முகப்பு

2.1 மொழிப்பாடத்தில் படைப்பாற்றலின் இன்றியமையாமை

மொழிப்பாடத்தில் படைப்பாற்றலின் இன்றியமையாமை

மொழியில் புதிய புதிய உத்திகளில் மனித உறவுகளைச் சொற்களுக்குள் கொண்டுவருதலைப் படைப்பாற்றல் என்று கூறலாம். நடைமுறையில் உள்ளதைவிட மேம்பட்ட நிலையில் புதிதாக ஒன்றை வெளிப்படுத்தலே படைப்பாற்றல் என்று கூறுவர்.

மொழிப்பாடத்தினைப் பயிலும் மாணவன், மொழியினைக் கற்று திறம்பட விளங்குகின்றான், அல்லது அம்மொழியில் சிந்திக்கின்றான் என்று அறிவதற்கு அவன் மொழியை வெளிப்படுத்தும் நிலையினைக் கொண்டு அறிய இயலும்.

இவ்வகையில் மொழியாசிரியர் அனைவரிடமும் படைப்பாற்றல் திறன் உள்ளது என்பதனை அழுத்தமாக உணர வேண்டும். மொழியாகப் படைப்பாற்றலை மாணவர்களிடம் வளர்க்கும் கடமை அவருக்குரியது ஆகும். மொழியினைக் கற்பிப்பதன் நோக்கமே அடிப்படைத் திறன்களையும் உயர்திறன்களையும் ஒருசேர மாணவர்பெறத் தூண்டுவது அல்லது துணை நிற்பது என்பதாகும்.

மொழியினைக் கற்பிக்கும் ஆசிரியர் சில வழிகளைக் கவனித்து படைப்பாற்றலை வளர்க்க உதவ முடியும். அவை முறையே,

  • சூழ்நிலை
  • ஆயத்த நிலை
  • தகவல்களைத் திரட்டல்
  • நெகிழ்ச்சி X இறுக்கம்
  • குழுச்சிந்தனை
  • திறனாய்வு
  • மனப்பான்மையும் உணர்ச்சியும்
  • உத்திகளும் நுட்பங்களும்
• சூழ்நிலை

மாணவர் எந்தப் பகுதியிலிருந்து, எந்தச் சூழ்நிலையிலிருந்து வருகிறார்கள் அல்லது வளர்கிறார்கள் என்பதை மொழி ஆசிரியர் அறிந்திருந்தால் அது மாணவரின் படைப்பாற்றலை வளர்க்க உதவியாக இருக்கும். மாணவர்கள் வாழ்கின்ற கிராம, நகரச் சூழல், மகிழ்ச்சியான மகிழ்ச்சியற்ற சூழல், மூத்த, இளைய குழந்தையாக வளர்ந்த சூழல் ஆகியவற்றை மனத்தில் கொண்டு ஆசிரியர் பட்டியல் ஒன்றைத் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

எந்தெந்த மாணவர் எந்தெந்தச் சூழலில் இருப்பர் என்பதையும் அவர்கள் சந்தித்த சிக்கல்கள் என்னென்ன என்பதையும் அவற்றை அவரகள் தீர்த்த முறைகள் யாவை, கண்ட தீர்வுகள் யாவை என்பனற்றையும் பட்டியலில் குறித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சந்தித்த சிக்கலைக் கதையாகயாட்டாக, வெவ்வேறு வடிவங்களில் மாணவரின் ஆர்வத்திற்கேற்ப எழுதச் சொல்லித் தூண்டலாம்.

• ஆயத்த நிலை

ஆயத்த நிலையில் இல்லாதபோது எந்த ஒரு செயலையும் சிறப்பாகச் செய்ய முடியாது. அதற்குப் படைப்பாற்றலைலும் விதிவலக்கன்று. முன்பு கூறியதுபோல் சிக்கலுக்கான தீர்வு என்பது படைப்பாற்றலின் அடித்தளம். எனவே மாணவர்கள்ச் சிக்கலைச் சந்திக்க ஆயத்தப்படுத்த வேண்டியது ஆசிரியர் கடமை.

