முகப்பு

4.3 ஒற்றுப் பிழை

ஒற்றுப் பிழை

தமிழில் எழுதும்போது ஒற்றுப்பிழை, எழுத்துப்பிழை, சொற்பிழை, தொடர்ப்பிழை, கருத்துப்பிழை, பிறமொழிக் கலப்புப் பிழை, குறியீட்டுப் பிழை, புணர்ச்சி, மரபு, யாப்பு எனப் பல வகைகளில் பிழை ஏற்படுகிறது. அவற்றில் ஒற்றுப்பிழை குறித்து இப்பகுதியில் காணலாம்.

தமிழில் எழுதும்போது ஒற்றுப்பிழைக்குக் காரணமாக அமைவது, வல்லின மெய்யாகிய க், ச், த், ப் என்னும் எழுத்துகள் ஆகும். இந்நான்கு வல்லினமெய் எங்கு இடம்பெற வேண்டும், எங்கு இடம்பெறக் கூடாது என்பதைக் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். படித்தவர்களாக இருந்தாலும் படிக்காதவர்களாக இருந்தாலும் இந்த வல்லினமெய்களை உரிய இடங்களில் பயன்படுத்துவதில் தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது. இவ்வல்லின மெய்கள் எங்கு மிகும்? எங்கு மிகாது? என்பதைப் புரிந்துகொண்டால் ஓரளவாவது பிழையைத் தவிர்க்கலாம்.

