1.0 பாட முன்னுரை
பாட முன்னுரை
படைப்புத்திறன் என்பது ஒன்றைப் புதிதாய்ப் படைப்பது: ஒன்றிலிருந்து இன்னொன்றை உருவாக்குவது. ஒரே கோணத்தில் சிந்திக்காமல் மாறுபட்ட கோணத்தில் சிந்திப்பது. அதன் காரணமாக ஒரு புதுமையைப் படைப்பது எனலாம். இதை ஆங்கிலத்தில் “Creativity” என்று அழைப்பர். புதுமை மற்றும் தனித்தன்மையான உருவாக்கும் திறனையே படைப்பாற்றல் என்பர். இவ்வலகில் படைப்பாற்றல் திறன், படைப்பாளரை அடையாளங்காணல், படைப்பாற்றலை வளர்க்கும் செயல்பாடுகள், உளவியல் கோட்பாடுகள், படைப்பாற்றல் கூறுகள், படைப்பாற்றலின் நன்மை/பயன்கள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
பாடும் திறமை எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரும் நமக்கு அத்திறன் இல்லை என்று நினைத்துக் கொள்கிறோம். அதற்குக் காரணம் எப்படிப் பாடுவது என்பதை நாம் மதிக்கும் ஒருவரை முன்மாதிரியாகக் கொண்டு அளவிடுவதேயாகும். நாம் பிறரைப் போல பாட முடியாமல் இருக்கலாம். ஆனால் பாட்டுத் திறன் நம்மிடம் உள்ளது. ஆர்வம் இருந்தால் வளர்த்துக் கொள்ளலாம். அவ்வாறே எழுதும் திறன், ஆடல் திறன், நடிப்புத் திறன் ஆகியனவற்றையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
நமது மூளையின் வலப் பக்கத்தில்தான் புதிய எண்ணங்கள் தோன்றுகின்றன. நமது பள்ளிக்கூடங்களில் இடப் பக்க மூளையை அதிக அளவில் பயன்படுத்தவே பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால் பள்ளிச் சூழலிலும் பள்ளியிலிருந்து வெளியேறியவர்களும் தாங்கள் விரும்பினால் வலப் பக்க மூளையைப் பயன்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
படைப்பாற்றல் பற்றி பல துறைகள் பலவிதமான கோணங்களில் ஆய்வு செய்துள்ளன. எனினும் ஒரு தெளிவான அறிவியல் வரையறை உருவாக்கப்படவில்லை. படைப்பாற்றல் என்பதற்கு ஆக்கத்திறன் (Creativity), செயலாக்கத்திறன், ஆக்கச்சிந்தனை, புதியனவற்றைப் புனையும் திறன் என்பன போன்ற சொற்களை உளவியலாளர்கள் பயன்படுத்துகின்றனர். படைப்பாற்றல் என்பது “யாது” என்ற வினாவிற்கு எளிய முறையில் விடையளிப்பது ஓரளவு கடினமாகும்.
"ஆக்கத்திறன் என்பது நுண்ணறிவுடன் தொடர்புடையதாக இருந்தாலும் நுண்ணறிவிலிருந்து விலகியும் நிகழக்கூடிய சிறப்பு ஆற்றல்" என்கிறார் கில்பர்ட். "முன்பு இல்லாததும் புதியதுமான கருத்தையோ பொருளையோ உண்டாக்கும் திறன்" என்கிறார் ஆசுபெல். அதாவது "அறிவு அல்லது கலை சார்ந்த குறிப்பிட்ட சில துறைகளில் உட்காட்சி வழியே உடனடியாகப் புதிய அறிவினைப் பெறுதல், இத்துறைகளில் எழும் சிக்கல்களின் உண்மை நிலைபற்றி அறிந்து துல்லியமான நுண்ணுணர்வுடன் (Sensitivity) செயற்படுதல் போன்ற பண்புகள் கொண்ட ஓரளவு சாதாரணமாகக் காணப்படாத ஆற்றல் ஆக்கத் திறனாகும்" என்று படைப்பாற்றலைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். இதை "கருத்துகளின் புதுமை" என்கிறார் பிரான்ஸிஸ் கோல்டன்.
படைப்பாற்றலின் விளைவு 'புதுமை' எனப்படும் பண்பினைக் கொண்டிருக்கும். இப்புதுமைப் பண்பு எந்த அளவுக்கு அவ்விளைவில் அதிகமாகக் காணப்படுகிறதோ அந்த அளவுக்குப் படைப்பாற்றலும் சிறப்பாகச் செயற்பட்டதாகக் கொள்ளலாம். எல்லா புதுமைத் தோன்றலுக்கும் தொடக்கத்திலேயே உரிய அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று கூற இயலாது.
முன்பு பாரடே (Faradey) என்னும் விஞ்ஞானி, மிகச்சிறிய அளவில் மின்சக்தியை உற்பத்திசெய்து காட்டியபோது, அன்றைய இங்கிலாந்தின் பிரதமர் இதனால் எவருக்கு என்ன பயன் என்று வினவியதாகவும், அதற்குப் பாரடே, இன்னும் சில ஆண்டுகளில் இதற்கு நீங்கள் வரிவிதிக்கலாம் என்றதாகவும் கூறப்படுகிறது. அன்று வேடிக்கையாகக் கருதப்பட்டது இன்று நமது தொழில்நுட்பச் சமுதாயத்தின் ஆணிவேராகத் திகழ்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். அது எக்காலத்தும் எச்சூழலுக்கும் யாவருக்கும் எவ்விதப் பாகுபாடுமின்றி அறக்கருத்துகளை எடுத்துக்கூறுவதாக விளங்குகிறது. எனவே சமுதாயத்திற்குப் பயனளிக்கும் படைப்பாற்றல் என்றும் நிலைத்து நிற்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
படைப்பாற்றலை இன்னதென வரையறுத்துக் கூற இயலாது. ஏனெனில் அறிவியல் மேதைகள், கலைத்திறன் மிக்கவர்கள், படைப்பாளிகள் அனைவரும் தாங்கள் அறிந்த செய்திகள், அனுபவங்கள், உள்ளுணர்வுகளைப் பயன்படுத்திப் புதுமையானவற்றைப் படைத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, புதுமையான கவிதைகள், பாடல்களைப் பாரதியார் இயற்றியுள்ளார். சர்.சி.வி.ராமன் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். எனவே, படைப்பாற்றல் எனப்படுவது ஆக்கச் சிந்தனையுடன் தொடர்புடையது. உயர்நிலைத் திறன்களுள் ஒன்றான படைப்பாற்றலைப் பற்றி விளக்குவதாக இவ்வலகு அமைகிறது.