முகப்பு

2.2 வேற்றுமை உருபுகள்

வேற்றுமை உருபுகள்

வைஷ்ணவி வந்தாள்

வைஷ்ணவியைப் பார்த்தான்

வைஷ்ணவியால் வரையப்பட்டது

இந்த மூன்று தொடர்களில் முதல் தொடரில் 'வைஷ்ணவி’ என்பது எழுவாய், இரண்டாம் தொடரில் ‘வைஷ்ணவி’ செயப்படுபொருள், மூன்றாம் தொடரில் ‘வைஷ்ணவி’ என்னும் எழுவாய் செயப்படுபொருளாகவும் கருத்தாவாகவும் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு “பெயர்ச்சொல்லினை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை” எனப்படும்.

வேற்றுமைகள் எட்டு ஆகும். முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உருபுகள் உண்டு.

வேலன் படித்தான்.

இதில் வேலன் என்னும் பெயர் எழுவாயாகிப் படித்தான் என்னும் வினைமுற்றைக்கொண்டு முடிந்தது. எழுவாயே முதல் வேற்றுமையாகும். இதன் உருபு, திரிபு இல்லாத பெயரேயாகும்.

வேலன் நல்ல சிறுவன்.

இதில் வேலன் என்னும் எழுவாய் சிறுவன் என்னும் பெயர்ச்சொல்லைப் பயனிலையாகக் கொண்டு முடிந்தது.

வேலன் யாவன் ?

இதில் வேலன் என்னும் எழுவாய் யாவன் என்னும் வினாவைப் பயனிலையாகக் கொண்டு முடிந்தது.

முதல் வேற்றுமையாவது எழுவாயாகும். இது வினைமுற்றையோ பெயரையோ வினாவையோ பயனிலையாகக் கொண்டு முடியும். முதல் வேற்றுமையின் பொருள் கருத்தாப் பொருளாகும். (கருத்தா, வினைமுதல், செய்பவன், எழுவாய் எனும் இவை ஒரு பொருளுடைய சொற்கள்).

இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’ ஆகும். இஃது ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒப்பு, உடைமை முதலிய பொருள்களில் வரும்.

வீட்டைக் கட்டினான் - ஆக்கல்
வீடு ஆக்கப்படு பொருளாயிற்று
வீட்டை இடித்தான் - அழித்தல்
வீடு அழிக்கப்படு பொருளாயிற்று
ஊரை அடைந்தான் - அடைதல்
ஊர் அடையப்படு பொருளாயிற்று
உலகை வெறுத்தான் - நீத்தல் (பற்று நீங்குதல்)
உலகு நீக்கப்படு பொருளாயிற்று
தேனை யொத்தது பலாச்சுளை - ஒப்பு
தேன் ஒப்புப் பொருளாயிற்று
செல்வத்தை உடையவள் செம்பிறை - உடைமை
செல்வம் உடைமைப் பொருளாயிற்று

மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு என்பன. ஆல், ஆன் என்பன கருவி, கருத்தாப் பொருள்களில் வரும். ஒடு, ஓடு என்பன உடன்நிகழ்ச்சிப் பொருளில் வரும்.

வாளால் வெட்டினான்
வாளான் வெட்டினான்
- கருவி
அரசனால் கட்டப்பட்ட கோயில்
தச்சனால் செய்யப்பட்ட பெட்டி
- கருத்தா
தாயொடு மகள் வந்தாள்
ஆசிரியரோடு மாணாக்கன் வந்தான்
- உடனிகழ்ச்சி

ஆல், ஆன் என்னும் உருபுகளுக்கு ஈடாகக் ‘கொண்டு’ என்னும் சொல்லுருபும், ஒடு, ஓடு என்னும் உருபுகளுக்கு ஈடாக, உடன் என்னும் சொல்லுருபும் பயன்படுகின்றன.

எ.கா:

வாள்கொண்டு அறுத்தான்

தாயுடன் மகள் வந்தாள்

ஒரு வேற்றுமை உருபு வரவேண்டிய இடத்தில், அதற்கு ஈடாக ஒரு சொல் வந்து பொருள் உணர்த்துவது சொல்லுருபு எனப்படும்.

நான்காம் வேற்றுமை உருபு ‘கு’ என்பதாகும். இவ்வுருபு கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை என்னும் பொருள்களில் வரும்.

ஏழைக்குக் கொடுத்தான் - கொடை
பாம்புக்குப் பகை மயில் - பகை
இராமனுக்கு நண்பன் குகன் - நேர்ச்சி (நட்பு)
வீரனுக்கு உரியது வாள் - தகுதி
நகைக்குத் தங்கம் கொடு - அதுவாதல்
கூலிக்கு வேலை செய்தான் - பொருட்டு
தருமனுக்குத் தம்பி பீமன் - முறை

நான்காம் வேற்றுமைக்கு பொருட்டு, நிமித்தம், ஆக என்பன சொல்லுருபுகளாக வரும்.

கூலியின் பொருட்டு வேலை செய்தான்

கூலியின்நிமித்தம் வேலை செய்தான்

கூலிக்காக வேலை செய்தான்

ஐந்தாம் வேற்றுமை உருபுகள் இல், இன் என்பனவாகும். இவ்வுருபுகள் நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப் பொருள்களில் வரும்.

