முகப்பு

4.3 சுருக்கமொழிப் பயன்பாடு

சுருக்கமொழிப் பயன்பாடு

குறுஞ்செய்தி (Short Text Messages-SMS; 1984), முகநூல் ( Face book-2000), புலனம் (Whatsup-2008), வலையொளி (You tube -2005), பின்டரஸ்ட்(Pinterest – 2005), லிங்டின் (LinkedIn – 2006), படவரி ( Instagram-2010), ரெட்டிட் (Reddit -2010), அளாவி ( We Chat- 2011), ஸ்நாப்சாட் (Snapchat - 2012), TikTok (2016), சுட்டுரை அல்லது கீச்சுரை (Twitter-2013) என்பன இந்நாளில் மேலோங்கிக் காணப்படும் சமூக ஊடகங்கள். இவற்றுள் ஒவ்வொன்றும் வெளியான ஆண்டுகள் அடைப்பிற்குள் தரப்பட்டுள்ளன. இவை சமுதாயத்திலுள்ள எல்லாராலும் எவ்வித இடருமின்றிப் பயன்படுத்த இயலுவதால் சமூக ஊடகங்கள் எனப்பட்டன.

சமூக ஊடகம் என்பது தகவல் தொடர்பு, சமூகம் சார்ந்த உள்ளீடு, உள்ளடக்கப் பகிர்வு, ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இணையதளங்களின் பயன்பாடுகளுக்கான கூட்டுச் சொல்லாகக் கொள்ளப்படுகிறது. நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பல்வேறு சமூகங்களுடன் தொடர்பில் இருப்பதற்கும் தொடர்புகொள்வதற்கும் மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.

சமூக ஊடகங்கள் இந் நாட்களில் அவற்றைப் பயன்படுத்துவோரின் எளிமைப் பாட்டால் மிகவும் செல்வாக்குப் பெற்றுவருகின்றன. இவை எண்ணியல் நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டு அவை தகவல் தொடர்பின் பெரும் பங்கு வகிக்கின்றன. பிற தகவல் தொடர்பு ஊடகங்கள் போல் அல்லாமல் இவை சமுதாயத்திலுள்ள எல்லாராலும் பயன்படுத்த இயலுவதால் செல்வாக்குப் பெற்று வரும் அரிய தகவல் தொடர்புத் தளங்களாகும். ஒருவருக்கொருவர் தொலைதூரத்திலிருந்தும் தகவலைப் பரிமாறிக்கொள்ள வாய்ப்பளிக்கின்றன. வேறு சொற்களில் கூறுவதானால், முழு உலகமும் நம் விரல் நுனியில் உள்ளது.

சமூக ஊடகங்கள் அனைத்தும் தகவல் தொடர்பு வாயில்களே. தகவல் தொடர்பில் மொழிக் கட்டமைப்புக் கருதத்தக்க தொன்றாகும். சமூக ஊடகங்களும் அவற்றுள் ஒவ்வொன்றின் எண்ணியல் இயல்புக்கு ஏற்ப மொழிக்கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. அது “சுருக்கமொழி” எனக் கொள்ளப்படுகிறது. இக்கட்டமைப்பில் காணப்படும் மொழி அமைப்பு இயல்புகள் இங்கு நோக்கப்படுகின்றன.

சமூக ஊடக மொழியானது சமூக ஊடக தளங்களில் தோன்றிய தனித்தன்மையான சொற்களஞ்சியம், தொடரியல் மற்றும் எழுதும் நடையினை விவரிக்கப் பயன்படும் சொல். இந்த மொழி அதன் முறைசாரா மொழி வெளிப்பாடு, வழக்கு மொழிப் பயன்பாடு, சுருக்கம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது, பல சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் சுருக்கமாகக் கட்டமைக்கப்படுகின்றன.

