எண்: 11, அழகேசன் நகர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம், 603 110. 20.07.2022 |
|
அன்புத் தோழி! நலம், நலமறிய ஆவல். நான் சென்ற வாரம் சுற்றுலாவிற்குச் சென்று வந்தேன். நான் சென்று வந்த இடம் பற்றிக் கேட்டாய் என்றால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பாய். ஆம்! உனக்குப் பிடித்த மாமல்லபுரத்திற்குக் குடும்பத்துடன் சென்று வந்தேன். பாடத்தில் படித்ததைவிட நேரில் சென்று பார்த்தது மேலும் சிறப்பாக அமைந்தது. பஞ்ச பாண்டவர் ரதம் தொடங்கி, கடற்கரைக் கோவில் வரை சென்று வந்தோம். பல்லவ மன்னன், சிற்பக்கலையின் மீதுள்ள தீராக் காதலினால் சிற்பங்களை வடித்துள்ளான். அங்குள்ள சிலைகளும் கடலலைகளும் எண்ணற்ற கதைகளைக் கூறுகின்றன. முழுவதும் சுற்றிப்பார்க்க ஒரு நாள் போதவில்லை. வாய்ப்பு கிடைப்பின் நீ தமிழ்நாடு வரும்போது நாம் இருவரும் சென்று சுற்றிப் பார்க்கலாம். உன் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் சந்திப்போம் |
|
அன்புடன், மெ. பனிமொழி. |
2.4 கட்டுரையும் கடிதமும்
கட்டுரையும் கடிதமும்
மொழியின் உரைநடை அமைப்புகளில் கட்டுரை மற்றும் கடிதம் எழுதுதல் நடைமுறை பயனுடைதாகும். அவ்வகையில் ஒரு கட்டுரையினை வடிவமைப்பது பற்றியும் கடிதத்தினை உருவாக்குவதனைப் பற்றியும் இங்குக் காணலாம்.
ஒரு பொருள் பற்றிய கருத்துகளை ஒழுங்குபடுத்திப் பொருள் செறிவோடு, விளக்கமான நடையில் எடுத்துரைப்பதே கட்டுரையாகும். ‘ஒரு பொருளைப் பற்றி இலக்கண முறையில் கட்டுரைப்பது கட்டுரை’, ‘கட்டுரையாவது வகைப்படுத்திக் கூறுதல்’, ‘உள்ளத்தில் தோன்றுவதைக் கட்டுரைப்பது கட்டுரை‘ ‘அழகு நிரம்பிய உரையைக் கட்டுரை என்கிறோம்’என்று இவ்வாறெல்லாம் அறிஞர்கள் கட்டுரைக்கு விளக்கம் தருகின்றனர்.
கோவையாகக் காரண காரியத் தொடர்பில் அழகான மொழிநடையில் அமைப்பது கட்டுரையாகும். இயற்கையில் மனத்தில் தோன்றி எழும் எண்ணங்கள் மொழியைப் பொருத்தவரையில் இருவகையில் வெளிப்படும். ஒன்று வாய்மொழி: மற்றொன்று எழுத்து மொழி. பேச்சில் வெளிப்படும் எண்ணங்கள் எழுத்து வடிவம் பெறாமல் நிலைக்க இயலாது. இவை சிறந்தனவாய், கேட்க வாய்பில்லாத பிறரும் படிக்கத்தக்கனவாய் எக்காலத்தும் நிலைப்புப் பெறத் தகுதியுடையனவாய் இருக்க வேண்டுமெனில் இவை எழுத்து வடிவம் பெறவேண்டும். எழுதி வைக்கும் பழக்கம் இல்லையேல் மனித நாகரிகம் இன்றிருப்பது போலச் சிறந்து வளர்ந்தோங்கி இருக்காது. எழுத்து மொழியால்தான் ஒரு தலைமுறையின் அறிவுச் செல்வம் அடுத்த தலைமுறைக்குப் பயன்பட வாய்ப்புண்டாகிறது. இவ்வகையில் கட்டுரை வரைதல் உயர்நிலைத் திறனாக மதிக்கப்படுகிறது.
