‘உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே’ |
TT02 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
1.2 தமிழ் எழுத்துகளின் வகை
தமிழ் எழுத்துகளின் வகை
நாம் தமிழைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் வேண்டும். அதற்குத் தமிழ்ச் சொற்களின் முறைகளை அறிய வேண்டும். தமிழின் தன்மைகளையும், மரபுகளையும் விதிப்படி அறிந்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் கருவியாக இருப்பதே இலக்கண நூலாகும். இலக்கு = குறிக்கோள்; அணம் = அழகு. எனவே, அழகைக் குறிக்கோளாகக் கொண்டது இலக்கணம் எனப்படும். எழுத்துகளின் வடிவம், பேசும்போது ஒலி வடிவிலும், எழுதும்போது வரிவடிவிலும் இருக்கும்.
தமிழ் எழுத்துகள் இருவகைப்படும். அவை முதலெழுத்து, சார்பெழுத்து என்பனவாகும்.
உயிரெழுத்துகள் பன்னிரண்டும், மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகளும் தமிழ்மொழிக்கு அடிப்படையான முதல் எழுத்துகளாகும். உயிர்மெய் எழுத்துகள் தோன்றுவதற்கு இந்த எழுத்துகளே அடிப்படையாக உள்ளன. ஆகையால், இவை முதலெழுத்துகள் எனக் குறிக்கப்படுகின்றன.
அ முதல் ஔ வரை உள்ள பன்னிரண்டும் உயிர் எழுத்துகள்.
உயிர் எழுத்துகளை இருவகையாகப் பிரிக்கலாம். அவை குறில் எழுத்து, நெடில் எழுத்து என்பனவாகும். குறுகிய ஓசையை உடைய எழுத்துகள் குறில் எனவும், நீண்ட ஓசையை உடைய எழுத்துகள் நெடில் எனவும் குறிக்கப்படுகின்றன.
உயிர் எழுத்து - 12 | |
---|---|
குறில் | நெடில் |
அ | ஆ |
இ | ஈ |
உ | ஊ |
எ | ஏ |
- | ஐ |
ஒ | ஓ |
- | ஔ |
5 | 7 |
க் முதல் ன் வரை உள்ள பதினெட்டும் மெய்யெழுத்துகள்
மெய்யெழுத்துகள் மூன்று வகைப்படும். அவை வல்லினம், மெல்லினம், இடையினம் என்பனவாகும்.
க், ச், ட், த், ப், ற் என்னும் ஆறும் வல்லினம் எனப்படுகின்றன. இவை வன்மையான ஓசையை உடையதால் இப்பெயர் பெற்றன.
ங். ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறும் மெல்லினம் எனப்படுகின்றன. இவை மென்மையான ஓசையை உடையதால் இப்பெயர் பெற்றன.
ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறும் இடையினம் எனப்படுகின்றன. இவை வன்மையாகவும் இல்லை; மென்மையாகவும் இல்லை. இரண்டிற்கும் இடைப்பட்ட தன்மையை உடையதால் இப்பெயர் பெற்றன.
பொதுவாக, தமிழ் எழுத்துகளை ஒலிக்கும் போது ஓர் எழுத்தை ஒலிப்பதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் கால அளவை காணிப்பதற்கு “மாத்திரை” என்ற சொல்லாட்சியில் இலக்கண நூலார் குறிப்பிட்டுள்ளனர். எழுத்துகளை ஒலிப்பதற்குரிய கால அளவு மாத்திரை எனப்படும். இயல்பாக நாம் ‘கண்’ இமைக்கும் நேரம் அல்லது ‘கை‘ நொடிக்கும் நேரம் ஒரு மாத்திரைக்குரிய கால அளவாகும். இதனையே,
கால், அரை, முக்கால் ஆகிய மாத்திரை அளவுகளையும் தமிழ் இலக்கண நூற்பா ஒன்று வரையறுத்துக் கூறுகிறது.
