முகப்பு

3.5 சொல்லாட்சிப் பிறழ்வுகள்

சொல்லாட்சிப் பிறழ்வுகள்

மொழியைத் திறம்படக் கையாளுவதில் தொடக்க நிலையிலிருந்தே சொல் நிலையிலும் சில இடர்ப்பாடுகள் எதிர்ப்படுகின்றன. அவ்விடர்ப்பாடுகளைப் பொருந்தாச் சொல்லாட்சி, வேற்றுச் சொல்லாட்சி என வகைப்படுத்திக் காணலாம்.

பொருத்தமற்ற சொல்லாட்சிகளைப் பலவாறாக வகைப்படுத்திக் காணலாம். அவற்றைப் பற்றிய ஆய்வுகள் வெகுவாக இல்லை. எனினும் இதழ்கள், மாணவர்களின் விடைத்தாள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க பொருந்தாச் சொல்லாட்சிக் குறைபாடுகளை வகைப்படுத்தலாம்.

சொற்களுக்குரிய பொருட்பாகுபாடு அறியாமலும் மரபாகப் பயன்படுத்தப்படும் சொற்கள் தெரியாமலும் தமிழ்ச் சொற்களைப் பிற மொழிச் சொற்களிலிருந்து பிரித்தறிய இயலாத நிலையிலும் பொருத்தமற்ற சொற்களை எடுத்தாண்டு குறைபாடுடைய மொழியினைப் பலர் பேசுகின்றனர்; எழுதுகின்றனர்.

• பொருட்பாகுபாடு

பல சொற்கள் ஏறத்தாழ ஒரே பொருளைத் தருவதாக அமையினும் அவற்றுள் நுட்பமான பொருள் வேறுபாடுகளைக் காண முடியும். இரண்டாம் மொழியாகக் கற்பவர்கள் இம்மாறுபாடுகளைப் புரிந்து கொள்ள இடர்படுவர்.

அவன் சொன்னான். (சொல்)

அவன் பேசினான். (பேசு)

அவன் கூறினான். (கூறு)

இந்த வாக்கியங்களில் பயின்றுள்ள ‘சொல், பேசு, கூறு’ ஆகிய வினைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருளை உடையனவாகும்.

சொல் – தகவலை வெளிப்படுத்தல்

(ஒருவர் மட்டுமே மொழிகின்ற நிலை)

பேசு – உரையாடு

(இருவர் பேசுதல் குறிப்பாக வெளிப்படுகிறது)

கூறு – வேண்டுதல் அல்லது விழைதல் போன்றன சொல்லுதலில் அமையும்.

சொற்களின் நுண்ணிய பொருள் வேறுபாடுகளை, அவற்றை வாக்கியத்தில் அமைத்துக் காட்டியே கற்பிக்க இயலும். எனவே பொருள்பாகுபாடுகளை வெளிப்படுத்தத் தக்கவாறான வாக்கியத் தொகுதிகளின் தயாரிப்பு கற்பித்தல் தேவையாகிறது.

• மரபுச் சொல்

பொருத்தமான சொல்லாட்சியில் கருதத்தக்க ஒன்று மரபுச் சொல்லாகும்.

ஒரே பொருளில் பல சொற்கள் இருப்பினும் சூழ்நிலையின் தன்மைக்கு ஏற்ப குறிப்பிட்ட சொல்லையே பயன்படுத்துவது மரபாக உள்ளது. ‘உணவு’ என்பது மாந்தர் சாப்பிடும் பொருள். விலங்குகள் சாப்பிடுவதை உணவு எனக் குறிப்பது மரபு அன்று. ‘தீனி’ என்றே குறித்தல் வேண்டும். பறவைகள் கொள்வது ‘இரை’ யாகும். எனவே உணவு, தீனி, இறை என்பன ஒரே பொருளைக் கொண்டிருந்தாலும் அவற்றை வெவ்வேறு நிலைகளில் பயன்படுத்துகிறோம்.

பெயர்சொற்களைப் போன்றே வினைச் சொற்களிலும் மரபுச் சொற்கள் உள்ளன. ஒலிகளைக் குறிக்க வெவ்வேறு வினைச் சொற்களைப் பயன்படுத்துதல் மரபாகும்.

