முகப்பு

3.4 அணி

அணி

‘அணி‘ என்னும் சொல்லுக்கு ‘அழகு‘ என்பது பொருள். பெண்கள் விரும்பி அணியும் அணிகலன்கள் அழகாய் அமைவதுடன், தம்மை அணிபவருக்கு மேலும் அழகு தருதலின் அப்பெயர் பெற்றன. அதுபோலச் செய்யுளில் வரும் சொல்லும் பொருளும் அழகுற நின்று, செய்யுளை மேலும் அழகுபெறச் செய்வதால், அவை, அணி என வழங்கப் பெறுகின்றன.

செய்யுளில் வரும் அணிகள் செய்யுளுக்கு அழகு தருவதோடு, செய்யுளைக் கற்போரையும் அழகுணர்ச்சி பெறச் செய்கின்றன.

அணி, சொல்லணி, பொருளணி என இருவகைப்படும். யமகம், மடக்கு முதலான அணிகள் சொல்லணியின்பாற்படும். உவமை, உருவகம் முதலான அணிகள் பொருளணியின் பாற்படும்.

அவ்வணிகள் சிலவற்றை விளக்கமாகக் காண்போம்.

ஒரு பொருளை மற்றொரு பொருளோடு ஒப்புமைப்படுத்திக் கூறுவது உவமையணி எனப்படும்.

உவமையணியில்,

  1. உவமை
  2. உவமேயம் (உவமிக்கப்படும் பொருள்)
  3. உவம உருபு
  4. இரண்டுக்கும் உரிய பொதுத்தன்மை

என்னும் நான்கு பகுதிகள் இருக்கும்.

எ.கா :

“பால்போலும் இன்சொல்” – இவ்வடியில் இன்சொல்லிற்கு ‘பால்’ உவமையாக்கப்பட்டுள்ளது. பால் – உவமை, இன்சொல் – உவமேயம், போலும் – உவமஉருபு, இனிமை – பொதுத்தன்மை.

உவமை அணி உவமை உவம உருபு உவமேயம் பொதுத்தன்மை
பால் போலும் இன்சொல் இனிமை

உவமானமும், உவமேயமும் தனித்தனியே நிற்க, அவற்றுக்கு இடையில், உவமஉருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி ஆகும். உவம உருபை நாமே எடுத்துக்காட்டிக் கூறுதல் வேண்டும்.

எ.கா :

புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை

வாய்மையாற் காணப் படும்.

இக்குறட்பாவில், உவம உருபு மறைந்துள்ளது. (அது போல)

எடுத்துக்காட்டு உவமையணி உவமை / உவமானம் உவமேயம் உவமேயம் (பொருள்)
புறந்தூய்மை நீரால் அமையும் மறைந்து உள்ளது அகந்தூய்மை வாய்மையால் காணப்படும் அமையும்

உலகத்தில் இல்லாத, நிகழாத, நிகழவியலாத பொருளை உவமையாக கூறுவது “இல்பொருள் உவமையணி”.

எ.கா :
  1. “இமயம் எழுந்து நடந்ததுபோல”
  2. “இருகை வேழத்து இராகவன் வந்தான்”

இத்தொடர்களுள், “இமயம் எழுந்து நடத்தல்”, “இருகை வேழம்” என்பன. இல்பொருள் என்பதை அறிக.

உவமானத்தையும், உவமேயத்தையும் வெவ்வேறாகக் கூறாமல், உவமானத்தின் தன்மையை உவமேயத்தில் ஏற்றிக் (உருவகப்படுத்திக்) கூறுவது உருவக அணி எனப்படும்.

எ.கா :

“மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலையூன்றி”

இப்பாடலடியில், மனம் தோணியாகவும் மதி ஊன்றுகோலாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளன.

உவமை, உவமிக்கப்படும் பொருள் இரண்டனுள், ஒன்றை உருவகம் செய்து, மற்றொன்றை உருவகம் செய்யாமல் விடுதல் ஏகதேச உருவக அணியாகும்.

எ.கா :

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீத்தார்

இறைவனடி சேரா தார்”.

பிறவி, பெருங்கடலாக உருவகம் செய்யப் பெற்றுள்ளது. இறைவனது அடி, யாதொன்றாகவும் உருவகம் செய்யப்படவில்லை. எனவே, இஃது ஏகதேச உருவகம் ஆயிற்று.

உள்ளதை உள்ளபடியே அழகுமிளிரக் கூறுவது இயல்பு நவிற்சியணி எனப்படும்.

எ.கா :

“தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே

துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி

அம்மா என்குது வெள்ளைப் பசு – உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி”

இப்பாடல் அடிகளில், தாய்ப்பசுவும், அதன் கன்றும் கொஞ்சி விளையாடுவதை இயல்பாகக் காட்டியுள்ளார் கவிமணி. எனவே, இவ்வாறு வருவன, இயல்புநவிற்சி அணியின் பாற்படும்.

