முகப்பு

1.4 படைப்பாற்றலை வளர்க்கும் செயல்பாடுகள்

படைப்பாற்றலை வளர்க்கும் செயல்பாடுகள்

மாணவர்களின் படைப்பாற்றலை உரைநடை, செய்யுள் ஆகிய இரு வடிவங்களில் வெளிப்படக் கற்றல்-கற்பித்தல் மூலமாகவும், நல்ல சூழ்நிலையை உருவாக்கித் தருவதன் மூலமாகவும் வழிகாட்டுதல் மூலமாகவும் ஆசிரியர் உதவமுடியும்; உதவ வேண்டும். கீழ்க்காணும் உத்திகளைப் பின்பற்றி மாணவர்களிடம் படைப்பாற்றல் திறனை வளர்க்கலாம்.

  • வாசித்தல் திறனை வளர்த்தல் (SKILL OF READING)
  • மனப்பாட அறிவினை வளர்த்தல் (SKILL OF MEMORIZATION)
  • சிந்திக்கும் திறனை வளர்த்தல் (SKILL OF THINKING)
  • கற்பனை ஆற்றலை வளர்த்தல் (SKILL OF IMAGINATION)
  • அழகுணர் ஆற்றலை வளர்த்தல்
  • எழுதும் திறனை வளர்த்தல் (SKILL OF WRITING)
• வாசித்தல் திறனை வளர்த்தல்

வாசிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளும்போது சிந்திக்கும் திறனும் வளருகிறது. கற்பனை ஆற்றல் சிறகடிக்கிறது. ஒன்றைப் புதிதாய்ப் படைக்கும் ஆர்வம் பிறக்கிறது. மொழியில் புலமை கிட்டுகிறது. எழுத்து, பேச்சுத்திறன் வளர உதவுகிறது.

படிப்பதும் சிந்திப்பதும் நல்லதாக அமையுமானால் பேச்சும் நடத்தையும் நல்லவிதமாகவே அமையும். ‘உலகில் உள்ள நல்லவை அனைத்தையும் உள்வாங்க வேண்டும்' என்பது கார்ல் மார்க்சின் கருத்து. நல்லதைப் படித்துச் சிந்திக்கும்போது நல்லவை யாவும் மனக்கடலில் கலக்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டப்படும். தேடல் உண்டாகும். ‘நினைவு நல்லது வேண்டும்' என்பார் பாரதியார். உள்ளத்தில் நல்லவை நிறைந்திருந்தால் வாக்கிலும் நல்லதே வெளிப்படும்.

நிறைய வாசிக்கும்போது அல்லது தேர்ந்தெடுத்த நூல்களைப் வாசிக்கும்போது ஒருவரது படைப்புத்திறன் தூண்டப்படுகிறது. ஒன்றைப் புதிதாக உருவாக்கவும் புதிய கோணத்தில் சிந்திக்கவும் மனம் விரும்புகிறது. வாசிக்கும் திறன் கொண்டவர் மனத்தில் உறுதி இருக்கும். சிந்தனை தெளிவு இருக்கும். வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது துணிவுடன் விரைந்து சிக்கலைத் தீர்க்க மாணவரால் முன்வர முடியும்.

ஒவ்வொரு நூலிலும் இருப்பது கற்பனை மட்டுமல்ல. வாழ்க்கை அனுபவமும்தான். எனவே கற்பனைப் படைப்புகள் கூட வாழ்க்கைக்கு வழிகாட்டும்! ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய படிப்பாளி மாமேதை எங்கல்ஸ் என்று கார்ல் மார்க்ஸ் வர்ணித்தார். மார்க்சும் மிகப் பெரிய அளவுக்கு வாசிக்கும் திறன் கொண்டவர்தான். இவ்விருவரின் அடியொட்டி ரஷ்யாவில் புரட்சிக்குத் தலைமை தாங்கிய லெனின் வாசிக்கும் திறன் மிகுந்தவர்தான். வாசிப்பதில் முழு கவனமும் செலுத்தும்போது சில சமயம் நம்மைச் சுற்றி நடப்பவற்றை மறந்து விடுபவர்களும் உண்டு. எனவே 'யோகா' செய்வதில் கிடைக்கும் பலன் கூட ஆழ்ந்து கற்கும்போது உண்டாகி விடுகிறது. கவனம் சிதறாமல் நூலைப் படிக்கும் பழக்கமானது நாளடைவில் கவனம் சிதறாமல் ஒரு செயலைச் செய்து முடிக்கும் திறனை வளர்த்துவிடும்