மலையின் வீழருவி - நீங்கல்
தேளின் கொடியது பாம்பு - ஒப்பு
இந்தியாவின் வடக்கே இமயமலை - எல்லை
கொடையிற் சிறந்தவர் பாரி - ஏது

இல், இன் உருபுகளின் இடத்தில் நின்று, இருந்து என்பன சொல்லுருபுகளாக வரும்.

ஊரினின்று நீங்கினான்

ஊரிலிருந்து போனான்

அது, ஆது, அ என்பன ஆறாம் வேற்றுமையின் உருபுகளாகும். இவற்றுள் அது, ஆது என்னும் இரண்டும் ஒருமைக்கும், ‘அ’ என்னும் உருபு பன்மைக்கும் வரும்.

கண்ணனது பை - அது
தனாது சுவடி - ஆது
என நூல்கள் -

ஆறாம் வேற்றுமை உருபு தற்கிழமைப்பொருளிலும், பிறிதின்கிழமைப் பொருளிலும் வரும். தற்கிழமையாவது, தன்னோடு ஒற்றுமையுடைய பொருளின் தொடர்பை உணர்த்துவதாகும். இது பண்பு, உறுப்பு, ஒன்றன் கூட்டம் (ஒரு பொருட் கூட்டம்), பலவின் ஈட்டம் (பல பொருட் கூட்டம்), திரிபின் ஆக்கம் (ஒன்று திரிந்து ஒன்றாதல்) என ஐந்து வகைப்படும்.

முருகனது பெருமை - பண்புத் தற்கிழமை
கண்ணனது கை - உறுப்புத் தற்கிழமை
நெல்லினது குவியல் - ஒன்றன் கூட்டத் தற்கிழமை
பறவைகளது கூட்டம் - பலவின்கூட்டத் தற்கிழமை
மஞ்சளது பொடி - திரிபின் ஆக்கத் தற்கிழமை

பிறிதின்கிழமையாவது, தன்னின் வேறாய பொருளின் தொடர்பை உணர்த்துவது. இது பொருள், இடம், காலம் என மூவகைப்படும்.

குமரனது ஆடை - பொருள் பிறிதின் கிழமை
கந்தனது வீடு - இடப்பிறிதின் கிழமை
வள்ளுவரது நாள் - காலப் பிறிதின் கிழமை

உடைய என்பது ஆறாம் வேற்றுமையின் சொல்லுருபாக வரும்.

ஏழாம் வேற்றுமை உருபு ‘கண்’ என்பதாகும். இதனை இடவேற்றுமை எனவும் கூறுவர். இவ்வேற்றுமைக்குக் ‘கண்’ உருபேயன்றிக் கால், கடை, வழி, இடத்து, வாய், தலை, வலம், இடம், மேல், கீழ், பின், முன், உள், அகம், புறம் முதலிய உருபுகளும் உள்ளன.

இவ்விடப் பொருள், தற்கிழமைப்பொருளிலும் பிறிதின்கிழமைப் பொருளிலும் வரும். பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என்னும் அறுவகைப் பெயர்களும் இவ்விரு பொருளுக்கும் இடமாய் அமையும்.

தற்கிழமை
மணியின்கண் உள்ள ஒலி - பொருள்
கடலின்கண் உள்ள அலை - இடம்
நாளின்கண் உள்ள நாழிகை - காலம்
விரலின்கண் உள்ள நகம் - சினை
கறுப்பின்கண் உள்ள அழகு - பண்பு
ஆடலின்கண் உள்ள அழகு - தொழில்
பிறிதின்கிழமை
தினையின்கண் உள்ள கிளி - பொருள்
விண்ணின்கண் பறக்கும் பருந்து - இடம்
பகலின்கண் மலரும் தாமரை - காலம்
கையின்கண் உள்ள வளையல் - சினை
இளமையின்கண் உள்ள செல்வம் - பண்பு
ஆடற்கண் பாடிய பாட்டு - தொழில்

எட்டாம் வேற்றுமை உருபுக்கு எனத் தனியுருபு இல்லை. பெயர் இயல்பாய் நிற்றலும், பெயரின் ஈறு திரிதலும், ஈறு குன்றுதலும், ஈறு மிகுதலும், ஈற்றயல் திரிதலும் இதன் உருபுகளாகும். இதன் பொருள் விளிப்பொருள். இவ்வேற்றுமை விளிவேற்றுமை எனவும் பெயர் பெறும்.

தந்தை-தந்தாய்! தோழி–தோழீ ! - ஈறு திரிதல்
நண்பன் – நண்ப ! முருகன் – முருக ! - ஈறு குன்றல்
கண்ணன் – கண்ணனே ! தலைவன் – தலைவனே ! - ஈறு மிகுதல்
தம்பி – தம்பி ! முருகன் – முருகன் ! - இயல்பாதல்
மக்கள் – மக்காள் ! புலவர் – புலவீர் ! - ஈற்றயல் திரிதல்
தன் மதிப்பீடு : வினாக்கள் – I
  1. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
  2. திசைச்சொல் என்றால் என்ன?
  3. வடசொல் என்றால் என்ன?
  4. இடுகுறிப் பெயர் என்றால் என்ன?
  5. இடைச்சொல் என்றால் என்ன?
  6. வேற்றுமை உருபுகள் யாவை?