TT02 அடிப்படைத் தமிழ் இலக்கணம்
4.5 மொழிப் பிழைகள்
மொழிப் பிழைகள்
அறிவியல் போக்கை மிகுதியாகக் கையாண்டு அறிவியலையும் ஆராயும் முறைகளையும் செம்மைப்படுத்திய கலைத்துறை மொழியியலேயாகும். மொழியின் இயலை ஆராயும் கலைக்கு மொழியியல் (Linguistics) என்பது பெயர். அதனை ஆராய்வோரை மொழியியலர் என்பர். பைலாலஜி (Philology) என்ற சொல் வழக்கிழந்து வருகிறது. மொழி என்று பிறந்ததோ அன்றே மொழியாராய்ச்சியும் பிறந்து விட்டது. அறிவியல் துறையாக, ஓர் ஆக்கத்துறையாக இன்றுதான் இது வளர்ந்து வருகிறது. கி.பி.19-ஆம் நூற்றாண்டில் தான் இன்றைய மொழியியல் நல்லதொரு அடிப்படையில் வளரத் தொடங்கியது எனலாம்.
திராவிட மொழிகளில் காணப்படும் மிகவும் பழமையான நூல்களுள் முதன்மையானது தொல்காப்பியமாகும். இது ஓர் இலக்கண நூலாகும். தமிழ் இலக்கியங்கள் இந்நூலை முதலாகக் கொண்டுள்ளன. திராவிட மொழிகளுள் இந்நூல் மிக முந்திய நூலாகக் கருதப்படுகிறது. எனவே, தமிழ் மொழியின் பழைமையே திராவிட மொழிகளின் பழைமையும் பெருமையும் கொண்டதாகும்.
தொல்காப்பியம் கி.மு. மூன்றாவது நூற்றாண்டில் தோன்றியதெனலாம். உலக மொழிகளில் காணப்படும் பிற முதல் நூல்களையெல்லாம் ஆராயின், இந்நூலின் போக்கும் அமைப்பும் அதில் காணப்படும் செய்திகளும் வேறு எந்த மொழிகளுக்கும் குறைந்தன இல்லை.
ஒரு மொழியின் அமைப்பினை ஆராய ஒலியியல் அறிவும் ஆராய்ச்சியும் மொழியாராய்ச்சிக்கு இன்றியமையாதன. எழுத்துக்களைப் பற்றிக் கூறப்புகுந்த தொல்காப்பியர் பிறப்பியல் என்று ஓர் இயலைத் தோற்றுவித்து அதன்கண் பல்வேறு எழுத்துக்களின் பிறப்பைப் பல்வேறு நூற்பாக்களில் குறிப்பிட்டுச் சொல்கிறார். இன்றைய ஒலியியலாளர்கள் கூறுமளவிற்குத் தொல்காப்பியத்தில் தெளிவு இல்லாமலிருந்த போதிலும் கூடப் பல்வேறு ஒலிகளின் பிறப்பைச் சிறந்த முறையில் கூறிச்சென்ற பெருமை தொல்காப்பியர்க்குண்டு.
ஒலிகளை அறிகுறிகளாக அமைத்துக் கொண்டு கருத்துக்களை உணர்த்துவது மொழியாகும். கருத்துக்களும் உலகிற்குப் பொதுவானவை. ஒலிகளுக்கும் கருத்துக்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் அறிகுறிகள் மொழிக்கு மொழி வேறுவேறாக உள்ளன. எனவேதான், உலகில் பலவகை மொழிகள் உள்ளன.
தெளிவற்ற குழப்பமான நிலையில் கதம்பமாக உள்ள கருத்துக்களுக்கும் ஒலிகளுக்கும் தெளிவும் ஒழுங்கும் தருவது மொழி ஆகும். மொழி இல்லையானால் கருத்துக்களின் வளர்ச்சி இல்லையெனலாம். தெளிவும் ஒழுங்கும் இல்லையாகும்.
மொழி பேச்சு மொழி, எழுத்துமொழி என இருவகைப்படும். பேச்சு மொழியில் உள்ள ஒலிகளாகிய அறிகுறிகளுக்கு எழுத்து வடிவில் அடையாளங்களமைத்து எழுத்துக்களெனவும் சொற்களெனவும் மக்கள் அழைக்கின்றனர்.
மொழியை ஆராய்வோர் மொழிக்குப் புறம்பான மக்களின் வரலாறு, நாகரிகம் முதலியவற்றை ஆராய்தலுமுண்டு. மொழியின் அகத்துறுப்புக்களான ஒலியியல், சொல்லமைப்பு, சொற்றொடரமைப்பு, சொற்பொருளியல் ஆகியவற்றை ஆராய்தலுமுண்டு. ஒலியியல் முதலியவற்றை ஆராய்தலே மொழியியலாகும்.
மொழியின் தோற்றமும் சொற்களின் பிறப்பும் பொருள் வளர்ச்சியும் பற்றிய ஆராய்ச்சியும் (Etymology) மொழியியலுக்கு ஓரளவு புறமானதாகவே கருதப்படுகிறது. ஆயின் சொல்லமைப்பு (Morphology) சொற்றொடரமைப்பு (Syntex) ஆகியவை இன்றியமையாதவையாகக் கருதப்படுகின்றன.
- எழுத்து மொழியை ஆராய்ந்து இலக்கியங்களை ஆய்ந்து அந்த மொழியின் எழுத்துக்களும் சொற்களும் சொற்றொடர்களும் இவ்வாறு உள்ளன என்று கூறும் இலக்கணம் அமைந்த நிலை முதல் நிலை.
- பழைய நூல்களை ஆய்ந்து அவற்றின் தொடர்களைத் திருத்தவும் விளக்கவும்கூடிய வகையில் மொழியின் அமைப்பு இன்னது என்று வகுத்த நிலை அடுத்ததாகும்.
