தன் மதிப்பீடு : வினாக்கள் – I |
---|
|
TT02 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
4.2 மொழிவளத் தொடர்கள்
மொழிவளத் தொடர்கள்
கருத்தையும், உணர்வையும், கற்பனையையும் வெளியிடும் கருவி மொழி. இக்கருவி எதிர்காலத்தவருக்கும் பயன்படுமாறு இன்றைக்குப் பயன்படுத்துபவரால் வளப்படுத்தப்படுகிறது. இலக்கியங்கள் அவ்வளத்தினைப் பொதிந்துள்ள மொழிப் பெட்டகமாகத் திகழ்கிறது. அதனால் தான் மொழியைக் கற்பதற்கு இலக்கியங்களை வளமூலமாகக் கொள்கிறோம். வளமூலத்தில் இருந்து பெற்ற மொழிக் கூறுகள் அறிதல் என்னும் நிலையிலே நின்று விடாமல் பயன்பாட்டிற்கும் கொண்டு வரும்போது ஒருவருடைய மொழித்திறன், வளமும் பொலிவும் பெறுகிறது.
இணைத்தொடர்கள் என்பது தமிழ்மொழியில் இணையிணையாக அமையும் சில சொற்களைக் குறிக்கும். இணைச்சொற்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தினால் மொழிநடை சிறக்கும்; சொல்லப்படும் கருத்தும் திருத்தமாய் விளங்கும். நாம் செய்திகளையும் கருத்துகளையும் பிறரிடம் கூறும்பொழுது சுவைபடக் கூறுவதற்காக ஒரே பொருள் தரும் இரு சொற்களை இணைத்துப் பயன்படுத்துவது இணைச்சொற்கள் எனப்படும்.
இணைச்சொற்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை :
- நேரிணைச் சொற்கள்
- எதிரிணைச் சொற்கள்
- செறியிணைச் சொற்கள்
ஒரே பொருள் தரும் இரு சொற்கள் இணைந்து வருவது நேரிணைச் சொற்கள் எனப்படும். அவை பின்வருமாறு அமையும்.
- சீரும் சிறப்பும்
- பேரும் புகழும்
- ஈடு இணை
- உற்றார் உறவினர்
- நோய் நொடி
- குற்றங் குறை
- கூன் குருடு
- முக்கலும் முனங்கலும்
ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு சொற்கள் இணைந்து வருவது எதிரிணைச் சொற்கள் எனப்படும். அவை பின்வருமாறு அமையும்.
- அல்லும் பகலும்
- உயர்வு தாழ்வு
- அடியும் நுனியும்
- உள்ளும் புறமும்
- குறுக்கும் நெடுக்கும்
- உச்சிமுதல் உள்ளங்கால் வரை
- ஐயந்திரிபற
- இருளும் ஒளியும்
- கிழக்கும் மேற்கும்
- வடக்கும் தெற்கும்
ஒரு சொல்லின் பண்பு அல்லது செயலை வலுவூட்டும் விதமாக ஒத்த பொருளுடைய இரு சொற்கள் இணைந்து வருவது செறியிணைச் சொற்கள் எனப்படும். அச்சொற்கள் பின்வரும் இரு வழிகளில் அமையும்.
- செக்கச் செவேல்
- வெள்ளை வெளேர்
- பச்சைப் பசேல்
- நட்ட நடுவில்
- அழுதழுது
- நடந்து நடந்து
- கொஞ்சிக் கொஞ்சி
- பார்த்துப் பார்த்து
நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது உவமையணி. அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடர் ஆகும். இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன.
- அடியற்ற மரம்போல
- ஆலைவாய்க் கரும்பு போல
- இடியோசை கேட்ட நாகம் போல
- இலவு காத்த கிளியென
- உடுக்கை இழந்தவன் கைபோல
- உடும்பு பிடிபோல
- உப்பிருந்த பாண்டம் போல
- உமிக்குற்றிக் கை சலித்தாற் போல
- ஒருதாய் வயிற்று மக்களைப் போல
- காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தாற்போல
ஏதேனும் ஒரு சமூகச் சூழலில் ஒரு குறிப்பிட்ட கருத்தை உணர்த்துவதற்குத் துணையாக வரக்கூடிய (அல்லது பயன்படுத்தக் கூடிய) ஆழ்ந்த அறிவினைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் கூறும் பழமையான மொழி பழமொழி எனலாம். அவை கீழ்க்கண்டவாறு அமையும்.
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
- அளவுக்கு விஞ்சினால் அமுதமும் நஞ்சு
- ஆனைக்கும் அடி சறுக்குமன்றோ ?
- ஆனைக்கு ஒரு காலம் பூனைக் கொரு காலம்
- இஞ்சி லாபம் மஞ்சளில்
- இளங்கன்று பயமறியாது
- உப்பிட்டவரை உள்ளளவும் நினை
- உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா ?
- ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
- எருது நோய் – காக்கைக்குத் தெரியாது ?