1. உன்னல் (நினைத்தல்) | - | ¼ மாத்திரை |
2. ஊன்றல் (கட்டைவிரலும் நடு விரலும் ஒன்றையொன்று பொருந்துதல்) | - | ½ மாத்திரை |
3. முறுக்கல் (கட்டை விரலும் நடு விரலும் ஒன்றையொன்று அழுத்தமாக உரசுதல்) | - | ¾ மாத்திரை |
4. விடல் (கட்டை விரலும் நடு விரலும் ஒன்றையொன்று வேகமாக விலகுதல்) | - | 1 மாத்திரை |
தமிழ் எழுத்துகளுக்கான மாத்திரை பின்வருமாறு
வரிசை எண் | தமிழ் எழுத்துகள் | மாத்திரை |
---|---|---|
1. | உயிர்க் குறில் (அ, இ, உ, எ, ஒ) | 1 மாத்திரை |
2. | உயிர்மெய்க் குறில் (க, ங, ச … ன.) | 1 மாத்திரை |
3. | உயிர் நெடில் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) | 2 மாத்திரை |
4. | உயிர்மெய் நெடில் (கா, ஙா, சா ….னா) | 2 மாத்திரை |
5. | மெய்யெழுத்து (க். ங், ச், …) | ½ மாத்திரை |
6. | ஆய்தம் (ஃ) | ½ மாத்திரை |
7. | குற்றியலுகரம் | ½ மாத்திரை |
8. | குற்றியலிகரம் | ½ மாத்திரை |
9. | ஐகாரக் குறுக்கம் | சொல்லின்முதலில் 1 ½ இடையிலும் கடையிலும் 1 மாத்திரை |
10. | ஔகாரக் குறுக்கம் | 1½ மாத்திரை |
11. | மகரக் குறுக்கம் | ¼ மாத்திரை |
12. | ஆய்தக் குறுக்கம் | ¼ மாத்திரை |
13. | உயிரளபெடை | 3 மாத்திரை |
14. | ஒற்றளபெடை | 1 மாத்திரை |
தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல், பிற எழுத்துகளைச் சார்ந்தே இயங்கும் தன்மையுடைய எழுத்துகள் சார்பெழுத்துகள் எனப்படுகின்றன. அவை பத்து வகைப்படும். அவை :- உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பனவாகும்.
பதினெட்டு மெய்யெழுத்துகளுடன் பன்னிரண்டு உயிர்யெழுத்துகள் புணர்வதால் (சேர்வதால்) பிறக்கும் எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் எனப்படும் (18 x 12 = 216). அவ்வுயிர்மெய் எழுத்துகளை ஒலிக்கும்போது மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னும் ஒலிக்கும்..
க் + அ = க | க் + ஆ = கா | க் + இ = கி | க் + ஈ = கீ |
க் + உ = கு | க் + ஊ = கூ | க் + எ = கெ | க் + ஏ = கே |
க் + ஐ = கை | க் + ஒ = கொ | க் + ஓ = கோ | க் + ஔ = கௌ |
இவ்வாறே, மற்றைய மெய்யெழுத்துகளுடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகள் புணர்வதால் எஞ்சியுள்ள உயிர்மெய் எழுத்துகள் பிறக்கின்றன. எனவே, உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை 12 x 18 = 216 ஆகும்.
மூன்று புள்ளி (ஃ) வடிவுடைய எழுத்து ஆய்த எழுத்து எனப்படும். இது, தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாதது; தனக்கு முன்னே ஒரு குறில் எழுத்தையும், பின்னே ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் துணையாகக் கொண்டு இயங்கும்.
- ஆய்த எழுத்தை அக்கேனம், அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று, முப்பாற்புள்ளி, நடுவாய்தம், முற்றாய்தம், அஃகன்னா, அடுப்பெழுத்து போன்ற பெயர்களையும் முன்னோர்கள் வழங்கிவந்துள்ளனர்; இருப்பினும் ’ஆய்தம்’ என்று அழைப்பதே வழக்கில் உள்ளது.