• வல்லினம் மிகுமிடம்
  1. அக்குதிரை, இக்கதவு, உப்பக்கம் (சுட்டெழுத்தின் பின்)
  2. அந்தக்காலம், இந்தப் பொருள், எந்தச் சொல் (சுட்டு, வினாச் சொற்களின் பின்)
  3. அங்குச் சென்றான், இங்குப் பார்த்தான், எங்குக் கண்டாய்? (இடப்பொருளின் பின்)
  4. அப்படிச் செய்தான், இப்படிச் சொல், எப்படிப் பேசினான்?
  5. அவ்வகைச் செடி, இவ்வகைப் பூக்கள், எவ்வகைத் துணி?
  6. இனிக் காண்போம், தனிச்சொல் (இனி, தனி)
  7. தடையின்றிச் செல், அந்த மாணவனன்றிப் பிற மாணவர் பேசக்கூடாது. (அன்றி, இன்றி)
  8. எனச் சொன்னான், மிகச்சிறிய செடி, நடுக்கடல், பொதுக்கூட்டம் (என, மிக, நடு, பொது)
  9. முழுப்பக்கம், திருக்குளம், புதுக்கண்ணாடி, அரைப்பங்கு, பாதிக் கிணறு (முழு, திரு, புது, அரை, பாதி)
  10. எட்டுத் தொகை, பத்துப்பாட்டு (எட்டு, பத்து ஆகிய எண்ணுப்பெயர்ச் சொற்களின் பின்)
  11. தீச்செயல், கைக்குழந்தை, பூப்பந்தல், நாக்குழறியது (ஓரெழுத்து ஒருமொழிச் சொற்களின் பின்)
  12. பாடாத் தேனீ, காணாக் காட்சி, தீராத் துன்பம் (ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்)
  13. தச்சுத் தொழில், உப்புக்கடை, கேட்டுக்கொள், தத்துக்கொடுத்தான், கற்றுக்கொடு, விறகுக்கட்டை (வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்களின் பின்)
  14. வரச்சொன்னாள், தேடப்போனார், மெல்லப் பேசினான் (அகர ஈற்று வினையெச்சம்)
  15. ஓடிப்போனான், பேசிப்பார்த்தார், சூடிக்கொண்டாள் (இகர ஈற்று வினையெச்சம்)
  16. ஒழுங்காய்ப் படி, மகிழ்ச்சியாய்ப் பேசினாள், போய்த் தேடு (ஆய், போய்)
  17. கதிரவனைப் பார்த்தேன், தொழிலைச் செய்தார், செய்யுளைப் படித்தேன் (இரண்டாம் வேற்றுமை உருபு‘ஐ‘ வெளிப்படையாக வரும்போது)
  18. வீட்டுக்குப் போ, அவனுக்குத் தெரியும், நாட்டுக்குத் தொண்டு செய் (நான்காம் வேற்றுமை உருபு, ‘கு‘ வெளிப்டையாக வரும்போது)
  19. புலித்தோல், பூனைக்கால், கங்கைக்கரை (ஆறாம் வேற்றுமைத்தொகை)
  20. எலிப்பாட்டு (எலியைப் பற்றிய பாட்டு) (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை)
  21. வெள்ளிக் கிண்ணம் (வெள்ளியால் செய்த கிண்ணம்) (மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை)
  22. உரிமைப் போராட்டம் (உரிமைக்கு நடத்தும் போராட்டம்) (நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை)
  23. தேங்காய்ப்பால் (தேங்காயிலிருந்து பிழியப்படும் பால்) (ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை)
  24. சென்னைப் பல்கலைக்கழகம் (சென்னையின்கண் உள்ள பல்கலைக்கழகம்) (ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை)
  25. அன்பாகப் பேசினார், சிறப்பாகத் தொடங்கப்பட்டது, மெதுவாகச் சிரித்தாள், கனிவாகக் கூறினார். (ஆக என்னும் சொல்லுருபின் பின்)
  26. வேர்ப்பலா, வாழ்க்கை, பாய்ச்சல், வாழ்த்தினாள் (ய, ர, ழ ஒற்றுக்குப் பின் )
  27. கிழக்குப் பக்கம், மேற்குத் தொடர்ச்சி மலை (திசைப் பெயர்களின் பின
  28. நண்டுக் கூட்டம், பங்குச் சந்தை (சில மென்றொடர்க் குற்றியலுகரம் பின்)
  29. மரபுக்கவிதை, அரசுப்பள்ளி, உழவுத்தொழில் (சில உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் பின்)
  30. சிவப்புப் புடவை, முல்லைக்காடு, முத்துப்பற்கள் (தொகைநிலைத் தொடர்கள்)
  31. சாலப் பேசினார், தடக்கை (உரிச்சொற்களின் பின்)
  32. நிலாப்பாட்டு, பலாப்பழம் (தனிக்குற்றெழுத்துக்குப் பின்வரும் ஆகாரச்சொல்)
  33. வாழ்க்கைப் படகு, கண்ணீர்ப் பூக்கள் (உருவகங்கள்)
  34. மெல்லப் பேசு, உரக்கச் சொல், நிரம்பக் கொடுத்தார், நிறையக் கற்றான் (மெல்ல, உரக்க, நிரம்ப, நிறைய)
