முகப்பு

2.4 தொடர்வகை : தொகைநிலை, தொகாநிலை

தொடர்வகை : தொகைநிலை, தொகாநிலை

தொடர் தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் என இரு வகைப்படும்

பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் அல்லது பெயர்ச்சொல்லும் சேரும் தொடரின் இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு, உவமை முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) நிற்குமானால் அது தொகைநிலைத்தொடர் எனப்படும். இதனைத் தொகை என்றும் சுருக்கமாகக் கூறுவர். வினைச்சொல்லோடு வினைச்சொல் சேர்ந்து தொகைநிலைத்தொடர் அமைவதில்லை.

தொகைநிலைத்தொடர் ஆறு வகைப்படும். அவை :

வேற்றுமைத்தொகை

பண்புத்தொகை

உவமைத்தொகை

உம்மைத்தொகை

அன்மொழித்தொகை

என்பனவாகும்.

• வேற்றுமைத்தொகை

திருக்குறள் படிக்கிறான்.

இத்தொடர் ‘திருக்குறளைப் படிக்கிறான்’ என்னும் பொருளை உணர்த்துகிறது. இத்தொடரிலுள்ள இரண்டு சொற்களுக்கு நடுவில் என்னும் உருபு மறைந்து நின்று அப்பொருளைத் தருகிறது. எனவே, இது வேற்றுமைத்தொகை எனப்படுகிறது.

இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் உணர்த்துவதை வேற்றுமைத் தொகை எனக் கூறுவர்.

பால் அருந்தினான் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
தலை வணங்கினான் ஆல் - மூன்றாம் வேற்றுமைத்தொகை
பள்ளி சென்றாள் கு - நான்காம் வேற்றுமைத்தொகை
சிறை நீங்கினான் இன் - ஐந்தாம் வேற்றுமைத்தொகை
அழகன் நூல் அது - ஆறாம் வேற்றுமைத்தொகை
மலைவாழ்வோர் கண் - ஏழாம் வேற்றுமைத்தொகை

முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபில்லாததால், அவற்றிற்குத் தொகை இல்லை.

• உருபும், பயனும் உடன் தொக்க தொகை

தேர்ப்பாகன்

இத்தொடர் ‘தேரை ஓட்டும் பாகன்’ என விரிந்து பொருளை உணர்த்துகின்றது. கொடுக்கப்பட்டுள்ள தேர், பாகன் என்னும் சொற்களுக்கிடையில் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபும் ‘ஓட்டும்’ என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.

இவ்வாறு ஒரு தொடரில் வேற்றுமை உருபும், அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும். இதுவும் வேற்றுமைத் தொகையே ஆகும்.

தேர்ப்பாகன் - (தேரை ஓட்டும்பாகன்)
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
பொன்வளையல் - (பொன்னால் செய்த வளையல்)
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தலைவலி மருந்து - (தலைவலிக்குத் தரும் மருந்து)
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
குழாய்த்தண்ணீர் - (குழாயிலிருந்து கிடைக்கும் தண்ணீர்)
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
காட்டுப் புலி - (காட்டின்கண் வாழும் புலி)
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
(ஆறாம் வேற்றுமைத் தொகையில் பயன்தரும் சொல் மறைந்து வருதலில்லை)
• வினைத்தொகை

“காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகையாகும்”

குடிநீர், விரிகடல்

குடி, விரி என்பவை வினைப்பகுதிகள், இவை முறையே நீர், கடல் என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து பெயரெச்சங்களாயின. மேலும் இவை குடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர் எனவும், விரிந்தகடல், விரிகின்ற கடல், விரியும் கடல் எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் தருகின்றன. காலங்காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன.

குறிப்பு : வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்.

• பண்புத்தொகை
செங்காந்தள் - செம்மையாகிய காந்தள்
வட்டக்கல் - வட்டமானகல்
இன்சொல் - இனிமையான சொல்

நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்தும் பண்புப் பெயருக்கும் அது தழுவிநிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையில் ‘மை’ என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

இத்தொடர்களிலுள்ள செம்மை, வட்டம், இனிமை என்பன பண்புப் பெயர்கள், காந்தள், கல், சொல் என்னும் பெயர்களைத் தழுவி நிற்கின்றன. இவ்விரண்டிற்குமிடையில் ஆகிய, ஆன என்னும் பண்புருபுகள் தொக்கி வந்துள்ளன. அவற்றுடன் ‘மை’ என்னும் பண்பின் விகுதியும் மறைந்து வந்துள்ளன.

• இரு பெயரொட்டுப் பண்புத் தொகை

சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று, இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்.

சாரைப்பாம்பு, மார்கழித் திங்கள்

பாம்பு, திங்கள் என்பது பொதுப்பெயர், சாரை, மார்கழி என்பது சிறப்புப் பெயர்.

