முகப்பு

4.5 தமிழ் கற்பித்தலில் இக்கால நுட்பவியல்

தமிழ் கற்பித்தலில் இக்கால நுட்பவியல்

அறிவியல் வளர்ச்சியின் காரணமாகக் கற்பித்தல் என்பது பல மாற்றங்களைக் கண்டுள்ளது. மின்னாற்றல் காரணமாக கணினி, கணினிவழியே வலைத்தளம் என விரிவடைந்தது. ஆனால் இன்று வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து எதனையும் கற்கும் நிலை உருவாகியுள்ளது. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழு அல கால வகையினானே" என்பார் நன்னூல் ஆசிரியர் பவணந்தியார்.

அனைத்து நடவடிக்கைகளையும் மின்மயமாக்கல் என்ற அடிப்படையில் திட்டமிட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

காட்சியொளி வளங்கள் என்பவை இருப்பவற்றைக் கண் எதிரே காணும் வகையில் ஒளிப்படமாக்கிக் காட்டுவதாக அமையும். இது வெறும் காட்சிப் படங்களாகவோ, ஒலி-ஒளி காட்சிப் படங்களாகவோ அமையும். இன்று நாம் காண்கின்ற சின்னத்திரை, வண்ணத்திரை, குறும்படங்கள் போன்றவை காட்சியொளி வளங்களே.

• படங்கள்

படங்கள் கையால் வரையப்பட்டதாகவோ ஒளிப்படங்களாகவோ இருக்கலாம். இவை சுய விளக்கம் தருபவையாக இருக்கவேண்டும். சிறந்த படம், சிறந்த தரம், அமைப்பு, வேறுபாடு, குறிப்பான தன்மை, வண்ணம் ஆகியவற்றைப் பெற்றிருப்பதோடு சிறந்த முறையில் கருத்தை வெளியிடுவதாகவும் இருத்தல் வேண்டும். பயனுள்ள படங்களைச் சிறந்த அட்டை மீது ஒட்டி வைத்து எதிர்காலத்தில் பயன்படுத்தலாம்.

• ஒளிப்படங்கள்

காட்சியொளி வளங்களில் ஒளிப்படங்களும் ஒன்று; ஒளிக் காட்சிகளாகப் படங்கள் காட்டப்படும் நிலையாக இவை விளங்குகின்றன.

• தலைமேல் பிம்பம் படம் வீழ்த்தி

மாணவர்களுடைய கண்களையும் கவனத்தையும் ஈர்த்து அவர்களைக் கற்றலில் ஆர்வத்துடன் ஈடுபடச் செய்யும் சாதனங்கள் ஒளிப்படங்கள் ஆகும்; ஒலியும் ஒளியும் சார்ந்தவையாக இருக்கும். அவை தலைமேல் பிம்பம் படம் வீழ்த்தி, திரவப் படிகைக் காட்சி வீழ்த்தி, தொலைக்காட்சி, நழுவப்பட வீழ்த்தி எனப் பலவகைகளில் உள்ளன.

தகவல் தொடர்பு என்பது ஒரு தகவலை அல்லது செய்தியை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கோ அல்லது ஒரு கூட்டத்திற்கோ தெரிவித்தல் ஆகும். தகவல் தொடர்பினைச் செயற்படுத்தும் வளங்கள் பல உள்ளன. எனினும் வானொலி, தொலைக்காட்சி, இணையப் பல்லூடகம், இடைவினை, வெண் மென் பலகை ஆகியவற்றின் மூலம் நடைபெறும் தகவல் தொடர்புகளை இங்குக் காணலாம்.

வானொலி போன்றே தொலைக்காட்சியும் கற்றலில் பல பயனுள்ள நன்மைகளைத் தருகிறது. தொலைக்காட்சியில், காட்சியை நேரே காண்பதற்கும் அவை குறித்த செய்திகளைக் கேட்பதற்கும் வழியேற்படுவதால், வானொலியைக் காட்டிலும் இது சிறந்து விளங்குகிறது.

ஒலியும் ஒளியும் இணைந்திருப்பதுடன், இயக்கமும் சேர்ந்துள்ளது.

தொலைக்காட்சியின் வெற்றி என்பதே, பலவிதக் காட்சிகளையும் இயக்கங்களையும் பயன்படுத்துவதால் உருவாகிறது எனலாம். தமிழ் கற்பித்தலிலும் வாழ்க்கைக் கல்வி தொடர்பானவற்றைக் கற்பித்தலிலும் தொலைக்காட்சி சிறப்பிடம் பெற்றுள்ளது.

