முகப்பு

4.2 நிறுத்தற் குறிகள்

நிறுத்தற் குறிகள்

ஆங்கில மொழியிலுள்ள Punctuations எனும் சொல்லுக்கு இணையாக 'நிறுத்தற் குறிகள்' எனும் சொல் வழங்கப்படுகிறது. ஆங்கில மொழித் தாக்கத்தால் தமிழில் ஏற்றுக் கொள்ளப்பட்டனவற்றுள் ஒன்று நிறுத்தற் குறிகளாகும். நிறுத்தற் குறிகள் தொடர்பான விதிமுறைகள் 'குறியீட்டு இலக்கணம்' எனப்படும். இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழில் இடம்பிடித்துள்ள குறியீட்டு இலக்கணம் பற்றித் தமிழறிஞர்கள் சிலர் வகைதொகை செய்து, நிறுத்தற் குறிகளைப் பயன்படுத்தும் முறைகள் பற்றிய கருத்துகளை ஆங்கில இலக்கணம் தழுவித் தந்துள்ளனர். எனினும் இவற்றை எடுத்தாளுவதில் இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. அவற்றைப் போக்க, மொழியில் நிறுத்தற் குறிகள் பயன்படுத்தும் போக்கினைப் பகுத்தாய்ந்து, குறியீட்டு இலக்கண விதிகள் இப்பகுதியில் தரப்படுகின்றன. நிறுத்தற் குறிகள் அனைத்தும் வாக்கியங்களில் பயன்படுவனவாகும்.

தமிழில் வழங்கப்படும் நிறுத்தற்குறிகளை, விட்டிசைப்பு, பிரிப்பிணைப்பு, பொருள்தன்மை, மேற்கோள், பிரிப்பொலிப்புக் கணிதத் தன்மை ஆகியனவாகப் பகுக்கலாம்.

முறையான பொருள் வெளிப்பாட்டிற்காக வாக்கியப் பகுதிகளைப் பிரித்துக் காட்டவும் அவற்றை விட்டிசைத்து ஒலிக்கவும் எடுத்தாளப்படுகின்ற அடையாளங்கள். விட்டிசைப்புக் குறிகளாகும். கீழ்வரும் அட்டவணை அவற்றின் பெயர்களையும் அடையாளங்களையும் தருகிறது.

எண் பெயர் அடையாளம்
1. முற்றுப்புள்ளி .
2. முக்காற் புள்ளி :
3. அரைப் புள்ளி ;
4. காற்புள்ளி ,
• முற்றுப் புள்ளி ( . )

வாக்கிய முடிவைக் காட்டுவது முற்றுப் புள்ளியாகும். வாக்கியம் முடிவுற்றது எனக் காட்ட, அதன் இறுதி எழுத்தின் வலது கீழ் மூலையில் இடப்படும் புள்ளி இது.

எ-டு:

ஆதன் விளையாடுகிறான்.

புள்ளியினை இடும் சூழல் நோக்கி 'முற்றுப்புள்ளி" என்றும் சுருக்கக் குறியீடு கொள்ளப்படும்.

ஓர் எழுத்தின் பின்னால் வலப்புறக் கீழ் மூலையில் புள்ளி சுருக்கக் குறியீடாகிறது. 'பிச்சமுத்து பசுபதி' எனும் பெயர். 'பி. பசுபதி' என எழுதப்படும்போது 'பி' என்பதை அடுத்து அமையும் புள்ளி, 'சுருக்கச் குறியீடு ஆகும்.

எழுதும் நிலையில் மட்டுமன்றி, எழுதியதைப் படிக்கும் நிலையிலும் முற்றுப்புள்ளி மொழியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. படிக்கும்போது ஒவ்வொரு வாக்கியமும் நிறுத்தத்துடன் படிக்கப்பட வேண்டும் என்பதற்கு அடையாளமாகவும் முற்றுப் புள்ளி அமைகிறது. நிறுத்தல் கால அளவிற்குக் குறிப்பிட்ட வரையறை இல்லை. எனினும் முற்றுப்புள்ளிக்கு நிறுத்தல் கால அளவினை இரு மாத்திரையாகக் கொள்ளலாம்.