சிக்கலுக்கான சூழ்நிலையைச் சொல்லி மாணவர் அந்த நிலையில் இருந்தால் என்ன செய்வர் எனக் கேட்டறியலாம்.

சிக்கல் வந்த பிறகு அதனைத் தீர்க்கவழி காண்பதைவிடச் செயற்கையான சிக்கலை உருவாக்கி, அல்லது கற்பனை செய்து அதற்கு என்ன தீர்வு அளிக்கலாம் என்பது ஒரு பயிற்சியாக அமைந்து மாணவரைச் சிக்கல் தீர்ப்பதற்கான ஆயத்த நிலைக்குத் தயாராக்கும்.

• தகவல்களைத் திரட்டல்

எல்லாவற்றையும் கூர்ந்து நோக்குதல், அவற்றை மனத்தில் பதிந்து வைத்தல், பிறர் சிந்திக்காத கோணத்தில் வெவ்வேறு தகவல்களை ஒன்றொடு ஒன்று பொருத்திக்காட்டல், அவற்றை வரிசைப்படுத்தி அழகுபடுத்தி வெளியிடல் ஆகியன படைப்பு உருவாக்கல் முறைகளாகும். அதனால்தான்

கவிதை என்றால் என்ன என்பதற்குச் “சிறந்த சொற்கள் சிறந்த வரிசையில் அமைதல்” (The best words in the best order) எனக் கூறுகின்றனர். கூர்ந்து நோக்கித் தகவல்களைச் சேர்த்து வைக்கவில்லை என்றால் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்க வழியில்லை. எனவே தகவல்களை முடிந்தவரைச் சேர்த்தல் என்பது சிறந்த படைப்பாற்றலுக்குவழி வகுக்கும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். தகவல்களைச் சேகரித்தல் என்பது ஆழ்ந்த கவனித்தலில் வருவது என மாணவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

• நெகிழ்ச்சி X இறுக்கம்

நெகிழ்வுத் தன்மை என்பது படைப்பாற்றலுக்குத் தேவையான ஒன்றாக உள்ளது. இறுக்கம் என்பது ஒரு மனத்தடை. இந்த இறுக்கமானது மனத்தில் தகவல்கள் பதிவதையோ புதிய சிந்தனைகள் தோன்றுவதையோ அனுப்பதில்லை.

படைப்பு என்பது பல்வேறு வாய்ப்புகளைச் சீர்த்தூக்கிப் பார்த்து ஆராய்ந்து ஏற்புடைய ஒன்றைக் கொடுப்பதாகும்.

எனவே மாணவர் எதையும் ஏற்கும் நெகிழ்வு மனம் கொண்டவராக உருவாக்கப்பட வேண்டும். தாம் போகும் வழியே சரி என்று முரட்டுப் பிடிவாதம் பிடிப்பவராக மாறிவிடக் கூடாது.

• குழுச்சிந்தனை

நெகிழ்வு பெற்றிருப்பதால் எதையும் ஏற்கவும் சரி பார்க்கவும் மனம் தயாராக இருக்கிறது. தன் முடிவைக் கொடுக்க வேண்டும் என்பதைவிடச் சரியான முடிவைக் கொடுக்க வேண்டும் என்பதிலேயே நெகிழ்ச்சியான ஆர்வம் காட்டுகிறது.

சரியான முடிவு என்பது பிறர் கருத்தோடு ஒப்பிடுவதால் மட்டுமே கிடைக்கும். எனவே படைப்பாற்றலுக்கும் குழுச் சிந்தனை தேவைப்படுகிறது.