ஒரு பொருளின் சிறப்பினை, வியப்பு உண்டாகுமாறு உயர்த்திக் கூறுவது உயர்வுநவிற்சி அணி எனப்படும்.

எ.கா :
  1. “விண்ணை இடிக்கும் தலை இமயம்”
  2. “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
  3. மந்திசிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”

இவைபோல்வன, உயர்வுநவிற்சிக்குச் சிறந்த சான்றுகளாகும்.

செய்யுளில், முதற்கண் இரு பொருள்களுக்கு ஒப்புமை கூறிப் பின்னர், ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் கூறுவது, வேற்றுமையணி எனப்படும்.

எ.கா :

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.

இக்குறட்பாவில் சுடுகின்ற தன்மையில் நாக்கும், தீயும் ஒரே தன்மையன என்று ஒன்றுபடுத்திக்கூறி, தீயினால் சுட்டது ஆறிவிடும். நாவினால் சுட்டது ஆறாது என வேற்றுமைப்படக் கூறப்பட்டுள்ளதால் இது வேற்றுமையணியாகும்.

ஒரு சொல்லையோ, சொற்றொடரையோ இரண்டு பொருள் தருமாறு கூறுவது இரட்டுறமொழிதல் அணி ஆகும்.

இதனைச் சிலேடையணி எனவும் கூறுவர். இது, செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச்சிலேடை என இரண்டு வகைப்படும்.

ஒரு சொல்லை, அப்படியே வைத்து இருபொருள் காண்பத செம்மொழிச்சிலேடை ஆகும்.

சொல்லைப் பிரித்து இருபொருள் காண்பது பிரிமொழிச் சிலேடை ஆகும்.

எ.கா :

“செய்யுட் கிடைமறிக்கும் சேர்பலகை யிட்டுமுட்டும்

ஐயமற மேற்றா ளடர்க்குமே – துய்யநிலை

தேடும் புகழ்சேர் திருமலைரா யன்வரையில்

ஆடும் கதவுநிக ராம்”

இப்பாடல், ஆடு, கதவு இரண்டனுக்கும் பொருந்துமாறு பாடப்பட்டுள்ளது.

செய் + உள் + கிடை

செய் + உட்கு + இடை

ஆள் + அடர்க்கும்

தாள் + அடர்க்கும்

பலகை, பல + கை – இவ்வாறு சொற்றொடர்கள் இருபொருள் படவரும்.

(இச்செய்யுளில் உள்ள, செய்யுட் கிடை மறிக்கும், பலகை, மேற்றாள் – ஆகிய சொற்கள் தனித்து நின்றும் பிரிந்து நின்றும் பொருள் தருவதால், இப்பாடல் செம்மொழிச்சிலேடை, பிரிமொழிச்சிலேடை இரண்டற்கும் பொருந்துகிறது.)

உவமானத்தைக்கூறி, அதன்மூலம் உவமேயத்தை உணர வைப்பது, பிறிதுமொழிதல் அணி ஆகும்.

எ.கா :

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.

ஒன்றன் வலிமையை அறிந்து செயல்படுதல் நன்றாம். வலிமை அறியாது செயல்படுதல் துன்பம் தரும் என்பதைச் சொல்லவந்த, வள்ளுவப் பெருந்தகை, மிகவும் எடை குறைவான மயிற்றோகை (பீலி)யாக இருந்தாலும், வண்டி எவ்வளவு கொள்ளுமோ, அவ்வளவே அதில் ஏற்றவேண்டும். மிகுதியாக ஏற்றினால் அவ்வண்டியின் அச்சுமுறிந்துவிடும் எனக் கூறுகிறார். இவ்வாறு, வருவது பிறிது மொழிதல் அணியாகும்.

ஒரு சொல்லையும், அதன் பொருளையும் நிரலாக நிறுத்தி வரிசையாக பொருள்கொள்வது நிரல்நிறை அணியாகும்.

எ.கா :

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

இல்வாழ்க்கையின் பண்பு எனப்படுவது அன்புகாட்டுவது. பயன் எனப்படுவது, அறம் செய்தல் என்பதாகும் என்பது இக்குறட்பாவின் கருத்தாகும்.

அதற்கேற்ப, அன்பும் அறனும் குறட்பாவின் முதல் அடியில் அமைந்துள்ளன. அடுத்த அடியில், அச்சொற்களோடு முறையாகப் பொருந்தும் வரிசைப்படி பண்பு, பயன் என்னும் சொற்கள் அமைந்துள்ளன. எனவே, இது, நிரல்நிரை அணி ஆகும்.

பாடல் அமைந்துள்ளமுறையில், நேர்நிரல்நிறை, எதிர்நிரல்நிறை என்றும் கூறுவர்.

புலவர் ஒருவர் தாம் கூறவந்த சிறப்புப் பொருளை வலியுறுத்த, உலகம் அறிந்த பொதுப்பொருளைக் கூறுவது வேற்றுப் பொருள் வைப்பு அணியாகும்.

“வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்

தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்

ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்

ஈனருக் குரைத்திடில் இடர தாகுமே”.

இப்பாடலில் குரங்குக்கு, தூக்கணங்குருவி அறிவுரை சொன்ன கதை வந்துள்ளது.

“ஞானமும், கல்வியும், நவின்றநூல்களும், ஈனருக்கு உரைத்திடில் இடர் ஆகுமே” என்னும் சிறப்புப் பொருளை வலியுறுத்த, “வானரம் (குரங்கு) மழைதனில் நனையத் தூக்கணம் (தூக்கணங்குருவி) தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்ததே” என்னும் உலகமறிந்த கதை கூறப்பட்டுள்ளது. இவ்வாறு வருவது வேற்றுப்பொருள்வைப்பு அணி ஆகும்.

இயல்பாக நிகழும் ஒரு நிகழ்ச்சியின் மீது, புலவர் தம் குறிப்பை ஏற்றி அழகுறப் பாடுவது, தற்குறிப்பேற்ற அணியாகும்.

“போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

வாரல் என்ப போல் மறித்துக் கைகாட்ட” – சிலப்பதிகாரம்

பாண்டியநாட்டுக் கோபுரத்தின் மேலுள்ள கொடிகள் இயல்பாக ஆடுவதைக் கண்ட இளங்கோவடிகள், “கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு வராதீர்” எனக் கூறுவதுபோல் கொடி ஆடுவதாகத் தம் கருத்தை ஏற்றி உரைக்கிறார். இது தற்குறிப்பேற்ற அணியாம்.

ஒன்றைப் புகழ்வதுபோல் பழிப்பதும், பழிப்பதுபோல் புகழ்வதுமாகப் பாடுவது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.

எ.கா :

“பாரி பாரி என்று பலவேத்தி

ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டுஈண்டு உலகு புரப்பதுவே”

இப்பாடலில், பாரிவள்ளல் இகழப்படுவதுபோலத் தோன்றினும், மழையைப் போல் கொடுக்கும் வள்ளல். இது, இகழ்வது போலப் புகழ்தலின் பாற்படும்.

எ.கா :

“கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்”

இக்குறட்பாவில், கல்வி கல்லாதவர்கள், கற்றார்முன் ஒன்றைச் சொல்திருப்பின் மிகவும் நல்லவரே என்ற கருத்து வந்துள்ளது. இங்கு, “கல்லாதவர் மிகவும் நல்லவர்” எனப் புகழ்வது போலக் கூறி, அவர்களைப் பழித்துக் கூறப்பட்டுள்ளது. ஆதலால் இது புகழ்வதுபோலப் பழித்தல் ஆகும்.

இது மூன்று வகைப்படும். அவை,

அ. சொல்பின்வருநிலை

ஆ. பொருள்பின்வருநிலை

இ. சொற்பொருட்பின்வருநிலை

என்பனவாகும்.

• சொல்பின்வருநிலை

ஒரு செய்யுளில், ஓரிடத்தில் வந்த சொல் மீண்டும் பல முறை வந்து, வெவ்வேறு பொருள் தருமாயின் அது, சொல்பின்வருநிலை அணியாகும்.

எ.கா :

பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்

இக்குறட்பாவில் பொருள் எனும் சொல் பல முறை வந்து, செல்வம், பொருட்டு, மதிப்பு என வேறுவேறு பொருள் தருகின்றது. எனவே, இது சொல் பின்வருநிலை அணி ஆகும்.

• பொருள்பின்வருநிலை

சொற்கள் வேறுவேறாக வந்து பொருள் ஒன்றாக அமையுமாறு பாடப்படுவது பொருள்பின்வருநிலை அணி எனப்படும்.

எ.கா :

“அவிழ்ந்தன தோன்றி; அலர்ந்தன காயா;

நெகிழ்ந்தன நேர்முக முல்லை – மகிழ்ந்திதழ்

விண்டன கொன்றை; விரிந்தனகருவிளை

கொண்டன காந்தன் குலை”.

இப்பாடலில், அவிழ்ந்தன; அலர்ந்தன; நெகிழ்ந்தன; விண்டன; விரிந்தன; என வேறுவேறாக வந்துள்ள சொற்கள், மலர்ந்தன என்ற ஒரே பொருளைத் தந்துள்ளன; எனவே, இது பொருட்பின்வருநிலையணி ஆகும்.

• சொற்பொருட் பின்வருநிலையணி

ஒரு செய்யுளில் வந்தசொல்லே மீண்டும் மீண்டும் வந்து, ஒரே பொருளைத் தருவது சொற்பொருட்பின்வருநிலை அணி எனப்படும்.

நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய் நாடி வாய்ப்பச் செயல்

இக்குறட்பாவில் ‘நாடி’ என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்துள்ளது. இது “ஆராய்ந்து” என்கிற ஒரேபொருளையே தந்து நிற்கிறது. எனவே, இது சொற்பொருட்பின்வருநிலை அணி ஆகும்.