• முக்காற்புள்ளி (:)

’ : ’ என்பது முக்காற் புள்ளி. முக்காற்புள்ளி வரும் இடங்கள் வருமாறு:

  1. வாக்கியத்தில் கூறியதொன்றை விரித்துக் கூறும்போது 'முக்காற்புள்ளி இடவேண்டும்.

    எ-டு:

    பகுத்தறிவு இயக்கத் தோன்றல்கள் இருவர்: ஒருவர் ஈ.வெ.ரா. பெரியார்; பிறிதொருவர் அறிஞர் அண்ணா.

  2. முக்காற் புள்ளியுடன்':-' என இடைக் கோடிட்டு எழுதலுமுண்டு. இக்குறியும் முக்காற்புள்ளி யென்றே கொள்ளப்படும்.

    எ-டு:

    பொருள் கூறுக:- கவின், பரி, மா.

  3. ’முக்காற்புள்ளி' மேற்கோளைக் குறிக்கும். சூழலிலும் எடுத்தாளப்படுகிறது.

    எ-டு:

    குறள் அதிகாரம் 10:8 (பத்தாவது அதிகாரத்தில் எட்டாவது குறள் எனக் குறிக்க முக்காற் புள்ளி பயன்படுத்தப்படுகிறது)

  4. வாக்கியத்தில் ஒரு கருத்தை விளக்கவோ அதற்கு இசைந்த இன்னொரு கருத்தைக் குறிக்கவோ 'முக்காற்புள்ளி இடப்படுகிறது.

    எ-டு:

    அ) உடல் நலத்தைப் பாதுகாக்க எல்லா வகைகளிலும் முயல்க: உடல் நலம் இல்லையே... (முக்காற்புள்ளி இடப்படுகிறது)
    ஆ) அவன் எப்போதும் பிறருக்கு உதவி செய்தான் - விளைவு: எல்லாம் அவனுடைய ஊராயின. முக்காற் புள்ளிக்கு நிறுத்தல் கால அளவு ஒரு மாத்திரை எனக்கொள்ளலாம்.

• அரைப்புள்ளி (;)

' ; ' என்பது அரைப்புள்ளி, தற்கால எழுத்துகளில் 'அரைப் புள்ளி' மிகுதியும் பயன்பாடுடையதாகத் திகழ்கிறது.

  1. வாக்கியத்தில் ஒரு எழுவாய் பல பயனிலைகளைக் கொள்ளுமாயின், ஒவ்வொரு சொற்றொடர் நிறைவிலும் அரைப்புள்ளி இடப்படும். எ-டு: மனித வாழ்க்கை ஓர் ஆறு; குளமன்று.
  2. 'எனென்றால்', 'ஏனெனில்' போன்ற ஏது இணைப்புச் சொற்களுக்குமுன் அரைப் புள்ளி இடல் வேண்டும். எ-டு: என்னால் இன்று வரவியலாது; ஏனெனில், இன்று எனக்குப் பிறிதொரு பணி உள்ளது.
  3. ஒரு வாக்கியத்திற்குப்பின் சுட்டுச் சொல்லோ, தோன்றா எழுவாயோ எழுவாயாக அமைய நேரிடின், அவ்வாக்கியத்திற்கு முற்றுப்புள்ளி இடாமல், அரைப் புள்ளி இட்டு வாக்கியத்தைத் தொடரலாம்.
    எ-டு:
    அ) மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும்; இது செழுமையான பகுதியாகும்.
    ஆ) காந்தியடிகள் தமக்காக ஒருநாளும் கவலை கொண்டதில்லை; நாட்டு முன்னேற்றத்தையே எண்ணினார்.
  4. ஒன்றுக்கொன்று மாறான கருத்துகொண்ட சிறிய சிறிய வாக்கியங்கள் சேர்ந்து முழுக்கருத்தை விளக்குமானால் ஒவ்வொரு சிறு வாக்கியத்தின் பின்னரும் அரைப்புள்ளி இடல் வேண்டும்.
    எ-டு:
    மலர்களோ, மோந்தால் வாடும்; விருந்தினர்களோ, சிறிது முகம் கோணினும் வாடிவிடுவர்.