உலகெங்கும் கணினியில் உள்ள செய்திகளை இணைத்தலையே 'இணையம்' என்கின்றனர். இதனை ஆங்கிலத்தில் 'இண்டர்நெட்' (Internet) என அழைக்கின்றனர்; இலக்கியம், வரலாறு, புவியியல், வானவியல், அறிவியல், கணிதம், திரைப்படம் என எண்ணற்ற துறைசார்ந்த பல்வேறு தலைப்புக்களில் இணையத்தின் வழியாகச் செய்திகளைப் பெற முடிகிறது.

• இணையச் செயல்பாடு

இணையத் தொடர்பைப் பெறப் பின்வரும் பொருள்களைப் பெற்று ஒன்றிணைக்க வேண்டும். அவை,

  1. கணிப்பொறி (Computer)
  2. தொலைபேசி (Tele- Communication)
  3. மாற்றி (Modem)
  4. தொடர்பு மென்பொருள் (Communication Software)
  5. இணையச் சேவை வழங்குநர் (Internet Service Provider - ISP)
• செயற்கைக்கோள் சேவை (Satellite Service)

உறுப்பினர் எண்ணிலக்க இணைப்பு (DSL), வடம் மாற்றி (Cable Modem) போன்ற இணைப்புகளைவிட இதன் வேகங் குறைவு. ஆனால், தொலைபேசி இணைப்பைவிட (Dial Up) ஏழு மடங்கு வேகமாகச் செயல்படும். இதன் வழியாக, உலகின் எந்த மூலையிலிருந்தும் இணைப்பைப் பெறலாம் என்பதே இதன் சிறப்பு.

• இணைய இணைப்புக்கான 'மாற்றி' (Modem) வகைகள்

பெரிய நகரங்கள் தொடங்கிக் குக்கிராமங்கள்வரை அனைத்து இடங்களிலும் பரவலாக இணையம் பயன்படுத்தப்படுகிறது. இணைய இணைப்பிற்குக் கணிப்பொறி மற்றும் தொலைபேசி இணைப்பு ஆகிய இரண்டும் தவிர, 'மாற்றி' (Modem) எனப்படும் பொறி இன்றியமையாதது.

பல்வேறு உள்ளடக்க வடிவங்களை இணைத்துத் தரும் தகவல் பரிமாற்றமுறை பல்லூடகம் எனப்படும். பல உள்ளடக்கங்கள் இணைந்த ஓர் அமைப்பு பல்லூடகம் எனப்பட்டது. மரபு முறையாக, கையெழுத்து, அச்சுப்பதிவு, (பனுவல்) முதலியன தகவல் பரிமாற்ற ஊடகங்களாகக் கருதப்பட்டன.

பனுவல், குரல், நிலைப்படம், அசைவுப்படம், ஊடாட்ட அமைப்பு முதலியனவற்றினுள் ஒன்றுக்கு மேற்பட்டன இணைந்து, தகவல்தொடர்பினை நிகழ்த்தும்போது அது பல்லூடகமாகிறது.

கணினி சார்ந்த பயன்பாட்டு மென்னுருக்களைப் பயன்படுத்திக் கற்பது, மின்னணுசார் கல்வியாகும்.

  • குறிப்புகளை முறைப்படுத்தி வைக்க, கணினி நினைவலையில் (Memory) கோப்புகளின் (files) மடிப்பைகள் (folders) தரவுத்தளங்கள் (databases) ஆகியவற்றை உருவாக்குதல்.
  • கற்பவர் தம்முடைய பதிவுகளைக் குறிக்கச் சொல் தொகுப்பினையும் (word processer) வரைவுகளையும் (Graphics) பயன்படுத்துதல்,
  • தரவுகளைப் பகுத்தாய்வதற்குப் பரப்புத் தாள்களைப் (Spread sheets) பயன்படுத்துதல்.
  • தரவுகளைப் பகுத்தாய்வதற்குப் பரப்புத் தாள்களைப் (Spread sheets) பயன்படுத்துதல்.
• தமிழ் மென்பொருள்கள்

