முகப்பு

1.2 படைப்பாற்றலை ஊக்குவிக்கும் காரணிகள்

படைப்பாற்றலை ஊக்குவிக்கும் காரணிகள்

இயல்பாகவே குழந்தைகள் கற்பனையும் சிந்தனையும் உடையவர்களாகவே இருக்கின்றனர். "கற்பனைத் தத்துவம், அறிவுக்கு எட்டாதது; சொற்களால் உணர்த்த முடியாதது; அது அதன் பலன்களை மட்டும் கொண்டே அறியப் பெறுவதாகும்" என்று கவிஞர் ரஸ்கின் கூறியுள்ளார். இவர் கூற்றின் வெளிப்பாட்டைக் குழந்தைகளிடம் இயல்பாகவே காணலாம். குழந்தைகளிடம் ஏதேனும் பொருளைக் கொடுத்தால், நம் கற்பனைக்கு எட்டாத ஒன்றனை அழகாக வடிவமைத்துக் காட்டுவர்.

இரு பென்சில் மலையாக மாறும்; விமானமாகிப் பறக்கும்; மருத்துவமனைக் குறியீடாகும். குழந்தைகளின் கற்பனைக் குதிரைக்குக் கட்டுத்தறி இல்லை. கதைகள், புதிய முடிவினைப் பெறும். பல வடிவங்களில் பாடல்கள் உருவாகும். கருத்துகள் மாற்றுச் சிந்தனைக்கு உள்ளாகும். இத்தனை ஆற்றலும் குழந்தைகளிடம் நிறைந்தே காணப்படுகின்றன.

படைப்புத் திறனை வெளிப்படுத்தும் போதுதான் சமுதாயத்திற்கு பயன்படும். படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள பல நூல்களைத் தொடர்ந்து கற்றல் அவசியம். அவை அறிவாற்றலை வளர்க்கும். அது படைப்புத்திறன் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படும்.

பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னும் பின்னும் தோன்றிய தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள், ஐம்பெருங் காப்பியங்கள், ஆழ்வார் பாடல்கள், நாயன்மார் பாடல்கள், கம்பராமாயணம் போன்றவை இன்றளவும் மக்களால் விரும்பிப் படிக்கப்பெற்றுப் பயனளிப்பதற்கு அவை படைப்பாற்றல் மிக்கவையாக விளங்கியமையே காரணம் ஆகும்.

எத்தகைய திறனையும் கற்பிப்பதாலும் பழகுதலாலும் பெறவியலும் என்பதை முன்னரே கண்டோம். கற்பிப்புக் காலத்தில் மாணவர்கள் பெறுகின்ற இலக்கிய ஆர்வம், எக்கருத்தையும் எழிலுணர்ச்சியுடன் நுணுகி நோக்கல், படிப்புப் பழக்கம், படித்ததைப்போல ஒன்றைத் தானும் உருவாக்கவேண்டும் எனும் பெருமித உணர்வு ஆகிய உந்தல்களை ஆசிரியர் மாணவர்க்கு உண்டாக்க வேண்டும். இத்தகைய உந்துதல்கள் அவர்களைச் சிறந்த படைப்பாளராக உருவாக்க வழிவகுக்கும்.

புதுமை நாட்டம் இல்லாதவர்களால் படைப்பாற்றல் சிந்தனையை வெளிப்படுத்த முடியாது. மாறுதல் விரும்பாதவர்களும் புதிய ஒன்றை உருவாக்க மாட்டார்கள். எனவே படைப்பாக்கச் சிந்தனையை/திறனை வளர்ப்பதில் புதுமை நாட்டம் அவசியமானது. 'புதியன விரும்பு' என்பது பாரதியின் வாக்கு.

காது கேளாதவரான பீத்தோவனின் இசை ஒரு படைப்பு! கண் தெரியாத காலத்தில் மில்டன் எழுதிய 'இழந்த சொர்க்கம் ஓர் அற்புதப் படைப்பு!' புதுமை விரும்பி பிக்காஸோவின் ஓவியங்கள் சிந்தனையைத் தூண்டும் ஓவியக் காவியங்கள்!

மார்க்சிய மூலவர்களான மார்க்சும் ஏங்கல்சும் உருவாக்கிய கம்யூனிசச் சித்தாந்தம் நமது காலத்தின் மகத்தான படைப்பு! படைப்புத் திறனை சமுதாய நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனை புதிய புதிய கருத்துகளை உருவாக்கும்! அவை புதிய மாறுதலுக்குத் தூண்டுகோலாக இருக்கும்.

தாம் பலவற்றைக் கற்றுள்ளோம், அதைப் பிறருக்குக் கூறவேண்டும் எனும் பெருமித உணர்வு படைப்பாற்றலுக்கு மிகச் சிறந்த உந்துதல் ஆகும். பெருமித உணர்வின் கூறுகளுள் ஒன்றாகக் 'கொடை' என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இக்கூறு படைப்பாற்றல் முனைப்போடு ஒப்பிட்டு எண்ணத்தக்கதாகும். எனவே, மாணவர்க்குப் படைப்புப் பெருமித உணர்வினை ஏற்படுத்துதல் வேண்டும். அதற்காக மாணவர்களின் படைப்பாற்றல் திறனை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல கீழ்க்காணும் செயல்களை மேற்கொள்ளலாம்.

  • வகுப்பில் பிற மாணவர்களின் முன் பாராட்டுதல்
  • வகுப்பு மாணவர்களையும் பாராட்டச் செய்தல்
  • மாணவர்களின் படைப்பை வகுப்பில் காட்சிப்படுத்துதல்
  • பள்ளிப் பொதுவிடங்களில் படைப்பைக் காட்சிப்படுத்துதல்
  • மன்றங்களில் அரங்கேற்றிப் பாராட்டுரை வழங்குதல்
  • பள்ளி இதழ்களில் படைப்புகள் இடம்பெறச் செய்தல்
  • மாணவர், சிறுவர் இதழ்களில் படைப்புகள் இடம்பெறச் செய்தல்
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
  1. படைப்புத்திறன் என்றால் என்ன?
  2. மனித மனத்தின் கட்டமைப்பு வகைகளைக் கூறுக.
  3. குழந்தையின் மொழித்திறன்களை விளக்குக?
  4. படைப்பாற்றலை ஊக்குவிக்கும் காரணிகள் யாவை?
  5. மாணவர்களின் படைப்பாற்றலை உருவாக்க ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்களைக் கூறுக?