- ஒரு மொழியை மட்டும் ஆராய்வதோடு நிற்காமல் அதனோடு தொடர்பு கொண்ட சில மொழிகளை ஆராய்ந்து ஒப்பிட்டு அவற்றின் பொதுத்தன்மைகளையும் சிறப்பியல்புகளையும் உணரும் ஒப்பியல்முறை அடுத்து வளர்ந்தது.
மொழிகளின் இலக்கணங்களை ஒப்பிட்டு ஆராய்ந்து ஒப்பியல் மொழி நூல்கள் எழுந்த நிலை இதுவாகும். இந்தியாவிற்கு வந்த மேலைநாட்டார் தம் மொழிகளோடு வடமொழியை ஒப்பிட்டுப் பல பொதுத்தன்மைகளைக் கண்டு வியந்தனர். அதுபோது தோன்றி வளர்ந்த ஒப்பியலாராய்ச்சியைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அறிஞர் பலர் பல புதிய உண்மைகளைக் கண்டு உலகிற்குணர்த்தினர்.
மொழியை ஆராய்ந்தவர்கள் எழுத்து மொழியையே இலக்கியம் முதலியவற்றில் கண்ட மொழியையே தம்தம் ஆராய்ச்சிக்கு உரியதாகக் கொண்டு பேச்சு மொழியைப் புறக்கணித்தார்கள். அதனால் விளங்கத்தக்க உண்மைகள் பல விளங்காமற் போயின. பேச்சு மொழியே உயிருள்ள மொழியாகும். எழுத்து மொழி கற்றவர்கள் சிலர் கூடி அமைத்துக் கொண்டதாகும். பேச்சு மொழி வாழும் மனிதனைப் போன்றது. எழுத்து மொழி அவனது படத்தைப் போன்றது.
மனிதனை ஆராயாமல் மனிதனின் படம் போன்று எழுத்து மொழியை ஆராய்ந்த காரணத்தால் தவறுகள் பல நேர்ந்தன. தமிழ் மொழியில் உயிர்மெய் என்பதைப் பிற்காலத்தார் ஓரெழுத்தாகக் கொண்டமைக்கு காரணம் அதுவே. Thick எனும் ஆங்கிலச் சொல்லில் (த் இ க்) எனும் மூன்றொலிகள் இருக்க அதை 5 எழுத்துச் சொல் எனக் கொள்ளும் தவறு நேர்கிறது.
பேச்சுத்தமிழ் | எழுத்துத்தமிழ் |
---|---|
பேச்சு மொழியை ஆராய்தல் எளிதன்று | எழுத்து மொழியை ஆராய்தல் எளிது |
பேச்சுமொழி செவிக்கு மட்டும் புலனாகி உடனே மறைந்து விடும் | இது கட்புலனாவது. யாவரும் எளிதில் எழுதிக் காக்கக் கூடியது |
செவிவழியாக இலக்கியம் நீடு வாழ்வதில்லை | எழுதப்படும் இலக்கியம் தலைமுறை தலைமுறையாகப் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்பதால் பெருமதிப்பும் செல்வாக்கும் பெறுகிறது. தவிர எழுத்து மொழிக்குத் துணையாக நிகண்டுகள், அகராதிகள் இலக்கணநூல்கள் முதலியன அமைந்து சிறப்புத் தேடித்தருகின்றன. |
பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் வேறுபாடு தோன்றும் இடங்களில் எழுத்து மொழியின் தீர்ப்பு வலிமைமிக்கதாக விளங்குகிறது. ஆகவே, மொழியாராய்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு எழுத்து மொழியே முன் வந்து துணை நிற்கிறது.
மொழியியல் வளர்ந்து முன்னேறிய பின்னரே அது போதாது என்றும் குறையுடையது என்றும் தெளிவு ஏற்படலாயிற்று ஆங்காங்கே மக்கள் பேசும் பேச்சுமொழியைப் பல கருவிகள் கொண்டு ஒலிப்பதிவு செய்தும் கேட்டுணர்ந்தும் ஆராயும் முறை பெருகுவதாயிற்று. அவற்றின் பயனாக இன்று மொழியியல் திட்ப நுட்பம் வாய்ந்த அறிவியல் துறையாக வளர்ந்து வருகிறது.
நாம் நமது எண்ணங்களைப் பேச்சின் மூலமும் எழுத்தின் மூலமும் வெளிப்படுத்துகின்றோம். அவ்வாறு வெளிப்படுத்தும்போது பேச்சிலும் எழுத்திலும் பல்வேறு பிழைகளைச் செய்கின்றோம். அப்பிழைகளை எழுத்துப்பிழை, சொற்பிழை, தொடர்பிழை, சந்திப்பிழை எனப் பலவாறாக வகைப்படுத்தலாம். முறையாகக் கற்றுக் கொள்ளாமையால் இப்பிழைகள் ஏற்படுகின்றன.
இவ்வகையான பிழைகள் ஏதுமின்றி எழுதுவதைத்தான் எழுத்தாற்றல் திறன் என்கின்றனர். தமிழ்மொழிக் கல்வியில் எழுதுதல் திறனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியையும், சுய சிந்தனையையும் பிழையின்றி எழுதும் திறன்பெற வேண்டுமென அனைவரும் விரும்புகின்றனர். எனவே, மேற்கண்ட பிழைகளை மாணவர்கள் செய்யா வண்ணம், இளம் வயதிலேயே உரியநேரத்தில், உரிய இடத்தில், உரிய முறையில் மொழியை ஆசிரியர் கற்பிக்கவேண்டும். இவ்வலகில் மாணவர்கள் செய்யும் பிழைகள் பல விளக்கப்பட்டுள்ளன.
சில எழுத்துகள் வரிவடிவத்தில் ஒரே மாதிரியாக இருப்பதாலும், சில எழுத்துகள் ஒலி வடிவத்தில் ஒரே மாதிரியாக உச்சரிக்கப்படுவதாலும் எழுதும்போது எழுத்துப்பிழைகள் தோன்றுகின்றன.
