முகப்பு

4.1 குறிப்பெடுத்தலும் விரிவாக்கமும்

குறிப்பெடுத்தலும் விரிவாக்கமும்

குறிப்பு-எடுத்தல் என்பது பின்னாளில் பயன்படுத்துவற்காக இன்றியமையாத தகவல்களைப் பதிவு செய்யும் முறையாகும். முறைப்படுத்தப்பட்ட முறையில், சொல் அல்லது தொடர்களில் சுருக்கமாக எழுதுவதாகும். மேடையில் கேட்கின்ற பேச்சினைப் பின்னர் தேவைக்கேற்ப விரித்து எழுதவோ, வகுப்பறையில் ஆசிரியர் கூறியவற்றை பின்னர் நினைவுபடுத்தவோ, உயர் அலுவலர் விரிவாக கூறிய தகவல்களைப் பணியாளர் பின்னர் தெளிவுற உரிய அமைப்பில் எழுத்தில் பதிப்பதற்கோ குறிப்பெடுத்தல் தேவையாகிறது.

விரிவான ஓர் உரைப் பகுதியை அப்பகுதியில் வெளிப்படும் கருத்தின் அளவு குன்றாதவாறு, பகுதியின் அளவைக் குறைத்து எழுதுதல் ‘சுருக்குதல்' எனப்படும். ஓர் உரைப்பகுதியைப் பொருளும் கருத்தும் மாறாதவாறு, அளவில் சுருக்கி எழுதுவதைச் 'சுருக்கி வரைதல்' என்றும், தொடர்ச்சி கெடாதவாறு சிறுசிறு சொற் கூட்டுகளால் எழுதுவதைக் 'குறிப்பு எடுத்தல்' என்றும் வேறு வேறு சொற்களால் குறிக்கலாம். இவ்விரண்டினையும் இணைத்துக் குறிக்கும் சொல்லே 'சுருக்குதல்' ஆகும்.

‘சுருக்கி வரைதல்', 'குறிப்பு எடுத்தல்' ஆகிய இரண்டிற்குமுரிய வேறுபாட்டைக் கீழ்வரும் உரைப்பகுதி கொண்டு அறியலாம்.

"ஈ.வெ.ரா.வும் அவர் தோழர்களும் நீண்ட நாள் (3 மாதங்கள்) சுற்றுப்பயணம் செய்த நாடு ரஷ்யாதான். அங்கே 'சமதர்ம ஆட்சி எவ்வாறு நடைபெறுகிறது? அந்நாட்டு மக்களின் நிலை எவ்வாறு உள்ளது? அவர்கள் அரசாங்கத்தைப் பற்றி என்ன நினைக்கின்றனர்? என்பனவற்றைத் தெரிந்து கொள்ளவே நீண்ட நாள் தங்கி, அரசாங்க விருந்தினராக இருந்து, அந்நாடு முழுவதும் 15, 20 பிரபல நகரங்களைச் சுற்றிப் பார்த்தனர்."

எனும் பகுதியை,

"ஈ.வெ.ரா. தோழர்களுடன் 3 மாதங்கள் அரசு விருந்தினராக ரஷ்யப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள சமூக அரசியல் நிலைகளை அறிந்தார்."

எனத் தருவது, 'சுருக்கி வரைதல்' ஆகும். இப்பகுதியை

ஈ.வெ.ரா.வும் தோழர்களும் - 3 மாத ரஷ்யப் பயணம் - அரசு விருந்தினர் -சமூக அரசியல் நிலை அறிதல்"

எனத் தருவது, 'குறிப்பு எடுத்தல்' ஆகும்.