- தமிழ்நெடுங்கணக்கு அல்லது அகரச்சுவடியில் (Alphabet) உயிர் எழுத்துகள் (அ-ஔ) நிறைவுற்ற பின்னும், மெய் எழுத்துகள் (க் – ன்) தொடங்குவதற்கு முன்னும் இரண்டிற்கும் இடைப்பட்டதாக இந்த ஆய்த எழுத்தின் இடம் அமையும்.
- ஆய்த எழுத்து பின் நா – பின் அண்ண – ஒலிப்புடை – உரசொலியாக (velar – voiced – fricative) ஒலிக்கும். ஹ் அல்லது h என்னும் ஒலிகளை ஏழுபுடை ஒத்து ஒலித்தாலும், அதைவிட நுட்பம் வாய்ந்தது ஆய்தம். (எ. கா.) அஃறிணை, பஃறொடை, ஏ.ஆர்.ரஃமான். இக்காலத்தில் தனக்குப் பின் வரும் வல்லொலியை நலிவுறச் செய்வதற்கும் ஆய்த எழுத்து பயன்படுகிறது. Coffee – காஃபி, Felix – ஃபெலிக்ஸ்
- ஆய்தம் தோன்றுமிடங்களை எட்டாகக் காட்டுவர் இலக்கணப் புலவர்கள்.
- குறிலுக்குப் பின்னும், உயிரொடு கூடிய (ஆறு) வல்லெழுத்துக்கு முன்னும் ஆய்தம் தோன்றும். (இவ்வகையில் ஆய்தம் தோன்றிமிடங்கள் 6) எஃகு, கஃசு (ஓர் எடை அளவு), கஃகு (பழைய உரையாசிரியர்களால் காட்டப்படுகிறது, பொருள் விளங்கவில்லை), அஃது, கஃபு (பழைய உரையாசிரியர்களால் காட்டப்படுகிறது, பொருள் விளங்கவில்லை), பஃறி (ஓடம், பன்றி)
- திரிதல் என்னும் புணர்ச்சி விகாரத்தால் வரும் ஆய்தம் (1) அவ் + கடிய = அஃகடிய
- விரித்தல் என்னும் செய்யுள் விகாரத்தால் வரும் ஆய்தம் (1) அ + கான் = அஃகான்
செய்யுளில் மொழிக்கு முதலிலும் இடையிலும், இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகளின் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும். உயிர்நெடில் எழுத்துகளில் ஏதேனும் ஒன்று தனக்குரிய ஒலிக்கும் கால அளவாகிய 2 மாத்திரையிலிருந்து 3 மாத்திரையாக மிகுந்து ஒலிக்கும். இவ்வுயிரளபெடை முதல், இடை, கடை ஆகிய மூவிடங்களிலும் அளபெடுக்கும். உயிரளபெடை மூன்று வகைப்படும்
- செய்யுளிசை அளபெடை - செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைசெய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்பர். இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்.
ஓஒதல் வேண்டும் | - | மொழி முதல் |
உறாஅர்க்கு | - | மொழியிடை |
நல்ல படாஅ பறை | - | மொழியிறுதி |
- இன்னிசை அளபெடை- செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காகக் குறில் நெடிலாக மாறி அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை |
- சொல்லிசை அளபெடை – செய்யுளில் ஒரு பெயர்ச்சொல்லை எச்சச் சொல்லாக மாற்றுவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.
உரனநசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரன்நசைஇ இன்னும் உளேன் |
(நசை – விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என அளபெடுத்தது. பெயர்ச்சொல், வினையெச்சமாக மாறியது.)