ஒரே மாதிரியான வடிவம் உள்ள சில எழுத்துகள் | ||||
அ – ஆ கு – ரு |
எ - ஏ க - சு |
ஒ – ஒ, ஔ கு – சூ – ஞ |
ன – ண மு – ழு |
னை – ணை ல - வ |
ஒரே மாதிரியாக ஒலிக்கும் சில எழுத்துகள் | ||||
ன – ண னை – ணை லை – ளை |
ல – ள லி – ளி லு – ளு |
ர – ற ரி – றி |
பி – பீ ய – யா |
ழ, ல, ள |
மேற்கண்டவாறு எழுத்துகள் ஒரே மாதிரியாக இருப்பதால், எழுதும்போது சரியான எழுத்தை எழுத இயலாமல் பிழைபட எழுதும்நிலை ஏற்படுகிறது. மேலும், ஒத்த ஒலிப்புடைய எழுத்துகளை எழுதும்போதும் இவ்வாறே பிழைகள் ஏற்படுகின்றன. எழுதும்போது ஓர் எழுத்திற்கு மாற்றாக வேறொரு எழுத்தை (ஒத்த வடிவுடைய) எழுதுவதால் பொருள் வேறு ஏற்படுகிறது.
பந்து என்பதை பத்து
அழுக்கு என்பதை அமுக்கு
ஐயா என்பதை ஜயா
எனப் பொருள் மாற்றம் ஏற்படுகிறது.
எழுத்துகளின் ஒலி வேறுபாட்டை அறிய நா நெகிழ், நா பிறழ் பயிற்சிகளை அளிக்கவேண்டும். ஒரே வகையான சொல் அல்லது எழுத்தை பல முறைக் கூறுமாறு செய்தல் நாநெகிழ் பயிற்சி எனப்படும். ஒத்த ஒலியுடைய வெவ்வேறு சொற்களை அடுத்தடுத்து வருமாறு உச்சரிக்கப் பயிற்சி அளிப்பது நா பிறழ் பயிற்சி எனப்படும்.
கையெழுத்துகள் தெளிவாகவும், செம்மையாகவும் அமைய வரியொற்றி எழுதும் பயிற்சியை அளித்தல் வேண்டும். நான்குவரி, இரண்டு வரி கோடுகள் கொண்ட குறிப்பேடுகளை இப்பயிற்சிக்கு பயன்படுத்தலாம்.
பார்த்து எழுதுதல் – பாடநூலில் உள்ள உரைப்பகுதிகளைப் பார்த்து எழுதிவரச் செய்யலாம். ஆசிரியர், கரும்பலகையில் எழுதியதை மாணவர்களைப் பார்த்து எழுதச் செய்யலாம்.
கேட்டு எழுதுதல் – ஆசிரியர் சொல்ல, அதை மாணவர்கள் உடனுக்குடன் கேட்டு எழுதவேண்டும். இப்பயிற்சில் கேட்டல் திறனும், நினைவாற்றல் திறனும், எழுதுதல் திறனும் வளரும்.
சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் ஏற்படும் எழுத்துப் பிழையும் தடுத்திடும்.
1. சொல்லின் முதல் எழுத்தைப் பிழையின்றி எழுதுதல்
பிழை | திருத்தம் | |
---|---|---|
லட்டு | இலட்டு | |
வுணவு | உணவு | |
ஆக்கம் | ஊக்கம் | |
வொட்டகம் | ஒட்டகம் | |
வோட்ட | ஓட்டு |
2. சொல்லின் இடையில் வரும் எழுத்தைப் பிழையின்றி எழுதுதல்
பிழை | திருத்தம் |
---|---|
கன்டான் | கண்டான் |
பூன்டி | பூண்டி |
வன்டி | வண்டி |
கண்று | கன்று |
வன்தான் | வந்தான் |
3. சொல்லின் இறுதியில் வரும் எழுத்தைப் பிழையின்றி எழுதுதல்
பிழை | திருத்தம் |
---|---|
மைசூர்பாக் | மைசூர்பாகு |
பீட்ரூட் | பீட்ரூட்டு |
பகவத்சிங் | பகவத்சிங்கு |
4. சொல்லிற்கு இடையில் இரண்டு வல்லொற்றுகளை சேர்த்து எழுதும் பிழையைத் தவிர்த்தல்
பிழை | திருத்தம் |
---|---|
பயிற்ச்சி | பயிற்சி |
விற்ப்பனை | விற்பனை |
ஆட்ச்சி | ஆட்சி |
கற்ப்பாள் | கற்பாள் |
முயற்ச்சி | முயற்சி |
நாம், பேச்சு வழக்கில் பல பிழையான சொற்களைப் பயன்படுத்துகிறோம். அவை கொச்சை சொற்கள், வழுச்சொற்கள், பிறமொழிச் சொற்கள் ஆகியனவாகும்.
கொச்சைச் சொற்கள் | திருந்திய வடிவம் |
---|---|
வெட்டிப்பேச்சு | வெற்றுப்பேச்சு |
வேண்டாம் | வேண்டா |
வலதுபக்கம் | வலப்பக்கம் |
இடதுபக்கம் | இடப்பக்கம் |
வெங்கலம் | வெண்கலம் |
மோர்ந்து | மோந்து |
சிகப்பு | சிவப்பு |
துளிர் | தளிர் |
வுடம்பு | உடம்பு |
வவுத்துவலி | வயிற்றுவலி |
நாம் பயன்படுத்தும் சொற்களில் எழுத்து மாறுபடும்போது, அவற்றின் பொருளும் மாறுபடும். எனவே, சொற்களை எழுதும்போது, எழுத்துப் பிழையின்றி எழுதவேண்டும்.
