<

முகப்பு

4.4 பேச்சாற்றலும் எழுத்தாற்றலும்

பேச்சாற்றலும் எழுத்தாற்றலும்

பேசுதல், எழுதுதல் ஆகியன அடிப்படை மொழித்திறன்களைப் பற்றி முந்தைய அலகில் கற்கப்பட்டது. பேசுதல் திறனில் வளர்ச்சி, முதிர்ச்சி, வலிமை, ஈர்ப்ப,. இலக்கிய எழில் ஆகியன அமையும்போது பேசுதல்திறன் பேச்சுத் திறனாகிறது. எழுதி வெளிப்படுத்தப்படும் தகவலில் மேற்கூறிய பண்புகளோடு கருத்துச் செறிவும் இணையும் போது எழுத்துத்திறன் வெளிப்படுகிறது. பேச்சுத் திறனும் எழுத்துத் திறனும் மொழியில் பெறத்தக்க உயர்நிலைத் திறன்காகும்.

மொழிநடை

சொற்பொழிவில் இன்றியமையாது மொழித் தேர்வும் மொழிநடையும் ஆகும். சொற்பொழிவாற்றும்போது ஒவ்வொரு சொல்லும் முறையான பொருளினைத் தெரிவிப்பதற்கு அவற்றைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளுதல் வேண்டும். கேட்போரின் கவனம் சிதறாமலிருக்கும் படியான சொற்கள், சிக்கலற்ற தெளிவான மொழி வெளிப்பாடு ஆகியன சொற்பொழிவினை வளப்படுத்தும்.

விரைவும் ஒலி ஒத்திசைவும் (Tempo & Rhythm)

'சொற்பொழிவாளரின் வாக்கியங்கள் நீண்டும் சுழன்றும் ஒலிக்கும்போது கேட்போரிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். சிறந்த சொற்பொழிவாளர்கள் தங்கள் சொற்களை வெற்று உரைகளால் வசனங்களில் வெளிப்படுத்த முடியும். வழக்கமான உரைநடைக்கு மாறாக இந்த வகை வெற்று வசனங்களை பின்பற்றும் போது புகழ்பெற்ற சொற்பொழிவாளர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் செல்வாக்கு பெற்றிருந்ததை அறியவியலும் பயனுள்ள பொதுப் பேச்சுக்கு அதன் சொந்த உரைவுள்ளது. அறியப்பட்ட எந்தவொரு சிறந்த பேச்சாளரின் உரை மேற்கோளும் அதன் தனித்தன்மையான ஒலிப்பு இனிமையினைக் கொண்டிருக்கும். சிறந்த சொற்பொழிவுகளைக் கேட்க நேரம் ஒதுக்கி அவற்றில் வெளிப்படும் ஒலிப்பு ஒத்திசைவினை உணரவியலும். சரளம், இடைநிறுத்தம், குரல் ஏற்றத் தாழ்வு போன்றன சொற்பொழிவாளர்களுக்கு உகந்த ஒலி ஒத்திசைவினைத் தருவனவாகும்.

கருத்துகளின் குவிப்பு

அறிஞர் அண்ணா போன்றோரின் சொற்பொழிவுகளில், 'பொதுவான கருத்தில் தொடர் உண்மைகள் முன்வைக்கப்படுகின்றன. கருத்து, அதை நிறுவுவதற்கான எடுத்துக்காட்டுகள் அவற்றின் அடிப்படையில் முன்னிறுத்தப்படும் கருத்து என்ற அளவில் சொற்பொழிவின் படிநிலைகள் அமையவேண்டும். அப்போதுதான் கேட்போரைத் தம் வயப்படுத்தி தம் கருத்தின்பால் அழைத்துச் செல்லவியலும். பயனுள்ள சொற்பொழிவு ஓர் ஒளிமிக்க பிறைபோல் தோன்றி முழு நிலவாய் வளர்ந்து சொற்பொழிவாளரின் இலக்கினை அடையும்.

ஒப்புமை.