  35. எல்லாக் குழந்தைகளும் ஒன்றுகூடின, அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை (எல்லா, அனைத்து)
  36. நாட்டுப்பற்று, ஆற்றுப் பெருக்கு, வயிற்றுப் பசி (ஒற்று இரட்டிக்கும் குற்றியலுகரங்கள்)
  37. அறிவுக் கல்லூரி, பொதுப் பார்வை, கணுக்கால் (முற்றியலுகரம்)
  38. சின்னக்குடை, சின்னப்பெண், சின்னத்தட்டு (சின்ன என்னும் பெயரடையின் பின்)
  39. கத்தியைவிடக் கூர்மை, கூடக்கொஞ்சம் கொடு (விட, கூட)
  40. கீழ்க்காணும் செய்திகள், புலிகளிடைப் பசு போல (கீழ், இடை)
• வல்லினம் மிகா இடம்
  1. அது காண், இது செய், அவை சிறந்தவை, இவை கடினமானவை (சுட்டுப்பெயர்கள்)
  2. எது கண்டாய்? யாது செய்தாய்? எவை தவறு? யாவை போயின? (வினாப்பெயர்கள்)
  3. மலர் பூத்தது, குதிரை கனைத்தது, கிளி கொஞ்சியது (முதல் வேற்றுமை)
  4. என்னொடு கற்றவர், தாயோடு சென்றான் (மூன்றாம் வேற்றுமை விரி)
  5. எனது கை, எனது பல் (ஆறாம் வேற்றுமை விரி)
  6. அண்ணா கேள், கனவே கலையாதே, மகனே பார் (விளி வேற்றுமை)
  7. ஓடிய குதிரை, படித்த பெண், வென்ற தமிழன் (பெயரெச்சம்)
  8. நாடு கடத்தினான், மோர் குடித்தான், புளி கரைத்தாள் (இரண்டாம் வேற்றுமைத்தொகை)
  9. தரும்படி கேட்டான், எழுதும்படி சொன்னாள் (படி என முடியும் வினையெச்சம்)
  10. பறந்தன பறவைகள், நடந்தன கால்கள் (அகர ஈற்று வினைமுற்று)
  11. வாழ்க தலைவர், வாழ்க தமிழகம், வீழ்க பகைவன் (வியங்கோள் வினைமுற்று)
  12. குடிதண்ணீர், குளிர்காலம், திருநிறை செல்வி, திருநிறை செல்வன் (வினைத்தொகை)
  13. அத்தனை புத்தகங்களா?, இத்தனை துணிகளா? எத்தனை பேர்கள்? (அத்தனை, இத்தனை, எத்தனை)
  14. அவ்வளவு கண்டேன், இவ்வளவு தந்தாள், எவ்வளவு கொடுத்தாய்? (அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு)
  15. அவனா கண்டான்? இவளா செய்தாள்? அவனே பார்த்தான், கண்ணனோ தடுத்தான்? (ஆ, ஏ, ஓ வினாப்பெயர்கள்)
  16. ஒன்று கூடுவோம், மூன்று கனி, ஐந்து பழம், ஏழு கடல் (எட்டு, பத்து தவிர மற்ற எண்ணுப்பெயர்களின் பின்)
  17. வள்ளுவர் கோட்டம், கண்ணகி கோவில், ஜானகி மகன் (நான்காம் வேற்றுமைத் தொகை)
  18. தாய் தந்தை, செடி கொடி, வெற்றிலை பாக்கு (உம்மைத் தொகை)
  19. அன்று கேட்டார், இன்று சொன்னார், என்று தருவார்? (அன்று, இன்று, என்று)
  20. அவ்வாறு கேட்டார், இவ்வாறு கூறினார், எவ்வாறு பேசினார்? (அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு)
  21. அத்தகைய திறமை, இத்தகைய தன்மை எத்தகைய செயல்? (அத்தகைய, இத்தகைய, எத்தகைய)
  22. கை தட்டினான் (மூன்றாம் வேற்றுமைத் தொகை)
  23. பள்ளி சென்றாள் (நான்காம் வேற்றுமைத் தொகை)
  24. வரை பாய்ந்தான் (வரை – மலை) (வரையிலிருந்து பாய்ந்தான்) (ஐந்தாம் வேற்றுமைத் தொகை)
  25. வீடு தங்கினான் (ஏழாம் வேற்றுமைத் தொகை)
  26. தோழி கூற்று, ஆசிரியர் கல்வி, மாணவர் கையேடு (உயர்திணைப் பெயருக்குப் பின்)
  27. குழந்தைக்கான கல்வி, பிறகு பார்ப்போம், உரிய பங்கு, தகுந்த கூலி, ஏற்ற பணி, முன்பு கண்டேன், யாருடைய செயல்? (ஆன, பிறகு, உரிய, தகுந்த, ஏற்ற, முன்பு, உடைய)
  28. பார்க்காத பயிர், செல்லாத காசு (எதிர்மறைப் பெயரெச்சம்)
  29. சிறிய கண்ணாடி, பெரிய பானை (சிறிய, பெரிய)
  30. கண்டு களித்தான், வந்து போனான், செய்து பார்த்தான், அழுது தீர்த்தான் (சில குற்றியலுகரங்கள்)
  31. பாம்பு பாம்பு, தா தா தா, பார் பார் பார்/ கலகல, படபட, சலசல (அடுக்குத்தொடர்/ இரட்டைக் கிளவி)
  32. எழுத்துகள், கருத்துகள், நாள்கள் (கள் விகுதி)
  33. ஆதிபகவன், தேச பக்தி, பந்த பாசம் (வடசொற்கள்)
  34. நல்ல பையன், தீய பழக்கம், அரிய காட்சி (நல்ல, தீய, அரிய)
  35. தம்பி பார்த்தான், தங்கை கூப்பிட்டாள், அம்மா பசிக்கிறது (உறவுப்பெயர்களின் பின்)

