முகப்பு

2.2 வகுப்பறைச் சூழலும் படைப்பாற்றல் வெளிப்பாடும்

வகுப்பறைச் சூழலும் படைப்பாற்றல் வெளிப்பாடும்

வகுப்பறை என்பது செங்கற்சுவர்கள் கொண்ட அறைதான். ஆனால் அந்த அறை வருவோரை ஈர்க்கும் சூழல் கொண்டதாக அமைய வேண்டும். வகுப்பறைத் தோற்றம், தூய்மை, வெளிச்சம், காற்றோட்டம், உட்புற அமைப்பு ஆகிய அனைத்து அழகுணர்ச்சியையும் வெளிப்படுத்துவதாக இருத்தல் வேண்டும்.

வகுப்பறைச் சூழல் என்பது நேரிடையாக மாணவர் கற்றல், சிந்தனை, கற்பனை, சிக்கலுக்குத் தீர்வு, அனுபவம் பகிர்வு, முடிவு எடுத்தல், ஆசிரியர் கற்பித்தல், ஆர்வமுட்டுதல், பாடப்பொருள் பயிற்றுவித்தல், செய்முறை /செயல் வழிகாட்டுதல், பயிற்சி, விளைவுகள், மதிப்பிடுதல் ஆகிய செயல்களுக்கான வளங்களை உள்ளடக்கியது.

ஆசிரியர் கற்பித்தல் முறை

வகுப்பறையில் ஆசிரியர் மட்டுமே கற்பிப்பார் என்ற நிலை மாறியுள்ளது. ஒலி, ஒளிக்கருவிகள், கணினி போன்ற தொழில்நுட்பக் கருவிகள் நிறைந்து காணப்பெறுகின்றன. இச்சூழல் மாணவர்களின் சிந்தனை, கற்பனை வளத்தைத் தூண்டுவதோடு படைப்பாற்றல் திறனையும் வளர்க்கின்றன. ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தல் முறை அமைதல் வேண்டும். ஒரு பாடத்தைக் கற்பிக்கும்போது, அதன் பாடப்பொருளில் மட்டுமே கவனம் செலுத்தாது, அதன்மூலம் குழந்தைகளின் சிந்தனைத் திறனைத் தூண்டுதல் வேண்டும்.

எ.கா :

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா

குருவி கொண்டைக்குப் பூ கொண்டு வா

கொக்கே குழந்தைக்குத் தேன் கொண்டு வா

கிளியே கிண்ணத்தில் தேன் கொண்டு வா

இந்தக் குழந்தைப்பாடலின் வரிகளைக் கவனித்துப் பாருங்கள். இந்த வரிகளிலிருந்து சில பறவைகள் சிறகடித்துப் பறக்கின்றன. காகம், குருவி, கொக்கு, கிளி என்னும் பெயரில் அமைந்த பறவைகள் குழந்தைகளுக்கு அறிமுகம் ஆகின்றன. அந்தப் பறவைகளின் நிறங்கள் நினைவலைகளுக்குத் தாவுகின்றன. கறுப்புநிறம் (காக்கா), தவிட்டு நிறம் (குருவி) வெள்ளை நிறம் (கொக்கு), பச்சைநிறம் (கிளி) என நிறங்களின் உலகமாக கண் முன்னே விரியும். இவ்வாறு சொல்லிக்கொண்டே செல்லலாம். பாடலின் வரிகளிலிருந்து உருவாகும் பரந்துபட்ட அறிவினை இங்குக் காணலாம். இத்தகையதான அறிதல்முறையே குழந்தைகளின் படைப்புத் திறனை வளர்க்கும் வழியை உருவாக்கும்.