கணிப்பொறிச் செயல்முறைகளை நிறைவேற்றுகிற மென்பொருள் (OS=Operating System) என்பது. அட்டவணைப்படுத்துதல், தவறுகளைக் கண்டறிதல், கணக்கிடுதல், தொகுத்தல், சேமித்தல், தகவல் மேலாண்மை, உட்செலுத்துதல், வெளிப்படுத்துதல் செயல்பாடுகளுக்கான இயக்கமுறைச் செயலாக்க ஆணைத் தொகுப்புகளாகிய, இயக்கக் கட்டளை அமைப்புக்களான MS Word, Excel, Power Point, Pagemaker, Fonts, Virus, Access முதலிய அனைத்தும் மென்பொருள்களே. இவற்றைக்கொண்டே செய்திகள் உள்ளீடு செய்யப்படுகின்றன; தீர்வுகள் பெறப்படுகின்றன.

• மென்பொருள் பயன்பாட்டில் தமிழ்

தமிழைப் பயன்படுத்தப் பல்வேறு மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ‘எம்.எஸ். வேர்டு (MS-Word), எக்ஸல் (Excell), ஆக்ஸஸ் (Access), அவுட்லுக் (outlook), பேஜ்மேக்கர் (Pagemaker) முதலிய மென்பொருள்களிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கான எழுத்துரு மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சான்றாக, 'இளங்கோ தமிழ் 2000' என்னும் மென்பொருளைக் கணினியில் நிறுவி விசைப்பலகை வடிவமைப்பைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதன் பின்னர்ப் பயன்பாட்டு முறையைத் தேர்வுசெய்ய வேண்டும். இதன் பின்னணியிலிருந்து தமிழ் மென்பொருள் செயல்படும். பத்திரிகைகள், புத்தகங்கள் மட்டுமின்றிக் கணிப்பொறித் திரைகளில் வெகுகாலந்தொட்டே தமிழ்மொழி உலாவந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பாடல்கள், மாணவர்களுக்கான பாடங்கள், வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் கற்றுக் கொள்வதற்கான பாடங்கள், கணிப்பொறி அடிப்படையிலான பாடப்பயிற்சிகள் (Computer based tutorials), பல்லூடக விளையாட்டுகள் (Multimedia Games) போன்ற மென்பொருள்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் சில வருமாறு :- சொற் செயலிகள் (Word Processors), உரைத் தொகுப்பான்கள் (Text Editors). செயல்திட்ட வரைவு மேலாண்மை (Database Management), கணக்கியல் தொகுப்புகள் (Account Packages), இணைய உலாவிகள் (Web Browsers), தேடுபொறிகள் (Web Search Engines), மின்னஞ்சல் (e-mail).

எழுத்துருக்கள்

செய்திகளை உள்ளீடு செய்வதற்கு எம் மொழியில் உள்ளீடு செய்கிறோமா அம் மொழிக்கான எழுத்துருக்களைக் கணிப்பொறியில் நிறுவியிருக்க வேண்டும். எல்லாக் கணிப்பொறிகளிலும் ஆங்கில எழுத்துருக்கள் (Fonts) இருக்கும். ஆனால், தமிழ் எழுத்துருக்களை இணையத்திலிருந்து கட்டணமின்றிப் பதிவிறக்கம் (Download) செய்து நிறுவ வேண்டும்.

தமிழ் விசைப்பலகை

செய்திகளையோ, ஆணைகளையோ, உள்ளீடு செய்வதற்குப் பயன்படுங்கருவி விசைப்பலகை. ஆங்கில விசைப்பலகை அமைப்பே எல்லாக் கணிப்பொறிகளுடனும் இணைத்துத் தரப்படுகின்றன. பிறமொழி விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆங்கில விசைப்பலகையிலுள்ள எழுத்துகளின் மீது, உரிய தமிழ் வரிவடிவங்களைப் பொருத்தியும் தட்டச்சுச் செய்யலாம். மூன்று வகையான தமிழ் விசைப்பலகைகள் கணிப்பொறியில் பயன்படுத்தப்படுகின்றன. அவை; 1 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகை (Tamil typewriting Keyboard), 2. ஒலியியல் முறை விசைப்பலகை (Phonetic Method Keyboard), 3. தமிழ் 99 முறை விசைப்பலகை, (Tamil 99 method keyboard) ஆகியன. பயன்படுத்துவோர் தம் தேவைக்கு ஏற்ப இவ்விசைப் பலகைகளைப் பயன்படுத்துகின்றனர்.