காலை (காலைப்பொழுது) | காளை (எருது) |
தால் (நாக்கு) | தாள் (பாதம்) |
வழி (பாதை) | வழி (பாதை) |
தழை (இலை) | தளை (கட்டு) |
எரி (தீ) | எறி (வீசு) |
கரி (அடுப்புக்கரி) | கறி (காய்கறி) |
திரை (அலை) | திறை (வரி) |
அல்லன், அல்லள், அல்லர், அல்ல, அன்று ஆகிய சொற்களைத் தவறாகப் பயன்படுத்துதல்
வ. எண் | பிழை | திருத்தம் |
---|---|---|
1. | நான் அவனல்ல | நான் அவனல்லன் |
2. | நான் அவளல்ல | நான் அவளல்லல் |
3. | என் நண்பர் அவரல்ல | என் நண்பர் அவரல்லர் |
4. | என் புத்தகம் அது அல்ல | என் புத்தகம் அது அன்று |
5. | அவை குதிரைகள் அன்று | அவை குதிரைகள் அல்ல |
- அல்ல என்னும் சொல்லை அஃறிணை பன்மைக்குப் பயன்படுத்தவேண்டும்
- அன்று என்னும் சொல்லை அஃறிணை ஒருமைக்குப் பயன்படுத்தவேண்டும்
- அல்லன் என்னும் சொல்லை உயர்திணை ஆண்பால் ஒருமைக்குப் பயன்படுத்தவேண்டும்
- அல்லள் என்னும் சொல்லை உயர்திணை பெண்பால் ஒருமைக்குப் பயன்படுத்தவேண்டும்
- அல்லர் என்னும் சொல்லை உயர்திணை பலர்பாலைக் குறிக்கப் பயன்படுத்தவேண்டும். ஒருவரை மரியாதை காரணமாக உயர்வாகச் சொல்லும்போதும் ‘அல்லர்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம்.
கள்’ விகுதியைத் தவறாகப் பயன்படுத்துதல்
வரிசை எண் | பிழை | திருத்தம் |
---|---|---|
1. | அவைகள் நமக்குப் பயன்படுகின்றன | அவை நமக்குப் பயன்படுகின்றன |
2. | மற்றவைகள் ஓடிவிட்டன | மற்றவை ஓடிவிட்டன |
- ‘அவை’ என்னும் சொல் பன்மையைக் குறிக்கும் சொல்லாகும். அதனுடன் ‘கள்’ என்னும் பன்மை விகுதியைச் சேர்த்து எழுதுதல் தவறாகும்.
- ‘மற்றவை’ என்னும் சொல்லும் பன்மையைக் குறிக்கும் சொல்லாகும். அதனுடன் ‘கள்’ என்னும் பன்மை விகுதியைச் சேர்த்து எழுதுதல் தவறாகும்.
ஒரு, ஓர் எண்ணடைகளைத் தவறாக எழுதுதல்
பிழை | திருத்தம் |
---|---|
ஒரு ஆலமரம் உள்ளது | ஓர் ஆலமரம் உள்ளது |
ஓர் பசு மேய்ந்தது | ஒரு பசு மேய்ந்தது |
- ‘ஒரு’ என்னும், எண் அடைமொழியை உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் பயன்படுத்தவேண்டும்.
- ‘ஓர்’ என்னும் எண் அடைமொழியை உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் பயன்படுத்தவேண்டும்.
ஒவ்வொரு என்னும் சொல்லைத் தவறாகப் பயன்படுத்துதல்
ஒவ்வொரு என்னும் சொல்லை, ஒருமையைக் குறிக்கும் சொல்லின்முன் பயன்படுத்த வேண்டும்.
‘ஒவ்வொரு சொல்லும் முக்கியமானது’ என எழுதவேண்டும்.
‘ஒவ்வொரு சொற்களும் முக்கியமானவை’ என எழுதுவது தவறானதாகும்.
நடைமுறையில் தவறாகப் பயன்படுத்தப்படும் சொற்களும் அவற்றின் திருத்தங்களும்.
வரிசை எண் | பிழை | திருத்தம் |
---|---|---|
1 | அருகாமை | அருகில் |
2 | முயற்சித்தான் | முயன்றான் |
3 | பந்தக்கால் | பந்தற்கால் |
4 | எந்தன் | என்றன் |
5 | உந்தன் | உன்றன் |
6 | நந்நீராட்டு | நன்னீராட்டு |
சொற்பிரிப்புத் தவறுகள்
வரிசை எண் | பிழை | திருத்தம் |
---|---|---|
1 | அவ் ஊர் | அவ்வூர் |
2 | வந்த உடன் | வந்தவுடன் |
3 | வீட்டில் இருந்து | வீட்டிலிருந்து |
4 | அவர்கள் இடம் | அவர்களிடம் |
5 | வர அழைத்தான் | வரவழைத்தான் |
6 | வெளி ஏறினார் | வெளியேறினார் |
7 | சொற் கோவை | சொற்கோவை |
8 | தெரிந்து கொள்க | தெரிந்துகொள்க |
9 | வந்து விட்டான் | வந்துவிட்டான் |
10 | மிகுதியாகும் ஆனால் | மிகுதியாகுமானால் |
11 | பலாச் செடி | பலாச்செடி |
12 | கட்டளை இட்டான் | கட்டளையிட்டான் |
13 | திரு நீலகண்டர் | திருநீலகண்டர் |
நாம் பயன்படுத்தும் தொடர்களில் பல்வேறு பிழைகள் தோன்றுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்குக் காண்போம்.