• மனப்பாட அறிவினை வளர்த்தல்

இலக்கியங்களைப் படித்ததால் பெற்ற மொழிநடை, கருத்து வைப்புமுறை ஆகியவற்றால் பெற்ற மனப்பாட அறிவு, படைப்பாற்றலுக்குப் பெரிதும் துணைநிற்கும். தொடக்கநிலையில் மொழி வடிவ மனப்பாட அறிவு, படைத்தல் செயலுக்கான உந்துதல் ஆகும். வளர்ச்சி நிலையில் கருத்தளவிலான மனப்பாட அறிவு மொழிவடிவ மனப்பாட அறிவோடு இணைந்து தன்னாக்கப் படைப்புகளை வெளிக்கொணரும்.

• சிந்திக்கும் திறனை வளர்த்தல்

படைப்பாக்கச் சிந்தனையை விரும்புகின்றவர் தங்கு தடையின்றிச் சிந்திக்க வேண்டும். ஒரு பிரச்சினைக்குப் பல தீர்வுகளைச் சிந்திக்க வேண்டும்.

படைப்பாக்கச் சிந்தனை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறக் கூடியது. அதனால் நெளிவு சுழிவு தேவைப்படுகிறது. புதிய சிந்தனைகளும் கருத்துகளும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரே வர்க்கத்திற்கு உரியதாகவும் இருக்காது. ஒரு சூழ்நிலையை அல்லது சிக்கலை பல கோணங்களில் அணுகக் கூடியதுதான் படைப்பாக்கச் சிந்தனை.

படைப்புத்திறனைத் தூண்டி வளர்க்கும்போது ஒருவர் தனது அணுகுமுறையை மாற்றி எந்த ஒரு பிரச்சினையையும் அணுக முடியும். புதிய அணுகுமுறையின் மூலம் கிடைக்கும் தீர்வானது பழைய அணுகுமுறையால் கிட்டும் தீர்வை விட பயனுள்ளதாக இருக்கும். ஆற்றல் மிக்கதாக இருக்கும். இந்தத் தீர்வு அவரது படைப்பாற்றல் சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்து விடுகிறது.

• கற்பனை ஆற்றலை வளர்த்தல்

கற்பனையை வெளிப்படுத்தும்போது கிடைக்கக்கூடிய அழகானது படிப்பவரை, பார்ப்பவரைப் பரவசப்படுத்தும். நினைத்து நினைத்து சுவைக்க வைக்கும். வாசகர் மனத்தில் புதிய காட்சிப் படிமத்தை உருவாக்கும்.

கற்பனைத் திறனிலிருந்துதான் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் மலரும். விஞ்ஞானிகள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்பவர்கள் என்றாலும் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதில் அவர்களது படைப்பாக்கக் கற்பனை வளம் முதன்மையாக இருக்கிறது.

கற்பனை என்பது ஒரு பொருளை நேரில் அனுபவிக்காத நிலையில் அப்பொருளின் தன்மையை நேரில் காண்பதுபோல் மனக்கண்ணில் கொணர்ந்து நிறுத்துவதாகும். கற்பனை நயம் பாடல்களுக்குச் சிறப்பினைச் சேர்க்கக் கூடியதாகும். கவிதைகளில் இடம்பெறும் கற்பனையின் சிறப்பு பற்றிக் கி.வா.ஜெகந்நாதன் அவர்கள்,

“கற்பனையாம் பரிக்கே – ஒரு கடிவாளம் என்பதில்லை

வெற்பனில் ஏறிவரும் – அந்த விண்ணிலும் பறக்கும்”

எனப் பாடியுள்ளார்.

சங்கப் புலவர் ஒருவர் நாவல் மரம் ஒன்றைக் கடலருகே காண்கிறார். கருமைநிற நாவல் பழங்களோ உதிர்ந்து கிடக்கின்றன. கருநிற வண்டுகளோ மரத்தருகே பறந்து கொண்டிருக்கின்றன. நிலத்தில் விழுந்த பழங்களை நண்டுகள் உண்ணுகின்றன. இதைக் கண்ட கவிஞர் கற்பனை நயம் தோன்றப் பாட ஆரம்பித்துவிட்டார்.