நாம் இன்று பல்வேறு மொழி பேசும் மக்களுடன், பல்வேறு நாட்டினருடனும், பண்பாட்டாளர்களுடனும் நெருங்கி உறவாடுகின்றோம். பிற நாட்டு மக்களின் பெயரையும், மொழியின் பெயரையும், நாட்டின் பெயர்களையும் எழுதும்போது ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ முதலிய எழுத்துகளைத் தவிர்க்க இயலாத வகையில் பயன்படுத்துகிறோம். ஆனால், தமிழ் இலக்கணங்கள் இந்த எழுத்துகளைத் தமிழி எழுத்துகளாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இந்த எழுத்துகள் தவிர்க்க இயலாத நிலையில் ஆளப்பெற்று வருகின்றன.

முற்காலத் தமிழுக்கு ஏற்ப தொல்காப்பியம், நன்னூல் முதலான இலக்கண நூல்கள் எழுதப்பட்டதைப் போன்று, இக்காலத் தமிழுக்கும், புதிய இலக்கண நூல் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ ஆகிய எழுத்துகளுக்குத் தமிழ் இலக்கணத்தில் இடம் தந்தால், மெய்ம்மயக்கங்கள், மொழி இறுதி நிலை, மொழிதல் நிலை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றங்களும் ஏற்படும்.

செய்தித்தாள்களிலும், மாத இதழ்களிலும், வார இதழ்களிலும் உள்ள கதைகள், கட்டுரைகள் முதலியவற்றைப் படிக்கும்பொழுது, சந்தி இலக்கணத்தில் குழப்பநிலை இருப்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். எனவே, இக்காலத் தமிழுக்கேற்ற சந்தி இலக்கணத்தை நாம் உருவாக்க வேண்டியிருக்கிறது.

பழங்காலத் தமிழுக்குரிய சந்தி இலக்கணத்தை நாம் இன்றைக்கு வற்புறுத்தி புகுத்த முடியாது. எனவே, வழக்கிழந்து போன பழைய சந்தி விதிகளை நாம் விலக்க வேண்டியுள்ளது.

பஃறாழிசை, சிஃறாழிசை, கஃறீது, முஃடீது முதலிய சொற்களில் உள்ள சந்தி விதிகள் இக்காலத்தில் பயன்படுவதில்லை. எனவே, தவிர்க்க இயலாதனவாகவும் தெளிவாக உணர்ந்து கொள்ளத்தக்கனவாகவும் உள்ள புதுச்சந்தி விதிகளை முறைப்படுத்திப் பயன்படுத்த வேண்டும்.

‘மக்கள் தொகை’ என்னும் தொடர் இலக்கண விதியின்படி ‘மக்கட்டொகை’ என ஆகவேண்டும். ஆனால் இன்றைய தமிழில் இப்படிப்பட்ட சந்தி விதியைப் பயன்படுத்துவதால் இடர்ப்பாடு இருக்கிறது. இதனால் ‘மக்கள் சிலர்’ என எழுவதைப் பார்க்க முடிகிறது. ‘மக்கட்தொகை’ என எழுதினாலும் டகர, தகர மயக்கம் (மக்கட்தொகை) தோன்றும். இத்தகைய மெய்மயக்கம் தமிழ்மொழியில் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் ‘மக்கள் தொகை’ என்பதை எவ்வித சந்தியும் இல்லாமலே எழுத வாய்ப்பு அளிக்கவேண்டும்.

‘அறிவியல் தமிழ்’ என்னும் தொடரும் இலக்கண விதியின்படி ‘அறிவியற்றமிழ்’ என ஆகவேண்டும். ஆனால், இது இன்றைய தமிழில் ‘அறிவியல் தமிழ்’ என்றே நிலைபெற்று விட்டன. இவற்றை இன்றைய வழக்கிற்கேற்ப நோக்காமல், பழைய சந்தி விகுதிகளைப் பொருத்தி மக்கட்டொகை எனவும் அறிவியற்றமிழ் எனவும் சொல்லுவது பொருத்தமற்றதாகும்.

பால் ஐந்து வகைப்படும். அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்பனவாகும்.

எ.கா.
அவன் இங்கு வந்தான் (ஆண்பால்)
அவள் இங்கு வந்தாள் (பெண்பால்)
அவர் இங்கு வந்தார் (பலர்பால்)
அது இங்கு வந்தது (ஒன்றன்பால்)
அவை இங்கு வந்தன (பலவின்பால்)

இத்தகைய பால்பகுப்பு முறை தொல்காப்பியம் முதலான பழைய இலக்கணங்கள் கூறுகின்றன.

இங்கே உள்ள எடுத்துக்காட்டுகளில் ‘அவர்’ என்னும் பழங்காலத்தில் பன்மைப் பொருளை உணர்த்தியது. இக்காலத் தமிழில் இச்சொல் (அவர்) பன்மைப் பொருளை உணர்த்தப் பயன்படுத்துவதில்லை. ‘அவர்கள்’ என்னும் புதிய சொல்லைப் பன்மைப் பொருளை உணர்த்தப் பயன்படுத்தப்படுகிறது. ‘அவர்கள்’ என்னும் இச்சொல் பழந்தமிழில் இல்லை. இக்காலத் தமிழில் ‘அவர்’ என்னும் சொல் உயர்திணை ஒருமையை உணர்த்துவதற்கே பயன்படுத்தப்படுகிறது. இக்காலத்தில் இதனை ‘உயர்பால்’ எனக் கூறுகின்றனர். எனவே, ஏற்கெனவே உள்ள ஐம்பாலுடன் இதனைச் சேர்க்க, பாலின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளமையை அறியமுடிகிறது.

