Primary tabs
1.4 பிற்காலத் தமிழகத்தின் இயற்கை அமைப்பு
இன்றைய தமிழக எல்லைக்குள் மலைத் தொடர்களும், மலைகளும், ஆறுகளும், அருவிகளும், காடுகளும், பள்ளத்தாக்குகளும், சமவெளிகளும் நிறையக் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்கே காண்போம்.
மலைகள் ஒன்றையொன்று அடுத்து அடுத்து அமைந்து ஒரு நீண்ட சுவர்போல் எழும்பிக் காணப்படுவதால் இதனை மலைத்தொடர் என்பர். தமிழகத்தைப் பொருத்தவரையில் இருவேறு மலைத்தொடர்கள் இயற்கையாக அமையப்பெற்றுள்ளன. இவற்றுள் ஒன்று மேற்கு மலைத்தொடர். மற்றொன்று கிழக்கு மலைத்தொடர் ஆகும்.
- மேற்கு மலைத்தொடர் (Western Ghats)
- கிழக்கு மலைத்தொடர் (Eastern Ghats)
- நீலகிரி
- ஆனை மலை
- சேர்வராயன் மலை
- கொல்லி மலை
- கல்ராயன் மலை
- பச்சை மலை
- காவிரி ஆறு
- வெள்ளாறு
- பாலாறு
- தென்பெண்ணை ஆறு
- வைகை ஆறு
- தாமிரபரணி ஆறு
- பழையாறு
- தென்மேற்குப் பருவக்காற்று
- வடகிழக்குப் பருவக்காற்று

இம்மலைத்தொடர் மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் உள்ள தபதி ஆற்றுக்குத் தெற்கே தொடங்கி மராட்டியம், கோவா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் வழியாக நீண்டு தமிழ் நாட்டிலுள்ள கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் 1600 கி.மீட்டர் ஆகும். உயரம் 900 மீட்டர் ஆகும். இம்மலைத் தொடர் மராட்டியத்திலும், கர்நாடகத்திலும் ‘காயத்ரி மலைத்தொடர்’ எனவும், தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத் தொடர் எனவும், கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகின்றது.
இம்மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2695 மீ) ஆகும். இதுவே தென் இந்தியாவின் உயரமான சிகரம் ஆகும்.
தென் இந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகின்றன. இங்கு உருவாகிக் கிழக்கு நோக்கித் தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கும் முக்கியமான ஆறுகளுள் ஒன்று காவிரி ஆறு ஆகும். தாமிரபரணி ஆறும் வேறுசில சிறுசிறு ஆறுகளும் இம்மலைத்தொடரில் தோன்றி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. அவற்றுள் சில மணிமுத்தாறு, கபினி ஆறு, மற்றும் பெரியாறு ஆகும்.
இம்மலைத்தொடர் முற்காலத்தில் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாஸ்கர் மற்றும் செல்சு தீவுகளோடு இணைந்திருந்தது என்று புவியியலார் கூறுகின்றனர். இதுவே இலெமூரியாக் கண்டம் என்று முன்பே படித்தோம்.
இம்மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கணவாய்கள் அதிகமாக இல்லை. கணவாய் என்பது மலைகளுக்கு இடையே உள்ள சிறுவழி. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பாலக்காட்டுக் கணவாய், ஆரல்வாய்க் கணவாய், செங்கோட்டைக் கணவாய் ஆகியன இருக்கின்றன. இவை தவிர ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும், அருவிகளும் ஏராளமாக உள்ளன. ஆதலால் இம்மலைத் தொடர் வனப்புடனும். வளத்துடனும் இருக்கிறது. இவ்வளத்தினால் ஆயிரக்கணக்கான தாவர இனங்களும் நூற்றுக்கணக்கான வனவிலங்குகளும் அங்கு இருக்கின்றன.
கிழக்கு மலைத்தொடர் மேற்கு வங்காளம் முதல்
தமிழ்நாடு வரை
கிழக்குக் கடற்கரையை ஒட்டி வருகிறது. இம்மலைத் தொடர் மேற்குத் தொடர்ச்சி
மலைகள் போல் தொடர்ந்து காணப்படவில்லை. மாறாகப் பகுதி பகுதிகளாகக் காணப்படுகின்றது.