கருநிறப் பழத்தை இழுத்துச் செல்லும் நண்டுகளை வண்டுகள் சூழ்ந்து கொண்டன; காரணம் வண்டுகளைத் தான் நண்டுகள் இழுத்துச் செல்கின்றன என்ற மயக்கமாகும். இதனை உணர்ந்த நண்டு நாவற்கனியை விட்டுவிட்டதாக அமைந்தது அம்மூவனாரின் கற்பனையில் உதித்த பாடல். அப்பாடல் வருமாறு.

"பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரைப்

புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி

கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப்

பல்லால் அலவன் கொண்ட கோட் கூர்ந்து

கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் இரை

தேர் நாரை எய்தி விடுக்கும்

துறைகெழு மாந்தை அன்ன"

இவ்வாறான பாடல்களை மாணவர்களிடம் எடுத்துக்கூறி அவர்களின் கற்பனை ஆற்றலைத் தூண்டுவது ஆசிரியரின் நோக்கமாக இருத்தல் வேண்டும்.

• அழகுணர் ஆற்றலை வளர்த்தல்

படைப்பாளர்கள் தங்கள் கற்பனை ஆற்றலால் அழகுக் காட்சியைக் காண்கின்றனர். அந்த அழகுணர்ச்சியை நம்மையும் மனக்கண்ணால் காணச் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, பாரதிதாசன் அந்திப்பொழுதில் வான் மேகத்தின் இடையில் மிதந்து செல்லும் நிலவைக் கண்டார். அவர் கண்ட காட்சியைக் கற்பனை நயத்துடன் பாடிய சுவைமிகு பாடலைக் காண்போம்.

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து

நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை! உன்

கோல முழுதும் காட்டிவிட்டால் காதல்

கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்

சோலையிலே பூத்த தனிப்பூவோ நீ தான்!

சொக்க வெள்ளிப் பால்குடமோ, அமுத ஊற்றோ?

காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்

கனல் மாறிக் குளிர் அடைந்த ஒளிப்பிழம்போ!

(பாரதிதாசன் கவிதைகள், புரட்சிக்கவி ப,20)

இவ்வாறான பாடல்களை மாணவர்களின் வயதிற்கும் ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்து கற்பிக்க வேண்டும். மாணவர்களிடம் அழகுணர்ச்சியை ஏற்படுத்துதல் வேண்டும். இவற்றைக் கற்பிக்கும்போது கற்பனை எது? அழகுணர்ச்சி எது? எனப் பகுத்துப் பார்க்கும் திறனையும் வளர்த்தல் வேண்டும்.

கற்பனையில் உதிப்பது கவிதை; அந்தக் கவிதையில் மிதப்பது அழகுணர்ச்சி. கற்பனையும் அழகுணர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை; இயைந்தவை. இவற்றின் தரம் குறைந்தால் கவிதையின் சிறப்புக் குறையும்.

• எழுதும் திறனை வளர்த்தல்

எழுதும் திறன் (writing skill) என்பது வாழ்க்கைத் திறன்களில் ஒன்றாகும். இத் திறனை ஒருவர் எக்காலத்திலும் வளர்த்துக் கொள்ளலாம். இளமைப் பருவத்திலும் எழுதும் திறன் வளரும்; முதுமைப் பருவத்திலும் மலரும். வயது ஒரு தடையல்ல. எழுத வேண்டும் என்ற ஆர்வம் வேண்டும். எதை எழுத வேண்டும் என்ற நோக்கம் வேண்டும். யாருக்காக எழுதுகிறோம் என்பதில் ஒரு புரிதல் வேண்டும்.

பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எழுதும் திறனில் வளர்ச்சி காண முடியும். உழைப்பின்றி உயர்வில்லை. எழுதும் கலை என்பது ஒருவரது படைப்பாற்றலுடன் (Creativity) தொடர்புடையது. ஒருவரது எழுத்து வளரும்போது படைப்பாற்றல் வளர்கிறது. படைப்பாற்றலின் ஒரு பகுதியாக எழுதும் திறனும் அமைந்துள்ளது. நேரில் கண்ட ஒரு நிகழ்வைக் கட்டுரையாகவும் எழுதலாம்; கதையாகவும் எழுதலாம்; நாடகமாகவும் ஆக்கலாம் ஏன், கவிதையாகவும் கூட எழுதலாம்.

மனத்தில் தோன்றிய எண்ணங்களைக் (Thoughts) காட்சிப் படிமங்களை (Visual images) உணர்ச்சிகளை (Feelings) எழுத்து வடிவில் கொண்டு வருவது ஒரு கலை. அதற்குத் தனித் திறமை இருக்க வேண்டும்.

சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் எழுத எழுத எழுத்துத்திறன் வளரும். எழுத்தால் உயர்வு வரும். எழுத்து வித்தையைப் பயிலப்போவது உங்கள் விரல்கள் மட்டுமல்ல; மனமும்தான்! உங்களுக்கு எழுதும் திறன் இருந்தால் போதும், உங்கள் விரல்கள் வெட்டப்பட்டிருந்தாலும் எழுத முடியாமல் கட்டப் பட்டிருந்தாலும் வாய்ச் சொற்களில் எழுத்து மலர்கள் பூக்கும்!

'இழந்த சொர்க்கம் (Paradise Lost)' எழுதியபோது மில்டனுக்குப் பார்வை இல்லை. விழிகளில் ஒளியில்லை எனினும் அவரின் எழுத்துகள் மின்னின. அவருடைய அருமை மகளின் உதவியோடு, 'இழந்த சொர்க்கம்' தோன்றியது.

மாணவர்களிடம் படைப்பாற்றலை வளர்க்கப் பல்வேறு பயிற்சிகளைத் தரலாம்.

தலைப்புத் தருதல்

ஏதேனும் ஒரு தலைப்பை மாணவர்களுக்குக் கொடுத்து, அவர்களைக் குழுக்களாகப் பிரித்துச் சிந்திக்கச் செய்யலாம். ஒவ்வொரு குழுவும், அது முடிவு செய்யும் வடிவத்தில், அத் தலைப்புத் தொடர்பாக, ஒரு படைப்பைக் குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட பக்கங்களுக்குள் அளிக்கவேண்டும் என அறிவுறுத்தலாம். அவற்றை வேறு ஒரு சமயத்தில் வகுப்பில் படித்துக் காட்டி மற்றவர் கருத்தறியச் செய்யலாம்.

குறிப்புகள் தருதல்

குறிப்பிட்ட ஒரு சிக்கலைக் குறிப்புகளாக மாற்றி மாணவர்க்குத் தரலாம். அவற்றை வெவ்வேறு குழுவினர் படைப்பாக மாற்றி வகுப்பில் வெளியிட வேண்டும். முன்போலப் பிறர் கருத்தறிந்தபின் செழுமைப்படுத்திக் கொள்ளலாம்.

முடிவுகூறச் செய்தல்

கதைகளின் முடிவை வெளியிடாமல் பொருத்தமான முடிவுகளைக் குழுவாகச் சிந்தித்து வெளியிடக் கூறலாம்; சிறந்த முடிவுகளைப் பாராட்டலாம்.

முடிவை மாற்றச் செய்தல்

கதையின் முடிவை விவாதிக்கச் செய்தல். இருக்கும் பழைய முடிவை மாற்றிவிட்டுப் புதிதாக ஒவ்வொரு குழுவும் ஒரு முடிவை வெளியிடச் செய்யலாம். புதிய முடிவுகளுள் சிறந்த ஒன்றை மாணவர்களே தேர்ந்தெடுக்கச் செய்யலாம். சிறந்த முடிவாக அமைந்ததற்கான காரணங்களை விளக்கச் செய்யலாம். சிறந்த முடிவைத் தேந்தெடுத்த குழுவினரையும் விளக்கம் அளித்த மாணவர்களையும் பாராட்டலாம்.

வடிவம் மாற்றுதல்

கதை வடிவில் உள்ளவற்றை நாடகம், கவிதையில் செய்யுள் வழக்கு, புதுக்கவிதை, உரையாடல் போன்றவையாக மாற்றச் செய்யலாம். ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு வடிவத்தை எடுத்துக் கொள்ளலாம்.

வகை மாற்றுதல்

ஒரே வடிவத்தில் அதன் வகைகளுக்குள் மாற்றம் செய்யச் சொல்லலாம். எடுத்துக் காட்டாக, யானை என்னும் தலைப்பில் ஒரு குழு விளக்கக் கட்டுரை எழுதலாம்; மற்றொரு குழு தன் வரலாறு கூறுதலாக எழுதலாம்; வேறொரு குழு உரையாடலாக எழுதலாம். இப்படி ஒரு வடிவத்திற்குள்ளேயே அதன் வகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதச் செய்யலாம்.

ஈற்றடி தருதல்

இது செய்யுள் வடிவத்திற்கு ஏற்ற செயல்பாடு. ஒரு பாடலின் ஈற்றடியைக் கொடுத்து விட்டு, அதற்கேற்றவாறு பிற அடிகளை எழுதப் பழக்கலாம்.