல்லுதல் போன்ற செயல்களைச் செய்வது ஆசிரியர் இட மாற்றம் ஆகும்.
பாடப்பொருளின் தன்மைக்கேற்ப உணர்வுகளை ஆசிரியர் வெளிப்படுத்துவதும், சைகைகளைப் பயன்படுத்துவதும் மெய்ப்பாடு என்பர். 'குறுகலானது, அகன்றது, உருண்டையானது, நீளமானது' என்னும் தொடர்களைக் கூறும்போது, ஆசிரியர் சைகைகளைக் காட்டுவதும், உணர்வுகளைக் குறிப்பிடும் பொழுது முகம் சுளித்தல், முகமலர்ச்சி ஆகியவற்றை முகக்குறிகளால் காட்டுவதும் மெய்ப்பாடுகளையே சாரும்.
கற்பித்தலின்போது குரலில் ஏற்றத்தாழ்வுகள், மாறுதல்கள் வேண்டும். வீர உரையைப் படிக்கும்பொழுதும் இரக்க உணர்ச்சிபற்றிக் கூறும் பொழுதும் குரலில் ஏற்றத்தாழ்வு வேண்டும்.
ஆசிரியர் பாடம் கற்பிக்கும்போது கரும்பலகையில் எழுதி அடிக்கோடிடுதல், அழுத்தம் கொடுத்து சொற்களை உச்சரித்தல், இப்பொழுது சொல்வது மிக முக்கியம் கவனியுங்கள் போன்ற செயல்களின் மூலம் கவனத்தை ஈர்க்கலாம்.
மாணவர்களிடம் வினாக்கள் கேட்டு, அவர்களைப் பதில் கூறச்செய்தல், மாணவர்களைக் கரும்பலகையில் எழுதச் செய்தல், ஒருவரை வினா கேட்கச்செய்தல் போன்றவற்றின் மூலம் மாணவர்கள் செயல்பட வாய்ப்பளிக்கலாம்.
ஆசிரியர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் சற்றுப் பேச்சை நிறுத்தினால்..... மாணவர்கள் அனைவரும் கவனிக்கத் தொடங்குவர். விளக்கம் தரும்போதோ, நிகழ்ச்சியைக் குறிப்பிடும்போதோ, வினாக்கள் கேட்கும்போதோ, தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதோ, திட்டமிட்டு வேண்டுமென்றே பேச்சு நிறுத்தம் செய்வது கவனத்தை ஒருமுகப்படுத்துவதோடு சிந்தனையையும் தூண்டும்.
கரும்பலகையில் எழுதும்பொழுதும், படங்களைக் காட்டும்பொழுதும், பொருள்களைக் காட்டும்பொழுதும் அவற்றைப் பார்க்கின்றனர். கீழ் வகுப்புகளில் முகர்தல் புலனையும், தொடுதல் புலனையும் கையாளும் வாய்ப்பு ஏற்படின், ஆசிரியர் அவற்றையும் நன்முறையில் பயன்படுத்த வேண்டும்.
மாணவன் சரியான விடையையும் பாடப்பொருள் தொடர்புடைய விடையையும் அளிக்கும்போது ஆசிரியர் பாராட்டவேண்டும். அதனால் மாணவன் மகிழ்ச்சி அடைவான். மாணவனை மேலும் ஊக்கப்படுத்துவதற்கு வலுவூட்டல் இன்றியமையாததாகும்.
மாணவர் சரியான விடையளிக்கும் போது, சரி, நன்று, மிக நன்று, அருமை, ஆகா, மிக அருமை, சிறப்பானது, அழகு, ஆம் மேலும் தொடர்க, மேலும் சொல்லுக... முதலிய தொடர்கள் மொழிச் சார்புடைய வலுவூட்டிகளாம். இவற்றை ஆசிரியர் நன்கு பயன்படுத்துதல் வேண்டும்.