சில சமயங்களில் குழுச் சிந்தனையில் வலிமை மிக்க மாசவர்கள் திணிப்பு அல்லது ஆளுமை ஏற்பட வழியுள்ளது. ஆசிரியர் இவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

• திறனாய்வு

’சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல்’ என்பார் திருவள்ளுவர். நிறைகளை மட்டும் போற்றுவதோ, குறைகளை மட்டும் கூறிக் கொண்டிருப்பதோ திறனாய்வாகாது. நிறைகுறை இரண்டையும் தன் முடிவிலும் பிறர் முடிவிலும் காணும் பொதுமை வேண்டும்.

இந்தத் திறனாய்வு, சரியான முடிவை எடுக்கத் தூண்டும். சரியான முடிவு என்பது சிறந்த படைப்பின் அடையாளம். மாணவர்களுக்கு எந்தக் கருத்தையும் திறனாய்வு செய்ய வாய்ப்பளிக்க வேண்டும்.’நான் சொல்கிறேன் நீ கேள்’ என்ற மனப்பான்மை மாற வேண்டும்.

• மனப்பான்மையும் உணர்ச்சியும்

சில சமூக மனப்பான்மை படைப்பாற்றலைப் பாதிக்கின்றது. ஆண்கள் இதைச் செய்யலாம், இதைப் பேசலாம், பெண்கள் செய்யவோ, பேசவோ கூடாது என்பதும் மாறாகப் பெண்களுக்கு உரியன் இவை என்று பிரிப்பதும் சமூக நிகழ்வுகளாகவுள்ளன. இவற்றால் ஏற்படும் மனப்பான்மைகள் படைப்பை ஏதோ ஒரு வகையில் பாதிக்கின்றன.

படபடப்பான மனநிலை படைப்பாற்றலைத் தடை செய்வதை, கருத்தோட்டத்தைத் தடை செய்வதைக் காணலாம். கோபம், வெறுப்பு, எதிர்ப்புணர்ச்சி போன்றவையும் படைப்பாற்றலை ஊக்கப்படுத்தா. இத்தகைய உணர்ச்சிகளுக்கு ஆட்பட்ட ஒருவர் படிப்படியாகப் படைப்பாற்றலை இழக்கிறார். மனிதநேயத்தை இழக்கிறார். எனவே உயர்வு, தாழ்வு மனபான்மைகள், கோபதாப உணர்வுகள் கட்டுபடுத்தப்பட வேண்டியன என்பதையும் படைப்பாற்றலைத் தடைசெய்வன என்பதனையும் மாணவர்க்கு அறிவுறுத்துவது ஆசிரியர் பணியாகும்.

• உத்திகளும் நுட்பங்களும்

படைப்பாற்றலைச் சிறப்பாக வெளிப்படுத்துவன உத்திகளும் நுட்பங்களும் ஆகும். மிகப்பெரிய பாறையை உருட்டிச் செல்ல வேண்டும். அதற்குப் பலரின் மனித உழைப்பும் தேவை.

பண்படாத ஒரு பாமரனின் படைப்பிற்கும், பண்பட்ட தேர்ந்த படைப்பாளியின் படைப்பிற்கும் உள்ள வேறுபாடு அதனை வெளிப்படுத்தும் உத்தியிலும் நுட்பத்திலுமே அடங்கியுள்ளது.

ஆசிரியர் மாணவர்களுக்குப் படைப்பாற்றலின் தொழில் இரகசியமான உத்தியையும் நுட்பத்தையும் கற்பித்து பண்படா நிலையில் வெளிப்படும் அவர்களது படைப்பாற்றலைச் செம்மைப்படுத்த வேண்டும்.

இலக்கியம் என்பது படிப்போரை இன்புறுத்தி அறிவுறுத்துவது ஆகும். இலக்கியமானது, சிறந்த கருத்துகளைச் சிறந்த சொற்களின் மூலம் சிறப்பான முறையில் வெளிப்படுத்துவதாக அமையும். அதற்கு ஏற்ப சொல்நயம், பொருள்நயம், ஓசைநயம், அணிநயம், யாப்பு அமைதி, கற்பனைநயம் முதலான பல நயங்களைக் கொண்டு விளங்கும். இவற்றைப் படித்து மகிழ்வதும் உள்ளக் கிளர்ச்சி பெறுவதும் அவற்றின் வழியாகப் படைப்பாற்றலைப் பெருக்குதலும் தாய்மொழி கற்பித்தலின் நோக்கமாக அமைகிறது.