ஏனென்றால் கோதாவரி, கிருஷ்ணா, மகாநதி, காவிரி போன்ற பெரிய ஆறுகள் இம்மலைத்
தொடர் ஊடே செல்வதால் இடையிடையே தொடர்ச்சி இல்லாமல் அமைந்திருக்கிறது. இம்மலைத்
தொடரில் மிக உயர்ந்த சிகரம் மகேந்திரகிரி ஆகும். இதன் உயரம்
1501 மீட்டர் ஆகும். இது ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ளது. மேலும் இம்மலைத்
தொடர் மேற்கு மலைத்தொடரைவிட மிகவும் பழைமை வாய்ந்தது எனப் புவியியலாளர் கூறுகின்றனர்.
இக்கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் பெரும்பாலும் ஒரிசா, ஆந்திரா மாநிலங்களில்
உள்ளன.
ஒரிசாவில் தொடங்கித் தமிழ் நாட்டிலுள்ள சென்னைக்கு அண்மையிலிருந்து மேற்கு முகமாக வளைந்து மேற்கு மலைத்தொடருடன் நீலகிரியில் இணைகிறது. மேலும் இம்மலைத்தொடர் தமிழகத்தை ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து பிரிக்கின்றது.
மலைகள் ஒரு நாட்டுக்கு இயற்கை அரண்களாக உயர்ந்து நிற்கின்றன. தமிழகத்தில் மேற்கு மலைத்தொடரில் நீலகிரி, ஆனைமலை போன்ற மலைகளும், கிழக்கு மலைத் தொடரில் சேர்வராயன் மலை, கொல்லி மலை, கல்ராயன் மலை, பச்சை மலை போன்ற மலைகளும் அமைந்துள்ளன. இம்மலைகள் ஒவ்வொன்றும் நீண்டுயர்ந்த தொடராக உள்ளன.
தென்னிந்தியாவில் உள்ள மேற்கு மலைத்தொடரில்
அமைந்துள்ள
பெரிய மலைத்தொடர் நீலகிரி ஆகும். இது தமிழ்நாட்டின் மேற்குக்
கோடியில் அமைந்த நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. மேலும் இம்மலை கேரள
மாநிலத்தின் வடக்கிலும், கர்நாடக மாநிலத்தின் தெற்கிலும் நீண்டு பரவி அமைந்துள்ளது.
இம்மலையில் அமைந்த மிக உயரமான சிகரம் தொட்டபெட்டா ஆகும். இது
2623 மீட்டர் உயரம் உடையது. தென்னிந்தியாவின் முக்கியக் கோடை வாசத்தலமான
உதகமண்டலம் இம்மலையில் உள்ளது. இது சுற்றுலாவுக்குப் பெயர்
பெற்ற ஊராக விளங்குகிறது. இம்மலையில் தேயிலை, காப்பி, ஆரஞ்சு, ரப்பர்
தோட்டங்கள் நிறைய உள்ளன. யூகலிப்டஸ் மரங்கள் மிகுதியாக வளர்கின்றன.
இம்மரங்களிலிருந்து எடுக்கப்படும் தைலம் (எண்ணெய்) நீலகிரித் தைலம் என்று
கூறப்படுகிறது. இம்மலையில் துதவர் (Todas), கோதர் (Kotas)
போன்ற பழங்குடி மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். துதவர்களின்
பழங்குடிசைகள் இன்றும் இம்மலையில் ஆங்காங்கே இருப்பதைக் காணலாம்.
மேற்கு மலைத்தொடரில் அமைந்த மற்றொரு பெரிய மலைத் தொடர் ஆனைமலை ஆகும். இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சிக்கு அருகில் உள்ளது. மேலும் இது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் பரவி அமைந்துள்ளது. இம்மலையில் தேயிலையும் காப்பியும் மிகுதியாகப் பயிராகின்றன. தேக்கு மரங்களும், பல்வகையான காட்டு மரங்களும், யானைகளும் மிகுதியாக உள்ளன. இம்மலையில் யானைகள் மிக அதிகமாக உள்ளதால் இம்மலைக்கு ஆனைமலை என்ற பெயர் வழங்கியது.