• உவமைத்தொகை

உவமைக்கும் பொருளுக்கும் இடையில் போல், போன்ற, நிகர, அன்ன என்னும் உவம உருபுகளுள் ஒன்று தொக்கி நிற்க வரும் தொடர் உவமைத்தொகை எனப்படும்.

முத்துப்பல்

இத்தொடர் முத்துப் போன்ற பல் எனப் பொருள் தருகிறது. முத்து – உவமை, பல் – உவமிக்கப்படும் பொருள் (உவமேயம்). இவ்விரண்டிற்குமிடையே ‘போன்ற’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது

• உம்மைத் தொகை

இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும்.

அண்ணன் தம்பி

ஆடு மாடு

தாய் தந்தை

இத்தொடர்கள் முறையே அண்ணனும் தம்பியும், ஆடும் மாடும், தாயும் தந்தையும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன.

உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.

• அன்மொழித் தொகை

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை தொகைநிலைத்தொடர்களில் உருபுகளும் அவை அல்லாத வேறு சொற்களும் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை எனப்படும்

பூங்குழல் வந்தாள்

இத்தொடரில் முதலில் உள்ள ‘பூங்குழல்’ என்னும் சொல் ‘பூவை அணிந்த கூந்தல்’ என்னும் பொருளைத் தரும் இரண்டாம் வேற்றுமை உருபும், பயனும் உடன் தொக்க தெகையாகும். இத்தொடர் ‘வந்தாள்’ என்னும் வினைச் சொல்லைத் தழுவி நிற்பதால், பூவை அணிந்த கூந்தலை உடைய பெண் வந்தாள் எனப் பொருள் பெறப்படுகிறது. ‘உடைய பெண்’ என்பது இத்தொடரில் இல்லாத மொழியாகும். இவ்வாறு வேற்றுமைத் தொகையை அடுத்து அல்லாத மொழி தொக்கி நிற்பதால் இத்தொடர் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.

ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.

(எ.கா)

மழை பெய்தது

மயில் ஆடியது

முதல் தொடரில் ‘மழை’ என்னும் எழுவாயும் ‘பெய்தது’ எனும் பயனிலையும் தொடர்ந்து நின்று வேறு சொல் வேண்டாது பொருள் உணர்த்துகின்றன.

அதேபோன்று இரண்டாவது தொடரிலும் எழுவாயும், பயனிலையும் தொடர்ந்து நின்று மயில் ஆடியது என்னும் பொருளைத் தருகின்றன.

தொகாநிலைத் தொடர் 9 வகைப்படும்.

கந்தன் எழுதினான் - இதில் கந்தன் என்னும் எழுவாயைத் தொடர்ந்து ‘எழுதினான்’ என்னும் பயனிலை அமைந்துள்ளது. இதனை எழுவாய்த்தொடர் என்பர்.
மழையே வா ! - இத்தொடர் மழையை விளிப்பதால் (அழைப்பதால்) விளித்தொடர் எனப்படும்.
வந்தார் அமைச்சர் - இதில் வினை முற்று முதலில் நின்று பெயர்ச்சொல் இரண்டாவதாக வந்துள்ளது. இதற்கு வினை முற்றுத் தொடர் என்று பெயர்
தெரிந்த இடம் - இதில் தெரிந்த எனும் எச்சவினை இடம் என்னும் பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்துள்ளதால் இது பெயரெச்சத் தொடர் எனப்படும்
கூடி மகிழ்ந்தனர் - இத்தொடரில் ‘கூடி’ என்னும் எச்சவினை மகிழ்ந்தனர் என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளது. இதனை வினையெச்சத் தொடர் என்பர்
பாடத்தைப் படித்தாள் - இத்தொடரில் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக நின்று பொருளை உணர்த்துகிறது. இது வேற்றுமைத்தொகாநிலைத்தொடர் எனப்படும். (வேற்றுமைத்தொடர்)
மற்றொன்று - மற்று + ஒன்று – இதில் மற்று என்னும் இடைச்சொல்லை அடுத்து ஒன்று என்னும் சொல் நின்று பொருள் தருவதால் இதனை இடைச்சொல் தொடர் என்பர்.
கடிமணம் - கடி என்பது உரிச்சொல். இதைத் தொடர்ந்து மணம் என்னும் சொல் வந்துள்ளது. இது உரிச்சொல் தொடர் எனப்படும்.
பாம்பு ! பாம்பு ! பாம்பு ! - ஒரே சொல் அச்சத்தின் காரணமாகப் பலமுறை அடுக்கி வந்துள்ளது. இஃது அடுக்குத் தொடர் என வழங்கப்படும்.

இவ்வாறாகத் தொகாநிலைத்தொடர் எழுவாய்த்தொடர், விளித்தொடர், வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், வேற்றுமைத் தொகா நிலைத்தொடர், இடைச்சொல்தொடர், உரிச்சொல்தொடர், அடுக்குத்தொடர் என ஒன்பது வகைப்படும்.