முன்னர்க் கண்டவற்றை, அனுபவத்தால் பெற்றவற்றை மீண்டும் மனக்கண் முன்னிறுத்தி உணர்தலைக் கற்பனை எனலாம். இத்தகைய கற்பனைத் திறனை மாணவர்களிடம் வளர்த்தால், இலக்கிய ஆர்வம் பெருகுவதோடு அவர்களின் படைப்பாற்றல் வளரும். மேலும், சிறந்த இலக்கியங்களைப் படிப்பதால் மாணவர்கள் அழகுணர்ச்சியைப் பெறுவர். அழகுணர்ச்சியை வெளிப்படுத்தத் தெரிந்தோர் படைப்பாற்றலிலும் சிறந்து விளங்குவர் என்பதில் ஐயமில்லை.

ஒரு படைப்பானது அனுமானம், காட்சி, அனுபவம் என்கிற வகையில் புனைவின் மொழியாக நிகழ்கிறது. தொடர்புபடுத்திக் கற்றல் (Learning by Association), உற்றுநோக்கிக் கற்றல் (Learning by Observation), அறிவு சார்ந்த கற்றல் (cognitive Learning) போன்ற கற்பித்தல் அணுகுமுறைகளைப் படைப்புத் திறன் உருவாக்கத்தோடு ஒப்பிட்டு நோக்கலாம். ஏனெனில் இவ்வணுகுமுறைகள் அனைத்தும் படைப்பாக்கத்துடன் தொடர்புடையதாக அமைகிறது.

கற்றல் என்பது வகுப்பறையில் எழுத்துகளை, சொற்களை, தொடர்களைக் கற்றல் என்பதுடன் நின்றுவிடக் கூடாது. மொழிப் பாடத்தில் கற்றல் என்பது நடத்தையில் (Behaviour) அனுபவத்தில் (Experience) மாறுதலை ஏற்படுத்துவதாக அமைதல் வேண்டும். இம்மாற்றம் புதியதாக ஒன்றனை உருவாக்குவதற்கு உரமிடுவதாய் அமைதல் வேண்டும். எந்த ஒன்றனைக் கற்றாலும் அதனில் புதிய கோணம் ஒன்றனை உருவாக்கிச் சிந்தித்தல் வேண்டும். அத்தகு சிந்திக்கும் திறனை மாணவர்களிடம் உருவாக்குதல் வேண்டும்.

விடுகதைகள், பழமொழிகள், கதைப்பாடல்கள் என வடிவங்கள் பல உள்ளன. இவ்வகைப் படைப்புகளில் படைப்புக் கற்பனை (Creative imagination) வெளிப்படுவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக,

ஒரு குப்பியில் (பாட்டில்) இரண்டு தைலம் (எண்ணெய்)அது என்ன? எனக் கேட்கும்போது அவ்வரிகளுக்கான விடையினை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொள்கிறோம். ஒரு குப்பியில் இரண்டு தைலம் என்பது நமது கற்பனைக்குச் சவால் விடுகிறது. இப்புதிரை அவிழ்ப்பதற்கான பதிலை ஒவ்வொன்றாகச் சொல்லிப் பார்த்து கண்டுபிடிக்க முயல்கிறோம். இறுதியில் இதற்கான விடை ’முட்டை’ என்று தெரிந்ததும் நமது உணர்வு வியப்பால் உந்துகிறது. முட்டைக்குள் வெள்ளைக் கருவும், மஞ்சள்கருவும் ஒன்றாக இருக்கிறது. ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டும், ஒரே தருணத்தில் இணைந்தும் பிரிந்தும் இருப்பது அதிசயத்தின் முடிச்சை அவிழ்க்கிறது எனலாம்.