தமிழ்நாட்டில் சேலம் மாநகரத்தின் அருகே
சேர்வராயன் மலை
அமைந்துள்ளது. இம்மலையில்தான் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்
ஏர்க்காடு என்னும் கோடை வாசத்தலம் உள்ளது. இது கடல் மட்டத்துக்கு
மேல் 1365 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சேர்வராயன் மலையில் ஏர்க்காட்டைச்
சுற்றிலும் 67 கிராமங்கள் இருக்கின்றன. இக்கிராமங்களில் வாழும் மக்கள்
தங்களின் காவல் தெய்வமாக வழிபடும் கடவுளின் பெயர் சேர்வராயன்
என்பதாகும். சேர்வராயன் என்னும் கடவுள் இருக்கும் மலையாதலின் இம்மலை சேர்வராயன்
மலை எனப்பட்டது. இம்மலையின் உச்சியில் (1620 மீட்டர் உயரத்தில்)
சேர்வராயன் கோயில் என்ற கோயில் உள்ளது. இக்கோயிலில் சேர்வராயன் தன்னுடைய
மனைவியார் காவேரி அம்மனோடு வீற்றிருக்கிறார். சேர்வராயன் மலையில் பெரும்
அளவு கனிம வளங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இங்கு மேக்னசைட் (Magnesite)
படிமங்கள் உள்ளன.
தமிழ் நாட்டின் நடுப்பகுதியில், தற்போதைய
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள
சிறுமலைத் தொடர் கொல்லி மலை ஆகும். இதன் மொத்த நீளம் 27 கி.மீ.
இம்மலைத் தொடர் 1000 முதல் 1300 மீட்டர் வரை உயரம் கொண்டது. கொல்லி
மலை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. சங்க காலத்தில் இம்மலையை வல்வில்
ஓரி என்பவன் ஆண்டு வந்தான். இதனைப் புறநானூற்றில் பெருஞ்சித்திரனார்
என்ற சங்கப் புலவர்,
கொல்லி ஆண்ட வல்வில் ஓரி
(புறநானூறு, 158:5)
என்று குறிப்பிடுகிறார். வல்வில் ஓரியைக் கடையெழு வள்ளல்களில் ஒருவன் என்று சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. இம்மலையில் கொல்லிப் பாவை என்ற தெய்வப் பாவையின் (பெண்ணின்) சிலை இருந்ததாகச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
தமிழ்நாட்டில் தற்போதைய சேலம், விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களுக்கு இடையில் கல்ராயன் மலை ஒரு பெரிய தொடராக நீண்டு அமைந்துள்ளது. இம்மலையின் பெரும்பகுதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டத்தில் (Taluk) அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து அமைந்துள்ளது. வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரு பகுதி சராசரி 820 மீ உயரம் உடையது. இது சின்ன கல்ராயன் மலை எனப்படுகிறது. தெற்கு நோக்கி அமைந்துள்ள மற்றொரு பகுதி சராசரி 1365 மீ உயரம் உடையது. இது பெரிய கல்ராயன் மலை எனப்படுகிறது. தமிழ் நாட்டில் உள்ள கிழக்கு மலைத்தொடரில் பெரும்பகுதியைக் கல்ராயன் மலை கொண்டுள்ளது எனப் புவியியலார் கூறுகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள துறையூர் என்னும் ஊரின் அருகில் பச்சை மலை உள்ளது. இம்மலை முழுவதும் பச்சை நிறத் தாவரங்களால் போர்த்தப்பட்டிருப்பதால் இம்மலை பச்சை மலை எனப்பட்டது. இம்மலை தொடர்ச்சியாக அமையாது விட்டுவிட்டு, ஆனால் அருகருகே அமைந்த ஏராளமான குன்றுகளால் ஆகியது. இம்மலை சுமார் 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
மேலே குறிப்பிட்ட மலைகளே அல்லாமல் தமிழ்நாட்டில் சவ்வாது மலை, ஏலகிரி, பழனி மலை, சிறுமலை, பொதிகை மலை போன்ற மலைகளும், எண்ணற்ற சிறு சிறு குன்றுகளும் உள்ளன.
தமிழகத்தில் ஓடும் ஆறுகள் தமிழகத்தின் பண்பாட்டில்
முக்கியப் பங்கு
வகிக்கின்றன. பஃறுளி ஆறு வளப்படுத்திய இலெமூரியாக் கண்டத்தில் தமிழ் மொழியும்,
பண்பாடும் வளர்ந்து வந்துள்ளன. அதுபோலக் காவிரி, வைகை ஆகிய ஆறுகள் வரலாற்றுச்
சிறப்பு வாய்ந்தவையாகும். பழங்காலத்தில் காவிரி ஆறு பாயும் பகுதியில் சோழப்
பேரரசும், வைகை ஆறு பாயும் பகுதியில் பாண்டியப் பேரரசும் தோன்றின.