விண்ணரங்க நிகழ்ச்சிகளில் காண்பவரின் இடைவினையும் (Interactive) இணைக்கப்படுவதாகத் தொழில்நுட்பம் உள்ளது. காணொலியில் ஒரு முனைத் தகவல் மட்டுமே அமைந்திருக்கும்.

EDUSAT 20.9.2004 இல் விண்வெளிக்கு இந்தியாவால் SSLV-யில் (GSLV -Geosynchronous Satellite Laurce Vehicle) அனுப்பப்பட்ட விண்கலமாகும். கல்விக்கெனவே விண்வெளியில் சுழன்றுவரும் இந்த விண்கலம் கற்றல் பொருள்களையும் சூழல்களையும் தொலைநிலையாக இந்தியாவிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

கணினி சார்ந்து கற்றல், தனியாள் கற்றலாக (Individualized Learning) இருந்தமையால், அதன் பயன்பாடு விரிவடையவில்லை. ஒரே நேரத்தில் பலரும் பயன்பெறக் கணினி, மென்னுரு ஆகியன மிகுதியாகத் தேவை. எனவே பொருட் செலவு மிகுந்தது. குழுவாகக் கற்கவோ, கற்பிக்கவோ இயலாதநிலை ஏற்பட்டது. இன்றைய அறிவியல் வளர்ச்சிநிலையில், நான்கு வகையான விண்ணரங்கங்கள் பயன்பாட்டில் உள்ளன.

  1. குரல் பரிமாற்ற அரங்கம் (audio conference)
  2. குரல் வரைவுப் பரிமாற்ற அரங்கம் (audio graphic conference)
  3. ஒளியரங்கம் (video conference)
  4. வலை தள அரங்கம் (web-based conference)
• வானொலிப் பேச்சுகள்

சுவைமிக்க நிகழ்ச்சிகளை மக்கள் பலரும் ஒரே நேரத்தில் கேட்டு மகிழ உதவுவது வானொலி. இது கல்வித் துறையில் மாணவர்களுக்கு அறிவு புகட்டவும், பொது அறிவு வளர்க்கவும் உதவுகிறது.

இதனை இருவகைகளாகப் பிரிக்கலாம்

  1. விளக்கப் பாடங்கள்
  2. பின்னணிப் பாடங்கள்
• குறுந்தட்டுகள்

கற்பிக்க வேண்டிய செய்திகளை வட்டமான மெல்லிய மின்தகட்டில் பதிவு செய்து வைத்துக் கொண்டு தேவையான நேரத்தில் அதனை ஓடச் செய்து செய்திகளை அறிந்து கொள்ளப் பயன்படுபவை குறுந்தட்டுகள். எத்தகைய செய்திகளையும், தகவல்களையும், இலக்கியங்களையும், இத்தட்டில் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். தம் குரலையோ, பாட்டையோ இத்தட்டில் பதிவு செய்து கொண்டு மீண்டும் ஓடச் செய்து தம் குரலைத் தாமே கேட்டு நிறை குறைகளை அறிந்து கொள்ளலாம். தனக்கு விருப்பமான எதையும் பதிவு செய்து மீண்டும் கேட்கப் பயன்படுபவையே குறுந்தட்டுகள் ஆகும்.

• ஒலிப்பதிவு நாடாக்கள்

ஒலிப்பதிவு நாடாக் கருவிகள் மேசை மீது நிறுத்தி வைக்கப்படுபவை, கையில் எடுத்துச் செல்லப்படுபவை என இருவகை உண்டு. மேசை மீது வைப்பவை மின்னாற்றலால் இயங்கும்; கையில் எடுத்துச் செல்பவை - செல்களைப் பயன்படுத்திப் பதிவுசெய்து இயக்க முடியும். நாடா, வலப்புறச் சுருளில் இருக்கும்.

பதிவின்போது எதிரொலியோ, வேறு ஓசைகளோ இருக்கலாகாது. மின்விசிறி சுற்றுதல், இடையீடுகள், குறுக்கீடுகள் ஆகியன இல்லாமல் அமைதியாக இருத்தல் வேண்டும். கல்வி தொடர்பான ஒலிபரப்பினைப் பதிவுசெய்து வைத்துக்கொண்டு தேவைப்படும் போதெல்லாம் மீண்டும் போட்டுக் கேட்கலாம்.