வரிசை எண் | பிழை | திருத்தம் |
---|---|---|
1 | ஆண்டுகள் சென்றது – தவறு ஆண்டுகள் சென்றன – திருத்தம் |
ஆண்டுகள் என்னும் சொல் பன்மையை உணர்த்துகிறது. அதற்கேற்ப சென்றன என்னும் பன்மைப் பயனிலையைப் பயன்படுத்தவேண்டும் |
2 | வண்டிகள் ஓடாது – தவறு வண்டிகள் ஓடா – திருத்தம் |
வண்டிகள் என்னும் சொல் பன்மையை உணர்த்துகிறது. அதற்கேற்ப ஓடா என்னும் பன்மைப் பயனிலையைப் பயன்படுத்தவேண்டும் |
3 | வருவதும் போவதும் கிடையாது – தவறு வருவதும் போவதும் கிடையா – திருத்தம் |
வருவது ஒரு செயல், போவது ஒரு செயல். எனவே, இவை பன்மையாகும். அதற்கேற்ப கிடையா என்னும் பன்மைப் பயனிலையைப் பயன்படுத்தவேண்டும். |
4 | அது நம்மிடம் உள – தவறு அது நம்மிடம் உளது – திருத்தம் |
அது - என்பது ஒருமையைக் குறிக்கும் சொல். எனவே, உளது என்னும் ஒருமைப் பயனிலையைப் பயன்படுத்தவேண்டும் |
5 | அவை இங்கே உளது – தவறு அவை இங்கே உள – திருத்தம் |
அவை – என்பது பன்மையைக் குறிக்கிறது. எனவே, அதற்கேற்ப உள என்னும் பன்மைப் பயனிலையைப் பயன்படுத்தவேண்டும் |
6 | இது எல்லாம் – தவறு இவை எல்லாம் – திருத்தம் |
இது – என்பது ஒருமை. எல்லாம் என்பது பன்மை. எனவே, எல்லாம் என்னும் பன்மைப் பயனிலைக்கு ஏற்ப இவை / அவை என்னும் எழுவாயைப் பயன்படுத்தவேண்டும். |
7 | நாயோ அல்லது பூனையோ வந்தது – தவறு நாயோ பூனையோ வந்தது – திருத்தம் |
நாய் + ஓ = நாயோ – இதில் ஐயத்தை உணர்த்தும் ஓகார இடைச்சொல் வந்ததுள்ளது. ஐயப் பொருளை உணர்த்தும் இடத்தில் அல்லது என்னும் மற்றொரு சொல்லைப் பயன்படுத்தவேண்டா. |
8 | மக்கள் கிடையாது – தவறு மக்கள் இல்லை – திருத்தம் |
கிடையாது – என்னும் சொல் அஃறிணைப் பொருட்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும். எ.கா. கடையில் மிளகு கிடையாது எனக் கூறுவர். கடையில் ஆள் கிடையாது எனக் கூறுதல் கூடாது. கடையில் ஆள் இல்லை என்றே கூறுவர். எனவே, கிடையாது என்னும் சொல்லிற்குப் பதிலாக இல்லை என்னும் சொல் பயன்படுத்தவேண்டும் |
9 | மதுரை என்ற நகரம் – தவறு மதுரை என்னும் நகரம் – திருத்தம் |
மதுரை – என்னும் ஊர் தற்காலத்திலும் இருந்து வருகிறது. எனவே, ‘என்னும்’ என்னும் நிகழ்காலத்தைக் குறிக்கும் சொல்லைப் பயன்படுத்தவேண்டும். ‘என்ற’ என்னும் சொல் இறந்த காலத்தைக் குறிக்கும் சொல்லாகும். |
10 | படத்தை இங்கே மாட்டியது யார் ? – தவறு படத்தை இங்கே மாட்டியவர் யார் ? – திருத்தம் |
மாட்டியது – என்னும் சொல் அஃறிணையைக் குறிக்கும் சொல்லாகும். ‘மாட்டியவர்’ என்பது உயர்திணையைக் குறிக்கும் சொல்லாகும். ‘யார்’ என்னும் சொல்லும் உயர்திணையைக் குறிக்கும் வினாப் பயனிலையாகும். எனவே, பயனிலைக்கு ஏற்றவாறு ‘மாட்டியவர்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தவேண்டும் |
வரிசை எண் | பிழையும் திருத்தமும் | காரணம் |
---|---|---|
1 | அவர் எத்தனை களைப்பாய் இருந்தார் – தவறு அவர் எவ்வளவு களைப்பாய் இருந்தார் – திருத்தம் |
எத்தனை – என்னும் சொல் எண்ணிக்கையைக் குறிக்கும் சொல். ஒருவர் அடைந்த களைப்பை எண்ணமுடியாது. எனவே, எவ்வளவு என்னும் சொல்லைப் பயன்படுத்தவேண்டும் |
2 | போன ஞாயிற்றுக்கிழமை பேசும் போது கூறினார் – தவறு போன ஞாயிற்றுக்கிழமை பேசியபோது கூறினார் – திருத்தம் |
போன ஞாயிறு என்பது கடந்த காலத்தைக் குறிக்கிறது. பேசும் என்பது எதிர்காலத்தைக் குறிக்கிறது. எனவே, கடந்தகாலத்திற்குப் பொருத்தமான பேசிய என்னும் சொல்லைப் பயன்படுத்தவேண்டும் |
3 | நேரத்தைத் திரும்பப் பெறுவதெல்லாம் கிடையாது – தவறு நேரத்தைத் திரும்பப் பெறுவதென்பது கிடையாது – திருத்தம் |
நேரம் – என்னும் சொல் ஒருமையைக் குறிக்கிறது. எல்லாம் – என்னும் சொல் பன்மையைக் குறிக்கிறது. எனவே, ஒருமைக்கேற்ற ‘என்பது’ என்னும் சொல்லைப் பயன்படுத்தவேண்டும் |
4 | குளம், குட்டை துப்புரவு செய்யப்படுகிறது – தவறு குளம் குட்டை துப்புரவு செய்யப்படுகின்றன – திருத்தம் |
குளம், குட்டை – இரண்டையும் சேர்த்தால் பன்மையாகும். ‘செய்யப்படுகிறது’ என்பது ஒருமையை உணர்த்தும் பயனிலையாகும். எனவே, பன்மைக்கு ஏற்ற ‘செய்யப்படுகின்றன’ என்னும் பயனிலையைப் பயன்படுத்தவேண்டும் |