ஒரு பொருத்தமான ஒப்புமை (உவமை) , கருத்தியலாக அமைந்திருப்பதை புலம்படு காட்சியாக மாற்றவல்லது. இது கேட்பவரின் இயல்பான அறிவை ஈர்க்கிறது. அவர்களின் கற்பனையைத் தூண்டுகிறது, ஒப்புமைகள் ‘ஒரு வரையறுக்கட்ட அல்லது நிலைநாட்டப்பட்ட உண்மையை எளிய மொழியில் மொழிபெயர்க்கின்றன.

சிறந்த சொற்பொழிவாளர்கள் ஒப்புமை கூறுவதில் தேர்ச்சி பெற்றவர்கள். ஒரு நல்ல ஒப்புமை அறியப்படாத அல்லது தெளிவில்லாத கருத்துகளை தெளிவாக்க வல்லது. நன்கு கட்டமைக்கப்பட்ட ஒப்புமையால், சொற்பொழிவு நுட்ப அடிப்படையில் சிறந்த கருத்தாடலை முன்னிறுத்தவியலும். அறிஞர் அண்ணா போன்ற சொற்பொழிவு வல்லுநர்களின் பேச்சில் ஒப்புமை மேலோங்கிக் காணப்படும்.

உணர்வுச் செறிவு

கேட்போரின் உணர்வுகளில் பேச்சாளரின் கருத்தினைப் பதிக்க அவர்கள் சிந்தனை மட்டுமல்லாமல் உணர்வுகளும் கிளரப்படவேண்டும். மேலும் அவர்கள் உணர்வுகளை எதிரொளிக்கும் வெளிப்பாடுகள் உருவாகப் பேச்சாளாரிடம் பல்வேறு மெய்ப்பாடுகள் வெளிப்படவேண்டும்.. சொல்லில் பொதிந்துள்ள உணர்வு பேச்சாளரின் மெய்ப்பாடுகளிலும் வெளிப்படும் கேட்போர் அசைவில்லாப் பதுமைகள் ஆகிவிடுவர். அந்நிலையில் பேச்சாளர், கேட்போரை மந்திரத்திற்கு உட்பட்டோரைப் போன்று மயக்கவியலும்.

ஆளுமை வீச்சு

உங்கள் ஆளுமையை வெளிப்படுத்துவது பேச்சாளரை மிகவும் பயனுள்ள தகவல் ஊட்டுபவராக ஆக்குகிறது, ஏனெனில் அது சொற்பொழிவாளரின் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது, பேச்சாளரோடு கேட்போர் இணைந்து அவர்பால் நம்பிக்கையினை வளர்த்துக் கொள்கின்றனர். அதனால் பேச்சாளரின் இலக்கு நிறைவேறுகிறது.

மேலும் கீழே தரப்படும் குறிப்புக்கள் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ வழிகாட்டும்.

பேசும் போது தன்னம்பிக்கையுடன் இருப்பதன் வாயிலாக பேச்சாளர் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் பற்றிய அறிவையும்; புரிதலையும் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும்.

  • பரிவுணர்ச்சி.
  • கதைசொல்லல்.
  • கேட்போரைத் தம் பார்வைக்குள் கொண்டுவருதல்.
  • சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிகளைக் கேட்டு அவற்றிலிருந்து பேச்சு வல்லமைக் கூறுகளள் பெறுதல்.
  • சிறிய குழுவில் பேசிப் பழகுதல்.
பேச்சுத் திறன்

பேச்சுத் திறன் சொற்பொழிவுத் திறன் என்றும் குறிக்கப்படும். சொற்பொழிவு திறன் என்பது ஒருவர் சரளமாகப் பேசும் திறன் ஆகும். சிறந்த சொற்பொழிவாளர்கள் பல திறன்களைக் கொண்டுள்ளனர், அவை பொதுவில் ஈர்ப்புமிக்கவாறு தகவல்களை வெளிப்படுத்த வழிவகுக்கின்றன. சிறந்த பேச்சுத் திறன் கொண்ட எவரும் சிறந்த பொதுப் பேச்சாளராக முடியும்.