அரைப்புள்ளி, முற்றுப்புள்ளியைப் போன்ற பயனை உடையது. அரைப் புள்ளியிட்டு எழுதப்பட்ட வாக்கியம் தொடர் வாக்கியமாகும். அரைப்புள்ளி இடப்படும் இடத்தில் முற்றுப் புள்ளி இடப்படின், அத்தொடர் வாக்கியம் தனி வாக்கியங்களாக மாறும். அரைப் புள்ளியின் நிறுத்தல் கால அளவு, அரை மாத்திரையாகக் கொள்ளலாம்.

• காற்புள்ளி ( , )

‘ , ‘ என்பது காற்புள்ளி. அரைப் புள்ளியைக் காட்டிலும் மிகுதியான மொழிப் பயன்பாடுடையது காற்புள்ளி.

  1. சொற்களைத் தனித்தனியாகவோ, அடுக்கு அடுக்காகவோ பிரிக்கும்போது காற் புள்ளி இடல் வேண்டும்.
    எ-டு:
    அறம், பொருள். இன்பம் ஆகிய மூன்று பால்களைக் கொண்டது திருக்குறள்.
  2. இவ்வெடுத்துக்காட்டில் மூன்று சொற்கள் பிரித்துக் காட்டப்படுகின்றன. இவற்றில் முதலிரு சொற்களுக்குப் பின்னரே காற்புள்ளி இடப்படுகிறது.

    குறிப்பு : 'சேர சோழ பாண்டியர்' என உம்மைத் தொகையாக எழுதும்போது காற்புள்ளி இடல் வேண்டாம். 'சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர்' என எழுதும்போது முதலிரு பெயர்களை அடுத்து, காற்புள்ளி இடல் வேண்டும். உம்மை விரியாகச் 'சேரரும் சோழரும் பாண்டியரும்' என எழுதும்போது, பெயர்கள் 'உம்"ஆல் இணைக்கப்படுவதால் காற்புள்ளி இடத் தேவையில்லை.

    வாக்கியத்தில் ஓர் எழுவாய் இருக்கப் பல பயனிலைகள் அமையும்போது ஒவ்வொரு சொற்றொடரை அடுத்தும் காற்புள்ளியைச் சிலர் பயன்படுத்துகிறார்கள். சொற்றொடர்களைப் பிரிக்க அரைப் புள்ளியினையே எடுத்தாளல் வேண்டும். காற்புள்ளியை எடுத்தாளுதல் கூடாது.

  3. 'அதனால்’, 'ஆகவே', 'எனவே' போன்ற ஏதுச் சொற்களை அடுத்துக் 'காற்புள்ளி' இடல் வேண்டும்.
    எ-டு:
    செய்யுளைக் கற்பிப்பது கடினம். எனவே, ஆசிரியர் முன் தயாரிப்புடன் செய்யுள் வகுப்பிற்குச் செல்லல் வேண்டும்.
  4. விளிகளுக்குப் பின்னர் 'காற்புள்ளி' இடல் வேண்டும்.
    எ-டு:
    அ) கந்தா, புத்தகத்தை எடுத்துக் கொண்டு போ.
  5. இவ்வாக்கியத்தில் 'கந்தன்' எனும் சொல்லை அடுத்துக் காற்புள்ளி இடப்பட்டுள்ளது. காற்புள்ளி இடாமல் எழுதப்படின் 'கந்தனுடைய புத்தகம்' எனும் பொருள் மயக்கம் ஏற்படும்.

    ஆ) மாணவர்கள் அளித்த பரிசுகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர். இவ்வாக்கியம் 'மாணவர்கள். அளித்த பரிசுகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர்' என எழுதப்படின் பொருள் தெளிவு ஏற்படுகிறது.