காவிரி ஆற்றினை வட இந்தியாவில் ஓடும் கங்கை
ஆற்றிற்கு
ஒப்பாகக் கூறுவார்கள். இக்காவிரி ஆறு கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி
மலையில் அமைந்துள்ள குடகு மலையில் 4400 அடி உயரத்தில் உள்ள தலைக்காவிரி
என்ற இடத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கி.மீட்டர். கர்நாடகத்திலுள்ள
குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா நகரம் இவற்றின் வழியாகப் பாய்ந்து, தமிழ்
நாட்டில் உள்ள தர்மபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை
வழியாகச் சென்று பூம்புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத்தில் வங்கக் கடலில்
கலக்கின்றது. இக்காவிரி ஆறு பற்றிச் சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் உள்ளன.
கடும்புனல் மலிந்த
காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள்
போல
(அகநானூறு, 62:9-10)
(கடும்புனல் - விரைந்தோடும் நீர்; நீத்தம் - வெள்ளம்; மண்ணுநள் - குளிப்பவள்.)
வாரல்எம் சேரி;
தாரல்நின் தாரே
அலரா கின்றால் பெரும! காவிரிப்
பலர்ஆடு பெருந்துறை மருதொடு.....
(குறுந்தொகை,258:1-3)
(வாரல் - வாராதே; தாரல் - தாராதே; தார் - மாலை; அலர் - பழிச்சொல்.)
பெரிதாகிப் பாயும் காவிரி ஆறு திருச்சிராப்பள்ளிக்கு
வடக்கே 15 கி,மீ
தொலைவில் இரு கிளைகளாகத் தெற்கு வடக்காகப் பிரிகின்றது. தென்கிளையாக உள்ளது
காவிரி ஆறு என்றும் வட கிளையாக உள்ளது கொள்ளிடம் ஆறு என்றும்
அழைக்கப்படுகிறது. கரிகால் சோழன் கட்டிய கல்லணை இவ்வாற்றின் குறுக்கே
கட்டப்பட்டதாகும். அதுபோலத் தமிழகத்திலுள்ள மிகப்பெரிய அணை ஒன்று காவிரி
பாயும் மேட்டூரில் கட்டப்பட்டுள்ளது.
சேர்வராயன் மலை, கல்ராயன் மலை, பச்சை மலை ஆகிய மலைகளிலிருந்து உருவாகும் சிறுசிறு அருவிகள் ஒன்று சேர்ந்து வெள்ளாறு என்ற பெயருடன் தென் ஆற்காடு மாவட்டத்தில் ஓடிக் கடைசியில் பரங்கிப்பேட்டையில் போய்க் கடலில் கலக்கிறது. மழையினால் மட்டுமே இவ்வாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படுகிறது. வெள்ளாற்றைச் சோழர்கள் பலகாலம் வட எல்லையாகக் கொண்டிருந்தனர்.
பாலாறு கர்நாடக மாநிலத்தில் நந்திதுர்க்கம் என்னும் மலைப்பகுதியில் தோன்றுகிறது. அது கிழக்காக ஆந்திர மாநிலத்துப் பகுதியில் ஓடிப் பின்பு தமிழ் நாட்டில் வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களைக் கடந்து சென்று சதுரங்கப்பட்டினத்தின் அருகில் கடலுடன் கலக்கிறது. பெருமழை பெய்தாலன்றி இவ்வாற்றில் வெள்ளம் பெருகுவதில்லை. இக்காரணத்தால் பாலாறு பெரும்பாலும் வறண்டே காணப்படும். ஆற்றுப்படுகைகளில் கிணறுகள் தோண்டி உழவர்கள் வேளாண்மை செய்கின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் சென்னவராயன் பேட்டை என்னும் இடத்தில் தோன்றும் தென்பெண்ணையாறு சேலம், தென் ஆர்க்காடு ஆகிய மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து கடலூருக்கு அருகில் கடலில் சங்கமம் ஆகின்றது. இந்த ஆறு தமிழகத்தின் முக்கியமான ஆறுகளில் ஒன்று என மகாகவி பாரதியார் கூறுகிறார்:
காவிரி தென்பெண்ணை
பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருநைநதி
(பாரதியார் கவிதைகள்-செந்தமிழ் நாடு-3)
வைகை ஆறு பழனி மலையில் தோன்றுகிறது;
அது மதுரை
மாநகருக்குச் சீரும் சிறப்பும் தருகின்றது. மதுரையைக் கடந்து கிழக்கு நோக்கிப்
பாய்ந்து சென்று வங்கக் கடலோடு கலக்கின்றது. இது குறித்துச் சங்க இலக்கியங்களில்
ஒன்றான அகநானூற்றில்,
மையெழில் உண்கண் மடந்தையொடு
வையை
ஏர்தரு புதுப்புனல்...............................
