TT02 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
2.1 நால்வகைச் சொற்கள்
நால்வகைச் சொற்கள்
இலக்கியவகைச் சொற்கள், இலக்கணவகைச் சொற்கள் எனச் சொற்கள் இருவகைப்படும்.
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என இலக்கியவகைச் சொற்கள் நான்கு வகைப்படும்.
படித்தவர், படிக்காதவர் என்னும் பாகுபாடின்றி அனைவராலும் எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடிய சொல் இயற்சொல் ஆகும். ‘பூ’, ‘யானை’, ‘நாய்’, ‘மாடு’ முதலான சொற்கள் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. ஆதலால் இயற்சொற்களாயின. இயற்சொல் – இயல்பான சொல்.
பெயர் இயற்சொல், வினை இயற்சொல் என இயற்சொற்கள் இருவகைப்படும்.
எளிதில் பொருள் உணர்த்தும் பெயர்ச்சொற்கள் பெயர் இயற்சொல் எனப்படும்.
சூரியன், நிலவு, காற்று, தீ.
இவை போன்ற இயற்சொற்கள் பெயர்ச்சொற்கள் ஆதலால், இவை பெயர் இயற்சொற்களாயின.
எளிதில் பொருள் உணருமாறு அமைந்துள்ள வினைச்சொற்கள் வினை இயற்சொல் எனப்படும்.
படி, வா, பாடி, பற.
இவை போன்றன இயற்சொற்கள் வினைச்சொற்கள் ஆதலால் இவை வினை இயற்சொற்களாயின.
கற்றவர்கள் மட்டும் புரிந்து கொள்ளக் கூடிய சொல் திரிசொல் எனப்படும். ‘கடல்’ என்பது அனைவருக்கும் விளங்கும் சொல் ஆகும். ஆனால், கடலைக் குறிக்கும் ‘ஆழி’ என்னும் சொல் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். மேலும், சில எடுத்துக்காட்டுகள்,
காற்று | - | வளி |
நகம் | - | உகிர் |
மயில்தோகை | - | பீலி |
கிளி | - | தத்தை |
நீர் | - | புனல் |
உலகம் | - | ஞாலம் |
உரைத்தான் | - | செப்பினான் |
திரிசொல் இருவகைப்படும். அவை, 1) பெயர்த்திரிசொல், 2) வினைத் திரிசொல்.
கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைந்த பெயர்ச்சொல் ‘பெயர்த்திரிசொல்’ ஆகும். சில எடுத்துக்காட்டுகள்,
எயில் | - | மதில் |
நல்குரவு | - | வறுமை |
கழை | - | மூங்கில் |
கிழமை | - | உரிமை |
மடி | - | சோம்பல் |
பெயர்த்திரிசொல் இருவகைப்படும். அவை,
i. ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்
ii. பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்
ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல்
வேழம், வாரணம், கழை ஆகிய சொற்கள் “யானை” என்னும் ஒரே பொருளை உணர்த்துகின்றன. இவ்வாறு கற்றவர்க்கு மட்டுமே பொருள் விளங்குமாறு அமைந்து ஒரே பொருளை உணர்த்தும் பல சொற்களை ஒரு பொருள் குறித்த பல பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.
பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்
ஆவி இச்சொல் உயிர், பேய், மெல்லிய புகை ஆகிய பல பொருள்களை உணர்த்துகின்றன. அரிதில் பொருள் விளங்கும் இப்பெயர்ச்சொற்கள் பல பொருள்களைத் தருவதால் அவற்றைப் பல பொருள் குறித்த ஒரு பெயர்த்திரிசொல் என்று அழைக்கிறோம்.
கற்றவருக்கு மட்டுமே பொருள் விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொல் வினைத்திரிசொல் எனப்படும்.
வினவினான், விளித்தான், நோக்கினான்.