மாணவர் கூறும் சரியான விடையை ஆசிரியர் கேட்டு அதனை வகுப்பு முழுமைக்கும் திரும்பக் கூறுகிறார். அப்படிக் கூறும்பொழுது மாணவன்,"தன் விடையை, மாணவர்கள் அனைவரும் அறிய ஆசிரியர் கூறினார்” என்று மகிழ்கிறான். இவ்வாறும் பாராட்டலாம்.
மாணவன் ஓரளவு சரியான விடை கூறினால், ஆசிரியர் அதைத் திருத்திச் செம்மையாக்கிக் கூறலாம். தன்னுடைய விடையிலுள்ள சொற்களையே பயன்படுத்தி ஆசிரியர் விளக்கினார் என்று அறிந்து மாணவன் மகிழ்வான்.
மாணவன் விடை கூறும் போது ஆசிரியர் 'ம்','ம்'எனக் கூறி மாணவனை மேலும் விடையைக் கூறும்படி செய்தலே மொழிச் சார்புடைய ஒலியாகும்.
மாணவன் சரியான விடை கூறும்போது ஆசிரியர் தம் தலையசைப்பால் ஏற்றல், சிறிது புன்முறுவல் செய்து மேலே சொல்லும்படி கையால் காட்டுதல், அருகே சென்று தட்டிக் கொடுத்தல் போன்றன மாணவனைப் பாராட்டும் சைகைக் குறிகளாம்.
கற்பிக்கும் ஒரு பாடத்தின் பாடப்பகுதியின் சிறப்பான கருத்துகள், கொள்கைகள் கற்பிக்கப்பட்டுவிட்டன என்னும் நிலை தோன்றும்போது அவற்றை முடித்துக் காட்டுவது கற்றலுக்குப் பெருந்துணைப் புரியும்.
பாடம் கற்பிக்கப்படும்பொழுது ஆசிரியரும், மாணவரும் பல கருத்துகளைக் கூறியிருக்கலாம். பாட இறுதியில் அவற்றைத் தொகுத்துக் கூறுதல் வேண்டும்.
புதிய செய்தி, கருத்து, விதிகள் கற்பிக்கப்பட்டிருக்குமாயின் அவற்றைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகளைக் குறிப்பிடல் வேண்டும்.
பாட வேளையில் கற்ற புதிய அறிவை மாணவரிடையே முன்னர் அது தொடர்பாக ஏற்கெனவே உள்ள அறிவுடன் இணைத்தல் வேண்டும்.
மாணவர் பெற்ற புதிய அறிவை, அடுத்துப் பெறப் போகும் அறிவோடு தொடர்புபடுத்துதல் வேண்டும்.
நுண்நிலைக் கற்பித்தல் திறன்கள் மேற்கூறப்பட்டவாறு பல திறன்களைக் கொண்டு காணப்படுகின்றன. அவற்றுள் மாதிரி நிகழ்வு பாடம் தயாரிக்க பல்வகைத் தூண்டல் திறனுக்குரிய மாதிரி கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் போன்று பிற திறன்களுக்கும் அதன் உட்கூறுகளை வைத்து பயிற்சி பெறுக.
