முகப்பு

1.1 தமிழ் எழுத்துகளின் தோற்றம்

தமிழ் எழுத்துகளின் தோற்றம்

மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைகளிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.

தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர். அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் ஓசையைக் குறித்தது. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர். இன்றுள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.

இன்றைய வரிவடிவ எழுத்திற்கு முற்கால எழுத்துகளே அடிப்படையாகும். இங்ஙனம் அடிப்படையாய் அமைந்த முற்கால எழுத்துகளை ஆராயும் ஆராய்ச்சியே தொல்லெழுத்தியல் (Palaeography) எனப்படும். எழுத்துகளுக்கு அடிப்படையாக அமைந்தது ஓவியங்களே என்ற அடிப்படையில் எழுத்துகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  • ஓவிய எழுத்து
  • கருத்தெழுத்து
  • ஒலியெழுத்து
• ஓவிய எழுத்து

எழுத்துகளின் தோற்றத்திற்கு முதல் அடிப்படை ஓவியங்களேயாகும். வேட்டையாடித் திரிந்த தொல்பழங்கால மக்கள் தமது கருத்துகளை ஒலியெழுப்பி அவற்றை வெளிப்படுத்த சில கிறுக்கல்களைப் பயன்படுத்தினர். நாளடைவில் ஓவியங்களாக வரைய ஆரம்பித்தனர். அத்தகைய ஓவியங்கள் பிரெஞ்சு, ஸ்பெயின் நாடுகளில் குகைகளில் இன்றும் காணப்படுகின்றன. இவை பல வாக்கியங்களின் தொகுப்பு. அவை சின்னஞ்சிறு ஓவியமாகப் பிரிந்து ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு சொல்லின் அறிகுறியாக வளர்ச்சியடைந்தன. எழுதத் தெரியாத பழங்காலத்தில் ஒரு கோயிலுக்குப் பல மாடுகள் இனாமாக வழங்கப்பட்டன என்றால், கோயிலார் சுவரில் ஒரு மாட்டின் தலையை ஓவியமாக எழுதி, எத்தனை மாடுகள் வந்தனவோ அத்தனைப் புள்ளிகளைப் பக்கத்தில் இட்டனர். இங்ஙனம் மாட்டின் தலையை எழுதி அது மாடு என்பதன் அறிகுறி என்று கருதப்பட்ட காலமானது, ஒரு சொல்லுக்கு ஒரு ஓவியம் என்று எழுதப்பட்ட காலமாகும். சீனம், ஜப்பானியம் போன்ற மொழிகளில் ஒரு சொல்லுக்கு ஒரு வடிவம் என்ற ஓவிய எழுத்து முறை இன்றும் இருந்து வருகிறது.

• கருத்தெழுத்து

ஓவிய எழுத்துகள் நாளடைவில் கருத்தெழுத்தாக வளர்ச்சியுற்றன. சூரியனின் ஓவியத்தை எழுதி இது சூரியன் என்று சொல்லப்பட்டால் அது ஓவிய எழுத்து எனப்படும். அந்தச் சூரியனின் ஓவியம் சூரியனோடு தொடர்புடைய பகற்காலத்தையோ சூரிய வெப்பத்தையோ குறிப்பதாகக் கொள்ளப்பட்டால் அது கருத்தெழுத்து எனப்படும்.

• ஒலியெழுத்து

ஒரு சொல்லுக்கு ஓர் அடையாளமாக எழுதிய ஓவியம், நாளடைவில் அச்சொல்லின் முதல் ஒலிக்கு உரிய அடையாளமாக ஏற்பட்டது. இங்ஙனம் ஓர் ஒலிக்கு ஓர் அடையாளம் என்று ஏற்பட்ட நிலையே ஒலி எழுத்தாகும். அதாவது ஓவிய எழுத்திலிருந்து ஒலி எழுத்துத் தோன்றிய மாற்றம் புரட்சிகரமானதாகும். கிரேக்கமொழியில் காளைமாட்டை ஆல்பா என்பர். எனவே காளைமாட்டின் தலையை எழுதி முதலில் ஆல்பா என்று கூறிவந்தனர். பிறகு அதே ஓவியம் ஆல்பா என்ற சொல்லின் முதல் ஒலியாகிய “அ அல்லது a” என்பதன் அறிகுறியாகக் கொள்ளப்பட்டது.