• நுண்ணொலிக் கருவிகள்

பயிற்சியாளர்கள் பயிற்சியின் போது தூண்டலுக்கு ஏற்ற துலங்கலைச் செய்தால் அவற்றை ஒலிப்பதிவு நாடாக்களில் பதிய வைப்பதற்காக அமைந்த நுண்கருவி இதுவாகும்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்னும் நன்னூல் நூற்பாவிற்கேற்பக் காலம் செல்லச் செல்லப் பழையது போகப் புதியனவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்து இன்று எவ்வளவு பலமாக உள்ளது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அறிவியலின் வளர்ச்சியால் அனைத்துத் துறைகளும் இன்று கணினி மயமாக மாற்றப்பட்டுவிட்டன. விளைவு கற்றல் கற்பித்தலிலும் தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இன்றைய தொழில்நுட்ப வழியில் கற்றலை நாம் ஏன் பின்பற்றக் கூடாது என்று பல கல்வியாளர்கள் வினா எழுப்புகின்றனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பில்கேட்ஸ் ஆவார்.

நாம் பயணச்சீட்டு பெறுவதுகூட இன்று இணையத்தின் வழிதான் என்ற நிலைக்கு முன்னேறிவிட்டோம். அதனை இன்றைய தொழில்நுட்பம் எளிமையாக்கி உள்ளது. தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் அதன் துணையில்லாமல் கற்றோம். ஆனால் இன்று சூழல் அவ்வாறு இல்லை. அதனால் கையிலிருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்றலை மேலும் எளிதாக்கிக் கொள்ள வேண்டும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

• தொழில் நுட்ப வழிகள்

கற்றலைப் பல்வேறு வடிவங்களில் பல்வேறு சிறு மென்பொருள்களாகவும், குறுஞ்செயலிகளாகவும் தொழில்நுட்பம் இன்று நமக்குக் கொடுக்கின்றது. அவற்றில்,

  1. PPT வழி கற்றல்
  2. இணையதளங்கள் மூலம் கற்றல்
  3. அலைபேசி மற்றும் குறுஞ்செயலிகள் மூலம் கற்றல்
  4. வலைப்பதிவுகளின் மூலம் கற்றல்
  5. சமூக ஊடகங்களின் வழிக் கற்றல்
  6. Skype வழிக் கற்றல்
  7. You tube வழிக் கற்றல்
  8. மென்பொருள்கள் மூலம் கற்றல்

என்று சுமார் எட்டு வகைகளில் தொழில்நுட்ப வழியில் கற்றல் கற்பித்தலை நம் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் வழங்க முடியும்.

1. PPT வழி கற்றல்

பாடப் பொருளைக் கற்கும் மாணவர்கள் விரும்பிக் கேட்பதற்கு இந்தக் காணொளி காட்சி என்று அழைக்கப்படுகின்ற Power Point (PPT) பயன்படுகிறது. Power Point மூலம் நாம் வழங்கும் பாடப் பொருள் வண்ணமயமாகவும் மாணவர்களை ஆர்வமுடன் விரும்பும் விதத்திலும உருவாக்கப்படுகின்றது. படங்கள், வண்ண எழுத்துகள், ஒலி-ஒளியுடன் கூடிய காட்சிப்படங்கள் முதலியவற்றை உருவாக்கி மாணவர்களுக்கு வழங்கும் முறையே இதுவாகும். இதனால் மாணவர்கள் விரும்பிப் படிக்க முன் வருகின்றனர். மாணவர்களே சில பாடங்களைத் தயாரித்து இந்த Power Point மூலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒப்படைவுகளையும், வாய்மொழிப் பயிற்சியையும் வழங்கி வருகின்றனர். புதிதாகப் படிக்கும் மாணவர்கள் இந்த வகைத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அவரவர் தேவைகளை நிறைவு செய்து கொள்ளலாம்.

2. இணையதளங்கள் மூலம் கற்றல்

கற்றல் கற்பித்தலில் அதிகமாக இன்று இணையத்தளங்கள் பயன்படுகின்றன. தொடக்கத்தில் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இணையதளங்கள் காலப்போக்கில் உலகில் இருக்கும் அனைத்து மொழிகளின் கற்றல் – கற்பித்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ் இணையக் கல்விக்கழகம் (http://www.tamilvu.org)