பயிற்சியாளர் பெயர் | : தமிழரசி மாணவர் 5 பேர் |
பாடப் பகுதி | : காக்கையும் நரியும் |
ஆசிரியர் | : குழந்தைகளே ! நான் இன்று உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். |
‘காக்கையும் நரியும்’ (கரும்பலகையில் எழுதுகிறார்). (அ) | |
ஓர் ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்று வந்தாள். அவள் மிகவும் வயதான பாட்டி. (கு) | |
வடை சுட்டுச் சுட்டு, தட்டு நிறைய வைத்தாள். (மெ) |
ஆசிரியர் | : பாட்டி என்ன சுட்டு விற்றாள் ? |
மாணவர் | : பாட்டி வடை சுட்டு விற்றாள். (வி.மா.) |
ஆசிரியர் | : கரும்பலகையில் விடை எழுதுதல். (பு.மா.) |
மாணவன் சென்று எழுதுதல். (வி.மா.) | |
ஆசிரியர் | : அப்போ அங்கே ஒரு காக்கை வந்தது. (கு) ஒரு வடையைத் திடீர் என எடுத்துக்கொண்டு பறந்து போயிற்று – வடையை எது எடுத்துக் கொண்டு போயிற்று ? (மெ) |
மாணவன் | : ஒரு காக்கை எடுத்துக் கொண்டு போயிற்று (வி.மா.) |
ஆசிரியர் | : வடையைத் தூக்கிக்கொண்டு போய்ய் …. (நி) |
(மாணவர் கவனித்தல்) | |
ஆசிரியர் | : வடையைத் தூக்கிக்கொண்டு போய் ஒரு மரத்தில் உட்கார்ந்தது. பெரிய மரம் (மெ) நீளக்கிளை (கு) இங்கே கவனியுங்க (க) (மரம் படம் வரைதல் – கிளை நீண்டு (அ) இருத்தல் போல வரைதல் (பு.மா.) |
ஆசிரியர் | : காக்கை எங்கே போய் உட்கார்ந்தது ? |
மாணவன் | : மரத்தின் கிளையில் உட்கார்ந்தது (வி.மா.) |
ஆசிரியர் | : அப்போ அங்கே ஒரு நரி வந்தது. நரி காக்கையைப் பார்த்தது. வடையைப் பெற ஆசைப்பட்டது. காக்கை வடை சாப்பிடும்போது எது வந்தது ? (வி.மா.) |
மாணவன் | : ஒரு நரி வந்தது. |
ஆசிரியர் | : நரி காக்கையைப் பார்த்து, காக்கா காக்கா நீ அழகு காக்கா, உன் நிறம் கருமை. குரல் இனிமை, ஒரு பாட்டுப் பாடு என்று சொன்னது. நரி என்ன சொன்னது ? (கு) |
மாணவன் | : நீ அழகு காக்கா, உன் நிறம் கருமை, உன் குரல் இனிமை ஒரு பாட்டுப் பாடு என்று சொன்னது. (வி.மா.) |
ஆசிரியர் | : கருமை – இனிமை – கரும்பலகையில் எழுதுதல் (வி.மா.) |
(மாணவர் எழுதுதல்) (பு.மா) | |
ஆசிரியர் | : நரியின் பேச்சைக் கேட்டது அந்தக் காக்கை … (நி). அந்தக் காக்கை ‘கா’ ‘கா’ என்று பாடியது. (கு) பாடின உடனே வடை கீழே விழுந்தது (மெ) பாடின உடனே என்ன ஆயிற்று ? |
மாணவன் | : கீழே விழுந்தது (வி.மா) |
ஆசிரியர் | : நரி வடையைத் தூக்கிக் கொண்டு ஓடிப் போய் விட்டது. காக்கை ஏமாந்து போயிற்று எது ஏமாந்து போயிற்று ? (கு) |
மாணவன் | : காக்கை ஏமாந்து போயிற்று (வி.மா.) |
ஆசிரியர் | : நரி என்ன செய்தது ? |
மாணவன் | : வடையைத் தூக்கிக் கொண்டு ஓடிப் போயிற்று (வி.மா.) |
மாணவ ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையினை நேரடியாகவும், இணைய வழியாகவும் உற்றுநோக்கி பெறுகின்ற அனுபவம் உற்றுநோக்கலாகும்.
ஆசிரியர்களின் கற்பித்தலை உற்றுநோக்கித் திறன்மிக்க ஆசிரியர்களாக உருவாகவே பல்வேறு செயல்பாடுகளில் பயிற்சி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். உற்றுநோக்கப்படும் ஆசிரியரின் கற்பித்தல் திறன்களைக் கடைப்பிடிக்கவும் குறைகளைப் போக்கிக் கொள்ளவும் உற்றுநோக்கல் தேவைப்படுகிறது. உலகத் தரமிக்க ஆசிரியராகத் திகழ பல்வேறு ஆசிரியர்களின் கற்பித்தலை உற்றுநோக்குவது இன்றியமையாததாகும்.
ஆசிரியர் கற்பிக்கின்ற வகுப்பறையில் ஆசிரிய மாணவர் கீழ்காணுமாறு உற்று நோக்க வேண்டும்.
