நேரசை : | 1. | குறில் தனித்து வரல் | - | க |
2. | குறில் ஒற்றடுத்து வரல் | - | கல் | |
3. | நெடில் தனித்து வரல் | - | கா | |
4. | நெடில் ஒற்றடுத்து வரல் | - | கால் | |
நிரையசை : | 1. | குறில் இணைந்து வரல் | - | படு |
2. | குறில் இணைந்து ஒற்றடுத்து வரல் | - | படும் | |
3. | குறில் நெடில் இணைந்து வரல் | - | கடா | |
4. | குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்து வரல் | - | கடாம் |
TT02 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
3.3 யாப்பு
யாப்பு
தமிழ் இலக்கணத்தில் செய்யுள் இலக்கணத்தை யாப்பிலக்கணம் என்பர். யாத்தல் என்னும் சொல்லிற்குக் கட்டுதல் எனப் பொருள்படும். ஒரு சிறந்த கருத்தை உணர்ச்சி பொங்க கற்பனையோடு இலக்கணம் வழுவாத ஒரு வடிவத்தில் படைப்பதே, செய்யுள் ஆகும். இத்தகைய செய்யுளை இயற்றப் பயன்படும் உறுப்புகள் செய்யுள் உறுப்புகள், எனப்படும். அவை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறு உறுப்புகளாகும்.
செய்யுள் இயற்றுவதற்கு அடிப்படையாக இருப்பவை எழுத்துகளாகும். அவை
உயிர் | - | 12 |
மெய் | - | 18 |
உயிர்மெய் | - | 216 |
ஆய்தம் | - | 1 |
---- | ||
247 | ||
---- |
ஒவ்வோர் எழுத்திற்கும் ஒலியளவு உள்ளது.
குறிப்பு : எழுத்துகளைப்பற்றி விரிவாக அலகு - 1ல் விவரிக்கப்பட்டுள்ளதால் இங்கு எண்ணிக்கை மட்டும் பொடுக்கப்பட்டுள்ளது.
எழுத்து அசைத்து இசை கோடலின் அசையே (யாப்பருங்கலம் விருத்தி – சூ,2)
எழுத்துத் தனித்தோ பல சேர்ந்தோ ஓசையுண்டாகுமாறு பிரிந்து நிற்பது அசை எனப்படும். இது சீருக்கு உறுப்பாகும். பல அசைகள் சேர்ந்தே சொல்லும் சீருமாகின்றன. ‘எண்ணென்ப’ – இச்சீரில் மூன்று அசைகள் உள்ளன. அவை : எண் – ணென் – ப. அதாவது, மூன்று அளவு ஒலிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஓர் அசையாகும். இவ்வசை இரண்டு வகைப்படும். அவை : 1. நேரசை 2. நிரையசை.
நேரசை ஐந்தெழுத்துக்கு மிகாமலும் நிரையசை ஆறெழுத்துக்கு மிகாமலும் இருக்கும். எழுத்துகளைக் கணக்கிடும்பொழுது மெய்யெழுத்துகளை நீக்கியே கணக்கிடவேண்டும்.
சீர் என்னும் சொல்லுக்கு இனிய ஒலி என்று பொருள். “அசையியைந்து சீர்கொள நிற்றலின் சீரே” (யாப்பருங்கலம்). அசை ஒன்றோ பலவோ கூடிப் பகுதி பகுதியாகச் சீரான முறையில் அடிக்கு உறுப்பாக அமைவதாகும். ஓரசைச்சீர், ஈரசைச்சீர், (மாச்சீர், விளச்சீர்), மூவகைச்சீர் (காய்ச்சீர், கனிச்சீர்), நாலசைச்சீர் (பொதுச்சீர்) எனச் சீர்கள் அசையளவு பொருத்துப் பெயர் பெறும்.
நேரசையோ நிரையசையோ தனியாக நின்று, ஒரு சீராக வருவது ஓரசைச்சீர் எனப்படும். இது வெண்பாவின் ஈற்றடியில் இறுதிச் சீராக வரும். பாடலில் வேறெங்கும் வராது. வரவும் கூடாது.