இக்கால இலக்கணத்தில் துணை வினைகளின் பயன்பாட்டு அடிப்படையில் வினைத் திரிபுகள் பெருகி வளர்ந்துள்ளன. இரு, விடு, தொலை முதலான துணை வினைகள், செய் என்னும் வினையெச்சத்தோடு சேர்ந்து வந்து இருந்தான், வந்துவிட்டான், வந்து தொலைந்தான் என்பன போன்ற வினைத் திரிபுகளை உருவாக்குகின்றன. இப்படிப்பட்ட வினைக் கிளவிகள் ‘வினைக் கூறுபாட்டுக் கிளவிகள்’ எனக் குறிக்கப்படுகின்றன.

போ, பார், வேண்டு முதலான துணை வினைகள் செயவென் எச்சத்தோடு சேர்ந்து வரப்போகிறது, ஓடப்பார்த்தான், பாடவேண்டும் முதலான கிளவிகளை உருவாக்குகின்றன. இத்தகைய வினைக் கிளவிகளை ‘வினைநோக்குக் கிளவிகள்’ என்கின்றனர்.

குறிப்பிட்ட துணைவினைகள் மட்டுமே வினைக் கூறுபாட்டுத் துணை வினைகளாகவும், வினைநோக்குத் துணைவினைகளாகவும் பயன்படுகின்றன.

நமது மரபிலக்ககணங்கள் தமிழிலுள்ள சொற்களை நான்காக வகைப்படுத்தியிருக்கின்றன. அவை பெயர், வினை, இடை, உரி என்பனவாகும். இன்றைய நிலையில் அந்த நான்கிலேயே நாம் எல்லாச் சொற்களையும் அடக்கிவிட முடியுமென்று தோன்றவில்லை. இக்காலத் தமிழுக்கு ஏற்ற வகையில் நாம் புதிய முறையில் சொல் வகைப்பாட்டை அமைக்க வேண்டியிருக்கிறது.

மரபிலக்கணத்தில் தொடரிலக்கணம் தொடர்பான செய்திகள் உள்ளன. ஆனால், தொடர் இலக்கணம் தொடர்பான முழுமையான செய்திகள் காணப்படவில்லை. அண்மைக் காலத்தில் தொடரிலக்கண ஆராய்ச்சி விரிவாக வளர்ந்துள்ளன.

எ.கா.
எனக்கு அவரைத் தெரியும்
அவனுக்குக் கால் வலிக்கிறது
அவருக்கு என்மேல் கோபமாக இருக்கிறது

மேற்கண்ட தொடர்களை இலக்கண நோக்கில் பார்க்கும்போது எழுவாய் இல்லை. இப்படி எழுவாய் இல்லாத தொடர்கள் நமக்கு ஒரு வியப்பை உண்டாக்குகின்றன.

இலக்கணத்தில் எழுவாய் இல்லாத தொடருக்கும் நாம் இடம் தரவேண்டும். இவற்றைத் தோன்றா எழுவாய் என்றும் கோட்பாட்டுடன் தொடர்புபடுத்தி, தோன்றா எழுவாய்க்குரிய தொடர்களாகக் கொள்வதும் தவறு. எனவே, இவற்றை எழுவாய் இல்லாத தொடர்கள் என ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றைப் பற்றி நாம் விரிவாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வேறு, உண்டு, இல்லை முதலான வினைகளைப் போலவே, ‘அல்ல’ என்னும் சொல் ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எ.கா.
எழுதியது அவனல்ல
எழுதியது அவளல்ல
உங்களை அல்ல
உங்களுக்கல்ல

எனப் பயன்படுத்தப்படுகிறது.

அல்லன், அல்லள், அல்லர், அன்று, அல்ல ஆகிய திரிபு வடிவங்களைப் பின்வருமாறு பயனிலையாகப் பயன்படுத்தும்போது, ‘அவர்கள்’ என்ற எழுவாய்க்குத் தனிவடிவம் உருவாக்கவேண்டும்.

எ.கா.
அவன் அல்லன்
அவள் அல்லள்
அவர் அல்லர்
அது அன்று
அவை அல்ல
அவர்கள் அல்லர்கள்

இவ்வாறாக இக்கால இலக்கணத்தில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்னும் கருத்திற்கேற்ப மொழி வளர்ச்சியை நாம் வரவேற்க வேண்டும்.