வகுப்பறை உற்று நோக்கல் (நேரடி, இணையவழி)
கற்பிக்கும் ஆசிரியர் | வகுப்பு | பாடம் | |||
தலைப்பு | நாள் | நோக்கர் / மதிப்பீட்டாளர் |
எண் | நடத்தைக் கூறு | விளக்கம் | கணிப்பளவு |
---|---|---|---|
1. | வரையறுக்கப்பட்ட நோக்கங்களின் தகுதி நிலை | தெளிவு, அளவு, பொருத்தம் புறநடத்தைச் சார்பு | |
2. | கற்பிப்புப் பொருளின் வைப்பு | மாணவர் புரிதலுக்கு ஏற்ப, பாடப் பொருளை ஒழுங்குப்படுத்தல் | |
3. | பாடத்தை அறிமுகப்படுத்த அமைத்த சூழலின் தன்மை | மாணவர்களை வரவேற்றல் கவனத்தை ஈர்த்தல் போன்றன | |
4. | பாடம் அறிமுகப்படுத்திய முறை | முன்னறிவுத் தொடர்ச்சி, உத்தி, வினாக்கள் கேட்டல் | |
5. | வினாக்களின் வடிவமைப்பு | பல்நிலை ஏலுமைகளை அளத்தல், இலக்கணமுடைமை தெளிவு, பொருத்தம் | |
6. | வினா விடுத்த தன்மை | ஒலிப்பு, நிறுத்தம், பரவல் நிலை | |
7. | மாணவர் துலங்கலைக் கையாண்ட முறை | விடைகளைப் பாடத்தோடு இணைத்தல், மிகைச் செய்தி வரவழைத்தல், மாணவர் சிந்தனையைக் கிளறுதல் | |
8. | விளக்கம் | தெளிவு, துல்லியம், பொருத்தம், அறிமுகம் - தொடர்ச்சி - முடிப்பு | |
9. | எடுத்துக்காட்டுகள் | எளிமை, ஆர்வம், பொருத்தம், விளக்கம் | |
10. | துணைக்கருவிகள் பயன்பாடு | பொருத்தமுடைமை, காட்சிப்படுத்திய தன்மை | |
11. | மாணவர்கள் பங்கேற்பை மிகுதியாக்கல் | ஆசிரியர் அசைவு, குரல் ஏற்றத் தாழ்வு, கவன ஈர்ப்பு போன்ற தூண்டல் கூறுகள் | |
12. | வலுவூட்டிகளைப் பயன்படுத்தல் | ஏற்றல், பாராட்டல், பிற ஏற்புக் குறிப்புகள் வெளிப்படுத்தல் | |
13. | பாடத்தைப் பொருத்தமுறப் பகுத்தல் | நேரத்திற்கேற்பக் கற்பிப்புப் பகுதிகளை உரிய விரைவில் கற்பித்தல் | |
14. | புதுமைகள் | மேற்கொள்ளப்பட்ட சிறப்பு உத்திகள் | |
15. | பாடம் முடிப்பு | மீண்டுரைத்தல், ஒப்படைப்பு வழங்கல் |
பாடம் கற்பித்தலின் பொழுதும், பாடம் கற்பிப்புத் திட்டம் எழுதும்பொழுதும் பின்பற்ற வேண்டிய படிநிலைகளை ஹெர்பார்ட்டின் என்பவர் வடிவமைத்தார். அவை:
- ஊக்குவித்தல்
- பாடவளர்ச்சி
- தொடர்புபடுத்துதல்
- பொதுக்கருத்தை உருவாக்குதல்
- பயன்படுத்துதல்
- மீள்பார்வை
ஆர்வத்துடன் புதிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு மாணவர்களைத் தயார் செய்வதே ஊக்குவித்தல் ஆகும். கற்பித்தல் பாடப்பொருளுடன் தொடர்புடைய செயல்களையும், நிகழ்ச்சிகளையும் கூறுதல் அவசியமாகும்.