பொதுமேடைகளில் பேசுவோரின் பேச்சினைக் குறிப்பு எடுப்பதற்கு கீழ்க் குறித்த வழிகாட்டல்களைப் பின்பற்றலாம்.
  1. வாக்கியங்களாக இல்லாமல் முனைப்புத் தகவல்களை மட்டும் சொல் அல்லது தொடராகக் குறித்தல். கலைச்சொற்கள் வெளிப்படின் அவற்றைக் குறித்தல்.
  2. கலைச்சொற்களைத் தவிர பிறவற்றைத் தம் சொந்த சொற்களில் குறித்தல்.
  3. தலைப்புகள், துணைத்தலைப்புகள் மற்றும் எண்ணிடப்பட்ட பட்டியல்களுடன் குறிப்புகளைக் கட்டமைக்கவும், தலைப்புப் பகுதிகளைக் குறிக்க அல்லது தகவல் வாயில்களின் விவரங்களைச் சேர்க்க தலைப்புகளைப் பயன்படுத்தவும் தேவையான புள்ளிகளை இடைகோடிட்டு சொல்லளவில் குறித்தல் வேண்டும்.
  4. அமைப்பு, தகவலின் முதன்மையினைக் குறிக்க அடிக்கோடு அல்லது குறியீட்டு சின்னங்களைப் பயன்படுத்தவும்
  5. முதன்மைத் தகவல், எடுத்துக்காட்டுகள், வரையறைகள் அல்லது பிற சிறப்புத் தகவலை அடையாளம் காண அடிக்கோடிட்டு, வட்டம், சதுரம், நட்சத்திரம் போன்றவற்றை தம் சொந்த அடையாளக் குறியீட்டாகப் பயன்படுத்தல் .
  6. குறிக்கும்போது எதையாவது தவறவிட்டால், அதை நினைவுபடுத்துமாறு முதன்மையான சொற்களை எழுதவும், இடைவெளிகளை விட்டுப் பின்னர் அவற்றை நினைவுடுத்தல். உங்கள் சொந்த குறிப்புகள், கருத்துகளுக்கு ஓரக்கோட்டில் இடம் விடுதல்.
  7. குறிகள் சொற்குறுக்கங்கள் முதலியனவற்றைப் பயன்படுத்துதல். அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்கள், சொற்றொடர்கள் அல்லது பெயர்களுக்கான சின்னங்கள் மற்றும் சுருக்கங்கள் வேகம் அவசியமாக இருக்கும்போது விரிவுரைகளில் குறிப்பு எடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். சீராக இருக்க அச்சின்னங்கள் எதைச் சார்பு படுத்துகின்றன என்பதை நினைவில் வைத்து அவற்றை எளிதாகப் பயன்படுத்தலாம். அடிக்கடி பயன்படுத்தப்படும் சின்னங்கள்/ சொற்சுருக்கங்கள், சுருக்கச் சொற்கள் ( abbreviation and acronym ) அவை குறிக்கம் பொருள் பட்டியலை’ வைத்துக்கொள்ளவும், இதன் வாயிலாக பிந்தைய சூழுலில் அவற்றைப் பயன்படுத்தலாம்.
எ.கா :

பக்கம் – ப.

பக்கங்கள்- பக்.

மின்சார வாரியம் – மிவா.

பள்ளிக் கல்வி இயக்குநர் – பகஇ.

குறிப்பெடுப்பதற்குப் பயனுள்ள குறியீடுகள் சில
குறியீடு விளக்கம். எற்றுக்கொள்கிற
= நிகர்த்த, நிகரான.
நிகரில்லை. ஏற்றுக்கொள்ளாத
அனைத்து நிலைகளிலும் ஏற்கக் கூடிய/ ஏற்கத்தக்க
ஆகவே
ஏனென்றால்
+ மேலும், கூட்டுக, இணைக்க
_ குறைந்த அளவு, நீக்குக
விளைவு

இவை போன்ற பிற குறியீடுகளை வடிவமைத்துக் கொள்ளலாம்.

வளர் வரைவுகளையோ மன வரைடத்தையோ பயன்படுத்தலாம்.

தகவல்கள் ஓர் ஒழுங்குமுறையோடு வெளிப்படும் சூழுலில் வளர்வரைவு பயன்படும். பிற சூழுலில் மன வரைபடத்தைப் பயன்படுத்தலாம்

மனவரை படம்

'விரித்து எழுதுதல்' என்பது சுருக்குதலின் மறுதலையான செயலாகும். சுருக்கமான பத்தியையோ, உரைக் குறிப்பையோ கொண்டு, வேண்டுமளவிற்கு விளக்கமாக எழுதுதலே விரித்து எழுதுதலாகும். ஒரு கருத்து அல்லது செய்தியை நடுவணாகக் கொண்டு விரிவாக எழுதுதலும் விரித்து எழுதுதலேயாகும்.