கட்டுரையின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். எந்தப் பொருளைப் பற்றிக் கட்டுரை எழுதினாலும் அது, முன்னுரை, பொருளுரை, முடிவுரை ஆகியவற்றைக் கொண்டு விளங்கவேண்டும். முன்னுரையும் முடிவுரையும் ஒவ்வொரு பத்திக்குள் அமைய வேண்டும். முன்னுரையானது எழுதப் புகும் கருத்தை வகுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும். முடிவுரையானது சொல்லப்பட்ட கருத்துகளைத் தொகுத்துக் கூறுவதாக அமைய வேண்டும். ஒரு கட்டுரையில் முன்னுரையையும் முடிவுரையையும் படித்தாலே கட்டுரையின் சிறப்புத் தன்மை விளங்க வேண்டும்.
பொருளுரையானது எடுத்துக்கொண்ட கருத்தைப் பல வழிகளில் விளக்கிக் கூறும் பகுதி ஆகும். ஆதலின் அதைப் பல பத்திகளாகப் பிரித்து எழுதுதல் வேண்டும். எடுத்துக்கொள்ளும் பொருளுக்கு ஏற்ப உள் தலைப்புகள் பலவற்றைக் கொண்டதாகப் பொருளுரை விளங்க வேண்டும்.
கட்டுரையானது சுருக்கமாகக் கூறினால் குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றி ஒரு கட்டுக்கோப்புடன் யாவரையும் ஈர்க்கும் முறையில் அமைக்கப்படுவதைக் ‘கட்டுரை’ எனலாம். கட்டுரையானது சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நன்மொழி கூறல் முதலான அழகுகளைப் பெற்றிருக்க வேண்டும். கூறியது கூறல், மாறுகொளக் கூறல், மற்றொன்று விரித்தல் முதலானவை இல்லாமல் எழுதுதல் வேண்டும். மேலும் படைப்பாளரின் அறிவாற்றலை வெளிப்படுத்துவதோடு படிவப்பவர்களின் சிந்தனையைத் தூண்டுவதாகவும் கட்டுரை அமைதல் வேண்டும்.
கட்டுரை எழுதுவோர் கீழ்க்காணும் பொதுவிதிகளை மேற்கொள்ள வேண்டும்.
- செய்திகளைத் திரட்டுதல்
- திரட்டிய செய்திகளை முறைப்படுத்துதல்
- உரிய பக்கத் தலைப்புகள் கொடுத்துப் பத்தி அமைத்தல்
- மேற்கோள்கள், பழமொழிகள் திரட்டுதல்
- பல்வகையான தொடர்களைப் பயன்படுத்துதல்
- நடை அழகு
- நிறுத்தக் குறியீடுகள் பயன்படுத்தி எழுதுதல்
- நல்ல கருத்துகளை எடுத்தாளும் திறனுடன் இருத்தல்
- மீள் பார்வை செய்தல்
- அழகாக, தெளிவாக, உரிய வடிவத்துடன் எழுதுதல்
இவ்விதிகளைப் பின்பற்றிக் கட்டுரை எழுதினால், கட்டுரை எழுதும் திறன் செம்மையுறும்.
- கட்டுரை எழுதுவதற்குப் பொருத்தமாகக் குறிப்புச் சட்டகம் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
- கட்டுரை எழுதப் பயிற்சி அளிக்கும்போது தொடக்கத்தில் தலைப்பு அத்தலைப்புத் தொடர்பான நூல்களைப் படித்துக் குறிப்பெடுத்து வர பயிற்சி அளித்தல் வேண்டும்.
- கருத்துச் சிதையாதவாறு பத்தி பிரித்து எழுதவேண்டும்.