வினைத்திரிசொல் இரு வகைப்படும். அவை,
i. ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்
ii. பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்
i. ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல்
செப்பினான், உரைத்தான், மொழிந்தான், இயம்பினான் இவை கற்றவர்க்கு மட்டுமே விளங்கும் வகையில் அமைந்த வினைச்சொற்களாகும். எனவே இவை வினைத் திரிசொல் என வழங்கப்படும். இச்சொற்கள் அனைத்தும் ‘சொன்னான்’ என்னும், ஒரு பொருளையே குறிப்பதால் இவற்றை ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொல் என்பர்.
ii. பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல்
வீசு இந்த வினைச்சொல் எறி, சிதறடி, பரவச்செய், ஆட்டு என்னும் பல பொருள்களை உணர்த்துகின்றது. இது கற்றவர்கள் மட்டுமே அறியும் சொல்லாகும். இதனைப் பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல் என்பர்.
வடமொழி அல்லாத பிறமொழிச்சொற்கள் அம்மொழிகளில் எந்தெந்தப் பொருளில் வழங்குகின்றனவோ அந்தந்தப் பொருளிலேயே தமிழிலும் வந்து வழங்குவதைத் திசைச் சொற்கள் என்கிறோம்.
அந்தோ (ஐயோ) | - | சிங்களம் |
செப்பு (சொல்) | - | தெலுங்கு |
சிக்கு (அகப்படுதல்) | - | கன்னம் |
கொக்கு (மாமரம்) | - | துளு |
1. | தென்பாண்டி நாடு | பெற்றம் (பசு); | சொன்றி (சோறு) |
2. | குட்ட நாடு | தள்ளை | (தாய்) |
3. | குட நாடு | அச்சன் | (தந்தை) |
4. | கற்கா நாடு | கையர் | (வஞ்சர்) |
5. | வேணாடு | கிழார் | (தோட்டம்) |
6. | பூழி நாடு | பாழி (சிறுகுளம்) ; | ஞமலி (நாய்) |
7. | பன்றி நாடு | செய் | (வயல்) |
8. | அருவா நாடு | கேணி | (சிறுகுளம்) |
9. | அருவாவடதலைநாடு | எகின் | (புளி) |
10. | சீதநாடு | எலுவன் | (தோழன்); |
11. | மலாடு | இகுளை | (தோழி) |
12. | புனல்நாடு | ஆய் | (தாய் ) |
‘கமலம்’, ‘பாவம்’, ‘புண்ணியம்’, ‘புஷ்பம்’ முதலான சொற்கள் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ்மொழியில் வந்து வழங்குகின்றன. இவை போன்ற சொற்கள் வடசொற்கள் எனப்படும்.
கமலம் | - | தாமரை |
விஷம் (அ) விடம் | - | நஞ்சு |
புஷ்பம் (அ) புட்பம் | - | மலர் |
அர்ச்சனை | - | மலரிட்டு வழிபடுதல் |
சுதந்திரம் | - | விடுதலை |
விவாகம் | - | திருமணம் |
வடமொழிச் சொற்கள் தமிழ் மொழியில் தமிழ்ச்சொற்கள் போலவே வந்து வழங்குவது தற்சமம் ஆகும்.
புண்ணியம் , பாவம் , கமலம், உருவம் போன்றவை.
உரிய வடமொழிக்கே சிறப்பு எழுத்துகளாகிய ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ ஆகிய ஐந்தும் தமிழ்மொழியில் வந்து வழங்கும்போது, தமிழ்மொழி இயல்புக்கு ஏற்பத் தமிழ் எழுத்துகளாய் ஒலி மாற்றம் பெறுகின்றன. இவ்வாறு வடமொழிச்சொற்கள் தமிழ் ஒலிக்கு ஏற்ப மாறித் திரிவது தற்பவம் எனப்படும்.
கஜம் | - | கசம் |
ஸரஸ்வதி | - | சரசுவதி |
வருஷம் | - | வருடம் |
தேஹம் | - | தேகம் |
பக்ஷி | - | பட்சி |
இலக்கண வகைச் சொற்கள் நான்கு வகைப்படும். அவை பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பனவாகும். இவற்றை இலக்கண நூல்கள் தெளிவாக விளக்குகின்றன.
