முகப்பு

2.5 துணைவினைகளும் கூட்டு வினைகளும்

துணைவினைகளும் கூட்டு வினைகளும்

முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை துணைவினை ஆகும். வினைச்சொல்லானது பல கூறுகளாகப் பிரிந்து பொருள் தரக்கூடியவாறு அமையும் வினை கூட்டுவினை ஆகும்.

வினைச்சொற்களை அவற்றின் அமைப்பு, பொருள், சொற்றொடரில் அவை தொழிற்படும் விதம் முதலான அடிப்படைகளில் பல வகையாகப் பிரிக்கலாம்.

வினைச்சொற்கள் என்பது தொழில் அல்லது செயலைக் குறிக்கும். இவை காலம் காட்டும் இடைநிலைகளையும் பால், எண் காட்டும் விகுதிகளையும் பெற்று வரும். ஒவ்வொரு வினைச்சொல்லுக்கும் தனித்தனியே சொற்பொருள் உண்டு.

எ.கா.

பார் என்னும் வினைச்சொல் பார்த்தல் அல்லது காணுதல் என்ற தனிப்பொருளைத் தரும். இது போன்றே இரு, பாடு, ஆடு, செய், அழு, தள்ளு போன்ற வினைச் சொற்களும் தமக்கென்று தனித்தனிப் பொருளைத் தரும்.

முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை, துணைவினை எனப்படும். துணைவினை என்பது இன்னொரு வினையுடன் சேர்ந்து வருகின்ற நிலையில் தன் பொருளை இழந்து சேர்ந்துவரும் வினைக்குப் புதிய பொருளைத்தரும் வினைச்சொல் ஆகும்.

தமிழில் இரு என்பது தனியே வரும்போது இருத்தல் எனும் பொருளைத் தருகிறது. அதுவே போ, வா, செய், படு போன்ற வினைகளுடன் சேரும்போது போயிருந்தான், வந்திருந்தான், செய்திருந்தான், படுத்திருந்தான் என்றாகிறது. இங்கு இரு என்பது துணைவினைப் பொருளைத் தருகிறது.

தமிழில் துணை வினை, தலைமை வினைக்குப் பிறகு வருகின்றது. தலைமை வினைகள் எப்போதும் போய், வந்து, செய்து, படுத்து போன்ற வினையெச்ச வடிவிலேயே வருகின்றன. துணைவினை படுத்திரு, செய்துவிடு என்பவற்றில் வருவதுபோல் ஏவல் வினையாக அல்லது போயிருந்தான், வந்துவிட்டான் என்பவற்றில் உள்ளதுபோல் முற்றுவினை வடிவத்தில் வருகின்றது.

தற்காலத் தமிழில் விடு, அடி, அருள், அழு, ஆயிற்று, இடு, இரு, எடு, ஒழி, கட்டு, கிட, கிழி, கூடு, கொடு, கொள், தள்ளு, தீர், தொலை, நில், படு, பண்ணு, பார், பிடி, போ, போக, போடு, மாட்டு, முடி, வா, வாங்கு, வேண்டு, வை போன்ற நாற்பதிற்கும் மேற்பட்ட வினைகள் துணைவினைகளாக வழங்குகின்றன. இத்துணைவினைகள் முயற்சி, பலன் அளிக்காமை, உறுதி, துணிவு, முடிவு, மிகுதி, காரணம், கண்டிப்பு, வெறுப்பு, கோபம், சிறப்பு போன்ற பல்வேறு பொருள்களை உணர்த்துவனவாக அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்களை உணர்த்தும் வகையிலும் சில துணைவினைகள் அமைந்துள்ளன.

விடு

இத்துணைவினை உறுதிப்பொருளைத் தருகிறது.