- மரபுத்தொடர்கள், வருணனைத்தொடர்கள், சொல்லாட்சிகள், மேற்கோள்கள் இவற்றைக் கட்டுரையோடு எழுதப் பயிற்சி அளிக்கலாம்.
- கட்டுரை எழுதுவதில் படிப்படியாகப் பயிற்சித் தருதல் வேண்டும். அதாவது, எளிமையிலிருந்து அருமை என்ற நிலையை மனத்தில் கொண்டு கட்டுரை எழுதச் செய்தல் வேண்டும்.
- கட்டுரையில் தொடர், உரைநடைப் பயிற்சி இன்றியமையாதது.
கட்டுரை எழுதுவதற்கான பயிற்சி அளிப்பதற்கு முன் வாய்மொழியாக ஒரு பொருளைப்பற்றி இலக்கணப் பிழையின்றி உரையாடுவதும் விவாதிப்பதும் இருக்க வேண்டும். வகுப்பில் ஆசிரியரும் மாணவரும் கட்டுரை எழுதுவதற்குத் தேவையான கலைச்சொற்கள், தொடர்கள், தொடக்கம், விளக்கம், முடிவு முதலியவற்றை வாய்மொழி வாயிலாக விவாதித்து அதன்பின் எழுத வேண்டும். கட்டுரை எழுதுவதற்குப் பின்வரும் படிமுறைகளில் பயிற்சி தருதல் வேண்டும்.
தலைப்பை மையமாகக் கொண்டும் அதில் இடம்பெறும் கருத்துகளை மையமாகக் கொண்டும் முன்னுரை எழுத வேண்டும். பொருளுரையை மூன்று அல்லது நான்கு சிறு தலைப்புகளாகப் பிரித்துக் கொண்டு தலைப்பிற்கேற்ற கருத்துகளை எழுதச் செய்ய பயிற்சி அளித்தல் வேண்டும். தலைப்பில் இடம்பெற்றுள்ள கருத்துகளின் தொகுப்பாக முடிவுரை இருத்தல் வேண்டும்.
அடுத்தாக மற்றவர்கள் உதவியின்றி தாமாக எழுதும் பயிற்சியைத் தர வேண்டும். மாணவர்கள் பார்த்து, கேட்டறிந்த கதை, கட்டுரைகள், படக்கட்டுரைகளின் பொருளைக் கட்டுரையாக எழுத பயிற்சியளித்தல் வேண்டும்.
ஆசிரியரின் வழிகாட்டுதலின்றி வருணனைக் கட்டுரைகள், கற்பனைக்கட்டுரைகள், கருத்தியல் கட்டுரைகள், தன்வரலாற்றுக் கட்டுரைகளைத் தாமாக எழுதப் பயிற்சி அளிக்க வேண்டும்.
மொழிப்பயிற்சியே கட்டுரை எழுதுவதற்கான சிறந்த பயிற்சியாக இருப்பதால் பழமொழிகள், பொன்மொழிகள், மரபுத் தொடர்களைக் கையாளும் பயிற்சியைத் தர வேண்டும். உடன்பாட்டு வினை, எதிர்மறை வினை, செய்வினை, செயப்பாட்டு வினை, தன்வினை, முன்னிலை வினை, ஏவல் வினை, நேர்க்கூற்று, அயற்கூற்று எனப் பலவகைத் தொடர்களைப் பத்திகளில் எழுதுவதற்குப் பழக்குவதோடு நிரல்பட எழுதும் பயிற்சியும் தந்தால் கட்டுரை எழுதும் திறன் சிறப்பாக அமையும்.
மனிதன் எழுதப் படிக்கத் தெரிந்து கொண்ட பின்பு தொலைவில் இருப்போர்க்குத் தன் கருத்தைத் தெரிவிக்கும் விதமாகப் புறாவின் காலில் கடிதத்தைக் கட்டி அனுப்பினான். அஞ்சல் தூதுவனானப் புறா பிற்காலக் கடித அஞ்சல் முறைக்கு முன்னோடியாகத் திகழ்கிறது எனலாம்.