விரித்து எழுதுதலின் பயன்கள்

செய்தி விளக்கமும் தெளிவும் புலப்படும் வகையில் சிந்தனைக் கிளர்ச்சி, படைப்பாற்றல் துணை, கற்றல் பதிவு ஆகியன சார்ந்த பயன்பாடுகளை விரித்து எழுதும் திறன் கொண்டதாகும்.

தகவல் விளக்கமும் தெளிவும்

குறைந்த அளவு பகுதியை விரிவாக எழுதும்போது தகவல்கள் விளக்கமாக எழுதப்படுகின்றன. தகவல்களைத் தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதும் திறன் விரித்து எழுதுவதால் வளர்வதாகும். தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதும்போது சொல் தொடர் களஞ்சிய அறிவு பயன்பாட்டுக்கு வருகிறது. 'உறவு', 'நட்பு', ‘அறிவு’ ஆகியவற்றால் சொல்வட்டங்கள் விரிவடைகின்றன.

சிந்தனைக் கிளர்ச்சி

விரித்து எழுதும்போது, வேர்ப்பகுதியைத் தெளிவோடும் விளக்கத்தோடும் எழுதுவதோடு விரித்தெழுதப்படும் பகுதிக்கூறுகள் தொடர்புடையனவாகவும் அமைதல் வேண்டும். இவ்வாறு அமைத்து எழுதும்போது, உரைப்பகுதியில் அடங்கிய பொருள் தொடர்பான பல தகவல்களைச் சிந்தித்துத் தொடர்புபடுத்த வேண்டும். தொடர்புபடுத்தி முறையாக எழுதும்போது சிந்தனை வளர்ச்சி ஏற்படுகிறது.

'தந்தை பெரியார்தம் எழுத்தாலும் பேச்சாலும் தம் வாழ்நாளில் சமுதாயப் புரட்சியைக் கண்டார்'

இப்பகுதியை விரித்தெழுதுவதாகக் கொள்வோம்.

விரித்தெழுதப் பட்ட பகுதி,

தந்தை பெரியாரின் எழுத்துகள் சமுதாயச் சீரமைப்புக் கருத்துகளைக் கொண்டதாகும். அனைவரையும் ஈர்க்க வல்ல சிறந்த பேச்சாளர் அவர். அவருடைய எழுத்துகளும் அத்தன்மையனவாகும். குடியரசு, விடுதலை, பகுத்தறிவு போன்ற இதழ்களில் அவர் எழுத்துகள் இடம் பெற்றன. அவருடைய பேச்சும் எழுத்தும் மக்களைக் கவர்ந்தன. அவர் எடுத்துரைத்த கருத்துகள் மக்கள் மனத்தில் பதிந்தன.

வேர்ப்பகுதியையும் விரித்தெழுதப்பட்ட பகுதியையும் நோக்கும்போது, மூலப் பகுதியில் காணப்படும் செய்திகளைச் சார்ந்தவை பொருள் தொடர்போடு அமைந்திருப்பதைக் காணலாம். இவ்வாறு எழுதுவதற்குப் பொருள் தொடர்புடைய செய்திகளைச் சிந்திக்க வேண்டும்.

படைப்பாற்றல் துணை

விரித்து எழுதும்போது, கொடுக்கப்பட்டுள்ள சுருக்க வரைவுகளில், கருத்தளவிலும் மொழியளவிலும் புதிய பகுதிகளை இணைத்து எழுதுதல் வேண்டும். புதிய பகுதிகளைப் பொருத்தமாக இணைத்துப் பழக பழகப் படைப்பாற்றல் திறன் சிறிது சிறிதாக வளரும் வாய்ப்பு ஏற்படுகிறது. எந்தச் சூழலும் இல்லாமல் சிந்திப்பதைவிட, ஒரு சூழல் அடிப்படையில் சிந்தித்துக் கருத்துகளை வெளிப்படுத்துதல் எளிமையாகும். விரித்து எழுதும்போது தெரிந்த சூழலில், புதியனவும் பொருத்தமானதுமான மொழி அமைப்புகளும் செய்திகளும் இணைக்கப்படுவதால் சிந்தனை ஆற்றல் பெருகும் வழி பிறக்கிறது. அதன் அடிப்படையில் படைப்பாற்றல் திறன் வளர்கிறது.

