1.3 படைப்பாளரை அடையாளம் காணல்
படைப்பாளரை அடையாளம் காணல்
குழந்தைகள் கற்பனை, சிந்தனை, படைப்பாற்றலோடுதான் பள்ளிக்கு வருகிறார்கள். மக்கள் உள்ளம் எந்த ஒன்றில் ஆர்வமாகவும் ஆழமாகவும் ஈடுபடுகிறதோ அந்த ஒன்றனைப் படைத்துப் பார்க்கவும் விரும்பும். சான்றாகச் சொற்பொழிவினைக் கேட்கும்பொழுது, பேச்சாளராக வேண்டும் என்னும் எண்ணமும் சிறந்த கட்டுரைகளையும் கதைகளையும் படிக்கும்பொழுது எழுத்தாளராக வேண்டும் என்னும் எண்ணமும், சிறந்த கவிதைகளைப் படித்துச் சுவைக்கும்பொழுது கவிஞராக வேண்டும் என்னும் எண்ணமும் எழும். நல்ல உணவு வகைகளை உண்டு மகிழும்பொழுது, அதைப்போன்று சமைத்துப் பார்க்கவேண்டும் என்னும் எண்ணமும் எழுவது நமக்கு இயற்கைதானே! இவற்றையே “படைப்பூக்கம்” எனக் குறிப்பர் உளவியலாளர்கள். குழந்தைகளிடையே எழும் படைப்பூக்கத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு அவர்களின் படைப்பாற்றலை வளர்க்க வீட்டில் பெற்றோர்களும் பள்ளியில் ஆசிரியர்களும் உறுதுணையாக இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
சோவியத் ரஷ்யாவில் தோழர் லெனின் அதிபராக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி. இரண்டு பள்ளிக் குழந்தைகள் தங்கள் தலைமையாசிரியரைப் பற்றி புகார் தெரிவிக்க லெனினிடம் வந்திருந்தனர். என்ன விஷயம்? என்று லெனின் கேட்டார். தங்களைப் பள்ளியிலிருந்து நீக்கிவிட்டதாகக் குழந்தைகள் கூறினர். நீங்கள் என்ன தவறு செய்தீர்கள்? என்று லெனின் விசாரித்தார். வகுப்பறைக்குச் செல்லாமல் பள்ளிக்கு வெளியே பெய்திருந்த பனிக்கட்டியில் வாகனங்கள் செய்து விளையாடிக் கொண்டிருந்தோம் என்று குழந்தைகள் பதிலளித்தனர். அவர்களைக் கடிந்து கொள்ளாமல் தலைமையாசிரியரை வரவழைத்து குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்குமாறு லெனின் கூறினார்.
இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் படையைச் சைபீரியாவில் முறியடிக்க அக்குழந்தைகளின் கற்பனைதான் சோவியத் படைகளுக்கு உதவியது. சைபீரியாவில் பெய்திருந்த பனிக்கட்டிகளால் செய்யப்பட்ட பீரங்கிகளை உண்மையானவை என்று நினைத்து அவைகளை அழிக்க நாஜிப் படைகள் சைபீரியாவிற்குள் நுழைந்து தாக்கியவுடன் அவர்கள் அழிந்தனர். பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலே சோவியத் வெற்றிக்கு வித்திட்டது என்று கூறினால் மிகையாகாது.
ஆகவே, மாணவர்களின் படைப்பாக்கத் திறனை வெளிக்கொணரும்படி கற்பித்தல் முறையைக் கையாண்டு மாணவர்களுக்கு மொழிப்பாடத்தைக் கற்பித்தால் நிறைவான கற்றல் அனுபவங்களை அவர்கள் பெறுவர். அவ்வனுபவம் மாணவர்களின் படைப்பாக்கச் சிந்தனையைத் தூண்டும். வகுப்பறையில் படைப்பாக்கத் திறனை மேம்படுத்துவதற்கு அடிப்படையான நான்கு கூறுகள் உள்ளன. அவை பின்வருவன:
- படைப்பாக்கத்திறனைத் தூண்டும்படியான வகுப்பறைச் சூழல் (Creative Press)
- படைப்பாக்கத்திறன்மிக்க மாணவர் (Creative Person)
- படைப்பாக்கத்திறனுக்கான செயற்பாடு (Creative Process)
- படைப்பாக்கத்திறனை வெளிப்படுத்தும் படைப்பு (Creative Product)
அதாவது முதலில், படைப்பாக்கத்திறனைத் தூண்டும்படி வகுப்பறைச் சூழல் அமைய வேண்டும். அவ்வாறு அமைந்தால் படைப்பாக்கத் திறன்மிக்க மாணவர்கள் ஆக்கப்பூர்வமான படிநிலையில் சிக்கலுக்குத் தீர்வு காண்பர். இதன்மூலம் உருவாக்கப்படும் படைப்பு, மாணவர்களின் படைப்பாக்கத்திறனை வெளிப்படுத்தும் என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும். இம்முறையில் மூன்று படிநிலைகள் உள்ளன. அவை பின்வருவன:
மாணவர்கள் தங்களிடமுள்ள படைப்பாக்கத்திறனை வெளிப்படுத்தும்படி ஆசிரியர்கள் அவர்களை ஊக்குவித்தல் வேண்டும்.
தங்களுக்குள் உள்ள படைப்பாக்கத்திறனை மாணவர்கள் சுயமாக அடையாங்கண்டு கொள்ள உதவுதல் வேண்டும்.
தங்களுடைய படைப்பாக்கத்திறன் செயற்பாட்டை(Process) தாங்களே அனுபவத்தின்மூலம் வளர்த்துக்கொள்ள வழிகாட்டுதல் வேண்டும்.