கடிதம் உரிய வடிவுடன் பொருள் செறிவாலும் கற்பனை நயத்தாலும் சிறக்கும் போது கடித இலக்கியமாக உருப்பெறுகிறது. கடித இலக்கியத்தை முற்றிலும் உரைநடைக்கே உரியது எனக் கூறமுடியாது. காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் கடித இலக்கியத்தின் தோற்றுவாய் உள்ளது. செய்யுள் உலகிலோ சீட்டுக்கவி என அது புகழ் பெற்றது. தூது என்ற சிற்றிலக்கியம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் உள்ள தூது இலக்கியங்கள் கருத்தைப் பரிமாறிக் கொள்ளும் ஊடகத் தன்மை கொண்டுள்ள பாங்கில் கடிதத்தின் தன்மை கொண்டுள்ளதைக் காணலாம்.
கடித முறை பரவலான பின்பு உலகை இணைக்கும் தொடர்புக் கருவியாகக் கடிதம் திகழ்ந்தது. கடிதமுறை புழக்கத்தில் இருந்த கால எல்லையில், மாணாக்கர்கள் பேனா நண்பர்கள் என்னும் பெயரில் கடிதங்கள் எழுதி உலக அளவில் தங்கள் தொடர்புகளை வளர்த்துக் கொண்டனர்.
பண்டைத் தமிழ்ப் புலவர்கள் தம்மைப் புரந்த புரவலர்களுக்கு எழுதி அனுப்பிய 'சீட்டுக் கவிகள்' யாவும் பாடல் வடிவில் அமைந்த கடிதங்களே.
- தொலைவில் உள்ளவரிடம் தொடர்புகொள்ளல்.
- வாய்மொழியால் சொல்ல இயலாதவற்றை அறிவித்தல்.
- பயணச் செலவையும், காலம் வீணாவதையும் தவிர்த்தல்.
- உறவை மேம்படுத்துதல்,
- தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளல்.
- பாராட்டுகள் வழங்குதல்.
- நன்றி தெரிவித்தல்.
- உள்ளத்துணர்வை எழுத்துருவமாக்கல்,
- கற்பனையாற்றல் வளர்த்தல்.
- கோவையாக எழுதுந்திறன் வளர்த்தல்.
போன்ற பற்பல நோக்கங்கள் 'கடிதம்' எழுதுவதால் நிறைவேற்றப்படும்.
கடிதங்களை இருவகைப்படுத்தலாம். அவை,
- உறவுமுறைக் கடிதம்
- அலுவலகக் கடிதம்
இவ்விருவகைக் கடிதங்களையும் வடிவ நிலையில் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
அவையாவன: 1. முன் பகுதி, 2. உடற் பகுதி, 3. இறுதிப் பகுதி என்பன.
உறவினர், நண்பர் ஆகியோர் நலன் அறிதல், ஒருவரைப் பிறர்க்கு அறிமுகப்படுத்துதல், ஒருவர்க்கு உதவி செய்யப் பரிந்துரைத்தல், பிறர்தம் நன்மை கருதி வாழ்த்துரைத்தல், பணி வேண்டுதல், முறையீடு செய்தல் முதலிய பல்வேறு சூழ்நிலைகளில் நாம் கடிதங்களை எழுதுகின்றோம். ஆங்கிலம் முதலிய அயல்மொழிகளில் கடிதம் எழுதுதல் ஒரு தனிக்கலையாகவே வளர்ந்துள்ளது; சிறந்த இலக்கியத் தகுதியும் பெற்றுள்ளது. நேரு. தன்மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களும், பேரறிஞர் அண்ணாதுரை எழுதிய கடிதங்களும், தமிழறிஞர் மு. வரதராசனார் எழுதிய கடிதமுறை நூல்களும், 'ஆலிவர் கோல்ட்ஸ்மித்' என்பார் சீனத் தத்துவ அறிஞர் நிலையிலிருந்து எழுதிய கடிதங்களும் இலக்கிய நிலையில் உயர்தகுதி உடையவை.
