புளூம் | ஆண்டர்சன் |
---|---|
மதிப்பிடல் (Evaluation) | ஆக்கல் (Creative) |
தொகுத்தல் (Synthesis) | மதிப்பிடல் (Evaluation) |
பகுத்தல் (Analysing) | பகுத்தல் (Analysing) |
ஆளல் (Application) | ஆளல் (Application) |
புரிதல் (Comprehencing) | புரிதல் (Understanding) |
அறிதல் (Knowledge) | நினைதல் (Remembering) |
4.4 புளூமின் வகைமையும் பாடம் கற்பிப்புத் திட்டமும்
புளூமின் வகைமையும் பாடம் கற்பிப்புத் திட்டமும்
கற்றல் எவ்வாறு நிகழ்கிறது என்பதைக் கல்வியாளர்கள் விளக்கியுள்ளனர். பெஞ்சமின் புளூம் என்பார் 1956ஆம் ஆண்டு வகைமை நெறியை வெளிப்படுத்தினார்.
அவர் வெளிப்படுத்திய கருத்தினை ஒட்டிப் பல்வேறு ஆய்வுகள் நிகழ்ந்தன. புளூம் கூறிய அறிவுக்களக் கூறுகளின் கலைச்சொற்களைப் புளூம் அவர்களின் மாணவர் ஆண்டர்சன் மாற்றி அமைத்தார். அக்கலைச்சொற்கள் கற்றலின் சிறப்பு நோக்கங்களை வரையறுக்கத் துணைநின்றன.
பெஞ்சமின் புளும் கூறிய வகைமைநெறி கலைச்சொற்களை ஆண்டர்சன், பெயரிலிருந்து வினைச்சொல்லாக ஒருசிலவற்றின் பெயரையும் மாற்றியமைத்துள்ளார்.
புளூமின் தொகுத்தல், மதிப்பிடல் என்பன முறையே ‘மதிப்பிடல் ஆக்கல்’ என மாறியுள்ளன. கலைச்சொற்களின் மாற்றத்தால், தமிழ் பெயர்ப்புச் சொற்களில் மாற்றம் ஏற்படவில்லை. எனினும், ஆண்டர்சன் பற்றிய ‘மதிப்பிடல்’ என்பதற்கு மாற்றாகத் ‘தொகுத்தல்’ என்னும் சொல்லைக் கொள்வது பொருந்தும். எனவே, திருத்தியமைக்கப்பட்ட வகைமை நெறியினை அறிதல், புரிதல், ஆளல், பகுத்தல், தொகுத்தல், ஆக்கல் என ஆறு கூறுகளாகக் கொள்வது சிறப்பாகும்.
பாடம் கற்பிப்புத் திட்டத்தில், தயாரிப்புப் பகுதியில் அமைய வேண்டிய பதிவுகளில் ஒன்று, 'நோக்கங்கள்'. அவற்றுள், கற்பதின் நோக்கங்களை வரையறுக்கச் செயல்வினைச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். அவை :
நினைதல் | அடையாளங் காணல், பட்டியலிட்டு விவரித்தல், நினைவுகூரல், பெயர் சூட்டல் |
புரிதல் | பொருண்மைகளை விளக்குதல், சுட்டியுணர்த்தல், பொருளை முழுமையாக அறிதல், வகைப்படுத்தல், விளக்குதல் |
ஆளல் | அறிமுகமான பிற சூழலில் பயன்படுத்துதல், செயல்படுத்துதல், நிறைவேற்றல், பயனுறுத்தல், செயலாற்றுதல் |
பகுத்தல் | தெளிவிற்காகத் தகவல்களைக் கூறுகளாகப் பிரித்தல், ஒப்பிடுதல், ஒழுங்குபடுத்துதல், கூட்டமைப்பு, உட்பொருள் விளக்குதல் |
மதிப்பிடல் | (தொகுத்தல்) ஒன்றன் போக்கினை நியாயப்படுத்துதல், கருதுகோளமைத்தல், விமர்சித்தல், சோதனைக்கு உட்படுத்துதல், முடிவெடுத்தல் |
ஆக்கல் | புதிய கருத்து, வழிமுறை நோக்குமுறை உருவாக்கல், வடிவமைத்தல், கட்டமைத்தல், திட்டம் தீட்டுதல், உருவாக்கம் கண்டுபிடித்தல். |
இச்செய்வினைகள், பாடப்பொருளின் தன்மைக்கேற்பச் செயல்படு பொருளையோ, அடைவுகளையோ ஏற்கும்.
- (கதையில் வரும்) நன் மாந்தர்களின் பெயர்களைச் சுட்டல் - அறிதல் (நினைதல்) பெயர் சூட்டல்.
- பாடலில் அமைந்துள்ள வழி, பொருளைச் சுட்டுதல் புரிதல் - பொருள் (முழுமையாக்கல்)
- பாடல் உணர்த்தும் அறவுரையினை நிறைவேற்றும் எடுத்துக்காட்டுத் தருதல் - ஆளல் - நிறைவேற்றல்.
- இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள தகவல்களைப் பண்பு வளர்ச்சியைக் காட்டும் போக்கில் பிரித்தல் - பகுத்தல் - கூறுகளாய்ப் பிரித்தல்.
- செய்யுள் தரும் அறிவுரையினைக் கடைப்பிடிக்கும்போது ஏற்படும் சிக்கல்களை விளக்குதல். தொகுத்தல் விமர்சித்தல்.
- பாடப்பொருளில் காணப்படும் கருத்துணர்வை நடைமுறைக்கு ஏற்ப மாற்றியமைத்தல் புதிய கருத்து உருவாக்கல் - ஆக்கல் - புதிய கருத்து உருவாக்கல்.
இக்குறிப்புகளைத் துணையாகக் கொண்டு பாடம் கற்பிப்புத் திட்டத்தின் கற்றல் - கற்பித்தல் செயல்களை முறையாக எழுதவியலும். கற்பித்தல் - கற்றல் நிகழ்விற்கும் இவ்வகைமைநெறி வழிகாட்டுகிறது.
பாடம் கற்பிப்புத்திட்டப் பதிவுகளில் வெகுவாகக் கருதப்படுவது, 'மதிப்பீட்டுப் பகுதி' ஆகும். மதிப்பீடு பரந்த பொருளைக் கொண்டிருப்பினும், இப்பகுதியில் பொதுவாக வளர்வறி, தொகைநிலை வினாக்களே எழுதப்படுகின்றன. புளூமின் வகைநெறியிலும், அதைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆண்டர்சன் வகைமை நெறியிலும் கற்றல் வெளிப்பாட்டைக் குறிக்கும் செயல்வினைகள், கற்றல் பகுதியில் வினாக்களை உருவாக்குவதற்கு வழிகாட்டுகின்றன.
புளூம் வகைமை நெறியில், மாற்றங்கள் சிலவற்றைப் புகுத்திய ஆண்டர்சன், கற்றலில் அறிவு வளர்தளம், கற்றல் போக்குத்தளம் என இரண்டைக் குறிப்பிட்டு, கற்றல் வெளிப்பாட்டின் செயல் வினைகளாகத் தந்துள்ளார்.