TT02 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
3.1 அகத்திணை
அகத்திணை
“அகம்” என்னும் சொல்லுக்கு “உள்ளம்” எனப் பொருள்படும் என்பதை அறிவீர்கள். ஆதலின், ‘ஒத்த அன்புடைய தலைவன் தலைவியின் உள்ளத்தே தோன்றும் காதல் நிகழ்ச்சியை அகப்பொருள் எனப் பெயரிட்டு வழங்கினர். அகப்பொருள் பற்றி நிகழும் ஒழுக்கத்தை அகத்திணை என்பர். “திணை” என்பதற்கு "ஒழுக்கம்" எனப் பொருள்படும்.
அகத்திணையைக் குறிஞ்சித் திணை, முல்லைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை, பாலைத் திணை என ஐந்து வகையாகப் பகுத்துக் கூறுவர். இவற்றையே அன்பின் ஐந்திணை என்பர்.
ஒத்த அன்புடைய தலைவன் ஒருவனும் தலைவி ஒருத்தியும் தாமே ஒருவரை ஒருவர் கண்டு உள்ளம் கலந்து உறவுகொள்ளும் ஒழுக்கமாகும்.
பொருள் தேடுதல் அல்லது நாடு காவலுக்காகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வரும்வரை, அவனது பிரிவை நினைத்துத் தலைவி தன் இல்லத்தில் வருந்தி இருக்கும் நிலையைக் குறிப்பதாகும்.
இல்வாழ்வில் ஈடுபட்ட தலைவன் ஆடல் பாடல்களில் விருப்பம் கொண்டு அவை காரணமாக வெளியிடங்களில் தங்கி மீளும்போது, தலைவி அவன்மீது கொள்ளும் ஊடல் உவகையைக் குறிப்பதாகும்.
பிரிந்து சென்ற தலைவன், குறித்த காலத்தில் வராமல் இருந்தால், அது குறித்துத் தலைவி கொள்ளும் வருத்தத்தைக் குறிக்கும் ஒழுக்கமாகும்.
தலைவன் தலைவியை விட்டுப் பிரியும் ஒழுக்கமாகும்.
இவை ஐந்தினோடு கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டையும் சேர்த்து அகத்திணை ஒழுக்கம் ஏழு எனக் கூறுவர்.
கைக்கிளை என்பது ஒருதலைக் காதல். பெருந்திணை என்பது பொருந்தாக் காதல். ஆதலின், அவை இரண்டும் சிறப்புடையனவாகா.
அன்பின் ஐந்திணை சிறப்புற நடத்தற் பொருட்டு ஒவ்வொன்றுக்கும் ‘முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்’ என மூன்று பொருள்கள் வகுத்துள்ளனர்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து வகை ஒழுக்கம் நிகழ்தற்குரிய நிலத்தையும் நிகழ்த்துவதற்கு ஏற்ற பொழுதையும் (காலம்) ‘முதற்பொருள்’ என வழங்குவர். (நிலமும் பொழுதும் பாலை எனப்படும்)
1. மலையும் மலை சார்ந்த இடமும் | - | குறிஞ்சி |
2. காடும் காடு சார்ந்த இடமும் | - | முல்லை |
3. வயலும் வயல் சார்ந்த இடமும் ஒன்றையொன்று அழுத்தமாக உரசுதல்) | - | மருதம் |
4. கடலும் கடல் சார்ந்த இடமும் | - | நெய்தல் |
5. பாலைக்குத் தனிநிலம் இல்லை. எனினும், தத்தம் இயல்பிற் திரிந்த முல்லையும் குறிஞ்சியும் சேர்ந்த பகுதி பாலை எனக் கூறப்படும். (மணலும் மணல் சார்ந்த இடமும் பாலை எனக் கூறுவர்). |
அகப்பொருள் நிகழ்தற்கு ஏற்ற பொழுதைப் பெரும் பொழுது, சிறுபொழுது என இரண்டு வகையாகப் பிரிப்பர்.
பெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் கூறுபாடு. ஓர் ஆண்டுக்குரிய ஆறு பருவங்களும் பெரும்பொழுது எனப்படும். ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு திங்கள் கால அளவினை உடையதாம்.
பெரும்பொழுது ஆறு வகைப்படும். அவற்றையும் அவற்றிற்குரிய திங்கள்களையும் இங்குக் காண்போம்.
பெரும்பொழுது | உரிய திங்கள் |
---|---|
1. இளவேனிற்காலம் | சித்திரை, வைகாசி |
2, முதுவேனிற்காலம் | ஆனி, ஆடி |
3. கார்காலம் | ஆவணி, புரட்டாசி |
4. குளிர்காலம் | ஐப்பசி, கார்த்திகை |
5. முன்பனிக்காலம் | மார்கழி, தை |
6. பின்பனிக்காலம் | மாசி, பங்குனி |
(வேனிற்காலம் – வெயிற்காலம், கார்காலம் – மழைக்காலம், முன்பனிக்காலம் – மாலைக்குப் பின் பனி விழும் காலம், பின்பனிக்காலம் – காலையில் பனி விழும் காலம்)
சிறுபொழுதென்பது ஒரு நாளின் கூறுபாடு. ஒரு நாளை 1. வைகறை, 2. காலை, 3. நண்பகல், 4. எற்பாடு, 5. மாலை, 6. யாமம் என ஆறு கூறுகளாக்கி அவற்றைச் சிறுபொழுது என வழங்குவர்.