கற்றல் பதிவு

விரித்து எழுதும்போது, குறிப்பு வரைவுகளின் மொழிக் கூறுகளும் கருத்துக் கூறுகளும் நுணுகி நோக்கப்பட்டு, அவற்றிற்குப் புதிய வடிவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பு வரைவுகளில் அடங்கியன படித்தல் அளவிலே நின்றுவிடாமல், சிந்தனையையும் தூண்டுகிறது. இச்சிந்தனைத் தூண்டலால் கற்றவை அறிவளவில் நில்லாது. அதற்கப்பால் உணர்வையும் தாக்குவதால் 'கற்றல் பதிவு' ஏற்படும்.

''நான் கேட்கிறேன் மறந்து விடுகிறேன். நான் பார்க்கிறேன் நினைவில் கொள்கிறேன். நான் செயலில் ஈடுபடுகிறேன் புரிந்து கொள்கிறேன்'' எனும் கல்வி நுட்பவியலின் கருத்தினையும் இங்கு நோக்கத்தக்கது.

பழகு சூழல்கள்

விரித்து எழுதுதலில் பல சூழல்கள் உள்ளன. ஒருவரின் மேடைப் பேச்சைக் கேட்கும்போது, அவர் பேசுவதைக் குறிப்பு எடுத்துக் கொண்டு, பின்னர் விரித்து எழுதும் நிலை ஏற்படலாம். குறிப்பு எடுத்தவரே விரித்து எழுதும்போது, பேச்சில் கேட்டவற்றை நினைவுபடுத்தி விரித்து எழுதலாம். இச்சூழல் முழுமையாக விரித்து எழுதும் திறன்பாற் பட்டதன்று. மேலும், தற்காலத்தில் சுருக்கெழுத்து, ஒலிப்பதிவு போன்ற முறைகளால் குறிப்பு வரைவு இல்லாமலே மூலப் பகுதியைக் கொண்டுவர இயலும். இப்பகுதியில் ‘விரித்து எழுதுதல்' எனக் குறிக்கப் பெறுவது மேற்குறித்த சூழல் சார்ந்ததன்று. சுருக்கி எழுதப்பட்டுள்ள ஒரு பகுதியையோ, மூலமாகக் கொண்டுள்ள ஒரு பகுதியையோ விரித்து எழுதும் செயலைக் குறிக்கும்.

கல்விக் காலத்தில், சுருக்கி எழுதும் பயிற்சிகள் வழங்கப்படும்போதே, விரித்து எழுதும் திறன் ஓரளவு வளர்கிறது எனலாம். சுருக்கி எழுதுதலில் கண்டறியப்பட்ட கூறுகளுள் 'முனைப்புச் செய்திகளைத் தொகுத்தல்’ ஒன்றாகும். முனைப்புச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொன்றையும் தொடர்புடையதாக்கி விரிவாக எழுதும் திறனை வளர்க்க மேற்கொள்ளப்படும் முறைகளே இத்திறனை வளர்க்கும் பழகு நிலைகளாகும். இப்பழகு முறைகள் மொழிச் சார்பாகவும் செய்திச் சார்பாகவும் இருவகைப்படுத்திக் காணலாம்.

