முகப்பு

2.3 பதம் வகைகள் (பகுபதம், பகாப்பதம்)

பதம்

நாம் பேசும்போது சொற்களாய்ப் பேசுவதைக் காட்டிலும் தொடர்களாய்ப் பேசுவது மிகுதி. அவ்வகையில் எழுத்துகள் பல சேர்ந்து பொருள் தரும் சொற்களாகின்றன. சொற்கள் பல சேர்ந்து தொடர்களாகின்றன. இந்தப் பிணைப்பு ஒன்றுடன் ஒன்று சங்கிலித்தொடர்போல் இணைந்துள்ளது. இந்தப்பாடம், உங்களுக்குத் தமிழில் வழங்கும் சொல்வகைகளையும் அவற்றின் பயன்பாடுகளையும் எடுத்துரைக்கிறது.

ஒன்று அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது, சொல் எனப்படும்.

எ.கா.

பூ, கனி, கல்வி, பட்டம்.

எழுத்துகளால் உருவானதாக இருந்தாலும் பொருள் தருவதாக இருந்தால் மட்டுமே அது சொல் எனப்படுகிறது. பொருள் தராதவை சொல் என்று கூறப்படுவது இல்லை. எடுத்துக்காட்டாக,

வில்க இதில் ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்துள்ளன. ஆயினும், பொருள் தரவில்லை. எனவே, இதனைச் சொல் என்று சொல்வதில்லை.

ஒரு மொழிக்கு அடிப்படை அம்மொழியில் உள்ள எழுத்துகள் ஆகும். எழுத்துகள் ஒன்றோ பலவோ சேர்ந்து சொல் உருவாகிறது. கிளவி, பதம், மொழி என்பன சொல்லின் வேறுபெயர்கள். ஒரு சொல் தனித்து நின்றோ பல சொற்கள் சேர்ந்து நின்றோ சொற்றொடர் உருவாகும். இவ்வாறு ஒரு மொழியின் படிநிலைகள் அமைகின்றன.

ஓர் எழுத்துச் சொற்கள் = பூ, வா, ஆ, கை, பை, ஈ, தை.
ஈரெழுத்துச் சொற்கள் = நட, நில், படி, கண், இழு.
மூவெழுத்துச் சொற்கள் = பலம், புறம், கடல், தண்மை, மாண்பு.
நாலெழுத்துச் சொற்கள் = கடவுள், சிறுத்தை, வேந்தன், அரும்பு, தங்கம்.

மேலும், நாலெழுத்துகளுக்கு மேற்பட்ட சொற்களும் தமிழில் உண்டு.

பதம் இரண்டு வகைப்படும். பகுப்பதம் மற்றும் பகாப்பதம் ஆகும்.

பிரிக்கக்கூடிய சொல் பகுபதம் ஆகும்.

பிரிக்க இயலாத சொல் பகாப்பதம் ஆகும்.

பகுபதங்களைப் பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என இரண்டாகப் பகுக்கலாம். வினைப்பகுபதம், தெரிநிலை வினைப்பகுபதம், குறிப்பு வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்.

ஒரு பகுபதச் சொல் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் எனலாம். இப்பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் என்பனவாகும்.

ஒரே சொல்லில் இந்த ஆறு உறுப்பும் அமையலாம். ஒன்றோ பலவோ குறைந்தும் வரலாம்.

எ.கா.

கண்டனன் = காண் (கண்) + ட் + அன் + அன்

வாழ்க = வாழ் + க

• பகுதி

ஒரு பகுபதத்தின் முதலில் அமையும் உறுப்பு பகுதி ஆகும். எனவே, இதனை முதனிலை என்றும் வழங்கலாம். பகுதி பெயர்ச்சொல்லாக வந்தால் பொருள், இடம், காலம், சினை, குணம் தொழில் ஆகிய அறுவகைப் பெயர்ச்சொற்களுள் ஒன்றாகவும் வினைச்சொல்லாக இருப்பின், விகுதி பெறாத ஏவல்வினையாகவும் அமையும். பகுபதத்திலுள்ள பகுதி பொருள் உடையதாக இருக்கும். உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) உண் என்பது பகுதியாகும்.