அசை | - | வாய்பாடு |
நேர் | - | நாள் |
நிரை | - | மலர் |
ஈரசைசள் சேர்ந்து ஒரு சீராக அமைவது ஈரசைச்சீர் எனப்படும். நேரசையும் நிரையசையும் தம்முள் இணைந்தும் மாறியும் ஈரசைகளாக வரும். நேர் அசையில் முடிவது இரண்டும், நிரை அசையில் முடிவது இரண்டுமாக ஈரசைச் சீர்கள் நான்காகும். நேர் அசையில் முடிவதனை மாச்சீர் எனவும், நிரையில் முடிவதனை விளச்சீர் எனவும் கூறுவர். ஈரசைச் சீரினை இயற்சீர் அல்லது ஆசிரிய உரிச்சீர் எனவும் அழைப்பர்.
அசை | - | வாய்பாடு (சீர்) | |
நேர் நேர் | - | தேமா | |
நிரை நேர் | - | புளிமா | மாச்சீர் இயற்சீர் |
நிரை நிரை | - | கருவிளம் | அல்லது |
நேர் நிரை | - | கூவிளம் | விளச்சீர் ஆசிரிய உரிச்சீர் |
ஈரசைச்சீர் நான்கின் இறுதியிலும் நேரசையும் நிரையசையும் தனித்தனியாகக் கூடி வருதலாகிய எட்டும் மூவசைச் சீர்களாம்.
அசை | - | வாய்பாடு (சீர்) | |
நேர் நேர் நேர் | - | தே மாங் காய் | |
நிரை நேர் நேர் | - | புளி மாங் காய் | |
நிரை நிரை நேர் | - | கரு விளங் காய் | |
நேர் நிரை நேர் | - | கூ விளங் காய் | காய்ச் சீர்கள் |
நேர் நேர் நிரை | - | தே மாங் கனி | |
நிரை நேர் நிரை | - | புளி மாங் கனி | |
நிரை நிரை நிரை | - | கரு விளங் கனி | |
நேர் நிரை நிரை | - | கூ விளங் கனி | கனிச் சீர்கள் |
இவையெட்டும் உரிச்சீர் எனவும் பெறும். இவற்றுள் காய்ச்சீர்கள் வெண்சீர் எனவும், கனிச்சீர்கள் வஞ்சிச்சீர் எனவும் கூறப்பெறும்.
மூவசைச் சீர் எட்டின் இறுதியிலும் நேர், நிரை அசை சேர, வரும் பதினாறும் நாலசைச் சீர் எனக் கூறப்படும்.
அசை | - | வாய்பாடு |
நேர் நேர் நேர் நேர் | - | தே மாந் தண் பூ |
நிரை நேர் நேர் நேர் | - | புளி மாந் தண் பூ |
நிரை நிரை நேர் நேர் | - | கரு விளந் தண் பூ |
நேர் நிரை நேர் நேர் | - | கூ விளந் தண் பூ |
நேர் நேர் நிரை நேர் | - | தே மா நறும் பூ |
நிரை நேர் நிரை நேர் | - | புளி மா நறும் பூ |
நிரை நிரை நிரை நேர் | - | கரு விள நறும் பூ |
நேர் நிரை நிரை நேர் | - | கூ விள நறும் பூ |
நேர் நேர் நேர் நிரை | - | தே மாந் தண் நிழல் |
நிரை நேர் நேர் நிரை | - | புளி மாந் தண் நிழல் |
நிரை நிரை நேர் நிரை | - | கரு விளந் தண் நிழல் |
நேர் நிரை நேர் நிரை | - | கூ விளந் தண் நிழல் |
நேர் நேர் நிரை நிரை | - | தே மா நறு நிழல் |
நிரை நேர் நிரை நிரை | - | புளி மா நறு நிழல் |
நிரை நிரை நிரை நிரை | - | கரு விள நறு நிழல் |
நேர் நிரை நிரை நிரை | - | கூ விள நறு நிழல் |
குறிப்பு : ஓரசை, ஈரசை, மூவசை, நாலசைச் சீர்களுக்கான அசைகளும், வாய்பாட்டுக்கான அசைகளும் பொருந்தி வருவதைக் காண்க.
சீர்கள் பொருத்தமாக இயைந்து வருவது தளை எனப்படும். இத்தளைகள் ஏழு வகைப்படும். அவை,
- நேரொன்றாசிரியத்தளை
- நிரையொன்றாசிரியத்தளை
- இயற்சீர்வெண்டளை
- வெண்சீர் வெண்டளை
- கலித் தளை
- ஒன்றிய வஞ்சித்தளை
- ஒன்றாதவஞ்சித்தளை
என்பனவாகும்.
