Primary tabs
-
1.2 சங்க காலத் தமிழகத்தின் நிலப்பரப்பு
வடக்கில் தக்காண பீடபூமியும், கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் கடல்களும் சங்க காலத் தமிழகத்தின் எல்லைகளாக அமைந்திருந்தன.
தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரத்தில் தமிழகத்தின் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன.
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)
என்பது பனம்பாரனார் கூற்று. இவ்வடிகளில் பனம்பாரனார் தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும், தென் எல்லையாகக் குமரிக் கடலையும் குறித்துள்ளார். அதுபோலவே, இளங்கோ அடிகளும் தாம் பாடிய சிலப்பதிகாரத்தில் தமிழகத்துக்கு வேங்கட மலையை வட எல்லையாகவும், கடலைத் தென் எல்லையாகவும் காட்டியுள்ளார்.
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)
(நெடியோன் குன்றம் - திருமாலவன் குன்றம், வேங்கட மலை, திருப்பதி; தொடியோள் - குமரி; பௌவம் - கடல்; வரம்பு - எல்லை.)
சங்க காலத்துக்கு முன்பு கன்னியாகுமரிக்குத் தெற்கில் நெடுந்தூரம் பரவியிருந்த தமிழகம் சங்க காலத்தில் சுருங்கிவிட்டது. குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் புறநானூற்றில் சங்க காலத் தமிழகத்தின் எல்லையை அளவிட்டுக் காட்டியுள்ளார்:
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை(புறநானூறு,17:1-2)
(வடபெருங்கல் - வேங்கடமலை; குண - கிழக்கு; குட - மேற்கு.)
புறநானூற்றில் கூறியிருப்பது போலவே மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும்,
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை(மதுரைக்காஞ்சி:70-71)
என்று தமிழகத்தின் எல்லையைச் சுட்டியுள்ளார்.
வேங்கடத்துக்கு வடக்கில் வேறுமொழி (தெலுங்கு) இருந்து வந்தது என்பதனை மாமூலனார் அகநானூற்றில் பின்வருமாறு கூறியுள்ளார்.
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,,,,,(அகநானூறு, 211:7-8)
(உம்பர் - மேலே, வடக்கில்; மொழிபெயர் தேஎத்தர் - வேறு மொழி பேசும் நாட்டினர்.)
குறுந்தொகையில் மாமூலனார் கட்டி என்னும் மன்னனின் நாட்டுக்கு வடக்கில் வடுகர் (தெலுங்கர்) வாழ்ந்து வந்தனர் என்பதை,
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேல் கட்டி நல்நாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்.(குறுந்தொகை,11:6-7)
என்று கூறுகிறார்.
சங்க காலத் தமிழகத்தில் தற்போது உள்ள கேரளமும் சேர்ந்திருந்தது என்பது நன்னூல் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது. நன்னூலார் தமது இலக்கண நூலாகிய நன்னூலில் தமிழகத்தின் நான்கு எல்லைகளைச் சரிவரக் குறிப்பிட்டுள்ளார்.
குணகடல் குமரி குடகம் வேங்கடம்
(நன்னூல்,சிறப்புப்பாயிரம்:8)
என்று மேற்கு எல்லையாகக் குடகு மலை (மேற்குத்தொடர்ச்சி மலை) உள்ளதைச் சுட்டியுள்ளார். நன்னூல் இந்த எல்லைகளை உணர்த்துவதால், கி.பி 12ஆம் நூற்றாண்டில் மேற்கே குடகு வரை தமிழகம் பரவி இருந்தது தெரியவருகிறது.
அந்நாளில் தமிழகம் பல நூறு ஆண்டுகளாகப் பாண்டியநாடு, சோழநாடு, சேரநாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு முதலிய அரசியற் பிரிவுகளுக்குட்பட்டுக் கிடந்ததற்கு அதன் இயற்கை அமைப்புத்தான் காரணம் ஆகும்.