ஒன்றன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது பெயர்ச்சொல் ஆகும். அம்பு, கண்ணாடி, தாமரை முதலியன பெயர்ச்சொற்கள் ஆகும். பெயர்ச்சொற்களுக்கு இருவகையாக இலக்கணம் சொல்லப்படுகிறது.
- பெயர்ச்சொல் வேற்றுமையை ஏற்கும்.
- பெயர்ச்சொல் காலம் காட்டாது.
முருகன் என்பது ஒரு பெயர்ச்சொல். இதனுடன் வேற்றுமை உருபுகள் சேர்ந்து பின்வருமாறு அமையும்.
முருகன் + ஐ | = | முருகனை | - | (இரண்டாம் வேற்றுமை) |
முருகன் + ஒடு | = | முருகனொடு | - | (மூன்றாம் வேற்றுமை) |
முருகன் + கு | = | முருகனுக்கு | - | (நான்காம் வேற்றுமை) |
முருகன், கல், மரம், முதலிய பெயர்ச்சொற்கள் காலத்தைக் காட்டவில்லை. பொருள் விளங்கச் சொல்வது பெயர்ச்சொல் ஆகும்.
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்.
1. | பொருட்பெயர் | : | பசு, புத்தகம், இறைவன், மனிதன். |
2. | இடப்பெயர் | : | தஞ்சாவூர், தமிழகம், வானம், நிலம். |
3. | காலப்பெயர் | : | மணி, ஆண்டு, நாள், மாதம், நாழிகை. |
4. | சினைப்பெயர் | : | கண், காது, கை, தலை, கிளை, பூ. |
5. | பண்புப்பெயர் | : | இனிமை, நீலம், சதுரம், வட்டம், ஏழு. |
6. | தொழிற்பெயர் | : | படித்தல், உண்ணுதல், உறங்குதல், நடை, ஆடல். |
யானை காட்டில் வாழ்கிறது.
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.
இத்தொடர்களிலுள்ள, இளங்கோவடிகள், யானை, மரம் ஆகிய சொற்கள் பெயர்களைக் குறிக்கின்றன. இவ்வாறு பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் (Noun) எனப்படும். இத்தகைய பெயர்ச்சொற்களைத் தோற்ற அடிப்படையில் பொதுநிலையில் இடுகுறிப்பெயர், காரணப்பெயர் எனப் பிரித்து வகைப்படுத்துவர்.
‘கல்’, ‘மண்’ ஆகிய சொற்கள் எவற்றை உணர்த்துகின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால், அப்பெயர்கள் ஏற்படக் காரணம் என்ன என்பது தெரியாது. காரணம் எதுவும் இல்லாமல் நம் முன்னோர் வழங்கியவாறே நாமும் வழங்கி வருகிறோம். இவ்வாறு, காரணம் கருதாமல், இப்பொருளுக்கு இந்தப் பெயர் எனத் தொன்றுதொட்டு இட்டு வழங்கி வரும் பெயர் ‘இடுகுறிப்பெயர்’ எனப்படும்.
‘நாற்காலி’, ‘முக்கண்ணன்’, ‘முக்கோணம்’ இவை எவற்றை உணர்த்துகின்றன என்பதும், என்ன காரணத்தால் அப்பெயர் பெற்றன என்பதும் நமக்குத் தெரியும்.
நான்கு கால் உடைய காரணத்தால் நாற்காலி என்ற பெயரைப் பெற்றது; மூன்று கண் உடையவனாதலால் முக்கண்ணன் எனப்பட்டான். மூன்று கோணங்களை உடையதால் முக்கோணம் ஆயிற்று. இவையெல்லாம் காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் என்பதை அறியலாம். இவ்வாறு, காரணங்கருதி இட்டு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.
ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
வந்தான், போகிறான், உண்டார் முதலியன வினைச்சொற்கள் ஆகும். தொழிலின் காலம் காட்டும் சொல் வினைச்சொல் ஆகும்.
பாரதியார் பாஞ்சாலி சபதத்தை இயற்றினார்.
குமுதா பள்ளிக்கூடம் சென்றாள்.
விளக்கு எரிந்தது.
இத்தொடர்களில் உள்ள இயற்றினார், சென்றாள், எரிந்தது என்பவை, பாரதியார், குமுதா, விளக்கு முதலான பெயர்களின் வினையை அல்லது செயலைக் குறிக்கின்றன.
இவ்வாறு, வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் (Verb) எனப்படும்.
- வினைச்சொல் வேற்றுமையை ஏற்காது.
- வினைச்சொல் காலம் காட்டும்.
இது மூவகைப்படும்.
இறந்தகாலம் | - | படித்தான், நடித்தான், சென்றாள், உறங்கினார். |
நிகழ்காலம் | - | படிக்கின்றார், நடிக்கிறார், செல்கின்றாள், உறங்குகிறார். |
எதிர்காலம் | - | படிப்பான், நடிப்பான், செல்வாள், உறங்குவாள். |
ஒரு தொழிலைக் குறித்து வந்து முற்றுப்பெற்ற சொல் வினைமுற்று எனப்படும். அது திணை, பால், எண், இடம், காலம் காட்டும். பயனிலையாக வரும். வேற்றுமை உருபு ஏற்காது.
அவள் பாடினாள், இதில் பாடினாள் என்பது இறந்தகாலம், திணை – உயர்திணை, பால் – பெண்பால், எண் – ஒருமை, இடம் – படர்க்கை.
தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று என வினைமுற்று பலவகைப்படும்.
தெரிநிலை வினைமுற்று
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகியவற்றை உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்
1. செல்வி மாலை தொடுத்தாள்
1. | செய்பவள் | - | செல்வி |
2. | கருவி | - | பூ, நார் முதலியன |
3. | நிலம் | – | வீடு அல்லது கடை |
4. | செயல் | – | தொடுத்தல் ( பூ கட்டுதல்) |
5. | காலம் | - | இறந்தகாலம் |
6. | செய்பொருள் | - | மாலை |
இவ்வாறு ஒரு வினைமுற்று திணை, பால், காலம், முதலியவற்றோடு செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறனையும் வெளிப்படையாகத் தெரிவிப்பது தெரிநிலை வினைமுற்று ஆகும்.
2. இனியன் உணவு சமைத்தான். இந்தத் தொடரில் சமைத்தான் – என்னும் சொல் தெரிநிலை வினைமுற்று ஆகும்.
செய்பவன் | - | இனியன் |
கருவி | - | சமையல் பாத்திரங்கள் |
நிலம் | - | வீடு (அல்லது) அடுப்பு |
செயல் | - | சமைத்தல் |
காலம் | - | இறந்தகாலம் |
செய்பொருள் | - | உணவு |
குறிப்பு வினைமுற்று
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறின் அடிப்படையில் தோன்றி செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.
1. | அவன் பொன்னன் - பொருள் |
2. | அவன் சென்னையான் - இடம் |
3. | அவன் சித்திரையான் - காலம் |
4. | அவன் கண்ணன் - சினை |
5. | அவன் இனியன் - குணம் |
6. | அவன் நடிகன் – தொழில் |
மேற்சொன்ன சான்றுகள் செய்பவன் என்பதை மட்டும் வெளிப்படையாக உணர்த்தி, மற்றவற்றைக் குறிப்பால் உணர்த்தின. எனவே அவை குறிப்பு வினைமுற்றுகளாம். குறிப்பு வினைமுற்று அறுவகைப் பெயர்களின் அடிப்படையில் பிறக்கும். இதில் காலம் குறிப்பாக வரும்.
