தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழகத்தின் நிலப்பரப்பு

  • 1.1 சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழகத்தின் நிலப்பரப்பு

    தமிழக நிலப்பரப்பின் எல்லைகள் அவ்வப்போது மாறுபட்டு வந்துள்ளன என்பதை நமக்குக் கிடைத்த நூல்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. பழங்காலத்தில் தமிழகம், தற்போது உள்ள குமரிமுனைக்குத் தெற்கே உள்ள கடலுக்கு அப்பாலும் வெகுதூரம் பரவி இருந்ததாகத் தெரிய வருகிறது.

    பாண்டியன் ஒருவன், பஃறுளி ஆறும், குமரிமலையும் கடல்கோளால் மூழ்கி விட்டதால், தன்னுடைய நாட்டு எல்லையைப் பெருக்க வடக்கு நோக்கிப் படை எடுத்துச் சென்றான் என்பதைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோஅடிகள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

    பஃறுளி யாற்றுடன் பன் மலை அடுக்கத்துக்
    குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு,
    தென்திசை ஆண்ட தென்னவன் வாழி.

    (சிலப்பதிகாரம், காடுகாண் காதை:19-22)

    (குமரிக்கோடு - குமரிமலை; தென்னவன் - பாண்டியன்.)

    இதே செய்தியைக் கலித்தொகையில் ஆசிரியர் சோழன் நல்லுருத்திரனார் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்,

    மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்
    மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடு இடம்படப்
    புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
    வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்.

    (கலித்தொகை, முல்லைக்கலி :104:1-4)

    (மலிதிரை - மிகுதியான அலைகள்; தன் மண் - தன்னுடைய பாண்டிய நாடு; மேவார் - பகைவர்; வணக்கிய - அடக்கிய.)

    இரண்டு கடல்கோள்கள் ஏற்பட்டதாகவும், அவற்றால் தமிழகத்திற்குப் பேரிழப்பு ஏற்பட்டதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடல் கோள்களுக்கு உட்பட்டு மூழ்கிப்போன நிலப்பகுதி இலெமூரியாக் கண்டம் (Lemuria) என்று அழைக்கப்பட்டது. இதனை சர் வால்டர் ராலே, பேரா.ஹெக்கல், சர் ஜான் ஈவான்ஸ், ஸ்காட் எலியட், சர் ஜே. டபிள்யூ, ஹோல்டர்ன்ஸ் ஆகிய ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இங்குதான் மக்கள் முதன்முதலில் தோன்றியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:16:50(இந்திய நேரம்)