TT02 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
4.4 வாக்கிய அமைப்புகள்
வாக்கிய அமைப்புகள்
சொற்கள் பல தொடர்ந்து நின்று ஒரு கருத்தைத் தெளிவாகத் தெரிவிப்பது வாக்கியம் எனப்படும். ஒரு வாக்கியத்தின் இன்றியமையாத உறுப்புகள் எழுவாய், பயனிலை, செயப்படுப்பொருள் ஆகியன.
வெண்ணிலா கவிதை எழுதினாள்.
வெண்ணிலா | - | எழுவாய் (கருத்து எழுகின்ற வாயிலாக விளங்குவதால் எழுவாய்) |
எழுதினாள் | - | பயனிலை (வாக்கியத்தின் செயலை விளக்குவதால் பயனிலை) |
கவிதை | - | செயப்படுப்பொருள் |
இவ்வாறு ஒரு வாக்கியத்தில் எழுவாய் முதலிலும, பயனிலை இறுதியிலும், செயப்படுப்பொருள் இடையிலும் வரும். எனினும் விரைவு, வெகுளி, அச்சம், மகிழ்ச்சி முதலான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாக்கியங்களில் இம்முறை மாறி வரும்.
வென்றான் மணி பந்தயத்தில்! | - | இவ்வாக்கியத்தில் பயனிலை முதலில் வருகிறது. (விரைவு) |
போ! போ! வெளியே இனியா! | - | இவ்வாக்கியத்தில் எழுவாய் இறுதியில் வந்துள்ளது. (வெகுளி) |
பையைப் பறிக்கொடுத்தாள் சீதா | - | இவ்வாக்கியத்தில் செயப்படுப்பொருள் முதலில் வந்துள்ளது. (அச்சம்) |
பரிசு பெற்றான் கண்ணன் | - | இவ்வாக்கியத்தில் செயப்படுபொருள் முதலில் வந்துள்ளது. (மகிழ்ச்சி) |
கருத்து முற்றுப் பெற்ற சொற்றொடர் வாக்கியம் எனப்படும். இவ்வாக்கியங்களைக் கருத்து அடிப்படையிலும் அமைப்பு அடிப்படையிலும் வினை அடிப்படையிலும் வகைப்படுத்தலாம்.
கருத்து வகை வாக்கியங்கள் நான்கு வகைப்படும். அவை:
- செய்தி வாக்கியம்
- கட்டளை வாக்கியம்
- வினா வாக்கியம்
- உணர்ச்சி வாக்கியம்
செய்தி வாக்கியம் என்பது, கூற வந்த செய்தியைத் தெளிவாகக் கூறுவதாகும்.
திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.
கட்டளைவாக்கியம் என்பது, முன்னால் நிற்பவரை ஒரு செயலைச் செய்ய ஏவுவதாகும்.
திருக்குறளைப் படி
வினா வாக்கியம் என்பது, ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமைவதாகும்.
திருக்குறளை எழுதியவர் யார்?
உணர்ச்சி வாக்கியம் என்பது, வியப்பு, அச்சம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைவதாகும்.
என்னே ! திருக்குறளின் பொருட் சிறப்பு.
வாக்கியங்களை அமைப்பு வகையில் மூன்று வகையாகப் பிரிப்பர். அவை,
- தனி வாக்கியம்
- தொடர் வாக்கியம்
- வினா வாக்கியம்
- கலவை வாக்கியம்
தனி வாக்கியம் என்பது, ஓர் எழுவாயோ ஒன்றுக்கு மேற்பட்டஎழுவாய்களோ வந்து ஒரு பயனிலையைக் கொண்டு முடிவதாகும்.
பாரி வந்தான்.
பாரியும் கபிலனும் வந்தனர்.
தொடர் வாக்கியம் என்பது, ஒன்றுக்கு மேற்பட்ட பயனிலைகளைப் பெற்றுவருவது ஆகும்.
தமிழரசி போட்டியில் பங்கேற்றாள்; வெற்றி
பெற்றாள்;
பரிசு பெற்றாள்.
கலவை வாக்கியம் என்பது, முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வருவது ஆகும்.
தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்று, அதன்வழி
நடந்து, வாழ்க்கையில்
முன்னேற அனைவரும் முயல வேண்டும்.
வாக்கியங்களில் வினைகள், முற்றாகவோ எச்சமாகவோ இடம்பெறுகின்றன. அவ்வினைகளின் அடிப்படையில் அவற்றைப் பெற்று வரும் வாக்கியங்களின் பெயர் அமைகின்றன. இவ்வாக்கியங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
- உடன்பாட்டு வினை / எதிர்மறை வினை வாக்கியங்கள்
- செய்வினை / செயப்பாட்டு வினை வாக்கியங்கள்
- தன்வினை / பிறவினை வாக்கியங்கள்
இவ்வகை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகள் உடன்பாட்டில் உள்ளனவா? எதிர்மறையில் உள்ளனவா? என்பதைக் கொண்டு இவ்வாக்கியங்கள் பெயரிடப்படுகின்றன.
உடன்பாட்டு வினை | - | காந்தியை அனைவரும் அறிவர். |
எதிர்மறை வினை | - | காந்தியடிகளை அறியாதார் இலர். |
இவ்வகை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகள் செய்வினைக்கு உரியனவா செயப்பாட்டுக்கு உரியனவா என்பதைக் கொண்டு இவ்வாக்கியங்கள் பெயர்பெறுகின்றன.