1. பொருட்பெயர் - பொன்னன் (பொன் + அன்)
2. இடப் பெயர் - வெற்பன் (வெற்பு + அன்)
3. காலப் பெயர் - ஆதிரையன் (ஆதிரை + அன்)
4. சினைப் பெயர் - கண்ணன் (கண் + அன்)
5. குணப் பெயர் - கரியன் (கருமை + அன்)
6. தொழிற் பெயர் - சொல்லன் (சொல் + அன்)
• விகுதி

பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு என்பதால், இதனை இறுதிநிலை என்றும் வழங்குவர்.

உண்டான் என்னும் பகுபதத்தில் (உண் + ட் + ஆன்) ஆன் என்பது விகுதி ஆகும். இது திணை (உயர்திணை), பால் (ஆண்பால்), எண், (ஒருமை) இடம் (படர்க்கை) ஆகியவற்றைக் காட்டிநிற்கும்.

ஆண்பால் பெயர் விகுதிகள்

அன், ஆன், மன், மான்

சான்று:

வெற்பன்(அன்), வானத்தான்(ஆன்), வடமன்(மன்), மலையமான்(மான்),

பெண்பால் விகுதிகள்

அள், ஆள், இ, ஐ என்ற விகுதிகள் வருகின்றன.

சான்று:

இவள் (அள்), குழலாள்(ஆள்), பொன்னி(இ), கோதை (ஐ).

பலர்பால் பெயர் விகுதிகள்

அர், ஆர், மார்,

சான்று:

மறவர்(அர்), ஓதுவார்(ஆர்), தேவிமார்(மார்)

ஒன்றன்பால் பெயர் விகுதி

து

ஈற்றில் முடிவது ஒன்றன்பால் ஆகும்.

சான்று:

அது, யாது, அஃது.

பலவின்பால் பெயர் விகுதிகள்

வை, அ, கள்.

சான்று:

அவை (வை), கரியன(அ), கிளிகள்(கள்).

பன்மையைக் குறிக்கப் பெயர்களோடு சேர்க்கப்படும் ‘கள்’ விகுதி உயர்திணைப் பன்மைப் பெயர்களோடும் அஃறிணைப் பன்மைப் பெயர்களோடும் சேர்க்கப்படுகின்றன.

சான்று:

நாம், இவை, இச்சொற்களே பன்மையைக் குறிக்கும். பன்மையைக் குறிக்க கள் விகுதியை மேலும் இவற்றோடு சேர்க்க வேண்டியதில்லை. ஆனால் பயன்பாட்டில் சேர்க்கின்றோம். இதை விகுதி மேல் விகுதி என்பர்.

நாங்கள் (நாம் + கள்) அவர்கள்(அவர் + கள்), உயர்திணைப் பன்மைப் பெயர்கள்.

(‘நாம்’ என்பது ‘உளப்பாட்டுத் தன்மைப்பன்மையாகவும், ‘நாங்கள்’ என்பது ‘விலக்கீட்டுத் தன்மைப்பன்மையாகவும் வழங்குகின்றன).

இவை, இக்கால வழக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆயினும், இவைகள் (இவை + கள்) என்னும் சொல் தவறான சொல்லாக்கமாகக் கொள்ளப்படுகிறது. ‘இது’ என்னும் ஒருமைக்கு ‘இவை’ என்பதே பன்மையாகும்.

• இடம்

பேசுகின்றவன் தன்னைத்தானே குறித்துக் கூறும் சொல் தன்மை. தனக்கு முன்னால் யாரிடம் பேசுன்றானோ, அவனைக் குறிக்கும் சொல் முன்னிலை. தன்னையும் குறிக்காமல், எதிரில் இருப்பவனையும் குறிக்காமல் வேறொருவனைக் குறிக்கும் சொல் படர்க்கை. இவ்வாறாக தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூன்று வகைப்படும்.

நான் பார்த்தேன் - தன்மை
நீ பார்த்தாய் - முன்னிலை
அவர் பார்த்தார் - படர்க்கை
• இடைநிலை

முதனிலைக்கும் (பகுதி) இறுதிநிலைக்கும் (விகுதி) இடையில் நிற்கும் உறுப்பு என்பதால் இடைநிலை என்னும் பெயர் பெறுகின்றது. பெரும்பாலும் காலம்காட்டும் உறுப்பாகவும், எதிர்மறைப் பொருள்தரும் உறுப்பாகவும் வரும். வினைப்பகுபதத்தில் இடைநிலை காலம் காட்டும் உறுப்பு ஆகும்.