தளைகள் பற்றிய சிறு விளக்கத்தை இங்குக் காண்போம்.
தேமா, புளிமா என்னும் மாச்சீர்கள் நின்ற சீர்களாய் நிற்க, அவற்றின் முன் வரும் சீரின் முதலசை நேரசையாக வந்து ஒன்றுவது நேரொன்றாசிரியத்தளை ஆகும்.
கூவிளம், கருவிளம் என்னும் விளச்சீர்கள் நின்றசீர்களாய் நிற்க, அவற்றின் முன் வரும் சீரின் முதல் அசை, நிரையசையாக வந்து ஒன்றுவது, நிரையொன்றாசிரியத்தளை எனப்படும்.
ஈரசைச்சீர்களில், மாச்சீர்களுக்கு முன் நிரையசையும், விளச்சீர்களுக்குமுன், நேரசையும் வருமாயின், அவை, இயற்சீர் வெண்டளையாகும்.
மூவகைச்சீர்களுள், காய் என முடியும் சீர்களுக்கு முன் நேர் அசை வந்து ஒன்றுவது வெண்சீர் வெண்டளை ஆகும்.
மூவகைச்சீர்களில், காய் என முடியும் சீர்களுக்கு முன், நிரை வந்து, ஒன்றாமல் இயைவது கலித்தளை ஆகும்.
கனிச்சீர்முன், நிரை வந்து ஒன்றுவது ஒன்றிய வஞ்சித்தளை எனப்படும்.
கனிச்சீர்முன் நேர் வந்து ஒன்றாமையால் அது ஒன்றாத வஞ்சித் தளையாகும்.
சீர்கள் பல, அடுத்து வருவது அடி எனப்படும். அஃது ஐந்து வகைப்படும். அவை,
- குறளடி
- சிந்தடி
- நேரடி (அளவடி)
- நெடிலடி
- கழிநெடிலடி
என்பனவாம்.
சீர் | அடி |
---|---|
இரண்டு சீர்களை உடையது | குறளடி |
மூன்று சீர்களை உடையது | சிந்தடி |
நான்கு சீர்களை உடையது | நேரடி (அளவடி என்றும் பெயர்) |
ஐந்து சீர்களை உடையது | நெடிலடி |
ஆறுசீர்களை உடையது | கழிநெடிலடி |
மரத்தில் நீயும் ஏறிடுவாய்
மாங்காய் தன்னைப் பறித்திடுவாய்
உரத்த குரலில் தமிழ்ப்பாட்டை
உலகம் உணர உரைத்திடுவாய்
மரத்/தில் | நீ/யும் | ஏ/றிடு/வாய் | |
நிரை / நேர் புளிமா |
நேர் / நேர் தேமா |
நேர் / நிரை / நேர் கூவிளங்காய் |
|
மாங் / காய் நேர் / நேர் தேமா |
தன் / னைப் நேர் / நேர் தேமா |
பறித் / திடு / வாய் நிரை / நிரை / நேர் கருவிளங்காய் |
|
உரத் / த நிரை / நேர் புளிமா |
குர / லில் நிரை / நேர் புளிமா |
தமிழ்ப் / பாட் / டை நிரை / நேர் / நேர் புளிமாங்காய் |
|
உல / கம் நிரை / நேர் புளிமா |
உண / ர நிரை / நேர் புளிமா |
உரைத் / திடு / வாய் நிரை / நிரை / நேர் கருவிளங்காய் |
பல அடிகளிலோ, பல சீர்களிலோ, எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது தொடை எனப்படும். “தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்” என்பது நம்முன்னோர் மொழி.
அவ்வளவு வளமானது நம் செய்யுளியல். ஆனால், நாம் தொடைகள் சிலவற்றைப் பற்றி மட்டும் ஈண்டுக் காண்போம்.
வரிசை எண். | தொடை |
---|---|
1. | மோனைத்தொடை |
2. | எதுகைத்தொடை |
3. | முரண் தொடை |
4. | இயைபுத்தொடை |
5. | அளபெடைத்தொடை |
ஐந்து வகையான முதற் தொடைகளைத் தழுவி, எட்டு வகையான உறழ்ச்சித் தொடைகள் தோன்றும். எனவே, தொடைகள் 5 x 8 = 40 ஆகும். இவற்றுடன் இரட்டைத் தொடை, அந்தாதித் தொடை, செந்தொடை இம்மூன்றையும் சேர்க்க, தொடைகளின் மொத்த எண்ணிக்கை 43 ஆகும்.