5 | இந்தியாவைக் காப்பது நமது கிராமங்கள் – தவறு இந்தியாவைக் காப்பவை நமது கிராமங்கள் – திருத்தம் |
காப்பது – என்பது ஒருமையைக் குறிக்கிறது. கிராமங்கள் – என்பது பன்மையைக் குறிக்கிறது. எனவே, பன்மைக்கு ஏற்றவாறு காப்பது என்னும் ஒருமையைக் ‘காப்பவை’ எனப் பன்மையாக மாற்றவேண்டும். |
6 | நல்ல சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு இராது – தவறு நல்ல சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இரா – திருத்தம் |
ஏற்றம், தாழ்வு – இரண்டையும் சேர்த்தால் பன்மையாகும். இராது என்பது ஒருமையைக் குறிக்கிறது. எனவே, பன்மைக்கு ஏற்ற ‘இரா’ என்னும் பயனிலையைப் பயன்படுத்தவேண்டும். |
7 | நல்ல சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு இராது – தவறு நல்ல சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இரா – திருத்தம் |
ஒருவன் என்னும் சொல் ஆண்பாலைக் குறிக்கிறது. எனவே, ஆண்பாலுக்கு ஏற்ற பயனிலையான ‘வேண்டியவனாய் இருக்கிறான்’ என்பதைப் பயன்படுத்தவேண்டும் |
8 | நகரத்தில் கொடிய நோய்கள் வருமானால், அது பரவுவதற்கு முன்னரே அதைத் தடுப்பதற்கு வழிகள் எடுத்துக்கொள்ளவேண்டும் – தவறு நகரத்தில் கொடிய நோய்கள் பரவுமானால், அவை பரவுவதற்கு முன்னரே அவற்றைத் தடுப்பதற்கு வழிகள் எடுத்துக்கொள்ளவேண்டும் – திருத்தம் |
நோய்கள் – என்னும் சொல் பன்மையைக் குறிக்கிறது. எனவே, அதற்கு ஏற்றவாறு ‘அது’ என்னும் ஒருமையை ‘அவை’ என்னும் பன்மையாவும், ‘அதை’ என்னும் ஒருமையை ‘அவற்றை’ என்னும் பன்மையாகவும் மாற்றவேண்டும் |
9 | மேரிகோல்டு என்னும் சிறியபெண் தன் தகப்பன் முன் வரவில்லை – தவறு மேரிகோல்டு என்னும் சிறுமி தன் தகப்பன் முன் வரவில்லை – திருத்தம் |
சிறிய பெண் – என்னும் சொல் தமிழ் மரபுக்குப் பொருந்தாதது. எனவே, சிறுமி என்னும் சொல்லைப் பயன்படுத்தவேண்டும் |
10 | முக்காற் பங்குக்கு மேற்பட்ட ஜெனத்தொகை கிராமங்களில் இருக்கின்றன – தவறு முக்காற் பங்குக்கு மேற்பட்ட ஜெனத்தொகை கிராமங்களில் இருக்கிறது – திருத்தம் |
ஜெனத்தொகை – என்பது கூட்டத்தைக் குறிக்கும் ஒருமைச் சொல்லாகும். எனவே, ‘இருக்கிறது’ என்னும் ஒருமைப் பயனிலையைப் பயன்படுத்த வேண்டும். |
இரண்டு சொற்கள் சேரும்போது அவற்றிற்கிடையே எழுத்துகள் தோன்றும், திரியும், கெடும். இயல்பாய் நிற்பதும் உண்டு. இதில் ஏற்படும் பிழைகள் சந்திப்பிழைகள் எனப்படும். சந்திப்பிழைகள் இருவகைப்படும். அவை ஒற்றுப்பிழை, பிற சந்திப்பிழை என்பனவாகும்.
விதிகளின் படி வல்லெழுத்து மிகும் இடங்கள் சில
வரிசை எண் | பிழையும் திருத்தமும் | காரணம் / விதி |
---|---|---|
1 | தீரா துன்பம் – தவறு தீராத் துன்பம் – திருத்தம் ஓடா குதிரை – தவறு ஓடாக்குதிரை – திருத்தம் |
தீராத என்னும் சொல் தீரா என ஈற்றெழுத்து கெட்டு (த) வந்துள்ளது. இது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப்படும். எனவே, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லொற்று (த்) மிகுந்தது. இவ்வாறே பிறவும் வந்ததுள்ளது. |
2 | வர சொன்னான் – தவறு வரச்சொன்னான் – திருத்தம் |
வர – என்னும் சொல் (ர் + அ = ர) ‘அ’ என்னும் எழுத்தை இறுதியாகக் கொண்ட வினைச் சொல்லாகும். இது ‘சொன்னான்’ என்னும் வினைச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ளது. எனவே, இது அகர ஈற்று வினையெச்சம் எனப்படும். அகர ஈற்று வினையெச்சத்தில் வல்லினம் மிகும் என்னும் விதிப்படி வல்லினம் (ச) மிகுந்துள்ளது. |
3 | ஓடி போனான் – தவறு ஓடிப்போனான் – திருத்தம் |
அவ்வாறே ஓடி + போனான் என்பதும் (ம் + இ = டி) இகர ஈற்று வினையெச்சமாகும். எனவே, இகர ஈற்று வினை எச்சத்திலும் வல்லினம் மிகும் என்னும் விதிப்படி வல்லினம் மிகுந்தது. |
4 | எட்டுதொகை – தவறு எட்டுத்தொகை – திருத்தம் பத்துபாட்டு – தவறு பத்துப்பாட்டு – திருத்தம் |
எட்டு – என்பது எண்ணுப் பெயராகும். மேலும், எட்டு என்பது வன்றொடர் குற்றியலுகரமாகும். இவ்விரு விதிகளின்படி வல்லினம் (த்) மிகுந்தது. இவ்வாறே பிறவும் வந்துள்ளது. |
5 | பாலை குடித்தான் – தவறு பாலைக்குடித்தான் – திருத்தம் நூலை படித்தான் – தவறு நூலைப்படித்தான் – திருத்தம் |
