தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses- குறுநில மன்னர்கள்

  • 5.6 குறுநில மன்னர்கள்

    மூவேந்தர் என்று சொல்லக்கூடிய பெருமை வாய்ந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பகுதியில் அவர்களுக்குக் கீழ் பல குறுநில மன்னர்கள் (சிற்றரசர்கள்) சிறுசிறு பகுதிகளுக்குத் தலைவர்களாக விளங்கினர். சில குறுநில மன்னர்கள் மூவேந்தர்களை எதிர்த்து வென்று தமது பகுதிகளைச் சுதந்திரமாக்கிக் கொண்டதும் உண்டு. வேளிர், கோசர் போன்ற குறுநில மன்னர்கள் தமிழகத்திற்கு வட திசையிலிருந்து வந்து குடியேறியவர்கள் ஆவர்.

    5.6.1 வேளிர்

    வேளிர் என்பவர்களைப் பற்றிப் பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இவ்வேளிர் வடதிசையிலிருந்து அகத்தியருடன் தமிழகம் வந்து 18 குடிகளாக அமர்ந்தனர் என்றும், சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் தோன்றிய காலம் முதற்கொண்டே அமைந்திருந்தனர் என்றும் கூறுவர். இவர்களின் முன்னோர் திருமால் வழிவந்தவர் என்றும் கூறுவர். எவ்வாறு எனில் வடதிசையில் உள்ள துவாரகை என்னும் ஊரிலிருந்து வந்தவர்கள் என்றும் கூறுவர். பெரும்பாலும் மலைப்பகுதிகள் அவர்களது ஆட்சியின் கீழ் இருந்தன. அங்குச் செல்வம் மிக்க நகரங்கள் இருந்தன. நகரங்களைச் சுற்றிக் கோட்டைகள் எழுப்பப்பட்டிருந்தன. குறுநில மன்னர்களான வேளிர் இலக்கியத்தையும், கலையையும் போற்றி ஆதரித்தனர். கொடையில் நிகரற்று விளங்கினர்.

    பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதிகமான், நள்ளி ஆகிய கடை ஏழு வள்ளல்கள் வேளிர்கள் ஆவர்.

  • ஆய் அண்டிரன்
  • வேளிர் குடி வழி வந்தவர்களில் சிறப்புப் பெற்றவன் ஆய் அண்டிரன் ஆவான்.

    பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்

    (புறநானூறு , 240: 3)

    (அருகா = குறைவறக் கொடுக்கும்)

    இக்குறுநில மன்னன் பொதியை மலையை ஆண்டு வந்தான். கொங்கு நாட்டைத் தனக்குப் பணிய வைத்தான். ஆய் அண்டிரன் சிறந்த பண்பாளன் என்று ஔவையார் பாடியுள்ளார்.

  • பாரி
  • பாரி என்பவன் கபிலரின் நண்பனாவான். இப்பாரி வேளிர் குலத் தலைவனாவான். பாண்டிய நாட்டில் பறம்பு மலை சூழ்ந்த முந்நூறு ஊர்களைக் கொண்ட பகுதியை ஆட்சி புரிந்து வந்தான். இப்பாரியின் கொடையும் வீரமும் பற்றிக் கபிலர் புறநானூற்றில் பல பாடல்களில் பாடியுள்ளார். இவன் முல்லைக் கொடி பற்றிப் படரும் பொருட்டு, அதற்குத் தன் பெரிய தேரையே நல்கிய ஈகைத் திறத்தைச் சிறுபாணாற்றுப்படை பின்வருமாறு கூறுகிறது.

    சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
    பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்
    பறம்பின் கோமான் பாரியும்.......

    (சிறுபாணாற்றுப்படை: 89-91)

    இப்பாரியின் பறம்புமலையைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் முற்றுகையிட்டனர் என்று கபிலர் கூறுகிறார்.

  • அதிகமான் நெடுமான் அஞ்சி
  • அதிகமான் நெடுமான் அஞ்சி சங்க காலத்து வேளிர்களில் சிறப்புப் பெற்று விளங்கினான். தற்போதைய தர்மபுரி மாவட்டம் அக்காலத்தில் அவனது ஆட்சியின் கீழ் இருந்தது என்பர். தகடூர் அவனது ஆட்சிக்குத் தலைநகராக இருந்தது. ஔவையாரின் சிறந்த நண்பனாக அஞ்சி விளங்கினான். இவன் ஔவையாருக்கு இறவாப் பேற்றினை நல்கும் அரிய நெல்லிக்கனியைக் கொடுத்து உதவினான். இந்த அதிகமான் சேர வேந்தனின் மேலாண்மையைப் புறக்கணித்துத் தன்னாட்சி பெற முயன்றான் என்றும் கூறுவர். அப்போது சேர நாட்டை ஆண்டு வந்த பெருஞ்சேரல் இரும்பொறை தகடூர் மீது படையெடுத்து வெற்றி கொண்டான்.

    மேலே கூறப்பட்டவர் இல்லாமல் ஓரி, நன்னன், பேகன், நள்ளி போன்ற வேளிரும் சிறப்புடன் ஆட்சி புரிந்தனர்.

    5.6.2 கோசர்

    வேளிரைப் போலவே கோசர் என்ற குடியினரும் தமிழகத்தின் வட திசையிலிருந்து தமிழகம் வந்து குடி அமர்ந்தவர் ஆவர். கோசர்களுக்கும் வேளிர்களுக்கும் பகைமை இருந்து கொண்டே இருந்தது எனக் கூறுவர். இக்கோசர் மூவேந்தர்களுக்கும் உறுதுணையாக இருந்தனர். துளு நாட்டைக் கோசர்கள் ஆண்டு வந்தனர் என்றும் கூறுவர். அசோகரின் கல்வெட்டுகளில் கூறப்பட்டிருக்கும் சத்திய புத்திரர்கள் கோசர்களாக இருக்கலாம் என்றும் கூறுவர். சங்க இலக்கியத்தில் அகநானூற்றில் இவர்கள் வாய்மொழிக் கோசர் (உண்மையே பேசும் கோசர்கள்) எனக் கூறப்படுகின்றனர்.

    வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை
    வளம்கெழு கோசர்

    (அகநானூறு, 205: 8-9)

    (நிலைஇய = நிலைபெற்ற; சேண் =நெடுந்தூரம்; நல்லிசை = நல்ல புகழ்)

    அகுதை, திதியன், குறும்பியன், ஆதன் எழினி, நமும்பன் ஆகியோர் கோசரில் சிறந்த வீரர்கள் என்று போற்றப்பட்டனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 20-01-2020 10:31:47(இந்திய நேரம்)