முதல் எழுத்து ஒன்றேபோல் வரத்தொடுப்பது மோனைத் தொடை எனப்படும்.
செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. |
இக்குறட்பாவில், ஓரடியின் முதற்சீரில் நின்ற முதல் எழுத்து (செ), அவ்வடியின் ஏனைய சீர்கள் பலவற்றுள் முதலில் வந்துள்ளது.
அந்த முதல் எழுத்துக்கு இன எழுத்து வந்தாலும் அதுவும் மோனை எனப்படும். அதனை இணைமோனை என்பர்.
1. | அ, ஆ | ஐ, ஔ |
2. | இ, ஈ | எ, ஏ |
3. | உ, ஊ | ஒ, ஓ |
1. | ஞ, ந |
2. | ம, வ |
3. | த, ச |
இவையும் ஒன்றுக்கு ஒன்று மோனையாக வரும்.
மோனை, எட்டு வகைப்படும். அவை,
- அடிமோனை
- இணைமோனை
- பொழிப்பு மோனை
- ஒரூஉ மோனை
- கூழை மோனை
- மேற்கதுவாய் மோனை
- கீழ்க்கதுவாய் மோனை
- முற்றுமோனை
ஒரு செய்யுளில் உள்ள அடிகளிலும், சீர்களிலும் முதல் எழுத்து அளவொத்திருக்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத் தொடையாகும். இதுவும் எட்டு வகைப்படும். எ.கா.
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். ” ! குறள்: 03) |
அடிதோறும், முதற்சீர் முரண்படத் தொடுப்பது அடிமுரண் தொடையாம்.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். |
இக் குறட்பாவில், முதலடியில் இன்பம் எனவும் இரண்டாம் அடியில் துன்பம் எனவும் முரண்பட்ட சொற்கள் வந்துள்ளன. இவ்வாறு வருவது முரண்தொடை.
அடிதோறும், இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுப்பது இயைபுத் தொடை.
செந்தமிழ் நாடென்னும் போதினிலே – இன்பத் |
தேன்வந்து பாயுது காதினிலே ! – எங்கள் |
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு |
சக்தி பிறக்குது மூச்சினிலே ! |
இப்பாடல் அடிகளில் இறுதிச்சீர்கள், போதினிலே, காதினிலே, பேச்சினிலே, மூச்சினிலே என ஒன்றிவந்துள்ளதால் இஃது அடிஇயைபுத் தொடை.
அடிதோறும், முதல் சீர் அளபெடுத்து வருவது, அளபெடைத் தொடையாகும்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. |
இக்குறட்பாவில், கெடுப்பதூஉம், எடுப்பதூஉம் என, இரண்டடிகளிலும் அளபெடுத்து வந்துள்ளமையால் இஃது அளபெடைத் தொடை.
கவிதையைச் செய்யுள், யாப்பு, பா, பாட்டு எனப் பல பெயர்களால் குறிப்பர். உரைநடையில் கையாளப்படும் சொற்களுக்கும் கவிதையில் கையாளப்படும் சொற்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. ஆயினும், அச்சொற்களைக் கையாளும் முறையில் தான் வேறுபாடுகள் உள்ளன.
செய்யுளில் சொற்கள் இடத்திற்கு ஏற்றவாறும் சூழ்நிலைக்கு ஏற்றவாறும், உணர்ச்சிக்கு ஏற்றவாறும், சுவைக்கு ஏற்றவாறும் அமைந்து செய்யுளைச் சிறக்கச் செய்கின்றன. செய்யுளுக்குக் கருத்து, உணர்ச்சி, கற்பனை, அழகிய வடிவம் ஆகிய நான்கும் இன்றியமையாதவை.
நரம்பு, தோல், தசை, எலும்பு, கொழுப்பு, குருதி முதலியவற்றால் உருவான உடலை யாக்கை என வழங்குகிறோம். அதுபோல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறு உறுப்புகளால் உருவாக்கப்படுவது ‘செய்யுள்’ என வழங்குகிறோம்.
யாப்பு, செய்யுள், பாட்டு, தூக்கு, கவி என்பவை ‘பா’ என்னும் ஒரே பொருளை உணர்த்தும் சொற்களாகும். ‘பா’ நான்கு வகைப்படும். அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பனவாகும்.
