முகப்பு

1.3 எழுத்துகளின் பிறப்பும் ஒலிப்பு முறைகளும்

எழுத்துகளின் பிறப்பும் ஒலிப்பு முறைகளும்

மொழிக்கு அடிப்படையாக இருப்பது ஒலி. ஒலிகளை அடையாளக் குறியீடுகளாக அமைத்துக்கொண்டு, கருத்துகளை உணர்த்துதலே மொழி எனப்படுகிறது. இது பேச்சுமொழி, எழுத்துமொழி என இருவகைப்படும். ஒலிகளால் சொற்கள் அமைகின்றன. சொற்களால் தொடர்கள் அமைகின்றன. தமிழ்மொழிக்கு அடிப்படையாக உள்ள ஒலிகள் முதல் எழுத்துகள் எனப்படுகின்றன. இவ்வெழுத்துகளின் ஒலி வடிவத்திற்கும் வரிவடிவத்திற்கும் உள்ள தொடர்பையும் அவை பிறக்கும் முறையையும் இப்பகுதியில் காணலாம்.

தமிழ்மொழியில் ஒலி பிறப்பதற்கும் எழுத்துகளுக்கும் மாறுபாடில்லை. எடுத்துக்காட்டாக, அ, ம், மா என்னும் மூன்றெழுத்துகளின் ஒலிப்படியே அவற்றாலான அம்மா என்னும் சொல்லின் ஒலியும் உள்ளது. சொல்லின் ஒலிப்படியே எழுத்துகளும் உள்ளன.

எழுத்தொலிகள் பிறப்பதற்குக் காரணமான பேச்சுறுப்புகள் பற்றிக் காண்போம்.

நுரையீரல் சுருங்கி விரிவதால் ஏற்படும் காற்றோட்டங்களைப் பயன்படுத்திப் பேச்சுச் செயற்பாடு நிகழ்கிறது. நுரையீரல்கள் (Lungs), மூச்சுக்குழல் (Trachea), தொண்டை (Larynx), மேற்றொண்டை (Pharynx), வாயறை (Oral cavity), மூக்கறை (Nasal cavity) ஆகிய பகுதிகள் பேச்சுச் செயல்பாடுகளுக்கு அடிப்படையாக அமைகின்றன.

நா, இதழ் ஆகியன ஒலிகளை உருவாக்க உதவும் இயங்கு உறுப்புகள் (Active articulators) ஆகும். அண்ணம், பல் ஆகியன நிலை உறுப்புகள் (Passive articulators) எனப்படுகின்றன.

  1. முன் அண்ணம்
  2. இடையண்ணம்
  3. கடையண்ணம்
  4. உள்நாக்கு
  5. மூக்கறை வாயில்
  6. நுனிநா
  7. நா விளிம்பு
  8. இடை நா
  9. கடை நா
  10. அடி நா
  11. முன்தொண்டை
  12. காற்றுக்குழல் மூடி
  13. ஒலித்தசை
  14. குரல் வளை
  15. காற்றுக் குழாய்

போன்ற உறுப்புகள் ஒலிப்பில் தம் பங்கை ஆற்றுகின்றன.

தமிழுக்கு அடிப்படையாக உள்ள முதலெழுத்துகளை உயிர், மெய் எனப் பிரிப்பர். நுரையீரலிலிருந்து வெளியேறும் காற்று எவ்விதத் தடையும் இல்லாமல் வெளியேறும் நிலையில் பிறக்கும் ஒலிகள் உயிரொலிகள் ஆகும். நுரையீரலிலிருந்து வெளியேறும் காற்று முற்றிலுமாகவோ பகுதியாகவோ தடைபட்டு வெளியேறும் நிலையில் பிறக்கும் ஒலிகள் மெய்யொலிகள் ஆகும்.

• உயிர் எழுத்துகளை ஒலிக்கும் முறை

முதலில் உயிர் எழுத்துகள் எவ்வாறு ஒலிக்கின்றன என்பதை அறிந்துகொள்வோம். உயிர் எழுத்துகள் அனைத்தும் காற்றின் தடை இல்லாமல் இயல்பாகவே பிறக்கின்றன.

அ, ஆ - இவ்விரண்டு உயிர்களும் வாயைத் திறந்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.
இ, ஈ, எ, ஏ, ஐ - ஐந்து எழுத்துகளும் வாயைத் திறப்பதோடு மேல்வாய்ப் பல்லை, நா விளிம்பு தொடுவதால் பிறக்கின்றன.
உ, ஊ, ஒ, ஓ, ஔ - ஐந்து எழுத்துகளும் உதடுகளைக் குவித்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.
• மெய் எழுத்துகளை ஒலிக்கும் முறை

உடல் இல்லாமல் உயிர் இயங்காது. அதுபோல, மெய் இல்லாமல் மொழியும் இயங்காது. உயிர் ஒலிகள் காற்றின் தடை இல்லாமல் வாயைத் திறந்தவுடன் பிறக்கும். ஆனால், மெய்யொலிகள் காற்றினை நாக்கு, உதடு, பல் ஆகியவை தடை செய்வதால் பிறக்கும். இவ்வாறு தடை செய்யும்போது நாக்கு, பல், உதடு ஆகியவற்றைத் தடவியும் வருடியும் மெய் எழுத்துகள் பிறக்கின்றன. மெய்யொலிகளை ஒலிக்கும் இடம், தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மூவகையாகப் பிரிக்கலாம். அவை,