பொருள் குறிப்பு வினைமுற்று | பொன்னன், மணியன் |
இடக்குறிப்பு வினைமுற்று | ஊரன், தென்னாட்டான் |
காலக்குறிப்பு வினைமுற்று | ஆதிரையான், காரான் |
சினைக்குறிப்பு வினைமுற்று | கண்ணன், பல்லன் |
பண்புக் (குணம்) குறிப்பு வினைமுற்று | கரியன், தீயன் |
தொழில் குறிப்பு வினைமுற்று | நடிகன் |
தெரிநிலை வினைமுற்று | குறிப்பு வினைமுற்று | அறுவகைப் பெயர் |
---|---|---|
செய்தான் மகன் | பெரியன் மகன் | பொருள் |
குளிர்ந்தது நிலம் | வலியது நிலம் | இடம் |
வந்தது கார் | நல்லது கார் | காலம் |
குவிந்தது கை | சிறியது கை | சினை |
ஒளிர்ந்தது வெண்மை | நல்லன் இவன் | குணம் |
முடிந்தது உழவு | இன்சொல்லன் இவன் | தொழில் |
இடை என்ற சொல்லுக்கு இடம் என்றும், இடையில் (நடுவில்) என்றும் பொருள்கள் உள்ளன. தனித்து இயங்காமல் பெயருடன் அல்லது வினையுடன் சேர்ந்து வரும் சொற்கள் இடைச்சொற்கள் எனப்படும். இடைச்சொற்கள் தனித்துப் பொருள் தருவதில்லை. இவை பெயருக்கும் வினைக்கும் அடுத்த நிலையில் பயன்பாடுடைய சொற்கள் ஆகும்.
அணிகலன் செய்ய பொன்னுக்கு இடையே இருந்து உதவும் இடைக்கருவிகள் போலப் பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடைநிற்பது இடைச்சொல் ஆகும்.
அ + ஊர் = அவ்வூர்
அ என்ற சுட்டு இடைச்சொல் சொல்லின் முதலில் வந்தது.
- அவன் + ஐ = அவனை
ஐ உருபாகிய இடைச்சொல் சொல்லின் இறுதியில் வந்தது. - போ + வ் + ஆன் = போவான்
வ் என்ற எதிர்கால இடைநிலை சொல்லின் இடையில் வந்தது.
கல்வியால் அறிவும் பண்பும் பெறுவோம். இச்சொற்றொடரில், ‘அறிவும் பண்பும்’ என்பனவற்றில் உள்ள ‘உம்’ (அறிவு+உம், பண்பு+உம்) ‘பெறுவோம்’ என்பதில் உள்ள ‘ஓம்’ (பெறு+ஓம்) இவை யாவும் பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் இடமாகக் கொண்டு வருகின்றன.
இவ்வாறு, பெயரையும் வினையையும் இடமாகக் கொண்டு வரும் சொல் இடைச்சொல் (Conjunctions (or) Particles) எனப்படும். இடைச்சொற்கள் பல இருக்கின்றன. அவற்றுள் எட்டு வகையான இடைச்சொற்களைப் பார்ப்போம்.
பெயர்ச்சொற்களில் இறுதியில் பொருள் வேறுபாட்டிற்காக வரும் வேற்றுமை உருபுகள் இடைச்சொற்கள் தன்மையை உடையன. முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைக்கும் உருபுகள் உண்டு. அவை,
இரண்டாம் வேற்றுமை | - | ஐ |
மூன்றாம் வேற்றுமை | - | ஆல் |
நான்காம் வேற்றுமை | - | கு |
ஐந்தாம் வேற்றுமை | - | இன் |
ஆறாம் வேற்றுமை | - | அது |
ஏழாம் வேற்றுமை | - | கண் |
வினைச்சொற்களில் வரும் காலம் காட்டுகின்ற இடைநிலைகளும் விகுதிகளும் இடைச்சொற்கள் ஆகும். கிறு, கின்று, ஆநின்று முதலியவை காலம் காட்டும் இடைநிலைகள் ஆகும். அன், ஆன் முதலியவை விகுதிகள் ஆகும்.
