முகப்பு

2.5 படைப்பு வடிவ மாற்றம்

படைப்பு வடிவ மாற்றம்

மொழியில் ஓர் அமைப்பில் உள்ள படைப்பினைத் தேவைநோக்கி, பிறிதொரு வடுவத்திற்கு மாற்றுதல் வடிவமாற்றம் ஆகும்.

ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் கொடுக்கப்பட்ட செய்தியை உரையாடல், விளம்பரம், கதை போன்ற பிற வடிவங்களில் எழுதுவது படைப்பாற்றலை வளர்க்கும் செயல்பாடாகும். கீழ்க்காணும் பயிற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தி அவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தல் வேண்டும்.

  1. உரையாடலைச் செய்தியாக்கல்
  2. கட்டுரையை உரையாடலாக்கல்
  3. செய்தியைக் கவிதையாக்கல்
  4. செய்தியைக் கதையாக்கல்
  5. செய்தியை விளம்பரமாக்கல்
  6. செய்தியை அறிவிப்பாக மாற்றுதல்
  7. செய்தியைக் கடிதமாக்கல்
  8. கவிதையை உரையாடலாக்கல்

ஓர் இலக்கிய வடிவத்தினை மற்றொரு இலக்கிய வடிவமாக மாற்றும்போது கீழ்க்காணும் கூறுகளைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

  • எந்த வடிவத்தில் உள்ள செய்தியை எந்த வடிவமாக மாற்றப் போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும்.
  • மையக் கருத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.
  • செய்திகளைத் திரட்டிக் கொள்ள வேண்டும்.
  • எந்தக் கருத்தும் விட்டுப்போகாமல் செய்தியை முழுமையாகக் கூறவேண்டும்.
  • கவிதை எனில் சுருங்கக் கூறி விளங்க வைத்தல் வேண்டும்.
  • கட்டுரை, உரையாடல் போன்ற வடிவமெனில், மேற்கோள்கள், பழமொழிகள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றையும் விடாது செய்தியமைத்தல் வேண்டும்.

ஒரு பொருளைப்பற்றி ஒன்றுக்கு மேற்பட்டோர் கூடிக் கலந்து உரையாடுவது உரையாடல் எனப்படும்.

எ.கா:
கீழ்க்காணும் உரையாடலைச் செய்தியாக மாற்றுதல்
கபிலன் அம்மா! அம்மா! அங்கே பாருங்கள்! ஒரு நாய்க்குட்டி கத்திக் கொண்டிருக்கிறது.
அம்மா கபிலா! பாவம், இந்த நாய்க்குட்டிக்குக் காலில் அடிபட்டு இரத்தம் கொட்டுகிறது.
கபிலன் அம்மா! இதை யாரோ கல்லால் அடித்திருப்பார்கள் போலிருக்கிறதே!
அம்மா அடிபட்ட இதனுடைய வலியும் வேதனையும் அடித்தவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது? இரக்கமற்ற இத்தகைய கொடுஞ்செயல்களைச் செய்வது பாவமல்லவா?
கபிலன் ஆம், அம்மா! ஒருமுறை என் நண்பன் சின்னப்பன் விளையாட்டாக ஒரு நாயைக் கல்லால் அடிக்கப் போனான். நான் அவனைத் தடுத்து, 'இது தவறான செயல். நாயும் நம்மைப்போல் ஓர் உயிர் தான் . என்று கூறித் திருத்தினோன்..
அம்மா நல்லது செய்தாய்! இப்பொழுது நாம் இந்த நாய்க்குட்டிக்கு நம்மாலான உதவியைச் செய்வோம்!
கபிலன் அம்மா! எங்கள் பள்ளிக்கு அருகில்தான் 'அரசு கால்நடை மருத்துவமனை' உள்ளது. நான் நாய்க்குட்டியை அங்குக் கொண்டுசென்று சிகிச்சை செய்து வரட்டுமா?
அம்மா நல்லது கபிலா! அவ்வாறே செய். நீ பாதுகாப்பாகச் சென்று விரைவில் வீட்டிற்குத் திரும்பிவிடு,
கபிலன் நன்றி அம்மா! (கபிலன் நாய்க்குட்டியை எடுத்துக்கொண்டு கால்நடை மருத்துவமனைக்குச் செல்கிறான்.)

இந்த உரையாடலை செய்தியாக்கும் பொழுது இதில் காணப்படும் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தி, வெளிப்படும் உணர்ச்சி அமையுமாறு உரைநடை வடிவத்தில் தரும்போது அவ்வுரைநடை கீழ்க்கண்டவாறு அமையும்.