  6. ஆங்கிலமுறையில் 'முகவரி எழுதும்போதும், நாள் , திங்கள், ஆண்டு' என்பனவற்றைக் குறிக்கும்போதும் 'காற்புள்ளி. கீழே காட்டியவாறு பயன்படுத்தப்படுகிறது.
  7. அ) திரு.இர.அருண்,

    எண் 1378 மோயன் வளாகம்,

    தூய வளவனார் நகர்,

    கலிபோர்னியா மாநிலம்,

    அமெரிக்க ஐக்கிய நாடு.

    ஆ) ஏப்ரல் 15, 2001.

  8. சொற்தொகுதி எழுவாயாக அமைந்தால் அச்சொற்றொடருக்குப் பின்னர் 'காற்புள்ளி’ இடல் வேண்டும்.
    எ-டு:
    மாணவர்களால் நடத்தப்பெற்ற கூட்டம், மிகவும் சிறப்பாக நடந்தது.
  9. பெரிய வாக்கியங்கள் இணைக்கப்படும்போது எண்ணும்மை இருப்பினும் 'காற்புள்ளி’ இடல் வேண்டும்.
    எ-டு:
    நம்மில் ஒவ்வொருவருக்கும் நாடு காக்கும் கடமை உள்ள தென்றும், அக்கடமையிலிருந்து தவறினால் எதிர்காலத்தில் பல இன்னல்களுக்கு உள்ளாவோம் என்றும் அவர் கூறினார். காற்புள்ளியின் நிறுத்தல் கால அளவினைக் கால் மாத்திரையாகக் கொள்ளலாம்.

வாக்கியங்கள் உணர்த்தும் பொருளுக்கேற்ப எடுத்தாளப்படும் அடையாளங்களும் நிறுத்தற் குறிகளாக உள்ளன. 'வினாக்குறி, உணர்ச்சிக்குறி, சொற்சுருக்கம், விடுகுறி, பிரிப்பிணைப்புக் குறி ஆகியன வாக்கியப் பொருள் தன்மையினை வெளிப்படுத்தும் குறிகளாகும்.

• வினாக் குறி ( ? )

'?' என்பது வினாக் குறியாகும். ஒரு வாக்கியம் வினா வாக்கியமாக அமையின் அதற்கு இறுதியில் 'வினாக் குறி" இட வேண்டும்.

’எ யா முதலும் ஆ ஓ ஈற்றும்

இரு வழியும் வினாவாகும் மே’

என்பது நன்னூல் நூற்பா.

'எ, யா' ஆகிய எழுத்துகளை முதலில் கொண்டோ 'ஆ. ஓ' ஆகிய எழுத்துகளை ஈற்றில் கொண்டோ 'ஏ' எனும் எழுத்தை முதலிலோ, எற்றிலோ கொண்டோ வினாச் சொற்கள் அமையும். இவற்றுள் ஏதேனும் ஒன்று அமைந்த வினா வாக்கியங்களின் இறுதியில் வினாக்குறி இடல் வேண்டும்.

எ-டு:
  1. எவன் இங்கே வந்தான்?
  2. இங்கே வந்தவர் யார்?
  3. அவனா வந்தான்?
  4. உழைப்பால் பெற முடியாதன உளவோ?
  5. ஏன் நீ வரவில்லை?
  6. ’ஏ’ என்பதை இறுதியாகக் கொண்ட வினாச் சொல் தற்காலிக வழக்கில் இல்லை.
• உணர்ச்சி வாக்கியக்குறி ( ! )

' ! ' என்பது உணர்ச்சி வாக்கியக் குறியாகும். நகை, அழகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எட்டு மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியம் குறிக்கிறது. இம் மெய்ப்பாடுகளை உணர்த்துவதாக அமையும் வாக்கிய இறுதியிலோ, வாக்கியத்துள் அமையும் சொற்கள் இறுதியிலோ, உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.

எ-டு:
  1. அய்யோ! பாவம்! இவன் நல்லவனாயிற்றே!
  2. அவர் பெருமைதான் என்னே!
  3. தலைவா, வருக! வருக!
  4. உன்னால் முடியும் தம்பி !