தகவல் தருகின்ற வாயிலாகப் பயன்படுத்தப்படுகின்ற முகநூல், குறுஞ்செய்தி, புலனம், கீச்சுரை ஆகியனவற்றில் மொழியின் மூவகைச் செயன்மைகள் காணப்படுகின்றன. அவை , தன்னிலை ஊட்டம் அல்லது தகவல் தேட்டம், கற்றலூட்டச் செயல்பாடு, உணர்ச்சி செயல்பாடு என்பனவாகும்.

• தன்னிலை ஊட்டம்

முகநூல் வாயிலாக அதில் பதிவிடுபவர் தம் மனநிலையினை மறைமுகமாகவோ வெளிப்படையாகவே வெளிப்படுத்துவது ஒரு சூழ்நிலை அல்லது மன நிலையை விவரிக்கிறது. தகவலைப் பதிப்பவர் தான் உணர்ந்ததை தன் பதிவில் கூறுகிறார். தன் எரிச்சலை மறைமுகமாக வெளிப்படுத்துவதாகவும் அமையும்.

• கற்றலூட்டச் செயல்பாடு

கற்றலூட்டச் செயல்பாடு ஊடகத்தின் வாயிலாக அனுப்பப்படும் தகவல் யாருக்காக அனுப்பப்படுகிறதோ அவரை நேரடியாக ஈடுபடுத்துகிறது. இதனால் பெறுபவர் தகவலின் கற்றல் தாக்கத்திற்கு உள்ளாகிறார்.

• உணர்ச்சி செயல்பாடு

புலனம் போன்ற சமூகத் தொடர்பு ஊடகத்தின் வாயிலாக இன்றைய நிலையில் பலரும் தம் உணர்வுகளை தம் இருக்கையிலிருந்தே வெளிப்படுத்த இயலுகிறது. புலன வழி பேசுவனவற்றை பேசியவாறே பதிக்க இயலுகிறது. அதனால் தகவல் அதனைத் தருபவரிடமிருந்து அவர் உணர்ந்தவாறே வெளிப்படுகிறது.

சமூக ஊடகங்கள் வாயிலாகத் தகவல்கள் காட்சி வாயிலாகவும் மொழி வாயிலாகவும் பகிரப்படுகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படும் மொழி, அளவுச்சுருக்கம், மொழியின் இலக்கண வரையறை தவிர்ப்பு, குறியீட்டுப் பயன்பாடு ஆகிய இயல்புகளைக் கொண்டுள்ளன.

அளவுச் சுருக்கம்

கீச்சுரை(twitter) நிறுவனம் தொடக்க காலத்திலிருந்தே அச்செயலியின் வாயிலாக அனுப்படுகின்ற தகவல்களுக்கு எழுத்துருக்(character) கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. தொடக்க காலத்தில் 140, பின்னர் 280. அதன் பின்னர் 1000 எழுத்துருக்களுக்கு இசைவிருப்பதால் தகவல் தருபவர் பல வழிகளில் மொழிச் சுருக்கத்தினை கையாளுகிறார். விவரிப்புக்கள் மிகுதியான விளக்கங்கள் அவற்றில் இடம் பெறுவதில்லை. இச்சுருக்கம் இத்தன்மையது என வரையறுக்க இயலாதெனினும். பெறுபவரின் மொழிக் கொள்திறனுக்கு ஏற்ப அமையும்.

படமொழிப் பயன்பாடு

படங்கள் வாயிலாகவே தகவல் பகிர்வு மேற்கொள்ளுவதற்காக வடிவமைப்பட்ட சமூக ஊடகங்கள் உள்ளன. படிவரி (Instagram), முக.உல் ரில்ஸ் (Reels) போன்ற செயலிகளை இதற்கு சான்றாக கொள்ளலாம். இவற்றின்வழி நிகழ்வுகள் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றன. நேரடியாகப் பேசுவது, பாடுவது போன்ற அமைப்பில் இதன் செயலாக்கங்கள் விளங்குகின்றன. இதன் வாயிலாகக் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். இது படவழி மொழி ஊடகமாகக் கருதப்படுகிறது,