TT02 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
1.0 பாட முன்னுரை
பாட முன்னுரை
மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக் கருவிகளில் மொழியே பெருமளவு பயன்படுகிறது. மக்களின் மனத்துடன் மிக நெருங்கிய தொடர்புடையதும் மொழியே ஆகும். பேச்சுமொழியிலும் எழுத்து மொழியிலும் பிறர் கூறும் கருத்தைத் தாம் புரிந்துகொள்ளுதலும், அவ்வாறே பிறர் புரிந்துகொள்ளும்படி தமது கருத்தை எடுத்துரைத்தலும் மொழி வளர்ச்சியின் அடையாளமாகக் கொள்ளலாம்.
மொழி, மக்களுக்கு விழி. விழியில் குறைபாடு இருப்பின், காணும் காட்சியெல்லாம் குறைபாடு உடையதாகவே தெரியும். அவ்வாறே, நாம் பயன்படுத்தும் மொழியிலும் பிழைகள், குறைகள் ஏற்படின், கருத்துப் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்படும்; மொழியும் நாளடைவில் மறையும். அவ்வாறு ஆகக்கூடாது என்பதற்காகவே தமிழ் மொழிப்புலவர்கள், மொழியைக் கையாள்வதற்குரிய இலக்கண விதிகளை உருவாக்கினர். அவ்விலக்கண விதிகளைப் பேசும்போதும் எழுதும்போதும் பின்பற்றி வந்துள்ளனர் என்பதை இத்தாளின் வழி அறிய முடிகிறது.