கொடுத்தான் – கொடு +த்+ஆன்
இரு பொருள்களுக்கு இடையே ஒப்புமை காட்ட உதவுவன. போல, அன்ன, அனைய, ஒப்ப, புரைய என்பன உவம உருபுகள் ஆகும்.
உவமைத் தொடர்களில் உவம உருபுகள் வரும்.
மலர் போல் அழகிய முகம்.
இதில் போல் என்பது உவம உருபு.
சந்தி இலக்கணத்தில் வரும் சாரியைகள் இடைச்சொற்களாகும்.
ஆல் + அம் + கட்டி = ஆலங்கட்டி
என்பதில் அம் சாரியை இடையில் வந்துள்ளது
ஏ, ஓ, உம் முதலிய இடைச்சொற்கள் தத்தம் பொருளை உணர்த்தி வருபவை.
அவளே கொண்டாள் | - | ஏ |
அவளோ கொண்டாள் | - | ஓ |
அவளும் வந்தாள் | - | உம் |
ஏ, ஒடு, ஓ, மார், ஆன முதலிய இடைச்சொற்கள் செய்யுளில் பொருள் இன்றி இசைநிறைவு செய்ய வருவன. இவை இசைநிறை சொற்கள் ஆகும்.
ஏஏ இவள் ஓர் அழகியே | - | ஏ |
கொல்லோ | - | ஓ |
செல்லுமார் | - | மார் |
வயினான | - | ஆன |
மன், மற்று, கொல் ஆகிய இடைச்சொற்கள் செய்யுளில் பொருள் இன்றி அசையாகவும் பயன்படுகின்றன.
உடையேன்மன் | - | மன் |
இதுவும்மற்று | - | மற்று |
புலிகொல் யானை | - | கொல் |
கலகலவென’, ‘நிலமென’ இவற்றில் வரும் ‘என’ என்பது குறிப்புப்பொருள் உணர்த்தும் இடைச்சொல் ஆகும். மேலே காட்டியவாறு இடைச்சொல் எட்டு வகையாக வரும்.
பல வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தி வருவது உரிச்சொல் ஆகும். (பண்பு - குணம்) இது பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும். செய்யுளுக்கு உரியதாய் வரும். மருவி நிற்கும் சொல்லோடு மருவாத சொல்லை உரிமையோடு சேர்த்துச் சொல்வதை உரிச்சொல் என்பர்.
கடிமனை.
நனி சிரித்தான்.
‘மனை’ என்னும் பெயர்ச்சொல்லையும் ‘சிரித்தான்’ என்னும் வினைச்சொல்லையும் சார்ந்து நின்று, முறையே, காவல் மிகுந்த மனை(வீடு)’ (கடி-காவல்) ‘மிகவும் மகிழ்ந்தான்’ (நனி-மிகவும்) என அவற்றின் தன்மையை எடுத்துரைக்கின்றன. மேலும், செய்யுளுக்கே உரியதாகவும் விளங்குகின்றன. ஆதலால் இவை (கடி, நனி) உரிச்சொற்கள் எனப்படுகின்றன. (Attributive) உரிச்சொல்லானது, ஒரே பொருள் தரும் பல உரிச்சொல் எனவும், பல பொருள் தரும் ஓர் உரிச்சொல் எனவும் இரு வகைப்படும்.
சால, உறு, தவ, நனி, கூர், கழி இவை யாவும் ‘மிகுதி’ என்னும் ஒரே பொருள் தருவன.
சாலப் பேசினான். உறு புகழ். தவச் சிறந்தது. நனி தின்றான்.
‘கடி’ என்னும் சொல்லானது காப்பு, கூர்மை, மணம், விளக்கம், அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல், வரைவு, மன்றல், கரிப்பு ஆகிய பல பொருள்களைத் தரும்.