தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
---|
|
2.3 கவிதையும் கதையும்
கவிதையும் கதையும்
கவிதை புனைதலும் கதை எழுதுதலும் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் வாயில்கள் ஆகும்.
"உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை:
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்து உரைப்பது கவிதை"
எனக் கவிமணி தேசிகவிநாயகனார் எளியமுறையில் கவிதைக்கு விளக்கம் தருகிறார்.
இலக்கிய வகைகளில் முதலிடம் பெறுவது கவிதையே ஆகும். கவிதையின் கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம் ஆகியவற்றின் ஒருங்கமைவும், ஒழுங்கமைவும் இதற்கான காரணம் எனலாம். ‘ஒவ்வொரு கோணத்திலும் கவிதை என்பது உணர்ச்சிகளின் மொழி’ என்கிறார் வின்செஸ்டர். எந்தப் பொருளைப் பற்றி வேண்டுமானாலும் கவிதை தோன்றும். கவிதை என்பது காணும் பொருள்களை வருணிப்பதில் இல்லை; அப்பொருள்களைக் காணும்பொழுது எழும் மனநிலையில்தான் உள்ளது.
‘கவிதையில் சரியான வார்த்தைகள் சரியான இடத்தில் அமைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்துக் கோப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளைச் சரியான இடத்திற்குக் கொண்டு செல்கிறது‘ என்பார் புதுமைப்பித்தன். மேலும், ‘கவிதை, மனிதனின் உணர்ச்சியில் பிறந்த உண்மை; மனித உள்ளம் யதார்த்த உலகத்துடன் ஒன்றுபட்டோ, பிரிந்தோ கண்ட கனவு; அது உள்ள நெகிழ்ச்சியிலே உணர்ச்சி வசப்பட்டு வேகத்துடன் வெளிப்படுவது’ எனவும் உரைப்பார்.
கவிதை முருகியல் (aesthetics) உணர்ச்சியைத் தரக்கூடியது. உயர்ந்த கவிதைகள் யாவும் அவற்றில் ஈடுபட்டுப் படிப்போரிடம் கவிஞர்களின் அனுபவத்தையே பெற வைத்துவிடுகின்றன. அவர்கள் உணர்த்த விரும்பும் உண்மைகளையும் உணர்த்தி விடுகின்றன. கவிதைகளில் பெரும்பாலானவை பயிலும்போது இன்பம் தருவதுடன் உள்ளத்தைத் திருத்தும் பண்பையும் பெற்றிருப்பதால், அவை படிப்போரின் வாழ்க்கையைச் செம்மைப் படுத்துவனவாக உள்ளன.
இலக்கண நூல்களைக் கற்றும், இலக்கியங்களை இடைவிடாது படித்தும், யாப்பு விதிகளையும், ஓசை நலன்களையும் உள்வாங்கிக் கொண்டு, சீரும் தளையும் சிதையாமல் வரையறுத்த அமைப்பில் பாப்புனைவது மரபுக்கவிதை எனப்படும். இலக்கணக் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் உணர்ச்சி வெளிப்படப் பாடுவது புதுக்கவிதையாகும். இவையன்றி இசைப் பாடல்களும் (சந்தப் பாடல்கள்) கவிதை என்பதற்குள் அடங்குவனவாகும்.
கவிதை வகைமைகளில் தொன்மையானதாக அறியப்படுவது மரபுக் கவிதையாகும். தமிழில் உள்ள யாப்பிலக்கண நூல்கள் மரபுக் கவிதை இயற்றும் முறையை எடுத்துரைக்கத் தோன்றியனவேயாகும். யாப்பு வடிவத்திற்கு அடிப்படை சந்தமும் (Rhythm), தொடையும் ( Rhyme) ஆகும். சந்தம் என்பது அழுத்தமான ஓசையும் அழுத்தமில்லா ஓசையும் சீர்பட அடுக்கி வருவதைப் பொறுத்தது. அழுத்தமுள்ள ஓசையும் அழுத்தமில்லாத ஓசையும் மாறி மாறி இடம்பெறுவதால் ஒரு நயமான ஓசை பிறக்கிறது. மரபுக் கவிதைகள் ஒரு காலத்தில் இசையோடு பாடப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் இவை படிக்கப்படுவனவாக மட்டுமே அமைந்துவிட்டன. சங்க காலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரையில் தமிழிலக்கிய நெடும்பரப்பில் செங்கோல் செலுத்தி வந்த பெருமை மரபுக்கவிதைக்கே உரியது.