உணர்ச்சி வாக்கியக் குறியை ‘வியப்புக் குறி’ எனக் குறிக்கின்றனர். ‘உணர்ச்சி வாக்கியக் குறி’ என்பதே முறையான மொழியாட்சியாகும்.

• சொற்சுருக்கக் குறி ('.')

சொற்சுருக்கம் "." எனப் புள்ளியிட்டுக் காட்டப்படும். எழுதும் போது சில மேற்கோள் நூல்களைக் குறிக்க நேரிடும். நூலின் பெயர்கள் நெடிதாக இருந்தாலோ, அவற்றை மீண்டும் மீண்டும் குறிக்க நேர்ந்தாலோ சொற் சுருக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

'தொல்காப்பியம்' என்பது 'தொல்.' எனச் சொற் சுருக்கத்தோடு எழுதப்படும். '.' என்பது 'தொல்' என்பதோடு சில எழுத்துகள் தொடருவதை உணர்த்துகிறது. எனவே, இதனைப் பொருட்தன்மைக் குறியாகக் கொள்ளலாம்.

• விடுகுறி ('....')

சொற்சுருக்கக் குறியைப் போன்றே விடுகுறியும் மறைத்தெழுதப்பட்டிருப்பதை உணர்த்துவதாகும். முன்னது எழுத்துகளின் மறைவினை உணர்த்தும். பின்னது சொற்றொடர் மறைவினை உணர்த்தும்.

எ-டு:

"திருந்திய மழலை பேசும், என்

செல்வங்களே, நன்றாகப் படியுங்கள்...

வாழ்க்கையில் உயருங்கள்" எனத்

தலைவர் கூறினார்.

”..." என மூன்று புள்ளிகள் இடப்பட்டுள்ளன. இவை விடுபட்ட மொழிகளைக் குறிப்பதாகும். மூன்று புள்ளிகள் மட்டுமே இடுவது ஆய்வு மரபாகும். செய்யுட் பகுதிகளில் விடுபட்டனவற்றைச் சீர்களின் அளவினைக் குறிக்குமாறு மூன்று புள்ளித் தொகுதிகளை இடுவது வழக்கம்.

எ-டு:

ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியே

ஆற்றங் கரைச்சொற் கிழத்தி வாழியே

... .. ... ...

... .. ... ...

வாழி திசைக்கப் புறத்து நாற்கவி

('-') என்பது பிரிப்பிணைப்புக் குறியாகும். பொதுவாகச் சொற்களைப் பிரித்தெடுத்தல் கூடாது. இடச்சுருக்கம் கருதி ஒரு வரிக்குள் சொல் அமையாத சூழலில் '-' எனும் இடைக் கோடு சொல்லைப் பிரித்தெழுதப் பயன்படுத்தப்படும்.

எ-டு:

தமிழகம் பல சிறப்புகளைக் கொண்டதெனினும் முற்காலத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெற்றன.

"பிரிப்பிணைப்புக் குறி அதனைத் தொடர்ந்து சொல்லின் பகுதி இருப்பதை உணர்த்துவதால் இது 'பொருட்தன்மைக் குறி' எனப்படுகிறது.

'பிரிப்பிணைப்புக் குறி' பிரிந்திருக்கும் வாக்கியங்களைப் பொருள் பொருத்தத்தோடு இணைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

எ-டு:

நான் ஒன்று சொல்கிறேன் - அதையும்

இன்றே சொல்கிறேன். இது - நான் கூறுவது - சத்தியம்.

மேற்கோள் குறிகள்

மொழியாட்சியில், பிறிதொருவரின் கருத்தையோ, மொழியையோ எடுத்தாளும்போது அது பிறிதொருவரின் கருத்து அல்லது மொழியெனத் தெரிவிக்கவோ, கூறப்படுவனவற்றிற்கு மிகை விளக்கம் தருவதற்காகவோ இடப்படும் அடையாளங்கள் 'மேற்கோட் குறிகள்' எனப்படும்.

இரட்டை, ஒற்றை, அடைப்பு ஆகியன மேற்கோள் குறிகளாகும்.