(அகநானூறு,256:10-11)
(ஏர் - அழகு; புதுப்புனல் - புதுவெள்ளம்.)
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிபாடலின் 6,7,10,11,12,16,20,22 ஆகிய பாடல்கள் வையையைப் பாடுவனவாகவே அமைந்துள்ளன. இந்த ஆற்றிலும் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடுவதில்லை. மேற்குமலைத் தொடரில் பொழியும் மழை நீரை அணைகள் கட்டித் திருப்பி வைகையில் செலுத்துகின்றனர். இவ்வைகை ஆற்றுக்குத் துணை ஆறுகள் உண்டு. அவை சுருளியாறு, தேனியாறு, வராகநதி, மஞ்சளாறு முதலியன.
தண்பொருநை என அழைக்கப்படும் தாமிரபரணி
ஆறு திருநெல்வேலி
மாவட்டத்திற்கு மேற்கே மலைத்தொடரில் தோன்றி வருகிறது. இது ஓடும் வழிகளை எல்லாம்
செழிக்க வைத்து வங்கக்கடலில் போய்க் கலக்கின்றது. இது மிகப்பழமை வாய்ந்த
ஆறு ஆகும். இந்த ஆறு பற்றி வால்மீகி இராமாயணத்தில் கூறப்படுவதோடு, வரலாற்றுக்
குறிப்புகளும் கிடைக்கப்பெறுகின்றன. ஒரு காலத்தில் இது இலெமூரியாக் கண்டம்
இருந்தபோது இலங்கை வரை பாய்ந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தென் கோடியில் பல சிற்றாறுகள் ஓடுகின்றன. அவற்றுள் புகழ்பெற்றது பழையாறு என்பது. பல சிற்றாறுகள் ஒன்றுகூடிப் பழையாறு உருவாகின்றது. அச்சிற்றாறுகளில் ஒன்று மகேந்திரகிரியின் தென்புறம் தோன்றிப் பூதப்பாண்டி, கோட்டாறு, நாகர்கோயில், சுசீந்திரம் ஆகிய ஊர்களை அணைத்துச் சென்று மணக்குடி என்னும் இடத்தில் கடலில் கலக்கின்றது. இது உற்பத்தியாகுமிடத்தில் இதன் குறுக்கே பண்டைக் காலத்தில் கட்டப்பெற்ற அணை ஒன்று உள்ளது. இவ்வணைக்குப் பாண்டியன் அணை என்று பெயர் வழங்குகின்றது.
தமிழகத்தின் கிழக்கில் வங்கக்கடலும், தெற்கில் இந்துமகா சமுத்திரமும், மேற்கில் அரபிக்கடலும் இயற்கையான அரண்கள் போன்று காட்சி தருகின்றன என்பதை அறிவோம். தொன்றுதொட்டே இக்கடல் அரண்கள் பற்றிப் பல குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. இதைச் சிலப்பதிகாரம்,
நாமநீர் வேலி யுலகிற்கு
(சிலப்பதிகாரம், மங்கல வாழ்த்துப்பாடல்:8)
(நாமநீர் - அச்சத்தைத் தருகின்ற கடல்; வேலி - அரண்.)
என்ற தொடரால் குறிப்பிடுகின்றது.