யாப்பிலக்கணத்திற்குக் கட்டுப்படாமல் கவிதை உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் கொடுக்கும் வகையில் உருவானதே புதுக்கவிதை. இது, வேண்டாத சொற்களைத் தவிர்த்துச் சுவை மிளிர நடைமுறைச் சொற்களால் கருத்தை உணர்த்துவதாகும். புதுக்கவிதை கி.பி. இருபதாம் நூற்றாண்டு முதல் தமிழிலக்கியத்தில் தோன்றிச் சிறந்து விளங்குகிறது. பாரதியார் எழுதிய வசன கவிதைகளே தமிழில் காணும் புதுக்கவிதை முறைக்கு முன்னோடி எனலாம்.
இருட்டு
செல்லும் வழி இருட்டு
செல்லும் மனம் இருட்டு
சிந்தை அறிவினிலும் தனி இருட்டு
சுமையகற்றிச் சுமையேற்றும்
சுமை தாங்கியாய் விளங்கும்
சுமைக்குள்ளே தானியங்கிச்
சுமையேற்றும் சும்மாடே…..
- புதுமைப்பித்தன்.
ஆசிரியர், மாணவர்களிடம் கவிதை எழுதும் ஆற்றலை வளர்க்க கீழ்க்காணும் பண்புகளைப் பெற்றவராக விளங்குதல் வேண்டும்.
- ஆசிரியர் கவிதை புனையும் ஆற்றல் உள்ளவராக இருத்தல்; அல்லது அனுபவிக்கும் ஆற்றல் உடையவராக இருத்தல்.
- கவிதை அனுபவத்தை மாணவர்க்குக் கூறி, அக்கவிதை இன்பத்தை அனுபவிக்கச் செய்தல்.
- பண்டைக் காலந்தொட்டுச் சமூக நோக்கிலும், அரசியல் நோக்கிலும் ஏனைய மருத்துவம், ஜோதிடம் போன்ற அவ்வத்துறை சார்ந்த நோக்கிலும் 'கவிதை’ பெற்றிருந்த சிறப்பிடத்தை மாணவர்க்கு உணர்த்தல்
- மரபுக் கவிதைக்கு அழகு சேர்ப்பது அக்கவிதையின் வடிவம். எனவே எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய கவிக்கூறுகளாகிய யாப்பிலக்கண அறிவை மாணவர்க்கு உண்டாக்குதல்.
- எளிய சொற்களைக்கொண்டு தாமறிந்த பொருள்பற்றிக் கவிதை புனையச் செய்தல்
- அகர வரிசையில் கவிதை எழுதச் செய்தல்.
- சங்க இலக்கியப் புலவர்கள்முதல் பிற்காலக் கவிஞர்கள்வரை பாடிய பாடல்களைப் படிக்கும் ஆர்வத்தை உண்டாக்குதல்.
- கற்றல், கற்பித்தல் சூழலில் பாடநூல்களில் உள்ள கவிதைகளை ஈடுபாட்டுடன் கற்கச் செய்து ’போலச் செய்தல்’ முறையில் மாணவர்களைக் கவிதை புனையச் செய்தல்.
- எந்தப் பொருளையும் நுணுகிப் பார்த்துச் சிந்திக்கச் செய்து அவற்றுக்குக் கவிதை வடிவம் தரச் செய்தல்.
- பள்ளி இலக்கிய மன்றங்களில் கவியரங்கம், கவிதைப் போட்டி ஆகிய நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி மாணவரைப் பங்குபெறச் செய்தல்.
- எதனைப் பற்றிக் கவிதை எழுதவேண்டும் என்ற பாடுபொருள் பற்றிய தெளிவு வேண்டும்.
- கவிதை படைப்பதற்கு மிகுந்த சொல்வளம்/ சொற்களஞ்சியம் தேவை. ஆதலால், மிகச் சிறந்த கவிதை நூல்களைப் படித்து முடிந்த அளவுக்குப் பாடல்களை மனனம் செய்து கொள்ள வேண்டும்.
- சிறந்த கவிஞர்களின் சொல்நயம், பொருள் நயம், உவமைநயம், கற்பனை வளம், சொல்லாட்சித் திறன் ஆகியவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
- ஒலிநயமிக்க சந்தப் பாடல்களை வாய்விட்டுப் படித்துச் சந்தத்தையும் தாளக் கட்டையும் மனத்தில் பதித்தால் அவற்றைக்கொண்டே கவிதை புனையலாம்.