தமிழ் எழுத்துகள் காலந்தோறும் பல மாற்றங்களுக்குட்பட்டுள்ளன. மிக பழங்காலத்திலிருந்து வரிவடிவத்திற்கு வந்தபின் எழுத்துகள் தமிழி அல்லது தமிழ் பிராமி, வட்டெழுத்து மற்றும் இன்றையநிலையில் மேற்கொள்ளப்படும் எழுத்து ஆகிய வரிவடிவ வளர்ச்சிகளைக் கொண்டுள்ளது. இவையன்றி எழுத்துகளுக்குள் அக நிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

• தமிழ் பிராமி

தமிழ்மொழி மிகத்தொன்மையான மொழி, இம்மொழிக்குரிய எழுத்து வடிவம் எப்பொழுது தோன்றியது என்பது இன்னும் விவாதத்துக்குரியதாகவே இருக்கிறது. தமிழின் ஆதிகால எழுத்து தமிழ் பிராமி எனப்படும். இது தற்போது தமிழி என அழைக்கப்படுகிறது. தமிழ் முதலில் சித்திர எழுத்தாகவும் (சிந்து சமவெளி எழுத்துகள்), பின்னர் கீறல்கள் (ஆங்கிலத்தில் graffiti) என்றும், அதன் பின்னர் தமிழ் பிராமி - தமிழி எழுத்தாகவும் உருப்பெற்றுள்ளது. இவ்வெழுத்துகள் அசோகரது கல்வெட்டுகளில் எழுதப் பயன்படுத்தப்பட்ட பிராமி எழுத்துகளைப் போன்று இருந்தது. ஆனால் தமிழ் மொழியின் ழ, ள, ன, ற போன்ற சிறப்பு எழுத்துகள் சேர்த்துக் கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளன. இவ்வெழுத்துகள் தமிழி அல்லது தமிழ் பிராமி என்று வழங்கப்படுகின்றன.

• வட்டெழுத்து

வட்டமான கோடுகளைக் கொண்டு இவ்வெழுத்து எழுதப்பட்டதால் இவ்வெழுத்து வட்டெழுத்து என்றும், வட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. வட்டம் என்ற பெயர் குற்றாலத்தில் உள்ள கி.பி. 3 ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் காணப்படுகிறது. வட்டெழுத்து தமிழ்நாட்டில் சோழநாடு நீங்கலாகவும், கேரளத்திலும் பல நூற்றாண்டுகள் வழக்கத்தில் இருந்திருக்கிறது. சோழர்கள் பாண்டிய நாட்டை தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்த பின் இவ்வெழுத்து முறை அங்கும் செல்வாக்கு இழந்திருக்கலாம். அதன் பின்னர் வட்டெழுத்து, இராஜராஜ சோழன் காலத்தில் முழுமையடைந்த எழுத்துகளாகப் பரிணாமம் பெற்றது. உலகில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் தமிழி, தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் மட்டுமே 60% ஆகும். தமிழ்க் கல்வெட்டுகள் சீனா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, கம்போடியா மற்றும் சுமேரிய பகுதிகளிலும் கிடைத்துள்ளன. இவ்வெழுத்திலான தொன்மையான கல்வெட்டுகள் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆசிரியர்கள், மாணவர்கள், தொல்லியல் ஆர்வலர்களுக்கு நடத்திய சிறப்பு பயிற்சிகள் காரணமாக மிக முக்கியமான வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. தமிழகத்தின் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கிடைத்திடும் நடுகல் கல்வெட்டுகளும் குறிப்பிடத்தக்கவை ஆகும். இப்புதிய கண்டுபிடிப்புகள் தொல்லெழுத்தியலாளர் வட்டெழுத்தின் வளர்ச்சியை முழுமையாக அறிந்திட உதவியாக உள்ளன.