‘கொட்டு முழங்குகிறது’, ‘கடல் இரைகிறது’, ’சிங்கம் கர்ச்சிக்கிறது’, ’புலி உறுமுகிறது’, ’காக்கை கரைகிறது’, ’ நாகம் சீறுகிறது’, ’தவளை கத்துகிறது’, ’வண்டு முரலுகிறது’, ’குதிரை கனைக்கிறது’, ’நாய் குரைக்கிறது’ போன்ற வாக்கியங்களில் மரபாகப் பயன்படுத்தப்படும் வினைச்சொற்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

• தகுசொல்

சில சொற்கள் அவற்றின் அமைப்பு முறையால் பிறவற்றிலிருந்து மாறுபட்டுள்ளன. ‘ஒருவன்’ என்னும் சொல்லில் ‘அன்’ விகுதி ஆண்பாலைக் குறிக்கும். எனவே பெண்பாலைக் குறிக்கும் ‘அள்’ விகுதி சேர்ந்த ‘ஒருவள்’ என்னும் சொல் இருத்தல் வேண்டும் எனக் கருதி, ‘ஒருவன்’ என்பதற்குப் பெண்பாலாக ‘ஒருவள்’ எனும் சொல்லை எடுத்தாளுகின்றனர். ‘ஒருவள்’ என்பது தவறான சொல்லாட்சியாகும். ‘ஒருத்தி’ என்பதே முறையான சொல்லாட்சி.

வழக்கில் காணப்படுகின்ற சில பிழைபட்ட சொல்லாட்சிகளைக் கீழ்வரும் அட்டவணை காட்டுகிறது.

எண் தவறான சொல்லாட்சி முறையான சொல்லாட்சி
1. கண்ணன் என்ற பெயரினன் கண்ணன் எனும் ...
2. அவள் சிறுவள் அவள் சிறுமி
3. அவைகளை அவற்றை
4. மகன்கள், மகள்கள் ஆண் மக்கள், பெண் மக்கள்
5. தண்ணீர்கள் தண்ணீர்
6. நட்புக்கள் நட்பு

ஒரு மொழியில் பிறிதொரு மொழியின் சொற்கள் கலப்பதைத் தவிர்க்க இயலாது. பல்வேறு இணைப்புகளால் உலகம் சுருங்கிவரும் இந்நாளில், மொழிக்கலப்பு விரைவாக ஏற்படும். எனினும், தமிழ் அறிஞர்களில் பலர் தமிழில் பிறமொழி கலப்பதைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அவர்களுடைய எதிர்ப்புக்கு மொழியின் தனித்தன்மை காத்தல், மொழியிணை வளப்படுத்துதல் ஆகியன காரணங்களாக அறியப்படுகின்றன.

• தனித்தன்மை காத்தல்

தமிழகத்தில் ஏற்பட்ட சமயக்கலப்பு தமிழ்மொழியைப் பெரிதும் தாக்கியது. சமஸ்கிருதத்தைச் சார்ந்தே தமிழ் இலக்கியங்கள் கருதப்பட்டன. இலக்கிய வகைகளும் இலக்கண நெறிகளும் தமிழில் புகுத்தப்பட்டன. ‘சமஸ்கிருதமின்றித் தமிழில்லை’ எனும் தவறான கருத்து வேரூன்றத் தொடங்கியது. தமிழுக்கு நேர்ந்த இழிநிலை உணரப்பட்டபோது தனித்தமிழ் இயக்கம் தோன்றியது. அவ்வியக்கத்தால் மீண்டும் தனித்தமிழ் ஆட்சி மலர்ந்தது. திராவிட இயக்கங்கள் அரசியல் மேன்மை பெற்றபோது தனித்தமிழ் ஆட்சி மேலும் பெருமை பெற்றது. எனினும் ‘உதட்டளவில் தமிழ், உள்ளத்தளவில் சமஸ்கிருதம்’ எனும் நிலையினையும் காணமுடிகிறது. ‘மொழி வளர்ச்சி’ எனும் போர்வையில் தமிழில் சமஸ்கிருதச் சொற்களைப் பலர் பயன்படுத்துகின்றனர்.