அந்த வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் முன்னிலை வகிக்கின்றது. இந்த இணையப்பக்கத்தில் அடிப்படைக் கல்வி முதல்கொண்டு பட்ட மேற்படிப்புக் கல்வி வரை சென்று படித்துக்கொள்ளலாம். மேலும் தமிழ் சார்ந்த விளையாட்டுகள், ஓலைச்சுவடிக் காப்பகம் என்ற தலைப்பில் பல்வேறு வகையான ஓலைச்சுவடிகளின் தொகுப்பும் இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய நூல்கள் முதல் இக்கால இலக்கிய நூல்கள் வரை அனைத்து நூல்களும் மின்னணு முறையில் இதில் இடம் பெற்றுள்ளது நமக்கெல்லாம் பயனே. உலகில் இருக்கும் பல்வேறு நாட்டுக் குழந்தைகள் மற்றும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்க் கற்றுக்கொடுக்க தள்ளாடிய பொழுது பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தது போலத் தமிழ் இணையக் கல்விக்கழகம் பல தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்த் தேர் கொடுத்தது.

3. அலைபேசி மற்றும் குறுஞ்செயலிகள் மூலம் கற்றல்

கற்றல் கற்பித்தலின் அடுத்தக் கட்ட வளர்ச்சி அலைபேசிகளின் வழி வந்து கொண்டிருக்கின்றன. இன்று அலைபேசியைப் பயன்படுத்தாதவர்கள் பாவம் செய்தவர்கள் போல் ஆகிவிட்டனர். அதுவும் திறன்பேசிகளைப் பயன்படுத்துவோர் இதில் பாதியளவு இருப்பர். எனவே அலைபேசிகளில் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் வகையில் சில அலைபேசி நிறுவனங்கள் ஆங்கில அகராதியைத் தாமாகவே வழங்கி வருகின்றன. இன்று அந்தந்த நாட்டின் மொழிகளில் உள்ள அகராதிகளையும் கொடுக்கின்றன. இதனால் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடவேண்டும் என்று நூலகம் செல்லவோ அகராதிகளை எடுத்துப் பார்க்கவோ வேண்டியதில்லை. எல்லாம் அலைபேசியில் வந்துவிட்டன. மேலை நாடுகளில் அலைபேசி இல்லாமல் சென்றால் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்க அனுமதி கிடையாது. இங்குப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அலைபேசி எடுத்து வந்தால் படிக்க அனுமதி கிடையாது.

4. வலைப்பதிவுகளின் மூலம் கற்றல்

இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் ஒரு பிரிவு வலைப்பதிவு என்பதாகும். இதில் கட்டுரை, கருத்தறிதல் பயிற்சி, புதிர்கள் மற்றும் விடுகதைகள், குரல் பதிவுகள், கற்றல் தொடர்பான இணையதள இணைப்புகள், தலைப்புகள் ஒட்டிய கருத்துகள், மொழி விளையாட்டுகள், ஒளிக்காட்சிகள் போன்ற வகைகளில் கற்றல் கற்பித்தலை மாணவர்களுக்கு வழங்க இயலும் என்று முகமது யூசோஃப் என்ற சிங்கப்பூர் ஆசிரியர் குறிப்பிடுகிறார். சாக்பீஸ் என்ற வலைப்பதிவு மாணவர்களுக்குத் தேவையான புதிய பாடங்கள், பாடங்களுக்கான வினாவிடைகள் போன்றவற்றை வழங்குகிறது.

5. சமூக ஊடகங்களின் வழிக் கற்றல்

இன்று உலகம் முழுவதிலும் சமூக ஊடகங்களைப் பல கோடி பேர் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்கள் என்பது முகநூல் (facebook), கீச்சகம் (டிவிட்டர்), புலனம் அல்லது பகிரி (whatapps), படவரி (Instagram) போன்றவையாகும்.