இது கடிதத் தலைப்பகுதியின் வலப்பக்க மேல்முனையில் அமைவது. அனுப்புநர் பெயரைத் தவிர்த்து முகவரியை மட்டும் எழுதவேண்டும்.
இது கடிதத்தின் இடப்பக்கம் அமைவது. இதைக் கடிதம் எழுதுவோர்க்கும் பெறு வோர்க்கும் உள்ள உறவுக்கேற்ற சொற்களாக அமைக்கலாம்.
இது விளித்தொடருக்குக்கீழ் அமைவது. இதன் அளவும் பொருளும் கடிதம் எழுதுவோரின் எண்ணத்தைப் பொருத்தமையும். இனிய, எளிய தெளிவான தொடர்களாக அமைப்பது நலமாக இருக்கும். கடிதத்தைப் பெறுவோரின் அறிவுத் தகுதிக்கேற்ற மொழிநடையைப் பின்பற்ற வேண்டும். நம் மொழிப்புலமையைக் காட்டும் களமாகக் கடிதம் அமைதல் கூடாது.
இது கடிதச் செய்தியின்கீழ் வலப்பகுதியில் அமைவது. இதில் கடிதம் எழுதுவோர்க்கும் பெறுவோர்க்கும் உள்ள உறவுக்கேற்ற தொடர்கள் அமையும்.
இது வணங்கற் பகுதிக்குக்கீழ் அனுப்புநர் கையொப்பம் இடுவது ஆகும். தமிழைத் தாய்மொழியாக உடைய நாம் எவ்விடத்தும் நம் கையொப்பத்தைத் தமிழில் இடுவதே நமக்கேற்ற தகுதியாகும். இதைக் கவனத்திற்கொண்டு இளம்பருவமுதல் தமிழில் கையெழுத்திடுவதையே வழக்கமாகக் கொள்ளவேண்டும்.
கடிதம் ஒற்றைத் தாளாக இருப்பின், கையொப்பப் பகுதியின் நேர் இடப்பக்கம் கீழ்ப் பகுதியில் இது அமைவது. பெறுநரின் பெயர் உள்ளிட்ட தெளிவான முகவரியை அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் முடியுமாறு எழுதவேண்டும். அஞ்சலட்டை, அஞ்சலுறைக் கடிதமாக இருப்பின் பின்புறத்தில் கடிதம் பெறுவோர் முகவரிக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அவர் முகவரியை எழுதவேண்டும்.
உறவுமுறைக் கடிதம்
(மாதிரி)
பெறுநர்
பா. மலர்விழி,
10, திருவள்ளுவர் தெரு,
வடக்கு வர்ஜினியா மாகாணம்,
அமெரிக்கா.
அலுவலகக் கடிதம் தனியாள் கடிதமாகவும், கூட்டுக் கடிதமாகவும் எழுதும் முறை உள்ளது. இதில் தனி ஒருவருக்கு வேலைவேண்டி விண்ணப்பம், புகார் விண்ணப்பம், பொது நன்மை கருதி அரசின் உதவிவேண்டி விண்ணப்பம், துறைசார்ந்த கடிதங்கள் ஆகிய யாவும் அடங்கும்.
கடிதத்தின் தலைப்பில் இடப்பக்கம் அமைவது. அனுப்புநரின் பெயர் உள்ளிட்ட முழு முகவரியைத் தெளிவாக எழுதவேண்டும்.
இது அனுப்புநர் முகவரியின்கீழ் அமைவது. இவ்வகைக் கடிதத்தில் பெறுநர் இயற்பெயரை எழுதக் கூடாது. அவர் ஏற்றுள்ள பணித் தகுதிப் பெயரையே எழுதவேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.