செய்யுளில் ஓசை குறையும்போது, அவ்வோசையை நிறைவு செய்வதற்காகத் தனிக்குறிலையோ, இணைக்குறிலையோ சார்ந்து வரும் பத்து ஒற்றெழுத்துகளில் ஏதேனும் ஒன்று (ங், ஞ், ண், ந், ம், ன், ய, ல, வ, ள்), தனக்குரிய ஒலிக்கும் கால அளவாகிய ½ மாத்திரையிலிருந்து 1 மாத்திரையாகச் சொல்லின் இடையிலும், கடையிலும் மிகுந்து ஒலிக்கும். இவ்வாறு ஒற்றெழுத்து மிகுந்து ஒலிப்பது ஒற்றளபெடை எனப்படும். ஆய்த எழுத்தும் (ஃ) தனிக்குறிலையோ, இணைக்குறிலையோ சார்ந்து, சொல்லின் இடையிலும் கடையிலும் தனக்குரிய ½ மாத்திரையிலிருந்து 1 மாத்திரையாக மிகுந்து ஒலிக்கும். இந்தப் பதினோர் எழுத்தும் அளபெடுத்தமைக்கு அடையாளமாக, அதனதன் எழுத்தே அருகில் தோன்றி நிற்கும். ஆய்தம் (ஃ) தனிக்குறிலையும், இணைக்குறிலையும் அடுத்து மொழிக்கு இறுதி எழுத்தாக அமையாது.
எங்ங் இறைவன் உளன் என்பாய் மனனேயான் எஃஃகிலங்கிய |
‘உ’ என்னும் உயிர்க்குறில் எழுத்து, வல்லொற்று ஆறனுடன் (க் + உ = கு, ச் + உ = சு, ட் + உ = டு, த் + உ = து, ப் + உ = பு, ற் + உ = று) புணரும்போது, அவ்வொற்றெழுத்துகள் கு, சு, டு, து, பு, று என மாறும். இவற்றுள் ஏதேனும் ஓர் எழுத்து, ஒரு சொல்லிற்கு உறுப்பாக இறுதியில் அமைந்து ஒலிக்கும்போது, அவ்வெழுத்து தனக்குரிய ஒலிக்கும் கால அளவாகிய 1 மாத்திரையிலிருந்து ½ மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு, வல்லொற்று ஆறனுடன் புணர்ந்த உகரம் தனக்குரிய ஒலிக்கும் கால அளவிலிருந்து குறைந்து ஒலிப்பது (1 மாத்திரையிலிருந்து ½ மாத்திரையாக) குற்றியலுகரம் எனப்படும். சொற்களை உச்சரிக்கும்போது மட்டுமே ஓசைக் குறைப்பாட்டை உணரமுடியும். ஓசை குறைந்து ஒலிப்பதைக் குறித்துக் காட்டத் தனி வரிவடிவம் இன்றைய தமிழில் இல்லை. இத்தகைய சொல்லின் ஈற்றயல் எழுத்தை (இறுதி எழுத்துக்கு முன் எழுத்து) அடிப்படையாகக் கொண்டு, குற்றியலுகரகம் ஆறு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை
- நெடில் தொடர்க் குற்றியலுகரம் – ஆடு, காடு, காது, சோறு
- ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் - அஃது, இஃது
- உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் - அழகு, அரசு, மரபு
- வன்தொடர்க் குற்றியலுகரம் – பாக்கு. பத்து, உப்பு
- மென்தொடர்க் குற்றியலுகரம் – பஞ்சு, வண்டு, பந்து, அம்பு
- இடைத்தொடர்க் குற்றியலுகரம் – செய்து, சால்பு, மார்பு
கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகளை இறுதியாக உடைய சொற்களுடன், ‘யா’ என்னும் எழுத்தை முதலாக உடைய சொல் புணரும்போது, கு, சு, டு, து, பு, று முறையே கி, சி, டி, நி, பி, றி எனத் திரியும். இவ்வெழுத்துகளில் உள்ள ‘இ’ என்னும் எழுத்து (க் + இ = கி, ச் + இ = சி, ட் + இ = டி, த் + இ = தி, ப் + இ = பி, ற் + இ = றி) தனக்குரிய ஒலிக்கும் கால அளவாகிய 1 மாத்திரையிலிருந்து 1/2 மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் எனப்படும். சொற்களை உச்சரிக்கும்போது மட்டுமே குற்றியலிகரத்தை உணரமுடியும். குற்றியலிகரத்திற்கென தனி வரிவடிவ எழுத்து இன்றைய தமிழில் இல்லை.
