முகப்பு

3.2 புறத்திணை

புறத்திணை

ஒத்த அன்புடைய தலைவன் தலைவியால் மட்டும் அன்றி யாவராலும் துய்க்கப்பெற்று, பிறருக்கும் கூறப்படும் தன்மை வாய்ந்த பொருள் ‘புறப்பொருள்’ எனப்படும். அஃது அறமும் பொருளும், அவற்றின் நிலையின்மையும், வீடுபேறும் பற்றிக் கூறுவதாகும்.

இப்புறப்பொருள் 1. வெட்சித் திணை, 2. கரந்தைத் திணை, 3. வஞ்சித் திணை, 4. காஞ்சித் திணை, 5. நொச்சித் திணை, 6. உழிஞைத் திணை, 7. தும்பைத் திணை, 8. வாகைத் திணை, 9. பாடாண் திணை, 10. பொதுவியல் திணை, 11. கைக்கிளை, 12. பெருந்திணை எனப் பன்னிரண்டு திணைகளாக வகுக்கப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழர் மறத்திலும் அறம் கண்ட பாங்கினை இத்திணைகளால் அறியலாம். இனி, திணைகளின் விளக்கங்களைக் காண்போம்.

பண்டைக் காலத்தில், பகை நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஓர் அரசன், பகை நாட்டுப் பசுக்கள் போரில் இறந்துவிடாமல் தடுக்கத் தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்துவரச் செய்வான். அவ்வாறு பசுக்களைக் கவர்ந்துவரச் செல்லும் வீரர்கள் வெட்சிப் பூவை அணிந்து செல்வர். இது வெட்சித் திணை எனப்படும்.

வெட்சி சூடிய வீரர்கள் கவர்ந்து செல்லும் பசுக்கூட்டங்களை மீட்கும் பொருட்டுக் கரந்தைப் பூச்சூடிய வீரர்கள் போரிட்டு பசுக் கூட்டங்களை மீட்பது கரந்தைத் திணை எனப்படும்.

அரசன் ஒருவன், பகையரசனுடைய நாட்டைக் கைப்பற்ற நினைந்து வஞ்சிப்பூச்சூடி, அவன் மேல் போருக்குச் செல்லுவது வஞ்சித் திணை எனப்படும்..

மண்ணாசை கொண்டு போர் தொடுத்த பகைவர் படையைத் தன்னாட்டு எல்லைக்குள் புகாதவாறு காஞ்சிப் பூச்சூடிய வீரர்கள் எதிர் நின்று தடுப்பது காஞ்சித் திணை எனப்படும்.

உழிஞைப் பூச்சூடிய வீரர்கள் பகை அரசனின் மதிலை வளைத்துக் கொள்வது உழிஞைத் திணை எனப்படும்.

மதிலை வளைத்துக் கொண்ட பகைவர்கள் உள்ளே புகாதவாறு தடுத்துக்காக்க. நொச்சிப் பூச்சூடிய வீரர்கள் போர் புரிவது நொச்சித் திணை எனப்படும்.

பகைகொண்ட இரண்டு அரசர்கள் தத்தம் படையுடன் தும்பைப்பூ அணிந்து, எதிர்நின்று போர் புரிவது தும்பைத் திணை எனப்படும்.

போரில் வெற்றி பெற்ற அரசன் வாகைப்பூச்சூடி மகிழ்வது வாகைத் திணை எனப்படும்.

அரசனுடைய புகழ், கொடை, வலிமை, வீரம் முதலிய பண்புகளைப் புகழ்ந்து பாடுவது பாடான் திணை எனப்படும் (பாடு + ஆண் + திணை எனப் பிரிந்து, பாடப்படும் ஆண் மகனின் ஒழுகலாறுகளைப் புகழ்வது எனப் பொருள் தரும்).

இதுவரை கூறப்பட்ட புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவாக உள்ளனவும், அவற்றிற் கூறாது ஒழிந்தனவுமாகிய சில செய்திகளைத் தொகுத்துக் கூறுவதாகும்.

தலைவன் தலைவியருள் ஒருவரிடத்து மட்டுமே தோன்றுகின்ற ஒருதலைக் காதல், இஃது ஆண்பாற் கூற்றுக் கைக்கிளை, பெண்பாற் கூற்றுக் கைக்கிளை என இருவகைப்படும்.

பொருந்தாக் காதல், இது பெண்பாற் கூற்றுப் பெருந்திணை, இருபாற் கூற்றுப் பெருந்திணை என இருவகைப்படும்.

இத்தகைய புறப்பொருள் செய்திகளை, ‘ஐயனாரிதனார்’ என்னும் தண்டமிழ்ப் புலவர் யாத்த ‘புறப்பொருள் வெண்பா மாலை’ என்னும் இலக்கண நூலில் விரிவாகக் காணலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
  1. அகத்திணையின் வகைகள் யாவை?
  2. ஐவகை நிலங்களைப் பற்றி குறிப்பு வரைக.
  3. ஐந்திணைக்குரிய பெரும்பொழுது, சிறுபொழுதுகள் யாவை?
  4. மருதத்திணைக்குரிய கருப்பொருள்கள் யாவை?
  5. ஐந்திணைக்குரிய உரிப்பொருள்கள் யாவை?
  6. புறத்திணைகள் எத்தனை? அவை யாவை?
  7. வஞ்சித் திணை என்றால் என்ன?
  8. வாகைத் திணை என்றால் என்ன?
  9. தும்பைத் திணை என்றால் என்ன?
  10. பொதுவியல் திணை என்றால் என்ன?