முகப்பு

4.5 இலக்கிய நயம் பாராட்டல்

இலக்கிய நயம் பாராட்டல்

தமிழைக் கற்போருக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி, வாழ்ந்து வரும் இலக்கியங்களைக் கற்பதேயாகும். அவ்விலக்கியங்கள் அறிவு ஊற்றாய் ஒடி, பின் வந்த பெருமக்களையும் இலக்கியப் படைப்புப் பெரு வெள்ளத்தில் மூழ்கச் செய்து வருகின்றன. நாளும் பழமையின் பெருமையைப் பொதித்துப் புதியனவற்றை ஏற்றுத் தோன்றிவரும் இலக்கியங்கள் மொழியைக் கற்பிக்கச் சிறந்த தோற்றுவாயாகத் திகழ்கின்றன; கற்றோரை மொழிவல்லாராக உருவாக்குகின்றன. பெருமைக்கும் பயன்பாட்டிற்கும் உரிய இலக்கியங்களை, அவற்றைப் படைத்த பெருமக்கள் நோக்கிலிருந்தும், அவற்றால் பயன்பெறத்தக்க நெறியினின்றும் காண்பதே ‘இலக்கிய நயம் பாராட்டல்’ ஆகும். மொழியைக் காத்து, மொழியின் அவ்வப்போதைய நிலையைக் காட்டும் ஆடியாகத் திகழும் இலக்கியங்களின் நயத்தைப் பாராட்டும் அணுகுமுறைகளை மொழிநடை, பாடுபொருள் ஆகியனவற்றின் சார்பாக மேற்கொள்ளலாம்.

மொழியின் சிறப்பும் வல்லமையும் பல்வேறு கோணங்களில்முன் இயல்களில் கூறப்பட்டன. மாந்த இனத்தின் மதித்தற்கரிய படைப்பான மொழியின் அமைப்பை மொழியியலாளர் ஒலி, சொல், தொடர், பொருள் எனும் நான்கனுள் அடக்கி, அவற்றைப் பற்றிய வியத்த கருத்துகளைத் தந்துள்ளனர். மொழியால் அமைந்த இலக்கியங்களை, இந்நான்கு மொழிக்கூறுகளின் அடிப்படையிலும் நோக்கி, இலக்கியங்களின் பெருமைகளைக் காணலாம். இந்நான்கு கூறுகளும் ஒன்றுக்கொன்று பிணைந்தவையெனினும் இலக்கியத்தில் காணப்படும் மொழிநடைக் கூறுகளை நுணுகிக் காண்பதற்காக இந்நான்கு கூறுகளும் தனித்தனியே நோக்கப்படுகின்றன.

4.5.2 ஒலி

செய்யுளில் அமையும் ஒலி நயம் அதைப் படித்த அளவிலேயே இன்பம் தருவதாகும். இன்னோசையால் செவிக்கு விருந்தூட்ட இலக்கியப் படைப்பாளர்கள் ஒலி நயம் மிக்க சொல்லாட்சியை மேற்கொள்கின்றனர். இலக்கண நூல்கள் ஒலி நயத்தை மோனை, எதுகை, இயைபு என வகைப்படுத்தித் தருகின்றன.

பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்க

செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி

அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்

வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்.

ஒரு பெண்ணின் வருகையை வெளிப்படுத்தும் கம்பராமாயணச் செய்யுள் எதுகை ஒலியால் படிப்பதற்கு இன்பம் தருவதைக் காணலாம். இவ்வொலி நயத்தைப் படித்து இன்புறும் உணர்வைப் பெறும் மாணவர்கள், இதனுள் அமைந்துள்ள தொடைகளின் பெயர்களையும் தெரிந்திருப்பின் எவ்வெத்தொடைகளால் எத்தன்மையான ஒலிகளை ஏற்படுத்த இயலும் என்பதை அறிந்து இலக்கிய இன்பம் பெறுவர்.

4.5.3 சொல்

ஒலித்தொகுதியில் பொருள் குறியீடு அமைய, அவை சொல்லாகின்றன. சொல்லில் அமைந்துள்ள ஒலிநயம் ஒருபுறமிக்க ஒவ்வொரு சொல்லும் அது கொண்டுள்ள அமைப்பு, பொருள் இவற்றால் தனித்தன்மை கொண்டிலங்குவதாகக் காணலாம்.

காணும் கண்ணிற்குப் பூணும் அணியாய்

நாணும் தங்கைக்கு எதுவும் ஈடோ

என வரும் அடிகளை நோக்குவோம். கண்ணின் வேலை காணுதலே. காணும் திறனற்ற கண், ‘கண்’ எனக் கொள்ளப்படாது. எனவே, ‘காணும் கண்’ எனக் கூறுவது பொருத்தமில்லாமல் தோன்றுகிறது. எனினும் கண்ணின் பெருமையை உணர்த்தவே ‘காணும் கண்’ எனக் கவிஞர் கூறியுள்ளார். இதுபோன்ற சொல்லாட்சி ‘சொல் நயம்’ பாற்பட்டதாகும்.