குறிப்பு : குற்றியலுகரச் சொற்களுடன் ‘யா’ என்னும் எழுத்தை முதலாக உடைய சொல் புணரும்போது, குற்றியலுகரம் குற்றியலிகரமாக மாறும்.
வ. எண் | குற்றியலிகரச் சொற்கள் | + | யா என்னும் எழுத்தை முதலாக உடைய சொல் | குற்றியலிகரமாக மாறுதல் |
---|---|---|---|---|
1. | கொக்கு (வ.கு.) | + | யாது ? | கொக்கியாது ? |
2. | பஞ்சு (மெ.கு.) | + | யாது ? | பஞ்சியாது ? |
3. | இயல்பு (இ,கு.) | + | யாது ? | இயல்பியாது ? |
4. | அஃது (ஆ.கு.) | + | யாது ? | அஃதியாது ? |
5. | பயறு (உ.கு.) | + | யாது ? | பயறியாது ? |
6. | நாடு (நெ.கு.) | + | யாது ? | நாடியாது ? |
மேலும், கேண்மியா (கேள் + மியா), சென்மியா (செல் + மியா) என்னும் அசைச்சொற்களில் உள்ள ‘மி’ (ம் + இ = மி) என்னும் எழுத்து தனக்குரிய ஒலிக்கும் கால அளவாகிய 1 மாத்திரையிலிருந்து ½ மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு ‘ம்’ என்னும் ஒற்றெழுத்தின் மேல் புணர்ந்த இகரம் தனக்குரிய மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் எனப்படும்.
இவ்வாறாக, குற்றியலுகரச் சொற்கள் முப்பத்தாறனுடன், ‘யா’ என்னும் எழுத்தை முதலாக உடைய சொல் புணர்வதால் தோன்றும் குற்றியலிகரச் சொற்கள் முப்பத்தாறு ஆகும். அவற்றுடன் ‘மியா’ என்னும் அசைச்சொல்லில் தோன்றும் குற்றியலிகரம் ஒன்றையும் சேர்க்க, குற்றியலிகரத்தின் மொத்த எண்ணிக்கை முப்பத்தேழாகும் என்பதை அறிக.
‘ஐ’ என்னும் எழுத்து, சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ வரும்பொழுது, அது தனக்குரிய ஒலிக்கும் கால அளவாகிய 2 மாத்திரை அளவிலிருந்து முறையே 1 ½, 1 எனக் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு ‘ஐ’ தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிப்பது ஐகாரக் குறுக்கம் எனப்படும். இச்சொற்களை ஒலிக்கும் போது மட்டுமே இந்த ஓசைக் குறைபாட்டை உணரமுடியும்.
1. | ஐப்பசி | - | இச்சொல்லின் முதலில் உள்ள ‘ஐ’ 1 ½ மாத்திரை அளவில் ஒலித்துள்ளது. |
2. | வளையல் | - | இச்சொல்லின் இடையில் உள்ள ‘ஐ‘ (ள் + ஐ = ளை) 1 மாத்திரை அளவில் ஒலித்துள்ளது. |
3. | தவளை | - | இச்சொல்லின் இறுதியில் உள்ள ‘ஐ‘ (ள் + ஐ = ளை) 1 மாத்திரை அளவில் ஒலித்துள்ளது. |
‘ஔ’ என்னும் எழுத்து. சொல்லின் முதலில் மட்டுமே வரும். சொல்லின் இடையிலும், இறுதியிலும் வராது. அவ்வாறு, சொல்லின் முதலில் வரும்போது, தனக்குரிய ஒலிக்கும் கால அளவாகிய 2 மாத்திரை அளவிலிருந்து 1½ மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு, ‘ஔ’ என்னும் எழுத்து தனக்குரிய மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது ஔகாரக் குறுக்கம் எனப்படும்.