சங்க காலத்தில் கிழக்குக் கடற்கரையில் காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, காயல் போன்ற துறைமுகப்பட்டினங்கள் சிறப்புற்று விளங்கின. தமிழகத்தைச் சுற்றி மூன்று புறத்திலும் கடல் சூழ்ந்து இருந்ததால் முத்துக்குளிக்கும் தொழில் அயல்நாட்டுச் செலாவணியைத் தேடித் தந்தது. கடலால் சூழப்பட்டிருந்ததால் கிரேக்கர், ரோமர், பினீசியர் (அரேபியர்) சீனர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் ஆகியோர் வணிகம் செய்யத் தமிழகத்திற்குக் கடல் வழியாக வந்து சென்றுள்ளனர். ஏலம், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களும் தமிழகத்திற்கு அந்நியச் செலாவணியைத் தேடித் தந்தன. தமிழகம் வளர்ச்சி பெற உதவியதால் இக்கடல்கள் சூழ்ந்ததும் நன்மையையே அளித்தது. இருப்பினும், இக்கடல்கள் தீங்கு விளைவிக்கவில்லை எனவும் கூற இயலாது. கடல் கோள்கள் ஏற்பட்டுள்ளன. இயற்கைச் சீற்றமான புயல், கடல் அரிப்பு இவற்றால் தமிழகம் பல இன்னல்களைச் சந்தித்துள்ளது. நீண்ட மலைத்தொடர்களும், கடல்களும் இருந்தமையால் பேரரசுகள் தோன்றுவது கடினமாக இருந்தது.
ஒரு நாட்டின் இயற்கை அமைப்பைப் பற்றி அறியும் போது அந்நாட்டில் வீசும் காற்றுகளைப் பற்றியும் அறிந்து கொள்வது அவசியம் ஆகிறது. தமிழகத்தில் இருவகையான காற்றுகள் இரு பருவங்களில் வீசுகின்றன. அவையாவன: 1. தென்மேற்குப் பருவக்காற்று, 2. வடகிழக்குப் பருவக்காற்று. தமிழகத்திற்கு மழையை வழங்குவன இப்பருவக்காற்றுகள்.
தென்மேற்குப் பருவக்காற்று சூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் வீசுகின்றது. இது இந்துமகா சமுத்திரத்தையும், அரபிக்கடலையும் கடந்து மேகங்களைக் கொண்டு வந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்புறத்தைத் தாக்குகின்றது. அதனால் அங்கெல்லாம் பெருமழை பெய்கின்றது. இதனால் அண்டை மாநிலமான கேரளத்திற்குக் குறைவின்றி நீர்வளம் கிடைக்கின்றது. இக்காற்று உயரமான மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து வீசுவதில்லை. இதனால் தமிழகத்திற்கு மிகுதியான மழை இல்லை எனலாம். இருப்பினும் இக்காற்று பாலக்காட்டுக் கணவாயின் வழியே நுழைந்து சேர்வராயன் மலைகளில் மோதுவதால் சிறிதளவு மழை பெய்கிறது. ஆகஸ்ட் மாதத்தின் இடையில் காவிரி ஆற்று ஓரங்களில் இக்காற்று மிகுதியாக வீசுவதால் தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி போன்ற இடங்களில் நல்ல மழை பெய்கிறது. ஆகஸ்டின் பிற்பகுதியிலும் செப்டம்பர் முழுவதிலும் இக்காற்று காஞ்சிபுரத்திற்கும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர்க்கும் இடைப்பட்ட கடலோர மாவட்டங்களுக்கும், மரக்காணம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களுக்கும் மழையைத் தருவதுண்டு.
இக்காற்று அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரையில் வீசுகின்றது. மேற்கு மலைத்தொடரின் கீழ்ப்புறம், சமவெளிப் பகுதிகளில் பொதுவாகத் தமிழகத்தில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நல்ல மழை பெய்வதுண்டு.
சில சமயங்களில் வடகிழக்குப் பருவக்காற்றால் அளவுக்கு மீறிய மழையும் பெய்வதுண்டு. வங்கக்கடலில் அவ்வப்போது தாழ்ந்த காற்றழுத்தம் ஏற்படுவதுண்டு. அதனால் புயல் காற்று வீசுகின்றது.
தமிழகத்தைப் பொருத்தவரையில் தட்ப வெப்பநிலை நன்றாகவே இருக்கின்றது எனலாம். உயரமான மலைகளிலும், குன்றுகளிலும் அமைந்துள்ள இடங்கள் குளிராகவும், மற்ற நிலப்பரப்பில் உள்ள இடங்கள் சற்று வெப்பமாகவும் இருக்கின்றன.