- நகை, அழுகை, அச்சம், பெருமிதம் போன்ற உணர்ச்சிகளில் தெளிவுபெற வேண்டும்.
- ஆத்திசூடிபோல் ஒருவரிக் கவிதைகள் எழுதிப் பழகுவதைத் தொடக்கநிலைப் பயிற்சியாக மேற்கொள்ளலாம்.
- ஒப்பீடு செய்தல், உருவகப்படுத்துதல் முதலானவையும் கவிதை எழுதத் துணை செய்யுமாகலின், அவற்றில் பயிற்சி செய்யலாம்.
- அழகுணர்ச்சி, சமுதாயப் பார்வை, உற்றுநோக்குதல், சொற்பொருள் பயிற்சி, சிந்தனைத் தெளிவு ஆகிய அடிப்படைப் பண்புகளில் கவிதைத்திறன் வளர்ப்போர் பெரிதும் ஈடுபாடு கொள்ளுதல் வேண்டும்.
- தொடக்கநிலைக் கவிஞர்கள் முதலில் மரபுக் கவிதைகளில் எழுதிப் பழகுதலே நலம் பயக்கும். மரபில் வேரூன்றிப் புதுமையில் கிளை பரப்பலாம்.
- மரபுக் கவிதைகள், உரைநடைக் கவிதைகள் (புதுக்கவிதைகள்), ஹைக்கூக் கவிதைகள், குறும்பாக்கள், நறுக்குக் கவிதைகள் எனப் பலவாக வெளிவந்துள்ள கவிஞர் பலரின் படைப்புகளைப் படிப்பதால் கவிதை எழுதவேண்டும் என்னும் ஆர்வம் பெருகும். அந்த ஆர்வமே, கவிதை எழுத விழைவோர்க்குக் கருவாக அமையும். அக்கரு பின்னர்க் கவிதையாக உருவாகும்.
கீழ்க்காணும் பயிற்சிகளை மாணவர்களுக்கு ஆசிரியர் வழங்குவதன் மூலம் கவிதை எழுதும் திறனை வளர்க்க இயலும்.
- ஆளுக்கு ஓர் அடியாகச் சொல்லி ஒரு கவிதையைக் குழுவாகச் சேர்ந்து எழுதச்செய்யலாம்.
- பாடலின் பாதியைக் (முன் பாதி / பின் பாதி) கொடுத்து மீதியை எழுதச் செய்யலாம்.
- குறிப்பிட்ட பொருள்/ விலங்கு/ பறவை/ நிகழ்ச்சி/ தலைவர் குறித்துக் கவிதை எழுதச் செய்யலாம்.
- ஒரு காட்சியைக் (படம்/ நேரடிக் காட்சி/ எழுதியது) கொடுத்து அதைக் கவிதையாக்கச் செய்யலாம்.
கதை எழுத முனையும் குழந்தைகளின் முதற்படி சிறுகதை எழுதுதல். சிறுகதை, உரைநடைப் படைப்பிலக்கியத்திற்கு உரியது. 20ஆம் நூற்றாண்டின் புதுமைகளாக இது உருவாகியுள்ளது. நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், கற்பனைகள் சிறுகதைகளாக மலர்கின்றன. இக்காலப் படைப்பிலக்கியங்களுள் சிறந்ததாகச் சிறுகதை இலக்கியம் கருதப்படுகிறது. உயிராக உணர்ச்சியும், உருவமாக மொழியும் அமைந்து சிறுகதை வாழ்வு பெற்றுள்ளது. மக்களை இன்புறுத்தும் வகையிலும், அறிவுறுத்தும் வகையிலும் சிறுகதைகள் தோன்றியுள்ளன.
சிறுகதைகள் படிக்கும் ஆர்வமே சிறுகதை எழுதுவதற்கான மூல விதையாக அமையும். மேலும் கீழ்க்காணும் பயிற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டால் சிறுகதை எழுதும் திறனைப் பெறலாம்.
- சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்தல்
- கதை படித்துக் குறிப்பெடுத்தல்
- காணும் நிகழ்ச்சிகளைக் கதையாக எழுதுதல்
- பாதிக் கதையை உருவாக்குதல்
- கதையினைத் தொடங்குதல்
- கதையின் முடிவினை மாற்றுதல்
- கதையின் கருபொருளைக் கூறல்
- சிறுகதைப் போட்டிகள் நடத்துதல்
- இதழ்களில் படைப்புகளை வெளியிடுதல்
புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கு.ப.இராஜகோபாலன், கல்கி, அழகிரிசாமி, கி.வா. ஜகந்நாதன், அகிலன், முதலிய முன்னிலை எழுத்தாளர்களின் சிறு கதைகளைத் தேடிப் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அவ்வாறு செய்வாராகில் அக்கதையாசிரியர்கள் கதைக் கருவைத் தேர்ந்தெடுக்கும் முறை, அக்கதையைப் படைத்துக்காட்ட உருவாக்கும் கதை மாந்தர்கள், அம்மாந்தரைக் கொண்டு கதையை நடத்திச் செல்லும் அணுகுமுறை, அக்கதைகட்கேற்பக் கையாளும் மொழிநடை, கதைப் பொருளுக்கேற்ப அமைத்துக்கொள்ளும் கதையின் வடிவ அளவு, அக்கதைவழி அவர்கள் உணர்த்தும் வாழ்வியல் நெறிமுறைகள் முதலியவற்றை அறிந்து அவற்றைத் தம் சிறுகதைப் படைப்புகளில் பயன்படுத்த பெரும் வாய்ப்பாக அமையும்.
சிறுவர் இதழ்களில் இடம்பெறும் கதைகளைப் படித்துக் குறிப்பெடுத்தல் வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கதை பற்றிய தெளிவினை அடையலாம்.
தங்கள் வாழ்வில் அன்றாடம் கண்ட, கேட்ட நிகழ்ச்சிகளைச் சிறுகதையாக எழுத முயற்சி செய்யலாம்.
பாதிக் கதையைக் கூறி, மீதிக் கதையை மாணவரைக் கொண்டு முடிக்கச் செய்தல். கதையானது முதல் பாதியாகவோ, பின் பாதியாகவோ அமையலாம்.
வகுப்பறைச் சூழலில் ஒரு சிறுகதைக்கான தொடக்கத்தை ஆசிரியர் அல்லது மாணவர் கூற, மற்ற மாணவர் ஒவ்வொருவராக அக்கதை வளர்ந்து முடியும் போக்கில் கூறச் செய்தல் வேண்டும்.
ஏதேனும் ஒரு கதையினை முதலில் கூறுதல் வேண்டும். பின்பு அதன் முடிவினை மாணவர்களின் கருத்தோட்டத்திற்கு ஏற்ப மாற்றச் செய்யலாம்.
கதைக்கான கருப்பொருள் ஒன்றைக் கூறி எழுதச் செய்தல் வேண்டும். கதையின் கருப்பொருளில் இருந்து விலகாது கதை எழுதுவதற்கு ஏதுவாக இது அமையும்.
சிறுகதைப் போட்டிகள் நடத்தி மாணவரைப் பங்குபெறச் செய்தல் வேண்டும். போட்டி மனப்பான்மை மாணவருக்கு ஏற்பட்டால் அவர்களின் படைப்பாற்றல் திறனில் முன்னேற்றத்தைக் காணலாம்.
சிறுவர் இதழ்களில் மாணவர் தம் சிறுகதைகள் இடம்பெறுவதற்காக ஆசிரியர் நெறிப்படுத்துதல் வேண்டும். மேலும், வகுப்பறை கையெழுத்து இதழ்கள், பள்ளி கையெழுத்து இதழ்கள் ஆகியனவற்றை உருவாக்கிச் சுழற்சி முறையில் மாணவர் அனைவரையும் அவ்விதழில் சிறுகதை எழுத ஊக்குவிக்கலாம்.
மொழி ஆசிரியரின் ஈடுபாடே மாணவர்களின் படைப்பாற்றல். எனவே, கதை கூறும் ஆசிரியர் கீழ்க்காண்பனவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
- நல்ல உணர்ச்சியுடனும் உற்சாகம் ஏற்படுமாறு ஆர்வத்துடன் சொல்ல வேண்டும்.
- எளிதில் விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில், கதை நிகழ்ச்சிக்குத் தக்கபடி, முகபாவம், குரல் முதலியவற்றை மாற்றிக் கதைகள் கூற வேண்டும்.
- அளவுக்கு மீறிய உடல் அசைவுகள், குழந்தைகளின் கவனத்தைச் சிதறடிக்கும். எனவே, மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.
- குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப கதைகள் அமைதல் வேண்டும்.
- கதையைப் போலச் செய்தலின்றிச் சொந்த நடையில் கூற வேண்டும்.
- கதையில் உள்ள நீதியினைப் படங்களைப் பயன்படுத்தி விளக்கிக் கூற வேண்டும்.