பால் + ஐ = பாலை என்பது இரண்டாம் வேற்றுமை (ஐ) விதியாகும். எனவே, இரண்டாம் வேற்றுமை விதியில் வல்லினம் மிகும் என்னும் விதிப்படி ‘க்’ மிகுந்தது. இவ்வாறே பிறவும் வந்துள்ளது. |
6 | நீர் குடம் – தவறு நீர்க்குடம் – திருத்தம் தயிர் பானை – தவறு தயிர்ப்பானை – திருத்தம் மோர் குடம் – தவறு மோர்க்குடம் – திருத்தம் |
நீரை உடைய குடம் என்னும் தொடரே நீர்க்குடம் எனத் தொகையாக வந்துள்ளது. இத்தொடரில் ஐ என்னும் உருபும் (ரை = ர் + ஐ) ‘உடைய’ பயனும் மறைந்துள்ளது. எனவே, இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும் எனும் விதிப்படி ‘க்’ மிகுந்தது. இவ்வாறே பிறவும் வந்துள்ளன. |
7 | மல்லிகை பூ – தவறு மல்லிகைப்பூ – திருத்தம் தை திங்கள் – தவறு தைத்திங்கள் – திருத்தம் கோடை காலம் – தவறு கோடைக்காலம் – திருத்தம் |
மல்லிகை என்பது மல்லிகையை மட்டும் குறிக்கும் சிறப்புப்பெயர். பூ என்பது அனைத்துப் பூவையும் குறிக்கும் பொதுப்பெயர். சிறப்புப்பெயரும் பொதுப்பெயரும் சேர்ந்து வருவதை இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும். எனவே, இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும் எனும் விதிப்படி ‘ப்’ மிகுந்தது. இவ்வாறே பிறவும் வந்துள்ளன. |
8 | தாமரை கண் – தவறு தாமரைக்கண் – திருத்தம் முத்து பல் – தவறு முத்துப்பல் – திருத்தம் |
தாமரை போன்ற கண் – என்பதே தாமரைக்கண் எனத் தொகையாக வந்துள்ளது. தாமரை, கண் இரு சொற்களுக்கு இடையில், ‘போல’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. இது உவமைத் தொகை எனப்படும். உவமைத்தொகையில் வல்லினம் மிகும் என்னும் விதிப்படி ‘க்’ மிகுந்துள்ளது. இவ்வாறே பிறவும் வந்துள்ளது. |
9 | நாய் குட்டி – தவறு நாய்க்குட்டி – திருத்தம் கிளி கூடு – தவறு கிளிக்கூடு – திருத்தம் |
நாயது குட்டி என்பதே நாய்க்குட்டி எனத் தொகையாக வந்துள்ளது. நாய் என்பது அஃறிணையாகும். இடையில் ‘அது’ என்னும் ஆறாம் வேற்றமை உருபு மறைந்து வந்துள்ளது. எனவே, ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணை என்பதால் ‘க்’ மிகுந்துள்ளது. இவ்வாறே பிறவும் வந்துள்ளது. |
10 | பட்டு சேலை – தவறு பட்டுச்சேலை – திருத்தம் வெள்ளி தட்டு – தவறு வெள்ளித்தட்டு – திருத்தம் மோர் குழம்பு – தவறு மோர்க்குழம்பு – திருத்தம் |
பட்டால் ஆன சேலை என்பதே பட்டுச்சேலை எனத் தொகையாக வந்துள்ளது. ‘ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் ‘ஆன’ என்னும் பயனும் மறைந்து வந்துள்ளது. இதனை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை என்பர். மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும் என்னும் விதிப்படி ‘ச்’ மிகுந்தது. இவ்வாறே பிறவும் வந்துள்ளன. |
11 | குழந்தை பால் – தவறு குழந்தைப்பால் – திருத்தம் கோழி தீனி – தவறு கோழித்தீனி – திருத்தம் |
குழந்தைக்குக் கொடுக்கும் பால் என்பதே குழந்தைப்பால் எனத் தொகையாக வந்துள்ளது. இதில் ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபும், ‘கொடுக்கும்’ என்னும் பயனிலையும் மறைந்து வந்துள்ளன. இதனை நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை எனக் கூறுவர். நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும் எனும் விதிப்படி ‘ப்’ மிகுந்தது. இவ்வாறே பிறவும் வந்துள்ளது. |
12 | தண்ணீர் பாம்பு – தவறு தண்ணீர்ப்பாம்பு – திருத்தம் மலை தோட்டம் – தவறு மலைத்தோட்டம் – திருத்தம் காட்டு கோழி – தவறு காட்டுக்கோழி – திருத்தம் |
காட்டின் கண் இருக்கும் கோழி – என்பதே காட்டுக்கோழி எனத் தொகையாக வந்துள்ளது. இதில் ‘கண்’ என்னும் ஏழாம் வேற்றமை உருபும், இருக்கும் என்னும் பயனிலையும் மறைந்து வந்துள்ளன. இதனை ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை எனக் கூறுவர். ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வல்லினம் மிகும் என்னும் விதிப்படி ‘க்’ மிகுந்துள்ளது. இவ்வாறே பிறவும் வந்துள்ளன. |
விதிகளின்படி வல்லெழுத்து மிகா இடங்கள் சில
வரிசை எண் | பிழையும் திருத்தமும் | காரணம் / விதி |
---|---|---|
1 | வேலைச் செய்தான் – தவறு வேலை செய்தான் – திருத்தம் சிலைச் செய்தான் – தவறு சிலை செய்தான் – திருத்தம் கதைப் படித்தான் – தவறு கதை படித்தான் – திருத்தம் |