மாணவர்களை ஊக்குவித்த பிறகு பாடத்தலைப்பின் நோக்கங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். பாடத்தலைப்பைக் கரும்பலகையில் எழுதிப் பாடத்தைத் தொடங்க வேண்டும். கற்பித்தல் இடையில் கேட்கப்படும் வினாக்களுக்கு மாணவர் பதில் அளித்தலே சோதிப்பதாக அமையும்.
பாட வளர்ச்சியில் அளிக்கப்பட்ட செய்திகளுக்குத் தொடர்பான சான்றுகளைத் தொடர்புபடுத்த வேண்டும். செய்திகளைத் தொடர்ந்து அளித்துக்கொண்டே செல்லாமல் ஒவ்வொரு பாடப்பொருளுக்கும் பொருத்தமான விளக்கத்தை அளிக்க வேண்டும். கேள்விக் காட்சிக் கருவிகளைப் பாடத்துடன் இணைத்து ஒப்புமைப்படுத்த வேண்டும்.
ஆசிரியர் தொடர்புபடுத்தலில் விளக்கப்பட்ட கருத்துகளையும், கொள்கைகளையும் தகுந்த முறையில் பொதுமைப்படுத்த வேண்டும். விதிகளைப் பொதுமைப்படுத்துதல் மூலந்தான் புதிய கருத்தினைப் பெற இயலும்.
பொதுமைப்படுத்தப்பட்ட கருத்துகளை அன்றாட வாழ்வில் மாணவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளைச் சுட்ட வேண்டும். பொதுக்கருத்துக்களை சூழ்நிலையுடன் இணைக்கும்போது அன்றாட வாழ்க்கையோடு ஒரு தொடர்பு ஏற்படுத்துகிறது.
இது இறுதிப்படிநிலை. மிக முக்கியமான இந்தப் படிநிலையில் மாணவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதை ஆசிரியரால் அளந்தறிய முடிகிறது. குறிப்பிட்ட வகுப்பறைக் கற்பித்தல் நோக்கங்கள் நிறைவேறி இருக்கின்றனவா என்று மதிப்பீடு செய்ய உதவுகிறது.
நான்கு கட்ட அட்டவணையின்படி மாதிரி கற்பிப்புத் திட்டம் தயாரித்தல்
தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறைத் தமிழ்ப் பாடநூல்கள் வழி கற்பித்தல் நிகழ்கிறது. அதில் செய்யுள், உரைநடை, இலக்கணம், கட்டுரை, கடிதம் ஆகியன கற்றல் பனுவல்களாகத் திகழ்கின்றன. அப்பனுவல்களின் அடிப்படையில் பாடம் கற்பிப்புத் திட்டம் கீழே தரப்பட்டுள்ளது.
மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுவதையும் வகுப்பு நேரத்தில் கற்பித்தல் செயல்படும் போக்கினையும் வெளிப்படுத்துவதற்காக ஆசிரியர் தயாரிக்கும் வழிகாட்டல் வரைவு “பாடம் கற்பிப்புத் திட்டம்” எனப்படும். பாடத்தைக் கற்பிக்கத் திட்டமிடும்போது கற்பித்தல் – கற்றல் நோக்கங்கள், கற்பித்தல் போக்கு, கற்றல் வளர்ச்சி ஆகியன கருதப்பட்டு பயன்பாட்டிற்குரிய ஆவணமாக தயாரிக்கப்படுகிறது.