கபிலன், அவன் வீட்டினருகே ஒரு நாய்க்குட்டியைக் கண்டான். அதனைத் தனது தாயாரிடம் காண்பித்தான். அதன் காலை எவரோ அடித்துக் காயப் படுத்தியிருந்தனர். இரக்கமற்ற இந்தக் கொடுஞ்செயலினால் காயத்தின் வலியும் வேதனையும் தாளாமல் அந்நாய்க்குட்டி கத்திக் கொண்டிருந்தது. இதனைக் கண்டு கபிலனும் அவன் தாயாரும் வருந்தினர். கபிலன், தாயாரிடம் ஒருமுறை தனது நண்பன் சின்னப்பன் விளையாட்டாக ஒரு நாயைக் கல்லால் அடிக்க முற்பட்டதையும் தான் தடுத்து, 'இது தவறான செயல்; நாயும் நம்மைப்போல ஓர் உயிர்தான்' எனச் சுட்டிக்காட்டியதையும் கூறினாள். பின்பு, அடிபட்ட நாய்க்குட்டியை அரசுக்கால்நடை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றான்.

கட்டுரையை உரையாடலாக்குதல் ஒரு தனித்திறன், உரையாடல் அமைப்பவருக்கு நாடகச் சுவையுணர்வும் கற்பனை யாற்றலும் பெரிதும் தேவை.

எ.கா:

கீழ்க்காணும் கட்டுரையை உரையாடலாக மாற்றுதல்

கட்டுரை
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

முன்னுரை

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது பழமொழி. மருந்துக் கடைகளைப் பார்க்கும்போது எவ்வளவு மருந்துகள் எனும் வியப்பு ஏற்படுவதற்குப் பதிலாக எவ்வளவு நோய்கள் என்னும் அச்சமே அதனால்தான். இராமலிங்க அடிகளார் இறைவனிடம், 'நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும்' என்று வேண்டிக்கொண்டார். இந்த நோயற்ற வாழ்வைப்பற்றி இக்கட்டுரையிற் காண்போம்.

குறைவற்ற செல்வம்

செல்வம் என்பது யாது? பணம், காசு, நகைநட்டு, வீடுவாசல், தோட்டந்துரவு, மாடு மக்கள், கல்வி கேள்வி ஆகியன செல்வங்களாகக் கருதப்படுகின்றன. நடமாட முடியாத அளவுக்கு நோயில் விழுந்து கிடப்பவர்க்கு இவற்றால் என்ன பயன்? அவருக்கு எந்த உணவும் ஒத்துவராது. பசி எடுக்கிறது; உணவு இருக்கிறது. ஆனால், உண்ண முடியாது. உண்டாலும் ஒத்துக் கொள்ளாது என்றால், அவர் கோடிகோடியாய்ச் சொத்துக் குவித்து என்ன பயன்? பயன்படாத செல்வம் இருந்தால் என்ன? போனால் என்ன? நோயற்ற வாழ்வுதான் செல்வம்; அதுவே குறைவற்ற செல்வம் ஆகும். முதற் செல்வம்

"ஆரோக்கியமே முதற் செல்வம்" என்றார் அறிஞர் எமர்ஸன். (Wealth is Health) அனைத்துச் செல்வங்களையும் பெற்றிருந்த போதிலும், உடல்நலமில்லை என்றால் அச்செல்வங்களால் பயனில்லை. வீட்டிலிருக்கும் வேலைக்காரர், சமையற்காரர் எல்லாம் நன்றாகச் சுவைத்துச் சாப்பிடும்போது நோய்வாய்ப்பட்ட வீட்டுக்காரர் பத்தியமாகவும் பட்டினியாகவும் இருப்பார். தன்னால், அவர்களைப்போல் உண்ண முடியவில்லையே என ஏங்குவார். "இவ்வளவு செல்வம் இருந்தும், சுவையாக உண்ண முடியவில்லை; திருப்தியாக உண்ண முடியவில்லை; இந் நிலையில் செல்வமிருந்தும் இல்லாததுபோல்தானே என எண்ணுவார். ஆதலால், மற்றச் செல்வங்களைக் காட்டிலும் உடல்நலம் முதற் செல்வமாகக் கருதப்படுகிறது.

உடல் மன நலன்கள்:

நோய் வரும்வரையில் உடல்நலத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. உடல் நலத்தின் மதிப்புத் தெரிவதில்லை. நலமான உடம்பில்தான் நலமான மனம் இருக்கும் என்பது உண்மை,

முடிவுரை

உடல்நலமும் இன்பமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. உடல் நலமாக இருந்தால் இன்பமாக வாழலாம். சத்துள்ள உணவு, தூய காற்று, தூய நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் எமன் நம் எதிரே வர அஞ்சுவான். பாரதி பாடியதுபோல்,

"காலா! என் காலருகே வாடா - உனைச் சற்றே மிதிக்கிறேன்" எனத் உறுதியாகக் கூறலாம். இவற்றால், "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதை அறியலாம்.