வேலையைச் செய்தான் – என்பதே வேலை செய்தான் எனத் தொகையாக வந்துள்ளது. இதில் ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது. எனவே, இது இரண்டாம் வேற்றுமைத் தொகை எனப்படும். இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது என்னும் விதிப்படி வல்லொற்று ‘ச்’ மிகக் கூடாது. இவ்வாறே பிறவும் மிகாமல் வந்துள்ளன. |
2 | தம்பியோடுப் பேசினான் – தவறு தம்பியோடு பேசினான் – திருத்தம் அன்பொடுக் கொடுத்தான் – தவறு அன்பொடு கொடுத்தான் – திருத்தம் படையோடுச் சென்றான் – தவறு படையோடு சென்றான் – திருத்தம் |
ஒடு, ஓடு என்பன மூன்றாம் வேற்றுமை உருபுகளாகும். எனவே, மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் வல்லினம் மிகாது எனும் விதிப்படி வல்லினம் மிகவில்லை. இவ்வாறே பிறவும் வந்துள்ளன. |
3 | ஓடியக் குதிரை – தவறு ஓடிய குதிரை – திருத்தம் ஓடாதக் குதிரை – தவறு ஒடாத குதிரை – திருத்தம் நல்லக் குழந்தை – தவறு நல்ல குழந்தை – திருத்தம் பெரியப்பெட்டி – தவறு பெரிய பெட்டி – திருத்தம் |
தெரிநிலை மற்றும் குறிப்பு பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது. ஓடிய, ஓடாத என்பன தெரிநிலைப் பெயரெச்சங்களாகும். பெரிய, நல்ல என்பன குறிப்புப் பெயரெச்சங்களாகும். எனவே, இவற்றின் பின் வல்லினம் மிகவில்லை. |
4 | தம்பிப்போ – தவறு தம்பி போ – திருத்தம் வாழிப் பெரியீர் – தவறு வாழி பெரியீர் – திருத்தம் |
தம்பி, வாழி என்பன விளி வேற்றுமைகள். விளி வேற்றுமையின்படி வலி மிகாது எனும் விதிப்படி இவற்றின்பின் வலி மிகவில்லை. |
5 | அவனாப் போனான் – தவறு அவனா போனான் – திருத்தம் தம்பியோக் கேட்கிறான் – தவறு தம்பியோ கேட்கிறான் – திருத்தம் யாச் சிறியன – தவறு யா சிறியன – திருத்தம் |
ஆ, ஓ, யா என்னும் கேள்வி கேட்கும் வினாக்களுக்குப் பின் வல்லினம் மிகாது. |
6 | அவனேத்தான் கொடுத்தான் – தவறு அவனேதான் கொடுத்தான் – திருத்தம் தமயந்தியேச் சிறந்தவன் – தவறு தமயந்தியே சிறந்தவன் – திருத்தம் |
தேற்றம், பிரிநிலை ஆகிய பொருள்களில் வரும் ஏகாரங்களுக்குப் பின் வல்லினம் மிகாது |
7 | ஆதிப்பகவன் – தவறு ஆதி பகவன் – திருத்தம் தேசப்பக்தி – தவறு தேசபக்தி – திருத்தம் |
இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்து வரும் தொடர்களில் வல்லினம் மிகாது. |
8 | சுடுச்சோறு – தவறு சுடு சோறு – திருத்தம் குடித்தண்ணீர் – தவறு குடி தண்ணீர் – திருத்தம் ஊறுக்காய் – தவறு ஊறுகாய் – திருத்தம் |
சுடுசோறு = சுட்டசோறு, சுடுகின்ற சோறு, சுடும் சோறு ஆகிய மூன்று காலமும் இதில் மறைந்துள்ளன. இவ்வாறு மூன்று காலமும் மறைந்து வருவது வினைத்தொகை எனப்படும். வினைத்தொகையில் வல்லினம் மிகாது என்னும் விதிப்படி இதில் வல்லினம் மிகவில்லை. இவ்வாறே பிறவும் வந்துள்ளன. |
9 | பொன்னிக் கணவன் – தவறு பொன்னி கணவன் – திருத்தம் கண்ணகிக் கோவலன் – தவறு கண்ணகி கோவலன் – திருத்தம் |
பொன்னிக்குக் கணவன் என்பதே பொன்னி கணவன் எனத் தொகையாக வந்துள்ளது. இது ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமைத் தொகையாகும். நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையின் பின் வல்லினம் மிகாது என்னும் விதிப்படி வல்லினம் மிகவில்லை. இவ்வாறே பிறவும் வந்துள்ளது. |
10 | புலவர்க்குழு – தவறு புலவர் குழு – திருத்தம் கவிஞர்ச் சிறப்பு – தவறு கவிஞர் சிறப்பு - திருத்தம் |
புலவரது குழு என்பதே புலவர்குழு எனத் தொகையாக வந்துள்ளது. இதில் ‘அது’ என்னும் ஆறாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது. இது ஆறாம் வேற்றுமைத் தொகையாகும். ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலை மொழி உயர்திணையில் வல்லினம் மிகாது எனும் விதிப்படி இதில் வல்லினம் மிகவில்லை. இவ்வாறே பிறவும் வந்துள்ளது |
11 | கழுகுச் சிறியது – தவறு கழுகு சிறியது – திருத்தம் செய்துக்கொடு – தவறு செய்து கொடு – திருத்தம் |
கழுகு என்பது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம். செய்து என்பது இடைத்தொடர்க் குற்றியலுகரம். இவ்விரு குற்றியலுகரங்களின் பின் வல்லினம் மிகாது எனும் விதிப்படி, இவற்றின் பின் வல்லினம் மிகவில்லை. |