ஒரு பாடத்தைக் கற்பிக்கும் முன்னர், ஆசிரியர் திட்டமிடுகிறார். இந்த செயல்பாட்டின் போது, அவர் பாடத் தலைப்பை தீர்மானிக்கிறார் (அதில் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டம் கருதப்படவேண்டும்.) தலைப்பிலிருந்து, பாடத்தின் புறநிலை அல்லது எதிர்பார்க்கும் கற்றல் விளைவுகளை (கற்றல் நோக்கங்கள்) வரையறுக்கிறார், எதிர்பார்க்கப்படும் கற்றல் விளைவுகளுக்கு ஏற்ப மாணவரிடம் ஏற்படத்தக்க வகைமைத் திறன்கள் (Taxonomical abilites) உருவாகுமாறு தம் கற்றலை 1. ஊக்குவித்தல் / நினைவூட்டல் 2. பாடஅறிமுகம், 3. பாடப்பொருளை வழங்குதல் (பல வளர்ச்சி நிலைகளில்), 4. தொகுத்தலும் மதிப்பிடலும், 5. தொடர்பணி ஆகிய ஐந்து நிலைகளில் தொடர்கிறார், இவ்வைந்து நிலைகளுக்கும் நடுவணாக அமைவது கற்பித்தல் – கற்றல் நோக்கங்களே. இவற்றைக் கற்றல் விளைவுகளாகக் காண்பதற்கு மாணவர்களுக்குத் தொடர்பணி வழங்கப்படுகிறது, தொடர்பணியின் நோக்கம் கற்றல் விளைவினைத் தீர்மானிப்பதும் மதிப்பிடலுமாகும்.
ஆசிரியர் கல்வி பெறுவோர் கற்பித்தலில் வல்லமை பெறுவதற்கு கற்பித்திட்டம் எழுதுதல் இன்றியமையாதது. எடுத்துக்காட்டாகப் பாடம் கற்பிப்புத் திட்டம் தரப்படுகிறது, தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் பாடநூல் இந்நாட்டின் சூழலைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். வெளிநாடுகளில் தமிழ் கற்பித்தல் சூழுல் வேறாக இருப்பதால் அதனைக் கருதிப் பொருத்தமான பாடம் கற்பிப்புத் திட்டம் தரப்படுகிறது.
பாடம் கற்பிப்புத் திட்டம் பொதுவாக நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும்.
அது கீழ்க்குறித்த பதிவுகளைக் கொண்டது.
1. தகவல் 2. தயாரிப்பு 3. பாடப்பொருள் வழங்கல் 4. ஒப்புதல்
I. தகவல் பகுதி
1. | பாடம் கற்பிக்கும் ஆசிரியர் பெயர் | தமிழரசி |
2. | வகுப்பு | ஐந்து |
3. | பாடப் பகுதி | உரைநடை(அன்பே அறம்) நிலை-2 ( த.இ.க –பாடநூல், பக்கம் : 67) |
II. தயாரிப்புப் பகுதி
1. கற்றல் நோக்கங்கள்
அ) பொதுநோக்கம்:
- உரைநடைப் பாடத்தை உரிய ஒலிப்போடு வாய்விட்டுச் சரியான ஒலிப்புடன் படித்தல்.
- பண்புகளில் அன்புதான் சிறந்தது என்பதை வெளிப்படுத்துதல்.
ஆ) சிறப்பு நோக்கம்:
- அன்பின் சிறப்பை எடுத்துரைத்தல்.
- “பெற்றோர்“, “ஏற்றுக்கொண்டனர்“, “புன்முறுவல்“ ஆகிய சொற்களுக்குப் பொருள் கூறுதல்.
- காட்சிகளின் வாயிலாக “அன்பு” என்னும் உணர்வினை அடையாளம் காணுதல்.
- யார், எத்தனை, எதை, ஏன் போன்ற அமைப்பிலுள்ள வினாக்களுக்கு விடையளித்தல்.