தமிழில் சமஸ்கிருதச் சொற்கள் கலக்கப்பட்டதால் மொழிக்கு வளர்ச்சியைவிடத் தாழ்ச்சியே பெரிதும் ஏற்பட்டதை வரலாறு உணர்த்துகிறது. எனவே சமஸ்கிருதச் சொற்களைக் களைந்து, தூய தமிழ்ச் சொல்லாட்சிக்கு முனைப்புக் காட்ட வேண்டும். தமிழ்ப் பாடநூல்களாவது சமஸ்கிருதக் கலப்பற்று எழுதப்படல் வேண்டும். தவிர்க்க இயலாச் சூழலில் சமஸ்கிருதச் சொல்லாட்சி பாடநூல்களில் மேற்கொள்ளப்படின் அச்சொற்களை ஆசிரியர்கள் எடுத்துக்காட்டி அவற்றிற்கான தூய தமிழ்ச் சொற்களை உருவாக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

• வளப்படுத்துதல்

தமிழுக்கு நேர்ந்த தாழ்வினைப் போக்கும் நோக்கில்தான் சமஸ்கிருதக் கலப்பு எதிர்க்கப்பட்டது; எதிர்க்கப்படுகிறது. தொன்மையான தமிழ்மொழி நாளும் தோன்றி வளர்ந்து வரும் பொருள்களையும் பொருண்மைகளையும் குறிப்பதற்குத் தகுந்தவாறு சொற்களைப் பெருக்கி வளம்பெற வேண்டும். எனவே ஆங்கிலக் கலைச்சொற்கள் நல்ல தமிழில் மொழிமாற்றம் செய்யப்ட்டுத் தூய தமிழ்ச் சொல்லாட்சி வளம் பெற விரும்பப்படுகிறது. கலைச் சொல்லாக்கம் ‘தமிழால் முடியும்’ எனும் நிலையினை உருவாக்கும்.

புதிய கலைச்சொற்கள் படிப்பவர்களுக்குப் புரியாது எனக் கூறி சிலர் ஆங்கிலத்திலுள்ள கலைச்சொற்களை ஒலிபெயர்ப்பாகப் பயன்படுத்துமாறு கூறுகின்றனர். அவர்களின் கூற்று தவறுடையதாகும். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை ‘வரலாறு, நிலநூல்’ போன்ற தூய தமிழ்ச்சொல் வழக்கு இல்லை. ஆனால் இன்றைய நிலை வேறு. சரித்திரம், பூகோளம் எனும் பிறமொழிச் சாயல் கொண்ட சொற்கள் தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்குப் புரியாது. வரலாறு, நிலநூல் போன்ற தூய தமிழ்ச் சொற்களையே அவர்கள் அறிவர்.

நடைமுறை வாழ்க்கையிலும் தொடக்க காலத்தில் தூய தமிழ்க் கலைச்சொற்கள் விளங்கா நிலை ஏற்படலாம். ஆனால் சொற்கள் பழக்கத்தில் வந்தபின்னர் பாமரருக்கும் விளங்கும் சொல்லாகிவிடும். கவர்னர், கலெக்டர் போன்ற ஆங்கிலச் சொற்கள் இன்று வழக்கிழந்து ஆளுநர், மாவட்ட ஆட்சியர் போன்ற தூய தமிழ்ச் சொற்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன. எனவே தனித்தமிழ் ஆக்கங்களை நடைமுறைப் படுத்தும்போது தொடக்க நிலையில் ‘விளங்காத சொற்கள்’ எனும் குரல் எழலாம். போகப் போகப் புரியும் நிலை ஏற்படும். எனவே தமிழாசிரியர்களும் தமிழறிஞர்களும் தனித்தமிழ் ஆக்கத்திற்கு ஊக்கமளித்து ஆக்கப் பணிகளில் ஈடுபடுதல் வேண்டும்.

தொடக்க நிலையில், குழந்தைகள் ஆங்கிலம் அல்லது பிறமொழிக் கலைச்சொற்களை எதிர்ப்படும்போது அவற்றிற்கான தூய தமிழ்ச்சொற்களையும் கற்பிக்க வேண்டும். தூய தமிழ்ச் சொற்கள் இல்லாத நிலையில் விளக்கங்கள் தந்து சொல்லாக்கங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

கவிதை, கதை போன்றவை தோன்றிப் பெருகுவதனால் மட்டுமே தமிழ் வளம் பெற்றுவிட்டதாகக் கருதக் கூடாது. எல்லாப் பொருள்களையும் பொருண்மைகளையும் வெளிப்படுத்தி விளக்கத் தக்கவாறு மொழியில் சொல் வளம் பெறுக வேண்டும். சொல்வளத்தைப் பெருக்குதல் தமிழ் வளர்ச்சியில் எதிர்கொள்ள வேண்டிய இன்றியமையாப் பணியாகும்.