எழுதிவிடு

இதற்குப் பொருள் எழுது என்பதாகும். ஆனால் எழுது என்பதில் இல்லாத உறுதிப்பொருள் எழுதிவிடு என்பதில் உள்ளது. விடு என்ற துணைவினையே அப்பொருளைத் தருகிறது. அதேபோல எழுதினேன், எழுதுகிறேன், எழுதுவேன் என்ற வினைச்சொற்களில் இல்லாத உறுதிப்பொருள், அவ்வினைச்சொற்களோடு விடு என்ற துணைவினையைச் சேர்த்து முறையே எழுதிவிட்டேன், எழுதிவிடுகிறேன், எழுதிவிடுவேன் என்று கூறும்போது இருப்பதைக் காணலாம். ஆக, விடு என்னும் துணைவினைக் கட்டாயம் ( அல்லது )கண்டிப்பு என்ற பொருளைத் தருவதாகவும் வழங்குகிறது.

• துணை வினைகளின் பண்புகள்
  • துணை வினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன.
  • இவை முதல்வினையைச் சார்ந்து அதன் வினைப்பொருண்மைக்கு வலு சேர்க்கின்றன.
  • பேச்சுமொழியில் துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் இருவகையாகப் பிரிக்கலாம்.

  • தனி வினை
  • கூட்டு வினை
• தனிவினை

ஒரு வினைச் சொல்லைப் பொருள் தரக்கூடிய பல கூறுகளாகப் பிரிக்க முடியாத போது அது தனி வினை எனப்படும்.

எ.கா.
  • நில்
  • நின்றான்
  • நிற்கிறார்கள்

மேலுள்ள சொற்களில் நில் என்ற சொல் வினையடியாகும். இச்சொல்லை பொருள் தரக்கூடிய வகையில் மேலும் பிரிக்க முடியாது. அதே போல் நின்றான், நிற்கிறார்கள் போன்ற வினைச் சொற்களும் நில் என்ற வினை அடியோடு பல ஒட்டுக்கள் சேர்ந்து உருவாக்கம் பெற்றுள்ளன.

நில் + ற் + ஆன்

நில் + கிறு + ஆர்கள்

இவற்றுள் நிலை என்ற வினை அடியைத் தவிர்த்து ஏனையவை அனைத்தும் ஒட்டுக்கள் எனப்படும். இந்த ஒட்டுக்கள் தனித்து நின்று பொருள் உணர்த்துவது இல்லை. இலக்கணப்பொருளை மட்டுமே உணர்த்தும். ஆகவே, இவ்வாறு பல கூறுகளாகப் பொருள் தரக்கூடிய வகையில் பிரித்து நோக்க முடியாத வினைச்சொற்கள் தனி வினைகள் எனப்படும்.

• கூட்டுவினை

ஒரு வினைச்சொல்லானது பொருள் தரக்கூடியவாறு பல கூறுகளாகப் பிரிகின்ற போது அது கூட்டுவினை எனப்படும். இங்கு இரு சொல் கூட்டு சேர்ந்து ஒரு வினைச்சொல்லாக செயற்படும். பிரித்தால் இரண்டும் இரு வேறு பொருளைத் தருவனவாகவும் அமையும்.

எ.கா.

தந்தியடி

கைப்பிடி

தட்டிக்கேள்

மேலே உள்ள சொற்களைத் தந்தி + அடி, கை + பிடி, தட்டி + கேள் என்றவாறு பிரித்து நோக்க முடியும். இவ்வாறு பிரிகையில் தந்தி என்பது பெயர்ச் சொல்லாகவும் அடி என்பது வினைச்சொல்லாகவும் இருவேறு பொருளை உணர்த்துகின்றன. கைப்பிடி என்ற சொல்லில் கைஎன்பது பெயர்ச்சொல்லாகவும் பிடி என்பது வினைச்சொல்லாகவும் அமைந்து காணப்படுகின்றது. அதேபோல் தட்டிக்கேள் என்ற வினைச்சொல் தட்டி என்ற வினையையும் கேள் என்ற வினையையும் உணர்த்துகின்றது.