உண் + ட் + ஆன் என்னும் பகுபதத்தில் – உண் - முதனிலை, ட் - இடைநிலை, ஆன் – இறுதிநிலை (விகுதி)

‘இடைநிலை‘ - பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்திருத்தலைக் காணலாம். இந்த இடைநிலை இறந்தகால இடைநிலை, நிகழ்கால இடைநிலை, எதிர்கால இடைநிலை என மூன்றாகும்.

இறந்தகால இடைநிலை - த், ட், ற், (இ)ன்
நிகழ்கால இடைநிலை - கிறு, கின்று, ஆநின்று
எதிர்கால இடைநிலை - ப், வ்
எதிர்மறை இடைநிலை - ஆ, ஆல், இல்
இறந்தகால இடைநிலை

நடந்தான், கேட்டாள், கற்றார், பாடினாள் இவை யாவும் இறந்தகால வினைமுற்றுகள். இச்சொற்களின் இடையில் உள்ள த், ட், ற், இன் ஆகிய நான்கும் இறந்த காலம் உணர்த்தும் இடைநிலைகள் ஆகும்.

நிகழ்கால இடைநிலை

உண்கிறான், ஆடுகின்றாள், செல்லாநின்றார், (செல்கிறார் என்பது பொருள்) இந்த வினைமுற்றுச்சொற்கள் நிகழ்காலம் உணர்த்துகின்றன. நிகழ்காலம் உணர்த்தும் இடைநிலைகள் கிறு, கின்று, ஆநின்று ஆகிய மூன்றும் ஆகும். இக்காலத்தில் ‘ஆநின்று’ என்ற இடைநிலை வழக்கில் இல்லை.

எதிர்கால இடைநிலை

காண்பார், தேடுவார்

இவ்விரு வினைமுற்றும் எதிர்காலம் உணர்த்தும் சொற்களாகும். இச்சொற்களில் உள்ள ப், வ், ஆகிய இரண்டும் எதிர்காலம் உணர்த்தும் இடைநிலைகள்.

• சந்தி

இது பெரும்பாலும் முதனிலை (பகுதி)க்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். பகுதிக்கும் விகுதிக்கும் இடையிலும் சிறுபான்மை வரக்கூடும். உறுப்புகளின் இணைவில் வருவது (சந்தி) ; உறுப்புகளை இணைக்க வருவது சந்தி. நடத்தல் என்னும் பகுபதம் நட + த் + தல் என்று பிரிந்து வரும்.

நட - பகுதி ; த் - சந்தி ; தல் – விகுதி

பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் ‘த்‘ சந்தி வந்திருப்பதைக் காண முடிகிறது.

• சாரியை

இது பெரும்பாலும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் உறுப்பு ஆகும். சிறுபான்மையாகச் ‘சந்தி’க்கும் விகுதிக்கும் இடையிலும் வரும்.

சாரியை = சார்ந்து இயைந்து நிற்பது. தனக்கெனப் பொருள் எதுவும் இன்றிப் பிற உறுப்புகள் இணையும்போது இடையில் வருவது.

வந்தனன் என்னும் சொல் ‘வா(வ) + த்(ந்) + த் + அன் + அன்‘ வா - பகுதி த் - சந்தி ‘ந்’ ஆனது விகாரம் த் - இடைநிலை அன் - சாரியை அன் - விகுதி

‘த்’ இடைநிலைக்கும், ‘அன்‘ விகுதிக்கும் இடையில் சாரியை வந்துள்ளதைக் காணலாம்.

இனிப் பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவேயும் அரிதாகச் சாரியை இடம்பெறுவது உண்டு.

உய்குவை – உய் + கு + வ் + ஐ (கு – சாரியை)

பணிகுவோம் – பணி + கு + வ் + ஆம் (கு – சாரியை)

• விகாரம்

விகாரம் என்பது தனி உறுப்பு இல்லை. பகுதி, விகுதி முதலான உறுப்புகள் சேர்தலால் ஏற்படும் மாற்றத்தை விகாரம் என்கிறோம்.