இது கடிதத்தின் இடப்பக்கம் அமைவது. உறவுமுறைக் கடிதம்போல் அல்லாமல் பெறுபவரின் பணித்தகுதி மதிப்பைக் குறிக்கும் வகையில் இவ்விளித்தொடரை அமைக்க வேண்டும்.
இது விளித்தொடருக்குக்கீழ் அமைவது. கடிதத்தின் தேவையை இப்பகுதியில் ஓரிரு வரிகளில் சுருங்க உரைக்கவேண்டும்.
இது பொருள் பகுதிக்குக் கீழ் அமைவது. கடிதத்தின் பொருளில் குறிப்பிட்ட சுருக்கத்தின் விளக்கமாக இருக்கவேண்டும். இப்பகுதியில் சிலர் தம்மைப்பற்றிக் குறைத்தும் மிகைப்படுத்தியும் பெறுநரை வானளாவப் புகழ்ந்தும் எழுதுவர். இம்முறையை நீக்கி, நம் தேவையைக் காரண காரியத்தோடு உரைப்பது போதுமானது. இப்பகுதி தேவை கருதி ஓரளவு விளக்கம் பெறலாம்.
இது கடிதச் செய்திப் பகுதியின்கீழ் வலப்பகுதியில் அமைவது. அனுப்புநர்க்கும் பெறுநர்க்கும் உள்ள உண்மைத் தன்மையையும், பணிவையும் காட்டுவதாக இருக்கவேண்டும். உறவுமுறைக் கடிதம்போல அன்பைப் புலப்படுத்தக் கூடாது.
இது வணங்கற் பகுதியின்கீழ் அமைவது. அனுப்புநரின் கையொப்பம் இடம் வேண்டும். அலுவலகக் கடிதங்களில் சில நேரங்களில் குறிப்பிட்ட அலுவலர்க்குப் பதில் அவருக்குக்கீழ் பணிபுரியும் அலுவலர் ஒப்பம் இடுவதும் உண்டு.
கடிதச் செய்திக்குக் கீழும், அனுப்புநர் ஒப்பத்திற்கு நேர் இடப்பக்கமும் இது அமைய வேண்டும். இடம் முன்னும் நாள் பின்னுமாகக் குறிக்கப்படல் வேண்டும்.
(மாதிரி)
அனுப்புநர்
அ, தொல்காப்பியன்,
27. பனம்பாரனார் தெரு,
காப்பியக்குடி,
கன்னியாகுமரி மாவட்டம்.
பெறுநர்
மேலாளர்,
ஏழிசைப் பதிப்பகம்,
76, விபுலானந்தர் தெரு,
தஞ்சாவூர் மாவட்டம் 613204.
திருவையாறு.
ஐயா,பொருள்: நூல்கள் அனுப்பி வைக்க வேண்டுதல் - தொடர்பாக.
தங்கள் பதிப்பகம் தொன்மைத் தமிழ்ப் பெருநூல்கள், கல்வியியல் நூல்கள். ஆய்வு நூல்கள், படைப்பிலக்கிய நூல்கள் போன்றவற்றைச் செம்பதிப்பாக வெளியிட்டுத் தமிழ்ப்பணி ஆற்றி வருவது பாராட்டுக்குரியதாகும். அண்மையில் தாங்கள் வெளியிட்ட நூல்களின் செய்தி விளம்பரத்தை நாளேட்டில் கண்டு மகிழ்ந்தேன். அவற்றைப் பெற்றுப் படிக்க விரும்புகிறேன். எனவே, கீழ்க்காணும் நூல்களை அஞ்சல் வழியில் எனக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
- திருக்குறள்
- இலக்கிய வாழ்வியல்
- ஆத்திசூடி
- செம்மொழிக் கல்வி
இந்நூல்களுக்குரிய தொகையைத் தங்களுக்குப் பணவிடையாக அனுப்பியுள்ளேன்.
நன்றி.
இடம்: காப்பியக்குடி,
நாள் : 28.07.2022
தங்கள் உண்மையுள்ள,
அ. தொல்காப்பியன்.