  1. வல்லினம்
  2. மெல்லினம்
  3. இடையினம்
வல்லினம்

காற்று வெடித்து வெளிவருவதால் பிறக்கும் ஒலிகள் வல்லொலிகள். இதனை வெடிப்பொலிகள் என்றும் கூறுவர். க், ச், ட், த், ப், ற் ஆகியவை வல்லின எழுத்துகள் ஆகும். இவற்றை ஒலிக்கும்போது, காற்று வேகமாக வெளிவிடப்படல் வேண்டும்.

மெல்லினம்

மெல்லின எழுத்துகள் காற்று தடைபடாமல் மூக்கின் வழியாக வருவதால் தோன்றுகின்றன. காற்றை வாயில் தடுத்து மூக்கின் வழியாக வெளிவிடுவதால் இவ்வொலிகள் மென்மைத் தன்மை பெறுகின்றன ; இதன் காரணமாக மெல்லினம் என்ற பெயரைப் பெற்றுள்ளன. ங். ஞ். ண், ந், ம், ன் ஆகியவை மெல்லின எழுத்துகளாகும்.

இடையினம்

வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட தன்மையுடைய ஒலியாக ஒலிக்கப்படும் எழுத்துகளை இடையின எழுத்துகள் என்று கூறுகிறோம். இவற்றை ஒலிக்கும்போது கீழ் உதடுகள் மிகவும் மெல்லியதாகத் தடித்து நிற்கும். ய், ர், ல், வ், ழ், ள் ஆகியவை இடையின எழுத்துகள் ஆகும்.

• மெய்யெழுத்துகள் ஒலிப்பு முறைகள்
க், ங் இவ்விரு மெய்களும் நாவினது அடிப்பகுதியானது அண்ணத்தின் அடிப்பகுதியைத் தொடுவதனால் தோன்றுகின்றன.
ச், ஞ் இவ்விரு மெய்களும் இடை நா (நடு நாக்கு) நடு அண்ணத்தைத் தொடுவதனால் பிறக்கின்றன.
ட், ண் இவை, நாக்கின் நுனியானது மேல்நோக்கி வளைந்து அண்ணத்தைத் தொடுவதனால் பிறக்கின்றன.
த், ந் மேல்வாய்ப் பல்லின் உட்புறத்தை நாக்கின் நுனி பொருந்துவதனால் இவ்வெழுத்துகள் தோன்றுகின்றன.
ப், ம் மேல் உதடும் கீழ் உதடும் பொருந்த, இவ்வெழுத்துகள் பிறக்கும்.
ய் இது, நாக்கினது அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதனால் பிறக்கின்றது.
ர், ழ் இவை, மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன.
ல் இது, மேல்வாய்ப் பல்லின் அடியை, நாக்கின் நுனி தடித்து நெருங்குவதனால் பிறக்கிறது.
ள் இது, மேல்வாயை, நாவினது நுனியானது மேல்நோக்கி வளைந்து, தடித்துத் தடவுவதனால் பிறக்கிறது.
வ் இது, மேல்வாய் பல்லைக் கீழுதடு பொருந்துவதனால் பிறக்கின்றது.
ற், ன் இவை, மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால் பிறக்கின்றன.

இவ்வாறு ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வொரு முறையில் பிறக்கின்றது. ஆகவே, எழுத்துகளின் ஒலிப்புமுறைகளை அறிந்து, அவற்றைச் சரியாக ஒலிக்க வேண்டும்.

தமிழ் எழுத்துகளைத் தனித்தனியாக ஒலிக்கும்போது, மேற்குறிப்பிட்ட வழியில் அமையும். ஆனால், இவ்வெழுத்துகள் சொற்களில் பயின்று வரும்போது உடன்வரும் எழுத்தின் ஒலியோடு சார்ந்து, சிறிது ஒலி மாற்றம் அடையும்.

உதாரணமாக ‘க’ என்பது வெடிப்பொலி. இது தனக்கு இனமான மெல்லொலியோடு சேர்ந்து வரும்போது சிறிது மெல்லொலித் தன்மை பெற்று வரும்.

எ.கா :

‘கு‘ என்னும் எழுத்தைத் தனித்துச் சொல்லும்போது, ‘ku’ என ஒலிக்கும். ஆனால், இவ்வெழுத்து, ‘பங்‘கு‘ என்னும் சொல்லில் ‘ங்‘ என்னும் மெல்லொலியுடன் சேரும்போது, ‘gu’ என ஒலிக்கும்.

இவ்வாறே, அகம் என்ற சொல்லில் ‘க’ எனும் எழுத்து ‘ka’ என ஒலிக்காமல் ‘ha’ என ஒலிக்கும்.

பஞ்சு எனும் சொல்லில் ‘சு’ எனும் எழுத்து ‘su’ என ஒலிக்காமல் ‘ju’ என ஒலிக்கும்.