மலேசியாவில் ஆசிரியர் பயிற்சிப்பிரிவு 1994 ஆம் ஆண்டு, ஜீன் திங்களில் தொடங்கப்பட்டபோது, உயர்நிலைச் சிந்தனைகளை ஆசிரியர்களிடையே வளர்க்கத் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தத் தொடங்கினர்; போஸ்டன் மாதிரியத்தை (Boston Model) அடிப்படையாகக் கொண்டு இத்திட்டங்களை வடிவமைத்தனர் (Rajendran, 2001); ஆசிரியர்கள், தங்கள் கற்றல் – கற்பித்தலில் உயர்நிலைச் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தர இத்திட்டங்கள் வழிவகை செய்தன என்று மலேசிய ஆசிரியர் அருள்நாதன் விசுவாசம், தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் ‘நிகழ்ச்சியை உருவாக்க’ என்ற பக்கத்தில் நாம் மாணவர்களுக்குத் தயாரித்த பாடத்திட்டத்தைப் பதிவேற்றம் செய்து மாணவர்களையும் மற்றவர்களையும் அதில் கலந்துகொள்ளச் செய்யலாம். அதே போன்று பாடத்திட்டம் தொடர்பான படத்தையும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இதே வழியில் அனுப்பி வைக்க முடியும். இவை மட்டுமின்றி முகநூலில் ஒவ்வொரு பள்ளியும் அல்லது கல்லூரியும் குழு அமைத்து அதில் மாணவர்களின் திறமையைப் பரிசோதனைச் செய்துபார்க்கலாம். அல்லது ஆசிரியர்கள் ஏதாவது புதிய அணுகுமுறையில் சில பாடத்திட்டச் சிறப்பு இணைப்பை இணைக்கலாம். இதனால் ஒரு குழுபோல ஆசிரியர்களும் மாணவர்களும் செயல்பட முடியும்.

எனவே இன்று சமூக ஊடகங்களில் கற்றல் கற்பித்தல் என்பது நம் நாட்டைப் பொருத்தவரை சற்றே பின்தங்கி இருந்தாலும் சிங்கப்பூர் மலேசியாவில் தமிழ்க் கல்வியைக் கற்றுக்கொடுக்கச் சமூக ஊடகங்கள் அதிக அளவில் பங்கு வகிக்கின்றன.

6. Skype வழிக் கற்றல்

இணையத்தில் இலவசமாக உலகில் எங்கிருந்தாலும் யாருடன் வேண்டுமானாலும் இலவசமாக முகம் பார்த்து உரையாடும் ஒரு மென்பொருளே (Skype) ஆகும். இதில் பல்வேறு உலக நாடுகளைச் சார்ந்த ஆசிரியர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்டக் கருத்துகளை நேரடிக் காட்சி மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றனர். பல தொழில் நுட்ப நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் தங்களது தொழில் நிர்வாகத்தைக் காட்சிப்படுத்துகின்றனர். இது தொழில் முனைவோராக மாறுவதற்கு மாணவர்களுக்குப் பல வழிகளில் பயன்படுகின்றன. இந்த மென்பொருள் மூலம் எந்த மொழியின் கருத்துகளையும் நம்மால் எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

7. You tube வழிக் கற்றல்

இணையம் என்றால் You Tube (வலையொளி), You Tube என்றால் இணையம் என்ற நிலைக்கு வளர்ந்துள்ள ஒரு காணொளி ஊடகப் பிரிவு தான் You Tube என்னும் வலையொளி. எதைத் தேடினாலும் கொடுக்கும் அமுதசுரபி இது. கற்றல் கற்பித்தலில் இஃது ஒரு மைல் கல். உலகில் எந்த மொழியில் தேடினாலும் உடனுக்குடன் எடுத்துக் கொடுக்கும். ஆசிரியர்கள் தாங்கள் உருவாக்கிய பாடத்தைத் தாங்களே இதில் பதிவேற்றம் செய்யவும், உலக அளவில் தங்களது கருத்துகளைக் காணொளி மூலம் மிக விரைவாகக் கொண்டு செல்லவும் இது பெருந்துணை புரியும். மாணவர்கள் தங்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொள்ளவும் இது வாய்ப்பேற்படுத்தித் தரும்.

8. மென்பொருள்கள் மூலம் கற்றல்

மேலே கூறிய பல தொழில் நுட்ப உட்பிரிவுகளில் கற்றல் கற்பித்தல் நடந்தாலும் இதற்கெல்லாம் மூலமாக இருந்து செயல்படுவது மென்பொருள்களே. இன்று பல்வேறு மென்பொருள்கள் உலகச் சந்தையில் கற்றல் கற்பித்தலுக்காகத் தயாரிக்கப்பட்டு வணிகப்படுத்தப்படுகின்றன.

எனவே இன்று கற்றல் கற்பித்தலில் மென்பொருள்களின் பங்களிப்பு முதன்மையான இடத்தைப் பெறுகிறது. அவற்றுள் Trailshuttle கற்றல் பாதையை உருவாக்கும் மென்பொருள்; Mindmeister மனவரைபடம் ; Blendspace பல்லூடகம்.