ஔவையார், மௌவல் (பூ), வௌவினை (தீவினை)
மேற்கண்ட சொற்களின் முதலில் உள்ள ‘ஔ’ (ம் + ஔ = மௌ), (வ் + ஔ = வௌ) என்னும் எழுத்து தனக்குரிய ஒலிக்கும் கால அளவாகிய 2 மாத்திரையிலிருந்து 1 ½ மாத்திரையாகக் குறைந்து ஒலித்துள்ளது. இச்சொற்களை ஒலிக்கும்போது மட்டுமே இந்த ஓசைக் குறைபாட்டை உணரமுடியும்.
‘ண், ன்’ என்னும் ஒற்றெழுத்துகளின் பின்னால் ‘ம்’ என்னும் ஒற்றெழுத்து ஒலிக்கும்போது, ‘ம்’ தனக்குரிய ஒலிக்கும் கால அளவாகிய ½ மாத்திரை அளவிலிருந்து ¼ மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்.
இவ்வாறு மகரமெய் (ம்) தனக்குரிய மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும்.
1. போன்ம் (போலும்)
2. மருண்ம் (மருளும்)
மேலும், ஏதேனும் ஒரு சொல்லின் இறுதியில் மகர ஒற்று (ம்) அமைந்து, அச்சொல்லை அடுத்து வரும் வருமொழியின் முதல் எழுத்தாக வகரம் (வ) வந்தால், மகர ஒற்று (ம்) தனக்குரிய ஒலிக்கும் கால அளவாகிய ½ மாத்திரையிலிருந்து ¼ மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதும் மகரக்குறுக்கம் என்றே வழங்கப்படும். எனவே, மகரக் குறுக்கத்தின் எண்ணிக்கை மூன்றெனக் கொள்க.
வரும் வண்டி, தரும் வளவன்
மேற்கண்ட சொற்களை உச்சரிக்கும்போது மட்டுமே இந்த ஓசைக் குறைபாட்டை உணரமுடியும்.
ல், ள் என்னும் இவ்விரு ஒற்றெழுத்துகள், ஒரு சொல்லின் இறுதி எழுத்தாகத் தனிக்குறிலை மட்டும் சார்ந்து நிற்கும்போது, அச்சொல்லுடன் தகரத்தை முதலாக உடைய சொல் வந்து புணரும்போது, ல், ள் இவ்விரு எழுத்துகள் ஆய்தமாகத் (ஃ) திரியும். இப்புணர்ச்சியால் உண்டான அப்புதிய சொல்லை உச்சரிக்கும்போது, அதில் உள்ள ஆய்த எழுத்து தனக்குரிய ½ மாத்திரை அளவிலிருந்து குறைந்து ¼ மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஆய்தக் குறுக்கம் எனப்படும்.
கல் + தீது = கஃறீது
முள் + தீது = முஃறீது
மேற்கண்ட சொற்களில் உள்ள ஆய்த எழுத்து தனக்குரிய ஒலிக்கும் கால அளவாகிய ½ மாத்திரையிலிருந்து ¼ மாத்திரையாகக் குறைந்து ஒலித்துள்ளது. இச்சொற்களை உச்சரிக்கும்போது மட்டுமே ஓசைக்குறைபாட்டை உணரமுடியும்.
எழுத்துகள் பிறக்கும் இடம், ஒலிக்கும் முயற்சி, ஒலிக்கும் கால அளவு, பொருள், வடிவம் ஆகியவற்றில் ஒன்று மற்றொன்றுடன் ஏதேனும் ஒரு வகையில் ஒத்திருந்தால் அவை இன எழுத்துகள் எனப்படும். உயிர்க்குறில் எழுத்துகளுக்கு அவற்றின் நெடில் எழுத்துகள் இனமாகும்.
அ | இ | உ | எ | ஐ | ஒ | ஔ |
ஆ | ஈ | ஊ | ஏ | இ | ஓ | உ |
ஐ – இகரத்தையும். ஔ – உகரத்தையும் இனமாகக் கொண்டுள்ளன.
மேற்கண்ட எழுத்துகள் வடிவத்திலும், ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒத்திருப்பதைக் காண்க.