சொல்லாட்சியில் சொற்கள் அவற்றிற்குரிய மொழியியல் பொருள், பண்பாட்டுப் பொருள், தனிப்பொருள் ஆகியனவற்றுள் ஒன்றையோ, பலவற்றையோ கொண்டிருக்கலாம். அவற்றைச் சொல்நயம் பாராட்டும்போது எடுத்துக்காட்டல் வேண்டும்.

தொடர்ச்சியான பொருளைத் தரும் சொல் தொகுதியே இங்குத் ‘தொடர்’ எனக் குறிக்கப்படுகிறது. தொடராட்சி, படைப்பாளனின் படைப்புத் திறனையும் உத்தியையும் எடுத்துக்காட்டவல்லது. இவற்றை இனங்கண்டு இலக்கியத்தைப் படிக்கும் போக்கு இலக்கிய இன்பத்திற்கு அடிகோலும்.

இன்தொடர்கள், பழமொழிகள், உவமைத்தொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியன தொடர் சார்ந்த மொழி அமைப்புகளாகும்.

நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்

நாரையை அழைப்பதாக அமையும் இவ்வரிகளில் உவமைகளின் சிறப்புதான் என்னே! நாரையின் அலகு நீண்டது. காண்பதற்குக் கவர்ச்சியாக இருக்காது எனக் கூறலாம். ஆனால், சத்திமுத்தப் புலவர் ‘பனையின் கிழங்கு பிளந்தன்ன’ எனும் உவமைத் தொடரால் நாரையின் அலகை அழகுணர்வோடு காணச் செய்கிறார்.

இலக்கிய வரிகளில் வெளிப்படும் பொருள், படைப்பாளனின் சொன்முறையால் பொருள் நயம் எனப்படும். செய்யுளில் அமையும் கற்பனை, பொருள் செறிவு, சிலேடை போன்றன பொருள் நயத்தின்பாற்படும்.

சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படும் உள்ளுறை, இறைச்சி போன்றனவும், தண்டியலங்காரம் குறிக்கும் பொருளணிக் கூறுகளும், வருணனை போன்றனவும் பொருள் நயம் சார்ந்தனவாகும்.

வளம்மிக்க நாணு எனக் கூறுவந்த புலவர் திருத்தக்கத் தேவர், கற்பனை சார்ந்த வருணனையை,

பாளைவாய் கமுகின் நெற்றிப் படுபழம் உதிர விண்டு

நீள்கழைக் கரும்பின் நெற்றி நெய்ம்முதிர் தொடையல் கீறி

வாளைவாய் உறைப்ப நக்கி வராலொடு மறலு மென்ப

காளைநீ கடந்து செல்லும் காமரு கவின்ஃகொள் நாடே …

எனும் செய்யுளில் தருகிறார்.

‘பாக்கு தேன்கூட்டைச் சிதைத்துத் தேனைச் சொரியச் செய்கிறது. சொரிந்த தேனை அருந்திய வாளை மீன் பெரும் போதை கொண்டு வரால் மீனோடு சண்டையிடுகிறது’ எனப் புலவர் கூறுவது, கற்பனை வளம் சேர்த்து நில வளத்தை வெளிப்படுத்துகிறது. புலவர் கூற்றில் புதுமை, படிப்போர்க்கு இனிமை, இத்தகைய மொழி நலனே பொருள் நயமாகும்.

இலக்கியங்களைக் கற்பிப்பதால் மொழித்திறன் வளர்க்க இயலுவதுபோல, கல்வி விழுமங்களையும் மாணவர் உள்ளத்தில் பதிக்கலாம். ஒவ்வொரு இலக்கியமும் ஒன்று அல்லது பல உரிப்பொருள் (கருத்து) களை நடுவணாகக் கொண்டே படைக்கப்படுகிறது. சமயப் பூசல்களுக்கிடையே தோன்றிய தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்கள் இறைநெறியே உயர்நெறியாகப் போற்றினாலும், ஆங்காங்கே சமூகச் சீர்கேடுகளைச் சாடி படிப்பவர்களைச் சிந்திக்கச் செய்கின்றன. சிந்தனையின் செழுமை உணர்வாகி, விழுமங்களைப் பதிக்க வல்லன.

இலக்கியங்களில் அடங்கியுள்ள விழுமங்களைப் பட்டியலிட்டுக் காட்ட இயலாதவாறு எண்ணற்றவையாய்ப் பரந்து காணப்படுகின்றன.