இக்கடுரையில் நலவாழ்வினைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அச்செய்திகளை உரையாடல் மூலம் வெளிப்படுத்த பொருத்தமான கதைமாந்தர்கள் வேண்டும். நோயைப் பற்றி தெரிவிப்பதற்கான கதைமாந்தர் நோயாளி. நோயிற்கு தீர்வு தருகின்ற கதைமாந்தர் மருத்துவர். இவ்விருவருக்கிடையே நடைபெறும் தகவல் பகிர்வு உரையாடலாக அமையும்.

(மருத்துவரும் நோயாளியும்)

நோயாளி மருத்துவர் ஐயா! இரவிலிருந்து வயிற்றுவலி பாடாய்ப் படுத்துகிறது. வயிற்றுவலியைப் போக்க மருந்து தாருங்கள்.
மருத்துவர் இரவு என்ன உணவு சாப்பிட்டீர்கள்?
நோயாளி நேற்று மதியம் கொஞ்சம் சோறு சாப்பிட்டேன். இரவு சாப்பிடவே இல்லை.
மருத்துவர் ம்.. வயிற்றுப் பசிதான் உமக்கு நோய்! நன்றாகச் சாப்பிடுங்கள், எல்லாம் சரியாகிவிடும்.
நோயாளி உணவு மட்டும் போதுமா?
மருத்துவர் பசித்த வயிற்றுக்கு உணவே மருந்து; பசியாத வயிற்றுக்கு அவ்வுணவே நோய். !
நோயாளி என்ன சொல்கிறீர்கள்? உணவே மருந்தாகவும் நோயாகவும் இருக்குமா?
மருத்துவர் நிச்சயமாக! உணவை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அது வயிற்றில் சிக்கலை ஏற்படுத்தும். அளவாக உண்டால் நலமாக வாழலாம். இன்னும் சொல்லப்போனால் உடல்நலமும் சிறப்பாக இருக்கும்.
நோயாளி ஆமாம் ஐயா! மருந்துக் கடைகளை நோக்கும்போது எத்தனை எத்தனை வகையான நோய்கள்! எனும் அச்சமே ஏற்படுகிறது.
மருத்துவர் உடல்நலமே உயர்ந்த செல்வம். பணம், நகை, வீடு, வாசல், தோட்டம், மாடு, கல்வி, கேள்வி, மக்கள் எல்லாம் இருந்து என்ன பயன்? நோயுற்றால் எல்லாம் உடன் வருமா? அதனால் தான் அன்றே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனக்கூறிச் சென்றார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது வியப்பாய் இருக்கிறது, உடல்நலனும் இன்பமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. உடல் நலமாக இருந்தால்தான் இன்பமாகவாழலாம். சத்துள்ள உணவு தூய காற்று, தூய குடிநீர் நலமான வாழ்வுக்கும் நெடுநாள் வாழ்வுக்கும் இன்றியமையாதன.
நோயாளி ஆம்! உங்கள் பேச்சைக் கேட்டவுடன் "காலா! என் காலருகே வாடா - உனைச் சற்றே மிதிக்கிறேன்" என்ற பாரதியார் பாடல்தான் நினைவுக்கு வருகின்றது. உடல் நலமே முதற் செல்வமென அறிந்துகொண்டேன்.

கவிதை என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாகும். எளிய சொற்களால் ஆனது.

எ.கா:
கீழ்க்காணும் செய்தியை கவிதையாக மாற்றுதல்

படர வழியின்றித் தரையில் தவித்த முல்லைக்கொடிக்கு தன் தேரையே பாரி கொடுத்தான். இதனைச் சங்க இலக்கியத்தில் கபிலர் பாடியுள்ளார். இந்த இலக்கியக் கருத்தைச் செய்தியாகப் படித்துச் சுவைத்துக் கவிதையாக்கும்போது பாரியின் கொடையுள்ளம் வெளிப்படுகிறது. கவிதையில் உயிர்ப்பு கொடை உள்ளத்தைக் காட்டுவதாக இருக்கும்.

தரையில் படர்ந்த முல்லை

தாவிப் படர இடமில்லை

பார்த்த பாரி மன்னன்

கொடுத்தான் தேரை

கொடையால் பெற்றால் சிறப்பு.

-பி.இரத்தினசபாபதி