க், ச், ட், த், ப், ற் | வல்லினம் |
ங், ஞ், ண், ந், ம், ன் | மெல்லினம் |
ய், ர், ல், வ், ழ், ள் | இடையினம் |
மெய்யெழுத்துகள் பிறக்கும் இடம், ஒலிக்கும் முயற்சி ஆகியவற்றால் மூவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துக்கு இன எழுத்தாக உயிர் நெடில் எழுத்து இருப்பதைப் போல, மெய்யெழுத்துகளில் வல்லின எழுத்திற்கு இன எழுத்தாக மெல்லின எழுத்து அமைந்துள்ளது.
க் | ச் | ட் | த் | ப் | ற் |
ங் | ஞ் | ண் | ந் | ம் | ன் |
ய், ர், ல், வ், ழ், ள் என்னும் இடையின எழுத்துகள் ஆறும் ஓரினமாம் ; அதாவது, ஓர் எழுத்துக்கு மற்ற ஐந்தும் இனமாம்.
பிறவற்றைச் சுட்டுவதற்காகச் சுட்டுப்பொருள் தந்து நிற்கும் எழுத்துகள், சுட்டெழுத்துகள் எனப்படும். அவை, அ, இ, உ என்பன.
அவன், அவள், அவர், அது, அவை, இவன், இவள், இவர், இது, இவை
உகரச்சுட்டு (உவன், உவள், உவர், உது, உவை) இன்று வழக்கில் இல்லை.
‘இ’ என்பது, பக்கத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டுவதற்கு வரும் எழுத்து. அதனால், ‘இ’ என்பது அண்மைச் சுட்டு என்று அழைக்கப்படுகிறது.
இவன், இவள், இவர், இது, இவை
‘அ’ என்பது, தொலைவில் உள்ளவற்றைச் சுட்டிக்காட்டுவதற்கு வரும் எழுத்து. அதனால் ‘அ’ என்பது சேய்மைச் சுட்டு. (சேய்மை – தொலைவு)
அவன், அவள், அவர், அது, அவை
அந்த, இந்த, அங்கு, இங்கு என வருவன எல்லாம் சுட்டுத் திரிபுகள் எனப்படும். ‘உ’ என்ற எழுத்து இடைமைச் சுட்டு எழுத்து. ஆனால், இது தற்காலப் பயன்பாட்டில் இல்லை.
ஒருசொல்லின் அகத்தே (உள்ளே) நின்று சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.
அவன், அவள், அவர், அது, அவை
இவன், இவள், இவர், இது, இவை
உது, உவன்.
அகச்சுட்டுச் சொற்களிலிருந்து சுட்டெழுத்தை நீக்கினால் அச்சொல் பொருள் தராது.
அ | + | வள் |
இ | + | வள் |
அ | + | வன் |
இ | + | வன் |
அ | + | து |
இ | + | து |
அ | + | வை |
இ | + | வை |
ஒரு சொல்லின் புறத்தே (வெளியே) நின்று சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு ஆகும்.
அப்பையன், அவ்வீடு, அக்குளம்.
இப்பையன், இவ்வீடு, இக்குளம்
உப்பக்கம்.
புறச்சுட்டு சொற்களைப் பிரித்தாலும் பொருள் தரும்.
அ | + | பையன் |
இ | + | பையன் |
அ | + | வீடு |
இ | + | வீடு |
அ | + | குளம் |
இ | + | குளம் |
உ | + | பக்கம் |
‘எ’, ‘யா’, ‘ஆ’, ‘ஓ’, ‘ஏ’ ஆகிய ஐந்து எழுத்தும் வினாப்பொருளில் வருகின்ற எழுத்துகளாகும்.
எவன்? யார்? அவனா? அவளோ? யானே?
இவ்வாறு எடுத்துக்காட்டுகள் அமையும். இவற்றுள், ‘எ’, ‘யா’ ஆகிய இரண்டும் சொல்லின் முதலில் நின்று வினாப் பொருள் தரும்.