இரட்டை மேற்கோள்குறி (" ")

(" ") என்பது இரட்டை மேற்கோள் குறி. ஒருவர் கூறிய சொற்களை, அவர் கூறியவாறே எடுத்தாளும்போது, அவர் கூறிய மொழிகளின் தொடக்கம், முடிவு ஆகிய இருபுறத்திலும் இரட்டை மேற்கோள்குறி இடல் வேண்டும்.

தலைவர், "மாணவர்கள் சிறந்தவர்கள்" என்று கூறினார். இக்குறி நேர்கூற்று வாக்கியங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஒற்றை மேற்கோள்குறி (’ ‘)

(’ ‘) என்பது ஒற்றை மேற்கோள்குறி,

  1. நேர்கூற்றுக்குள் இருக்கும் நேர்கூற்றினைக் குறுக்க ஒற்றை மேற்கோள்குறி இடல் வேண்டும்.
  2. எ-டு:

    பரதன், ''நான் என் செய்வேன்! தந்தையார் 'நீ போ' என்று சொன்னாரே, அதனால் வந்து விட்டேன்" என்றான்.

  3. ஏதேனும் ஒன்றைச் சிறப்பாக எடுத்துக்காட்ட, 'ஒற்றை மேற்கோள்’ பயன்படுத்தப்படும்.
  4. எ-டு:

    'தொல்காப்பியம்' எனும் பழம்பெரும் நூல் இங்கே கிடைக்கும்.

  5. எழுத்தையோ, சொல்லையோ, சொற்றொகுதியையோ வாக்கியப் பகுதியாகக் குறிக்க அதாவது எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் போன்ற பகுதிகள் - 'ஒற்றை மேற்கோள் குறி’ இடப்படுகிறது.
  6. எ-டு:

    'அ', 'ஆ', 'இ', 'ஈ' என்பன உயிரெழுத்துகள்.

    • ’ நான் இன்று வருவேன்' எனும் வாக்கியம் தனிவாக்கியமாகும். இதில் ஒரு வாக்கியமே எழுவாயாக அமைகிறது. எழுவாயாக அமைந்த வாக்கியம், தெளிவு கருதி ஒற்றை மேற்கோள் குறிக்குள் எழுதப்படுகிறது.

  7. ஒற்றை மேற்கோளின் பிறிதொரு இன்றியமையாப்பயன்பாடு, குறிப்புப் பொருள் தருதலாகும்.
  8. எ-டு:

    நாகம் தீண்டியது. அதுவே அவளுக்கு 'எமன்' ஆகி விட்டது. 'இறந்துவிட்டான்' என்பதை 'மைன்' எனும் சொல் குறிப்பால் உணர்த்த ஒற்றை மேற்கோள்குறி பயன்படுகிறது. இக்குறிப்பு உயர்வு இழிவு, மரபு போன்ற பொருள்களில் அமையலாம்.

• அடைப்புக்குறிகள் ( ), { }, [ ]

( ), { }, [ ] என்பன அடைப்புக் குறிகள். இவை நிரலே பிறையடைப்பு, பகர் அடைப்பு, இரட்டை அடைப்பு என வழங்கபடுகின்றன. அடைப்பிற்குள் அடைப்பாகப் பயன்படுத்தும்போது உள் அமைவது பிற அடைப்பு, அதன் வெளியில் பகர அடைப்பு அமையும். அதற்கும் வெளியில் இரட்டை அடைப்பு அமையும்.

அடைப்புகள் எழுத்துப் பகுதியின் இடையே மேற்கோள் அல்லது விளக்கத்தினை உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

எ-டு:
    1. நகை, அழுகை, இளிவரல்.... (தொல்காப்பிய பொருள்நூ. 246) போன்ற எட்டு மெய்ப்பாடுகளை இலக்கண நூல்களிலிருந்து அறியலாம்.
    2. பெரியார் மீது அண்ணாவிற்கு ஏற்பட்ட மதிப்பு அவரை (அண்ணாவை) பகுத்தறிவுப் பணியில் ஈடுபடுத்தியது.