செய்வினை | - | பேகன் போர்வை அளித்தான். |
செயப்பாட்டுவினை | - | பேகனால் போர்வை அளிக்கப்பட்டது. |
இவ்வகை வாக்கியங்களில் இடம்பெறும் வினைகளை எழுவாயே செய்கிறதா அல்லது தான் வினையாற்றாமல் பிறரை அவ்வினை செய்யத் தூண்டுகிறதா என்பதைக் கொண்டு இவ்வாக்கியங்கள் பெயர் பெறுகின்றன.
தன் வினை | - | பாரி உண்டான் |
பிற வினை | - | பாரி உண்பித்தான் |
முதல் வாக்கியத்தில் பாரி என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.
இரண்டாம் வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.
ஒரு தொடரில் எழுவாய் முன்னும், பயனிலை இறுதியிலும் இருத்தல் வேண்டும். இம்முறை இன்றியமையாத சில இடங்களில் மாறி வரும். எழுவாய் அடைமொழி எழுவாய்க்கு முன்னும், பயனிலை அடைமொழி பயனிலைக்கு முன்னும் இருத்தல் வேண்டும்.
‘புதிய அறிவியல் விரைந்து பரவுகிறது’
இதில் அறிவியல் என்பது எழுவாய். புதிய என்பது எழுவாய்க்கு அமைந்த அடைமொழி. ‘பரவுகிறது‘ என்பது பயனிலை. ‘விரைந்து‘ என்பது பயனிலைக்கு அமைந்த அடைமொழியாகும்.
ஒவ்வொரு தொடரும் எழுவாய், பயனிலை ஆகியவற்றை உடையதாய் இருத்தல் வேண்டும். எழுவாய் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் இருக்கும்.
செங்கதிர் குழல் ஊதினான்
இதில் செங்கதிர் என்னும் எழுவாய் வெளிப்படையாக வந்துள்ளது
வேலைகள் செய்து வந்தேன்; சோறு தாருங்கள்
இதில் யான், நீங்கள் என்னும் எழுவாய்கள் வெளிப்படவில்லை.
எழுவாயும் பயனிலையும் திணை, பால், எண் முதலியவற்றால் ஒன்றுக்கொன்று பொருத்தமுற அமைதல் வேண்டும். பால் காட்டும் விகுதிபெறாத அஃறிணைப் பெயர்ச்சொற்கள் ஒருமை வினையோடும் பன்மை வினையோடும் முடியும்.
ஒரு தொடரிலுள்ள எழுவாய், பயனிலை ஆகியவற்றை அறிதலன்றி, ஏனைய சொற்களின் முடிபுகளை அறிதலும் இன்றியமையாகும். நீண்ட தொடர்களை எழுதும்போது சொல் முடிபை மாணவர் நோக்க பெரிதும் இடர்ப்படுவர். பெயரெச்ச வினையெச்சங்களின் முடிபும் வேற்றுமை உருபுகளின் முடிபும் இடைச் சொற்களின் முடிபும் அறிதல் வேண்டும்.
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தமக்கு வரும் துன்பத்தைப் போலக் கொண்டு பேணும் இரக்கமுடைமையே அறிவினால் ஆகும் பெரும்பயன்
- பிற -இடைச்சொல் – உயிர்களுக்கு என்னும் பெயரைச் சிறப்பித்தது.
- உயிர்களுக்கு – உருபேற்ற சொல் – வரும் என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது.
- வரும் – பெயரெச்சம் – துன்பத்தை என்னும் உருபேற்ற சொல்லோடு முடிந்தது.
- துன்பத்தை – உருபேற்ற சொல் – போல என்னும் இடைச்சொல்லோடு முடிந்தது
- போல – உவம உருபிடைச் சொல் – கொண்டு என்னும் வினையெச்சத்தோடு முடிந்தது.
- கொண்டு – வினையெச்சம் – பேணும் என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது.
- பேணும் – பெயரெச்சம் – இரக்கமுடைமையே என்னும் எழுவாயுடன் முடிந்தது.
- இரக்கமுடைமையே – எழுவாய் – அறிவினால் என்னும் பெயர்ச்சொல்லுடன் முடிந்தது.
- அறிவினால் - உருபு ஏற்ற பெயர்ச்சொல் – ஆகும் என்னும் பெயரெச்சத்துடன் முடிந்தது.
- ஆகும் – பெயரெச்சம் – பெரும்பயன் என்னும் சொல்லுடன் முடிந்தது.
- பெரும்பயன் – பெயர்ச்சொல்- பயனிலையாக வாக்கியத்தை முடித்து நின்றது.
இவ்வாறு ஒவ்வொரு வாக்கியத்திலும் உள்ள சொற்கள் ஒவ்வொன்றின் முடிவையும் அறிவதனால் பிழையற எழுதும் திறமை ஏற்படும்.
வினைமுற்றுச்சொல் பயனிலை ஆகும். பயனிலையுடன் யார் ? எது ? என்னும் வினாக்களை எழுப்பின் அவற்றிற்கு விடையாக வருவது எழுவாய். எழுவாயுடன் யாரை, எதை என்னும் வினாக்களைத் தொடுத்தால் அவற்றிற்கு விடையாக வருவது செயப்படுபொருள்.
வ. எண். | எழுவாய் | செயப்படுபொருள் | பயனிலை |
---|---|---|---|
1 | தமிழர்கள் | வாழ்வின் இலக்கணத்தை | அறிவார்கள் |
2 | கண்ணகி | சினங்கொண்டு மதுரையை | எரித்தாள் |
3 | வள்ளல்கள் | பழுத்த மரத்தைப் | போன்றவர்கள் |
4 | தாய்மொழி | கல்வியைக் கற்பதே | சிறந்தது |