1. | வைகறை | - | இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை |
2. | காலை | - | காலை 6 மணி முதல் முற்பகல் 10 மணி வரை |
3. | நண்பகல் | - | ஊடலும் ஊடல் நிமித்தமும் |
4. | எற்பாடு | - | பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை |
5. | மாலை | - | மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை |
6. | யாமம் | - | இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை |
ஒவ்வொரு சிறுபொழுதும் நான்கு மணி நேரம் கொண்டது. எனவே, ஆறு சிறுபொழுதும் சேர்ந்து இருபத்து நான்கு மணி நேரமாகும்.
ஐந்து நிலங்களுக்கும் உரிய பெரும்பொழுதுகளும் சிறுபொழுதுகளும் பின்வருமாறு அமையும்.
நிலம் | பெரும்பொழுது | சிறுபொழுது |
---|---|---|
குறிஞ்சி | குளிர்காலமும் முன்பனிக்காலமும் | யாமம் |
முல்லை | கார்காலம் | மாலை |
மருதம் | பெரும்பொழுதுகள் ஆறும் | வைகறை |
நெய்தல் | பெரும்பொழுதுகள் ஆறும் | எற்பாடு |
பாலை | இளவேனில், முதுவேனில், பின்பனி | நண்பகல் |
இதுவரை கண்ட ஐவகை நிலங்களுக்கும் உரிய தெய்வம், மக்கள், பறவை, விலங்குகள், ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் ஆகியவற்றைக் கருப்பொருள் என வழங்குவர்.
ஒவ்வொரு திணைக்கும் உரிய கருப்பொருளைப் பின்வருமாறு காண்போம்.
வ. எண் | கருப்பொருள்கள் | குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |
---|---|---|---|---|---|---|
1. | தெய்வம் | முருகன் | திருமால் | இந்திரன் | வருணன் | கொற்றவை |
2. | மக்கள் | சிலம்பன், வெற்பன், கானவர், குறவர், குறத்தியர் | தோன்றல், ஆயர், ஆய்ச்சியர் | மகிழ்னன், உழவர், உழத்தியர் | சேர்ப்பன், பரதன், பரத்தியர் | எயினர், எயிற்றியர் |
3. | உணவு | மலை நெல், திணை, மூங்கிலரிசி | வரகு, சாமை | செந்நெல், அரிசி | மீன், உப்பு விற்றலால் வரும் பொருள் | வழியில் பறித்த பொருள் |
4. | விலங்கு | புலி, கரடி, யானை, சிங்கம் | முயல், மான் | எருமை, நீர் நாய் | சுறா, முதலை | செந்நாய், புலி |
5. | பூ | குறிஞ்சி, காந்தள் | முல்லை, பிடவம் | தாமரை, குவளை | தாழம்பூ, நெய்தற் பூ | மராம் பூ, பாதிரிப் பூ |
6. | மரம் | அகில், தேக்கு, சந்தனம், மூங்கில் | கொன்றை, காயா | மருதம், வஞ்சி | புன்னை, தாழை | இருப்பை, ஓமை, உழிஞை |
7. | பறவை | கிளி, மயில் | காட்டுக் கோழி, மயில் | நாரை, அன்னம், தாரா | அன்னம், கடற்காகம் | கழுகு, பருந்து, புறா |
8. | ஊர் | சிறுகுடி | பாடி, சேரி | பேரூர், மூதூர் | பட்டினம், பாக்கம் | குறும்பு |
9. | நீர் | அருவிநீர், சுனைநீர் | காட்டாற்று நீர் | மனைக் கிணறு, ஆறு | கேணி | நீர் வற்றிய கிணறு, சுனை |
10. | பறை | தொண்டகப் பறை | ஏறுகோட்பறை | மணமுழா, நெல்லரிகிணை | மீன் கோட்பறை, பம்பை | போர்ப்பறை, ஊர் எறி பறை |
11. | யாழ் | குறிஞ்சி யாழ் | முல்லை யாழ் | மருதயாழ் | விளரியாழ் | பாலையாழ் |
12. | பண் | குறிஞ்சிப் பண் | சதாரிப் பண் | மருதப் பண் | செவ்வழிப் பண் | பஞ்சுரம் |
13. | தொழில் | தேனெடுத்தல் கிழங்கு அகழ்தல் | சாமை விதைத்தல், நிரை மேய்த்தல் | நெல்லரிதல், வைக்கோல் துவைப்பித்தல் புதுநீராடல் | மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், உப்பு விற்றல் | போர் செய்தல், சூறையாடுதல் |
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைகளுக்கு உரிய பொருள் உரிப்பொருள் எனப்படும். இங்கு உரிப்பொருள்கள் மற்றும் உரிப்பொருள்களின் நிமித்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
குறிஞ்சி | - | புணர்தலும் புணர்தல் நிமித்தமும் |
முல்லை | - | இருத்தலும் இருத்தல் நிமித்தமும் |
மருதம் | - | ஊடலும் ஊடல் நிமித்தமும் |
நெய்தல் | - | இரங்கலும் இரங்கல் நிமித்தமும் |
பாலை | - | பிரிதலும் பிரிதல் நிமித்தமும் |
என ஐந்து திணைகளுக்கும் உரிப்பொருள்கள் வகுக்கப்பட்டுள்ளன.