வெண்பா என்பதற்குத் தூய்மையான ‘பா’ எனப் பொருள்படும். பாக்களுள் மிகுதியான இலக்கணக் கட்டுப்பாட்டைக் கொண்டது வெண்பா ஆகும். பாக்களுள் இதுவே முதன்மையானதாகும். ஒரு கருத்தை, ஒருவர் தன் முன்னே உள்ள மற்றொருவருக்கு எடுத்துச் செப்பும் (சொல்லும்) வகையில் வெண்பாக்கள் இயற்றப்பட்டுள்ளன. எனவே, இதன் ஓசை செப்பலோசையாகும். வெண்பா ஐந்து வகைப்படும். அவை, குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்பனவாகும்.
- செய்யுளில் ஈற்றடி முச்சீராகவும், மற்ற அடிகள் நான்கு சீராக இருக்கும்.
- சீர்களுள் இயற்சீர், வெண்சீர் பெற்று வரும்.
- தளைகளுள் இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் மட்டுமே பெற்று வரும். பிற தளைகள் வாரா.
- செய்யுளின் இறுதிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளுள் ஏதேனும் ஒன்றைப் பெற்று முடியும்.
- செப்பலோசை பெற்று வரும்.
- செய்யுளின் அடிகள் 2 முதல் 12 அடிகள் வரை வரும்.
- ஒரு விகற்பமாகவோ பல விகற்பமாகவோ வரும்.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு) எல்லார்க்கும் பெய்யும் மழை - நேரிசை வெண்பா |
ஆசிரியப்பா அகவற்பா எனவும் அழைப்பர். மயில் அகவுவதைப் போல் பாடலின் ஓசை அமைவதால், அகவற்பா என அழைக்கப்படுகிறது. ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என்பனவாகும்.
- நான்கு சீர் கொண்ட அளவடிகளைப் பெற்று வரும்.
- மாச்சீர் விளச்சீர் பெற்று வரும்.
- வஞ்சியுரிச்சீர்கள் வாரா
- ஆசிரியத் தளையும் பிறதளையும் கலந்து வரும்
- மூன்று அடி முதல் பல அடி வரை வரும்
- அகவலோசை பெற்று வரும்
- ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடியும்.
- நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா
பாரி பாரி என்று பலஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனு மல்லன
மாரியும் உண்டீண் டுலகு புரப்பதுவே - நேரிசை ஆசிரியப்பா
- கலிப்பா துள்ளல் ஓசையைப் பெற்று வரும்
- நான்கு சீர் உடைய, நான்கு அடி முதல் பல அடி வரை அமையப்பெறும்
- வெண்சீர் மிகுதியாய் வரும்
- மாச்சீரும், கூவிளங்கனியும், கருவிளங்கனியும் பெறாது
- பிறசீர்கள் சிறுபான்மை கலந்து வரும்
- தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், சுரிதகம், தனிச்சொல் என்னும் ஆறு உறுப்புகளுள் ஏதேனும் ஒன்றைப் பெற்று வரும்.
- ஒத்தாழிசைக் கலிப்பா, கொச்சைக் கலிப்பா, வெண் கலிப்பா, உறழ் கலிப்பா எனக் கலிப்பா நான்கு வகைப்படும்.
அரிதாய் அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய் பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலின் புணர்ச்சியும் தரும் எனப்
பிரிவெண்ணில் பொருள்வயின் சென்ற நம் காதலர்
வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பலயான் கோள்இனி,
- வஞ்சிப்பா தூங்கலோசை உடையது.
- மூன்று அடி முதல் பல அடி வரை பாடப்படும்.
- கனிச்சீரும் பிற சீர்களும் வரும்.
- அடிகள் இருசீரும் முச்சீருமாய் அமையப் பெறும்.
- வஞ்சித்தளையும் பிற தளையும் வரப்பெறும்.
- வஞ்சிப்பா இருவகைப்படும். இரண்டு சீர்களைக் கொண்டது குறளடி வஞ்சிப்பா எனப்படும். மூன்று சீர்களை உடையது சிந்தடி வஞ்சிப்பா எனப்படும்.
- வஞ்சித் தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் என்பன வஞ்சிப்பாவின் இனங்களாகும்.
நானும்உனைப் போலேஇருந்
தேனேஒரு நாளில்என
உள்ளும்பொழு தென்றன்உள்ளம்
துள்ளும்களி கொள்ளும்