1.1 குழந்தையும் படைப்பாற்றல் திறனும்
குழந்தையும் படைப்பாற்றல் திறனும்
ஒன்றை உருவாக்குதல் தொடர்பான திறன் எல்லோரிடமும் வெவ்வேறு அளவுகளில் இருக்கிறது. அது பிறவிக் குணம் அன்று; அதனை எப்போது வேண்டுமானாலும் வளர்த்துக் கொள்ளலாம். மனிதன் பெற்றுள்ள அறிவுத் திறன்களை, ‘மனித மனத்தின் கட்டமைப்பு‘ என்ற நூலில் ஜி. கார்டனர் ஆறு வகையாகப் பிரித்துக் கூறுகிறார். அவை,
- மொழித்திறன்
- இசைத்திறன்
- உடல்திறன்
- வெளிஉலகு சார்ந்த கற்பனைத்திறன்
- காரணகாரிய தொடர்புத்திறன்
- படைப்புத்திறன்
என்பனவாகும். இவை அனைத்தும் உயர்நிலைத் திறன்களாகும்.
எழுத்து அல்லது பேசுதலின் வழியாக மொழித்திறனை வெளிப்படுத்துகிறோம். அதற்கு மொழியைத் திறமையாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். சொற்களைச் சரியாகக் கையாள்வது; ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பொருளை உணர்ந்து சரியான இடத்தில் பயன்படுத்துவது ஆகியவை மொழியைத் திறமையாகப் பயன்படுத்துவதில் அடங்கும்.
மொழிப்புலமையைப் பயன்படுத்தி சொற்களைத் திறமையாகக் கையாண்டு அதனைப் பேச்சு மூலமாகவோ எழுத்தின் மூலமாகவோ வெளியிடுவதே மொழித்திறனாகும். எழுத்தாளர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் மொழித்திறன் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதனால்தான் அவர்களின் படைப்புகளும் சிறப்பாக அமைந்துவிடுகிறது.
ஒலி, ஓசையைக் கேட்டு மனத்தில் வாங்கி, ஒழுங்கான அலைநீளத்தில் மறு உருவாக்கம் செய்து கொடுக்கும் திறன்தான் இசைத்திறன். இசையமைப்பதன் மூலம் இது வெளிப்படுத்தப்படுகிறது. பாட்டுக்குத் துணையாக இசை நிற்கிறது. இசையோடு கூடிய பாட்டு மனத்தில் பதிகிறது. கேட்போருக்கும் இன்பம் தருகிறது. உழைத்துக் களைத்த மக்களுக்கு இசை புத்துணர்ச்சியை அளிக்கிறது. பெருவாரியான மக்கள் சுவைக்கும்படியாக இசைத்திறனை வெளிப்படுத்த இசைப்புலமை மிக்கவர்களால் முடியும். இத்தகு இசைத்திறனைக் கற்றுக் கொள்ள முடியும். இசையும் பாட்டும் சமுதாயத்தின் மகிழ்ச்சிக்கு மட்டுமே காரணமாய் அமைந்து விடாமல், சமுதாய முன்னேற்றத்திற்குப் பயன்படுவதாகவும் இருக்க வேண்டும்.
ஐம்புலன்கள் மூலம் செய்திகளை வெளிப்படுத்தும் திறன் உடல் திறன் ஆகும். உடல்திறனில் நடிப்புக் கலையும் அடங்குகிறது. நாடகம், கூத்து, திரைப்படம் ஆகியவற்றில் ஈடுபடும் நடிகர்களுக்கு இத்திறன் முக்கியம். அவர்களது உடலே அவர்களின் பேசும் மொழியாக விளங்குகிறது.
இத்திறனைச் சிற்பிகள், ஓவியர்கள், புகைப்பட கலைஞர்கள், திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளோடும் இத்திறன் தொடர்புடையது.
இது சிக்கல்களை அலசி ஆராய்வதுடன் தொடர்புடையது. எந்த ஒரு சிக்கலையும் பல கோணங்களில் ஆராய இத்திறன் பயன்படுகிறது.
இது புதியதாக ஒன்றனை உருவாக்கும் திறனாகும். ஒரு விஷயத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவரக் கூடியது. ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லக்கூடியது படைப்புத்திறனாகும். இதனைப் படைப்பாற்றல் என்றும் கூறுவர்.