மொழிச் சார்பு

விரித்து எழுதுதலில், மொழி அமைப்புகளைத் தேவைக்கேற்ப மாற்றி எழுதும் நிலை ஏற்படும். சொற்களைச் சொற்றொடர்களாகவும் சொற்றொடர்களை வாக்கியங்களாகவும் எழுதலாம். சொற்களுக்கு அடைகளாகச் சொற்களையோ, சொற்றொடர்களையோ எழுதும் தேவையும் ஏற்படலாம். புதிய சொற்களையும் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

'சமுதாயச் சீர்க்கேடுகளைப் பெரியார் எடுத்துரைத்தார்' என்பதை விரித்தெழுதும் போது,

இன்றைய சமுதாயத்தில் சீர்கேடுகள் மலிந்திருந்தன. அவை சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குத் தடைகளாக இருந்ததை உணர்ந்து அவற்றைக் களைந்தெறியும் வழிமுறைகளைப் பெரியார் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

என அமையலாம்.

விரித்து எழுதப்பட்ட இப்பகுதியில், சில சொற்கள், வேர்ப்பகுதியில் உள்ள சொற்களுக்கு அடைகளாக வந்துள்ளன (இன்றைய); கருத்து விளக்கம் பெறப் புதிய சொற்களும் வாக்கியங்களும் எழுதப்பட்டுள்ளன (மலிந்திருந்தன. அவை.....); சில சொற்களுக்கு அடைகள் சேர்க்கப்பட்டுள்ளன (களைந் தெறியும்....).

இவ்வாறு அளவு, கருத்து விளக்கம் ஆகியவற்றிற்கேற்ப மொழி வடிவங்கள் விரித்து எழுதும் பகுதியில் சேர்க்கப்படுகின்றன.

மொழிப் பயிற்சியில் தரப்படும் 'வாக்கிய மாற்றம்', வாக்கியங்களைத் தொடராக மாற்றுதல், 'சொற்களுக்கு விளக்கம் தருதல்' போன்றன விரித்தெழுதுதற்குரிய தொடக்க நிலைச் செயல்களாகும்.

தகவல் சார்பு (செய்திச் சார்பு)

மொழிசார்பாக அடைகொடுத்து எழுதுதல், பொருள் விளக்க வாக்கியங்களை எழுதுதல் போன்றன இடம் பெறுகின்றன. இவற்றை முறையாகப் பொருள் விளக்கத் தொடர்ச்சியோடு எழுதுவதற்குக் குறிப்பு வரைவில் உள்ள சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள் (வாக்கியங்கள்) ஆகியன இன்றியமையாதன வாகும். செய்தி அறிவு முழுமையும் குறிப்பு வரைவிலிருந்து பெறப்படுவதில்லை.

மொழிப்பாடங்களின் கற்பிப்பு என்பது பதவுரை, பொழிப்புரை, சொற்பொருள் போன்ற அளவிலேயே அமைந்தால், மாணவர்கள் விரிவான தகவல்களைப் பெறவியலாது. எனவே, வரிகளுக்கு மட்டும் பொருள் கூறுவதைத் தவிர்த்து, வரிகளுக்கும் வரிகளுக்கு அப்பாலும் சென்று அவற்றைக் கற்பிக்க வேண்டும். இத்தகைய கற்பிப்பே, விரித்து எழுதும் திறனை வளர்க்கத் தக்க அடிப்படையாக அமையும்.

முன்பகுதியில் கொடுக்கப்பட்ட உரைப்பகுதியில் 'சமுதாயச் சீர்கேடுகள்' என்பதன் தன்மை விரித்தெழுதும் பகுதியில் விளக்கம் பெற்றுள்ளது. 'எடுத்துரைத்தார்' எனும் சொல்லும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இப்பகுதியில் 'பெரியார்' எனும் பெயரைப் 'பகுத்தறிவுப் பகலவன்' எனும் அடையுடனோ, 'மக்களை நல்வழிப்படுத்தும் நாட்டங்கொண்ட' என அடைத்தொடருடனோ எழுதலாம்.

விரித்து எழுதுதலுக்காகத் தொடக்க நிலையில், சிறு சிறு வாக்கியங்கள், தொடர்கள், சொற்கள் ஆகியனவற்றை விரித் தெழுதும் பழகு செயல்கள், தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுப் பின்னர் பத்தி அளவில் மாணவர்களை எழுத சொல்ல வேண்டும்.