['அவர்' என்பது அண்ணாவைக் குறிக்கிறது என்பதைத் தெளிவு படுத்த ('அண்ணாவை') என அடைப்பிற்குள் எழுதப்பட்டுள்ளது] மேற்கூறிய விளக்கத்தில் (), [ ], ஆகிய இரு அடைப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதை நோக்குக.

கணிதத்திற்காகப் பயன்படும் சில குறியீடுகள் மொழிக் குறிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், கணிதத்தில் அவை கொண்டுள்ள பொருண்மை, மொழிப் பொருண்மையிலிருந்து வேறுபட்டதாகும். எனினும் கணிதத்தின் பொருண்மை அடிப்படையில் தோன்றியதால், அவை கணிதக் குறியீடுகள் என்றே அழைக்கப்படுகின்றன.

மொழியில் பயன்படுத்தப்படும் கணிதக் குறியீடுகள் '+', '–', 'x', ‘/’, '=' ஆகியனவாகும். இவை நிரலே, கூட்டல், (சரிவுக் கோடு) கழித்தல், பெருக்கல், வகுத்தல், நிகர்மைக் குறிகளாகும்.

• கூட்டல் குறி ‘ + ‘

'+' எனும் கூட்டல் குறி, 'சேர்ப்புக் குறி' என மொழிப் பயன்பாட்டில் அழைக்கப்படுகிறது. இக்குறி, புணர்ச்சிகளைக் காட்டப் பயன்படுத்தப்படுகிறது.

எ-டு:
  1. பயிர் + ஆடியது
  2. கல் + உடைந்தது.
• கழித்தல் குறி ’ - ‘

'-' எனும் கழித்தல் குறி, இடைக்கோடாகவும் சொல்விளக்கக் குறியாகவும் இணைச் சொல் குறியீடாகவும் மொழியில் பயன்படுகிறது.

எ-டு:
  1. பரணி - ஒருவகை இலக்கியம் (சொல்விளக்கம்)
  2. இடைக்கோடு பற்றி முன் கூறப்பட்டுள்ளது.
• பெருக்கற் குறி ‘ X ‘
எ-டு:
  1. மேலே x கீழே
  2. வந்தான் x போனான்.
• சரிவுக்கோடு குறி ‘/ ‘ , வகுத்தல் ‘ ÷ ‘

" ÷ " என்பது வகுத்தல் குறியாயினும் கணிகைப் பயன்பாடு மிகுந்துள்ள இக்காலத்தில் '/' எனும் சாய்வுக் கோடே வகுத்தல் குறியாகக் கொள்ளப்படுகிறது. இது மொழியில் 'அல்லது' எனும் பொருளைத் தரும் பொருட்தன்மைக் குறியாகப் பயன்படுத்தப் படுகிறது.

எ-டு:
  1. அவன் / அவள் வந்தபோது இதைக் கொடுக்கவும்.
  2. . நான் சொன்னேன் / சொல்லுகிறேன்.
• நிகர்மைக் குறி ’ = ‘

' = ' எனும் நிகர்மைக் குறி புணர்ச்சி நிலைகளைக் காட்டவும், இணைச் சொல்லைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

எ-டு:
  1. பூனை + குட்டி = பூனைக்குட்டி
  2. மச்சு = மேல்தனம்.
• தருகுறி ’ → ‘

’ →’ போன்ற அம்புக்குறி 'தருகுறி' எனப்படும். இதுவும் புணர்ச்சி நிலையில் நிகர்மைக் குறிக்கு மாற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

எ-டு:
  1. அவன் + கு → அவற்கு.
  2. மச்சு = மேல்தனம்
தன் மதிப்பீடு : வினாக்கள் – I
  1. குறிப்பெடுத்தல் என்றால் என்ன?
  2. விரித்து எழுதுதல் குறித்து எழுதுக.
  3. நிறுத்தற்குறி பயன்பாட்டினை விளக்குக.
  4. முற்றுப்புள்ளி என்றால் என்ன?
  5. கணிதக் குறியீடுகள் குறித்துக் கூறுக.