2. துணைக் கருவி
பாடங்கள் அடங்கிய நழுவம் (power point)
உருவப் படங்கள்
III. பாடப்பொருள் வழங்கல்
(இப்பகுதி ஆசிரியரின் கற்றல் செயல்பாடுகள். மாணவரின் கற்றல் படிநிலைகள் ஆகியனவற்றை முறையே நிரல் (Column), நிரை (Row) அமைப்பினைக் கொண்டிருக்கும்)
படிநிலை / பாடப்பொருள் | கற்றலின் நடத்தைக் கூறுகள் | கற்றல் கற்பித்தல் செயல்பாடு | மதிப்பீடு |
---|---|---|---|
ஊக்குவித்தல் (அன்பு) | அன்பு - என்ற சொல்லைக் கூறுதல். | படங்களைக் காட்சிப் படுத்தி வினாக்கள் கேட்டல். |
|
பாட வளர்ச்சி படிநிலை - 1 (முதல் பத்தி) பாடத்தின் பத்தியைப் படித்தல் (ஓர் ஊரில் ……. மூவரும் கூறினர்.) | மாணவர் கவனித்தல்,படித்தல்.கேட்டல் திறனைப் பொருத்தமாக விடைகூறி வெளிப்படுத்துதல். | ஆசிரியர் வாசித்துக் காட்டுதல் - மாணவரும் உரிய ஒலிப்போடு வாய்விட்டுச்சரியான ஒலிப்புடன் படித்தல் -.வாசித்து முடித்தவுடன் இடையிடையே வினாக்கள் கேட்டல்- பதிலுரைத்தல் | நான் படிப்பதைக் கவனியுங்கள்.(ஒரு மாணவரை நோக்கி) இதைப் படிக்கவும்
|
விளக்குதல் | மாணவர் பதில் கூறுதல், விளக்கத்தைப் புரிந்து கொள்ளுதல் | ஆசிரியர் வினாக் கேட்டல்,இடைவினை |
|
பாட வளர்ச்சி 2 (இரண்டாவது பத்தி) | மாணவர் கவனித்தல் படித்தல். பொருள் கூறுதல்.. | ஆசிரியர் படித்தல். மாணவர் உரிய ஒலிப்போடு படித்துக் காட்டல். பொருள் உணர் திறன் அறிவதற்கான வினாக்கள் கேட்டல்- பதிலுரைத்தல் |
|
விளக்குதல் | மாணவர் கவனித்தல். புன்முறுவல். மெய்பாட்டினை வெளிப்படுத்தல். இச்சொல்லுக்கான விளக்கம் தருதல்- இணையான சொல்லைச் சொல்லுதல். | ஆசிரியர் விளக்கம் கூறுதல். மாணவரும் உரிய ஒலிப்போடு வாய்விட்டுச்சரியான ஒலிப்புடன் பதிலளித்தல்.பதில் தர இயலாதபோது ஊக்கக்குறிப்பு வழங்கல்.. புன்முறுவல். மெய்ப்பாட்டினை வெளிப்படுத்தல். | (ஒரு மாணவரை நோக்கி)
|
விளக்கம் (பொருளறிதல்) | புதிய சொற்களைத் தெரிந்து கொள்ளுதல் | பெற்றோர் - தாய் தந்தை. ஏற்றுக் கொண்டனர் - ஒப்புக் கொண்டனர். புன் முறுவல் - மென்மையாகச் சிரித்தல் |
|
தொகுப்பு | பாடத்தின் மையக் கருத்தினை வெளிப்படுத்துதல். அன்பின் மேன்மையினை எடுத்துக்கூறுதல். புதிய சொற்களை வாக்கியத்தில் பயன்படுத்துதல். | மனிதர்களிடம் பொதுவாக அன்பு இருந்தால் அறமும் வெற்றியும் தானாக வரும். அன்புதான் அனைவருக்கும் தேவை. அன்பிருந்தால் அங்கு எல்லாம் இருக்கும். எனவே மூவரும் அன்பை அழைத்தனர். |
|
தொடர்பணி | அன்பின் சிறப்பினை செயல்கள் வாயிலாக வெளிப்படுத்துதல். சொற்களின் பொருள் வேறுபாட்டை வெளிப்படுத்துதல்.. | வீட்டு வேலை வழங்குதல் |
|
IV. ஒப்புதல் பகுதி
XXXXXXX | XXXXXXXXXXX |
வழிகாட்டி ஆசிரியர் | கற்பிக்கும் ஆசிரியர் (பயிற்சி) |
(குறிப்பு; உரைநடை பகுதிக்கான பாடம் கற்பித்தல் திட்ட மாதிரி தரப்பட்டுள்ளது.) செய்யுள், இலக்கணம் ஆகிய பகுதிகளுக்கான கற்பித்தல் திட்ட மாதிரியை இணையத் தொடர்பு வகுப்பில் (Online class) தெரிந்துகொள்க.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
---|
|