முகப்பு

1.5 கிரந்த எழுத்துகள்

கிரந்த எழுத்துகள்

வடமொழி எழுத்து : வடமொழி எழுத்தொலியைத் தமிழ் எழுத்தொலிக்கு ஏற்ப மாற்றியெழுதுதலே மரபாகும். அவை வருமாறு :

1. ஜ – ச, ய வாக மாறும்; ஜகதீசன் – சகதீசன்; விஜயாள் – விசயாள்; ஜயவேல் – சயவேல்;    புஜம் – புயம்; ரோஜா – உரோசா; பூஜாரி – பூசாரி; ஜப்பான் – யப்பான்
2. ஷ – ச, ட வாக மாறும்; ஷண்முகம் – சண்முகம்; கஷ்டம் – கட்டம்; சஷ்டி – சட்டி;          ஷெல்பு – செல்பு; பாஷாணம் – பாடாணம்; திருஷ்டி – திட்டி
3. க்ஷ – க, ச, ட கரமாக மாறும்; க்ஷணம் – கணம்; க்ஷேமம் – சேமம்; பிக்ஷை – பிச்சை; ஆக்ஷேபணை – ஆட்சேபணை; பரீக்ஷை – பரீட்சை
4. ஸ – ச, அ, த கரமாகும்; ஸமயம் – சமயம், அமயம்; பாஸம் - பாசம்; ஸம்சாரம் – சமுசாரம்;         மாஸம் – மாதம்
5. ஹ – அ, இ, ஓ, க வாக மாறும்; ஹரி – அரி; ஹிருதயம் – இருதயம்; ஹோமியோபதி – ஓமியோபதி; மோஹனன் – மோகனன்; சுஹம் – சுகம்
  1. அபூர்வம் – அபூருவம் ; ஆத்மா – ஆத்துமா ; பத்னி – பத்தினி ; சொர்ணம் – சொருணம் ; பத்மினி – பதுமினி ; கர்ணன் – கன்னன் ; அதிருஷ்டம் – அதிட்டம்
  2. ஆகாரத்தில் முடிபவை ; தமிழில் ஐகாரத்தில் முடியும் ; கலா – கலை ; பாடசாலா – பாடசாலை ; மேகலா – மேகலை
  3. வடமொழி இணை எழுத்து இகரச்சாரியை ஏற்றும், உகரச் சாரியை ஏற்றும் வரும். பாக்யம் – பாக்கியம் ; காப்யம் – காப்பியம் ; அக்ரமம் – அக்கிரமம் ; சுப்ரமண்யன் – சுப்பிரமணியன் ; சத்யவதி – சத்தியவதி (இகரம்) ; பத்மம் – பதுமம் ; அர்த்தம் – அருத்தம் ; நிர்வாகி – நிருவாகி (உகரம்)
  4. கெட்டும் திரிந்தும் வரும். ஸ்தலம் – தலம் ; அஸ்தம் – அத்தம் ; ஸ்தூபி – தூபி
  5. தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாக வரும் பொதுவெழுத்துத் தமிழில் வழங்குங்கால், சிறப்பெழுத்தாகவே வரும். அநுமன் – அனுமன் ; ஆநந்தன் – ஆனந்தன்.
  6. பிறமொழி ; வடமொழியைப் போலவே, காலப்போக்கில் வேறு அயல் மொழியும் தமிழில் வந்து வழங்குகின்றன. அவற்றையும் தமிழ் ஒலிக்கியைய அமைத்து எழுதவும். அவை : ஆங்கிலம் : COFFEE – காஃபி ; SOCIETY – சொசைட்டி ; SWIS – சுவிசு ; ஸ்காட்லாண்ட் – காட்டுலாந்து; FORD – போர்டு ; ஸ்டாலின் – இசுடாலின், தாலின் ; லெனின் - இலெனின்

குறிப்பு : பிறமொழியைத் தமிழில் எழுதுங்கால் அம்மொழிக்கு நேரான பொருள் தரும் சொல் தமிழில் இருந்தால் அச்சொல்லையே வழங்க வேண்டும். எ.கா. (புட்பம் – மலர், பூ) கவர்னர் – ஆளுநர் ; போர்டு – கரும்பலகை, விளம்பரப் பலகை.