சான்று:

கண்டான் = காண் (கண்) + ட் + ஆன்

காண் என்னும் பகுதி கண் என விகாரப்பட்டது. பகுதி தொழிலை உணர்த்தும் ஏவலாக இருக்கும். மூன்று காலங்களுக்கும் ஒன்றே ஆகையால் ‘காண்’ என்பதே பகுதியாக இருக்க வேண்டும். இது பகுதி திரிந்த விகாரம்.

சான்று:

நடந்தான் = நட + த் (ந்) + த் + ஆன்

இதில் ‘நட’ என்னும் பகுதியை அடுத்துள்ள சந்தி ‘த்’ ஆகும் இச்சந்தியைத் திரிக்காமல் எடுத்துக் கொண்டால் ‘நடத்தான்’ என்று கூற வேண்டும். ஆனால் நடந்தான் என்பது சொல்லாகையால் ‘த்’ என்னும் சந்தி ‘ந்’ எனத் திரிந்து வந்துள்ளது. இது சந்தி திரிந்த விகாரம்.

சான்று:

வந்தான் = வா (வ) + த் (ந்) + த் + ஆன்

வா என்னும் பகுதி ‘வ’ என விகாரப்பட்டது. த் என்னும் சந்தி ‘ந்’ என விகாரப்பட்டது. இதுவும் பகுதி திரிந்த விகாரம்.

பகுக்கப்படாத இயல்பையுடைய சொற்கள் பகாப்பதம் ஆகும். எடுத்துக்காட்டாக மண், கண், நிலம், காற்று, நாய், வா.

பகாப்பதத்தின் வகைகளாவன : பெயர்ப்பகாபதம், வினைப்பகாபதம், இடைப்பகாபதம், உரிப்பகாபதம்.

• பெயர்ப்பகாப்பதம்

பெயர்ச் சொற்களாக அமையும் பகாப்பதங்கள் பெயர்ப்பகாப்பதம் எனப்படும்.

எ.கா:

நெருப்பு, காற்று, நிலம், நீர்.

• வினைப்பகாப்பதம்

வினைச்சொற்களாக அமையும் பகாப்பதங்கள் வினைப்பகாப்பதம் எனப்படும்.

எ.கா:

உண், தின் , நட, வா.

• இடைப் பகாப்பதம்

இடைச் சொற்களாக அமையும் பகாப்பதங்கள் இடைப் பகாப்பதம் எனப்படும்.

(எ.கா)

மன், கொல், போல், மற்று.

• உரிப் பகாப்பதம்

உரிச் சொற்களாக அமையும் பகாப்பதங்கள் உரிப் பகாப்பதம் எனப்படும்.

எ.கா:

கூர், மிகு, உறு, தவ, நனி, கழி

மேலே சுட்டிய எடுத்துக்காட்டுகளில் கண்ட பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரித்தால் பொருள் தருவதில்லை; அவை இடுகுறியில், இட்டு வழங்கி வருகின்ற தன்மையில் அமைந்தவை.

சில பகுபதச்சொற்களில் விகுதி ஓர் எழுத்து பெற்று வருதலும் உண்டு. அவ்வெழுத்திற்குப் பொருள் இல்லை. அம்முறையில் வரும் எழுத்துக்கு, எழுத்துப்பேறு எனக் கூறுவர் புலவர் (எழுத்தைப் பெறுதல் – எழுத்துப்பேறு)

கூறுதி - கூறு + த் + இ
கூறு - பகுதி, இ – விகுதி (முன்னிலை)
த் - எழுத்துப்பேறு

விளக்கம் : கூறுதி – என்பது முன்னிலை வினைப்பகுபதம். இதில் காலம் காட்டும் இடைச்சொற்கள் இல்லை. – விகுதியே எதிர்காலம் காட்டுகிறது. இகர விகுதி த் என்னும் எழுத்தைப் பெற்றது. எனவே, இதை எழுத்துப்பேறு எனல் வேண்டும்.

• எழுத்துப் பேறுடைய பகுபதம்
போகாத - போ + கு + ஆ + த் + அ
போ - பகுதி
- விகுதி (பெயரெச்சம்)
- இடைநிலை (எதிர்மறை)
கு - சாரியை
த் - எழுத்துப்பேறு