திருக்குறள், சங்க இலக்கியங்கள், சமய இலக்கியங்கள் ஆகியன ஒழுக்க நெறி, சமுதாய மேன்மை உணர்வு, இறையன்பு என்றவகையில் உரிப்பொருள்களைக் கொண்டு திகழ்கின்றன. இவ்வாறே ஒவ்வோர் இலக்கியம் அல்லது இலக்கியப் பகுதியும் விழுமங்களை உள்ளடக்கியதாய் அமையும். கற்பிக்கும் ஆசிரியர் அவற்றைக் கண்டறிவதோடு, அவற்றை மாணவர்களும் கண்டறியத்தக்கவாறு பாடுபொருள் சார்ந்து இலக்கிய நயம் பாராட்டச் செய்தல் வேண்டும்.

பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை தனிமாந்தர் பண்பு, சமுதாய நலம் ஆகியன சார்ந்த விழுமங்கள் சிறப்பிடம் பெறுகின்றன.

. தனிமாந்தர் பண்பு

கல்வியின் மிகச் சிறந்த நோக்கங்களுள் ஒன்று, தனிமாந்தரைப் பண்படுத்தலாகும். நல்லொழுக்கம், தொண்டுணர்வு, உழைக்கும் எண்ணம், வாழ்க்கை நடைமுறை இயல்பு, அறிவு போன்றன தனிமாந்தரைப் பண்படுத்தும் விழுமங்களாகும்.

உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமைப்

புரத்தின் வளமுருக்கிப் பொல்லா மரத்தின்

கனக்கோட்டம் தீர்க்கும்நூ லஃதேபோல் மாந்தர்

மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு.

எனும் நன்னூலார் மொழி பொதுவாகக் கல்விக்கும் பொருந்துவதாகும். இலக்கியத்தைப் பொருள் சார்ந்து பாராட்டும் போக்கில், அதில் பொதிந்துள்ள தனிமாந்தர் பண்புகளைக் கண்டறியின் அப்பண்புகள் மாணவரிடத்துப் பதியும் நிலை ஏற்படும்.

’என் கடன் பணி செய்து கிடப்பதே’

’யாதும் ஊரே யாவரும் கேளிர்’

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’

’ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’

போன்ற இலக்கிய வரிகள் எத்துணை அளவு தனிமாந்தரைப் பண்படுத்தும் என்பதை உணரலாம்.

. சமுதாய நலம்

இலக்கியப் பாடுபொருள் சார்ந்து, தனிமாந்தர் பண்பாட்டை நோக்குவதுபோலச் சமுதாய நலனுக்கு இலக்கியம் எவ்வகையில் பயன்பாடுடையதாக விளங்குகிறது என்பதையும் நோக்குதல் வேண்டும். ஓர் இலக்கியத்தையோ, அதன் பகுதியையோ கற்கும் மாணவர்கள், அதன் சமுதாயப் பயனைக் கண்டறியும் திறன் உடையவர்களாக இருப்பின், சமதாய நலம் சார்ந்த விழுமங்கள் அவர்கள் உள்ளத்தில் பதியும்; சமுதாய மேன்மை சார்ந்த கல்வி நோக்கங்களும் நிறைவேறும்.

கிழக்குச் சுவரில் சிவப்புக் கவிதையாய்

கதிரவன் வரைகின்றான்.

கீழிருப்பார் என்று விழிதிறப்பார் என்ற

கேள்வியில் வருகின்றான்

நாங்கள்

விடியல் கீதங்கள் பாடுகின்றோம்

விலங்குகள் நொறுங்கட்டும் கனவு

விலங்குகள் நொறுங்கட்டும்

வேர்வையின் மக்கள் விழித்தெழுவீர்

வேள்விகள் தொடங்கட்டும்

’கதிரவனின் எழுச்சியில் மக்கள் விழிக்கின்றனர். விழித்த மக்களோ, விடியலைப் பற்றிப் பாடுகின்றனர். அவர்கள் விழிப்பு உடல்சார்ந்த விழிப்பே அன்றி, உள்ள விழிப்பாகாது! அறியாமை எனும் இருள் நீங்கவில்லை. உழைக்கும் மக்கள் விடியலைப் பாடுவதைத் தவிர்த்துச் செயலில் ஈடுபட்டு, அறியாமைத் தளையிலிருந்து விடுபட வேண்டும்’ என்பதே இவ்வரிகளில் பொதிந்த சமுதாய நல எண்ணமாகும். சொற்களையும் சொற்பொருள்களையும் சமுதாய நல நோக்கத்தோடு நுணுகிக் காணும் திறனை மாணவர் பெறுகின்றபோது, அவர்கள் மனத்தில் சமுதாய விழுமங்கள் பதியும்.