எவன்? | - | யாவன்? |
எவள்? | - | யாவள்? |
எவர்? | - | யாவர்? |
எவை? | - | யாவை? |
எது? | - | யாது? |
‘ஆ’, ‘ஓ’ – ஆகிய இரண்டும் சொல்லின் இறுதியில் நின்று வினாப்பொருள் தரும்.
அவனா? | - | அவனோ? |
அவளா? | - | அவளோ? |
அதுவா? | - | அதுவோ? |
அவையா? | - | அவையோ? |
‘ஏ’ என்னும் எழுத்து, சொல்லுக்கு முதலிலும், சொல்லுக்கு இறுதியிலும் நின்று வினாப் பொருள் தரும்.
ஏன்? | - | யானே? |
ஏது ? | - | அவனே? |
சொல்லின் உள்ளே நின்று வினாப்பொருள் தந்தால் அகவினா ஆகும். அந்த வினா எழுத்தை நீக்கினால் சொல்லுக்குப் பொருள் இராது.
யார்? எது? ஏன்?
சொல்லின் வெளியே நின்று வினாப்பொருள் தந்தால் புறவினா ஆகும். அந்த வினா எழுத்தை நீக்கினாலும் சொல்லுக்குப் பொருள் இருக்கும்.
அவனா? ( ன்+ ஆ)?, இவன்தானே (ன்+ஏ)?, எவ்வூர்? (எ+ஊர்)?
ஒருவரைத் தனியாக அடையாளப்படுத்திக் காட்டுவது அவருடைய பெயர். பெயரில்லாமல் யாருமே இருக்க முடியாது. அதுபோல, எழுத்துகளுக்கும் பெயர்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, ‘க‘ என்னும் எழுத்தைக் கூறும்போது, ‘ககரம்‘ எனக் கூறவேண்டும். அதே போல் ‘ஏ’ என்னும் எழுத்தைக் கூறும்போது, ‘ஏகாரம்‘ எனக் கூறவேண்டும். இவ்வாறு எழுத்துகளுடன் கரம், காரம், கான் எனச் சாரியைச் சேர்த்துச் சொல்வோம்.
இங்கு, மயங்கொலி எழுத்துகளுக்குரிய பெயர்களை அறிவோம்.
‘ல’ | நுனி நா லகரம் என்று ஒலிப்பு அடிப்படையில் இது அழைக்கப்படுகிறது. மேலும் தனி லகரம் என்றும் கூறுவர். |
‘ள’ | நா மடி ‘ளகரம் என்று கூறுவர். இதனைப் பொது ளகரம் என்றும் கூறுவர். |
‘ழ’ | இதன் பெயர் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. தமிழுக்கே தனிச்சிறப்பு சேர்க்கும் எழுத்து என்பதால் இதைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். |
‘ண’ | மூன்று சுழி ‘ண’ என்று நாம் அழைக்கின்றோம். ஆனால், இதன் இன எழுத்தான டகரத்தோடு இணைத்துச் சொல்லவேண்டும். ஏனென்றால் இந்த இரண்டு எழுத்தும் ஒரே இடத்திலேயே பிறக்கின்றன. எனவே இதனை டண்ணகரம் என்று கூறுதல் வேண்டும். |
‘ந’ | தகரமும் நகரமும் ஒரே இடத்தில் பிறப்பதால் தந்நகரம் என்று இது அழைக்கப்பெறும். |
‘ன’ | இரண்டு சுழி னகரம் என்று இதனை நாம் கூறுவோம். இருசுழி னகரம் என்றும் இது அழைக்கப்படும். டண்ணகரத்தைப் போலவே றன்னகரம் என்று முன்னால் வரும் எழுத்தோடு சேர்த்து இது அடையாளப்படுத்தப்படும். ஏனென்றால் இவை இரண்டும் ஒரே இடத்தில் பிறக்கின்றன. |
‘ர’ | இடையின எழுத்து என்பதால், இடையின ரகரம் என்று அழைக்கப்படும். |
‘ற’ | வல்லின எழுத்து என்பதால், வல்லின றகரம் என்று அழைக்கப்படும். |
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
---|
|