• தமிழ் எழுத்துகள்

காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்பொழுதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன. தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும், செப்பேடுகளிலும் காணமுடிகிறது. கல்வெட்டுகள் கிமு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. செப்பேடுகள் கி.பி ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் வட்டெழுத்து, தமிழ் எழுத்து இடம்பெற்றிருக்கின்றன.

கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன. இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் ‘கண்ணெழுத்தப் படுத்த எண்ணுப் பல்பொதி’(சிலம்பு5 :113) என்னும் பாடல் அடியால் அறியமுடிகிறது.

• வரிவடிவ வளர்ச்சி

பண்டைக்காலத்தில் தமிழ் மொழியிலுள்ள எல்லா எழுத்துகளும் நாம் இன்று எழுதுவது போன்ற வடிவத்தில் எழுதப்படவில்லை. அவை காலத்தின் தேவைக்கேற்பப் பல உருவ மாற்றங்களைப் பெற்றுத்தான் இக்கால வடிவத்தை அடைந்திருக்கின்றன. இவ்வாறு எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைகின்றன.

பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன. பாறைகளில் செதுக்கும்போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் நேர்க்கோடுகள் பயன்படுத்தப்பட்டன. ஓலைகளில் நேர்க்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர். சில எழுத்துகளை அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது. பின்னர் அவையே நிலையான வடிவங்களாக அமைந்துவிட்டன.

• புள்ளிகளும் எழுத்துகளும்

எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது.

எ.கா :

– குறில் ; எ – நெடில் ; – குறில் ; ஒ – நெடில்.

அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை நெடிலாகக் கருதப்பட்டன (க.=கா, ப.=பா). ஐகார எழுத்துகளைக் குறிப்பிட எழுத்துகளின்முன் இரட்டைப் புள்ளி வைத்துள்ளனர் (..ம=மை). எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ஔகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன (பெ..=பௌ, செ..=சௌ). மகர எழுத்தைக் குறிப்பிடப் பகர எழுத்தின் உள்ளே புள்ளி (ப்) இட்டனர். குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளைக் குறிக்க அவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர்.

• உருவ மாற்றம்

நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் (ா) பயன்படுத்தப்படுகிறது. ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு (ை) பயன்படுத்தப்படுகிறது. ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுத்தப்படுகிறது. குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது.

• எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை

ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர். ஓலைச்சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது. புள்ளி இடப்பட்டு எழுதவேண்டிய எழுத்துகள் புள்ளிகள் இல்லாமல் எழுதப்படும்போது அவற்றின் இடம்நோக்கி மெய்யா, உயிர்மெய்யா, குறிலா, நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது. இதனால் படிப்பவர்கள் பெரிதும் குழப்பமுற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் தேவையானது.

• எழுத்துச் சீர்திருத்தம்

தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் வீரமாமுனிவர். எகர ஒகர வரிசை எழுத்துகளின் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை நீக்கினார். ‘எ’ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ‘ஏ’ என்னும் நெடிலாகவும் ‘ஒ’ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ‘ஓ’ என்னும் எழுத்தாகவும் உருவாக்கினார். அதுபோல ஏகார ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக்கொம்பு (ே),இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து (ோ) புதிய வரிவடிவத்தை அறிமுகப்படுத்தினார். வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம்

• பெரியார் எழுத்துச் சீர்திருத்தம்

இருபதாம் நூற்றாண்டுவரை ணா, றா, னா ஆகிய எழுத்துகளை என எழுதினர். அதே போல ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகளை என எழுதினர். இவற்றை அச்சுக் கோப்பதற்காக இவ்வெழுத்துகளுக்குத் தனி அச்சுகள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. இக்குறைகளை நீக்குவதற்காகத் தந்தைபெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அவரது எழுத்துச் சீர்திருத்தங்கள் சில ஏற்கப்பட்டு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

காலந்தோறும் ஏற்பட்ட வரிவடிவ வளர்ச்சி காரணமாகத் தமிழ் மொழியைப் பிற மொழியினரும் எளிதில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்மொழிக் கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் மாறியுள்ளது.