சொற்பொழிவாற்றலின் சிறப்பு

கோடிக்கணக்கில் விற்பனையாகி பெரும் புகழ்பெற்ற ஆங்கில நூல் டேல் கார்னி என்பாரின் “Public Speech and Influencing People in Bussiness”. “How to Win Friends and Influence People” என்பன பேச்சாற்றலின் சிறப்பினை விரித்துரைக்கின்றன. பேச்சாற்றலில் வல்லவர்கள் தாம் அவர்கள் ஈடுபட்டுள்ள துறைகளில் வல்லுநர்களாகக் கருதப்படுவர். இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் கூறிய திருவள்ளுவர் சொல்லாற்றலின் மேன்மையினை,

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது. ( குறள் எண் – 647).

எனக் கூறியுள்ளார்.

யாவரையும் தம் பேச்சாற்றலால் ஈர்த்த கிரேக்க அறிஞர் டெமாஸ்தனிஸ் சொற்பொழிக் கலையின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

பிளாட்டோ, அரிஸ்டாட்டில் வாழ்ந்த கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கிரேக்க மன்னரும் அலெக்சாண்டரின் தந்தையுமான பிலிப் என்பாரைக் கதிகலங்க வைத்த பெருமை இவருக்குண்டு. உலக அளவில் புகழ் பெற்ற பேச்சாளர்களாக மார்ட்டின் லூதர் கிங், எட்மண்ட் பர்க், வின்சென் சர்ச்சில். நெல்சன் மண்டேலா. மாகாத்மா காந்தி. தந்தை பெரியார் முதலானோர் உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவாளர்களாகக் கருதப்படுகின்றனர். அடிமை இந்திய வரலாற்றில் என்றும் நினைக்கப்படுகின்ற மெக்காலெ தம் பேச்சாற்றலின் வாயிலாகத்தான் ஆங்கிலக் கல்வியை இந்தியாவில் புகுத்த முடிந்தது,

மக்களின் உள்ளங் கவர்ந்து உலகப் புகழ் பெற்ற தமிழ்ப் பேச்சாளர் அறிஞர் அண்ணா. இத்தகைய சிறப்பிற்குரிய மொழி ஆற்றலை மொழி கற்போர் பெறவேண்டும் என்னும் வேட்கையில் அவ்வாற்றலை வளர்த்துக்கொள்ளத் தக்க முறைகள் இங்கு நோக்கப்படுகின்றன.

எழுதும் ஆற்றல் என்பது எழுத்துகளின் தெளிவு, அளவு, சொல் வாக்கிய இடைவெளி, அழகு முதலிய இயல்புகளைக் குறிப்பதாகும். இது அடிப்படை மொழித்திறன்களுள் ஒன்று. எழுத்தாற்றல் என்பது மொழியில் பெறத்தக்க உயர்நிலை ஆற்றலாகும். கட்டுரை, கவிதை, உரையாடல் போன்ற பல்வேறு இலக்கிய வடிவங்களில் படிப்போரை ஈர்ப்பதால் எழுதுதல் ’எழுத்தாற்றல்’ எனப்படும். மொழி அறிவின் மேம்பட்ட நிலை இது. இவ்வாற்றல் ஆசிரியர்கள் பெற்றிருப்பின் மாணவரைத் தம்பால் ஈர்ப்பதற்கும் வலுவாகக் கருத்துணர்த்துவதற்கும் வழிவகுக்கும். பேச்சாற்றல் போன்று இவ்வாற்றலும் ஆசிரியர் பெறவேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் கட்டுரை, கதை, கவிதை ஆகியனவற்றைப் படைக்கும் வழிகாட்டல்கள் சுருக்கமாக வழங்கப்படுகின்றன.கட்டுரை எழுதும்பொழுது பொருள் ஒழுங்கு, சொல் தெரிவு, சிறு வாக்கிய அமைப்பு, பந்தி அமைப்பு, குறியீடுகள் உபயோகம் என்பவற்றில் கவனம் தேவை. மேலும் "தெளிவு, ஒன்றை நேராகக் கூறல், சுருங்கிய சொல்லால் விரிந்த பொருளை குறித்தல், குறிப்பாற் பொருளைச் சுட்டுதல்" போன்றன சிறந்த கட்டுரையில் அமையத்தக்க பண்புகள் ஆகும். செம்மையான கட்டுரையின் அமைப்பினைக் கீழுள்ள வரைவு காட்டும்.