தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- பல்லவர்களின் நிருவாக முறை

  • 3.1 பல்லவர்களின் நிருவாக முறை

    உலகம் வியக்கும் வண்ணம் சிறந்த ஆட்சி முறையினைப் பெற்றிருந்த பாரம்பரியத்தை உடையது தமிழ்நாடு. எவ்வாறு எனில் சங்க காலத்தில் தமிழகத்தில் சிறந்ததொரு நிருவாக முறை இருந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுவர். அப்போது தமிழகம் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என முப்பெரும் பிரிவுகளாகப் பிரிந்து காணப்பட்டது. இருப்பினும் அம்மூன்று நாடுகளிலும் நல்லதொரு ஆட்சி நடைபெற்று வந்தது. மன்னர்கள் அறம் தவறாமல் நாட்டு மக்களை வழிநடத்திச் சென்றனர்.

    சேர மன்னர்களைப் பற்றிப் பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கிய நூல்கள் புகழ்ந்து கூறுகின்றன.

    சோழ மன்னர்களைப் பற்றிப் புறநானூறு, பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை என்னும் நூல்கள் கூறுகின்றன.

    பாண்டிய மன்னர்களைப் பற்றிய சிறப்புச் செய்திகள் புறநானூற்றில் காணப்படுகின்றன. மேலும் மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை ஆகிய நூல்களிலும் பாண்டிய மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறாகச் சங்க காலத்தில் தமிழகம் சிறந்து விளங்கியது.

    அதுபோலவே, வட இந்தியாவில் ஆட்சி செய்த மௌரியர்கள் ஆட்சியும் மிகச் சிறப்பு வாய்ந்திருந்தது என வரலாற்று ஆசிரியர் கூறுவர்.

    இங்கு நாம் காண இருக்கும் பல்லவர்களின் ஆட்சியும் மேலே கூறப்பட்டவர்களின் அரசியல் கூறுகளைப் பெற்றிருந்தது என்பர். இவ்வாறான பல்லவர் ஆட்சி பிற்காலச் சோழர்கள் நல்லதொரு நிருவாக முறையை அவர்கள் நாட்டில் ஏற்படுத்துவதற்குத் துணை நின்றது எனலாம்.

    3.1.1 மத்திய அரசாங்கம்

    மத்திய அரசாங்கம் என்று கூறும்போது மன்னன், அமைச்சர்கள், அதிகாரிகள் போன்றோர் ஆட்சிப் பொறுப்பை ஏற்று வந்தனர்.

    • மன்னன்

    பேரரசின் தலைவனாக மன்னன் விளங்கினான். அரச பதவி பரம்பரை பரம்பரையாகச் சென்றது. குறிப்பாக மூத்த மகன் அரச பதவியை ஏற்றான். அரசனுக்கு வாரிசு இல்லையென்றால் உறவினர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வழக்கம் நிலவியது. சில சமயங்களில் மக்களே மன்னனைத் தேர்ந்தெடுத்தனர். இதனை இரண்டாம் பரமேசுவரவர்மன் மகன் சித்திரமாயன் மன்னன் ஆவதற்குத் தகுதியற்றவன் எனக் கருதப்பட்டு, வாரிசு உரிமைப் போர் தொடங்கி முடிவில் இரண்டாம் நந்திவர்மன் மன்னன் ஆன நிகழ்ச்சி காட்டுகிறது. துவக்கத்தில் வாரிசு உரிமைப் போர் எதுவும் ஏற்படாவிட்டாலும், பிற்காலத்தில் வாரிசு உரிமைப் போர் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

    மன்னன் இறைவனுக்குச் சமமாகக் கருதப்பட்டான். இருப்பினும் மன்னன் மரபுகளுக்கும் நெறிமுறைகளுக்கும் கட்டுப்பட்டவன் ஆனான்; நிருவாகம், இராணுவம் போன்றவைகளுக்குத் தலைவனாக விளங்கினான்; மேலும் நீதியின் இருப்பிடமாகத் திகழ்ந்தான். இருப்பினும் ஒரு சில அரசர்கள் ஆட்சியின்போது நெறிமுறை தவறி வாழ்ந்தது உண்டு.

    • அமைச்சர்கள்

    அரசனுக்கு ஆலோசனை வழங்குவது அமைச்சர்களது கடமையாகும். அவர்கள் அரசியலில் அரசனுக்குத் துணை புரிந்து வந்தனர்.

    அரசனின் ஆணையை அமைச்சர்கள் செயல்படுத்திக் கொண்டிருந்தனர். மேலும் அயல்நாட்டுக் கொள்கையை வகுப்பது அவர்களின் முக்கியமான கடமைகளில் ஒன்றாக விளங்கியது. ஆமாத்தியர் என்ற அமைச்சர் குழு மன்னனுக்கு இருந்தது. இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன், மூன்றாம் நந்திவர்மனது அமைச்சர்கள் நண்பன் இறையூர் உடையன், தமிழ்ப் பேரரரையன் ஆகியோர் பெயர்களைக் கல்வெட்டுகளில் நாம் காணமுடிகிறது. தகுதியுடைய பிராமணப் பெருமக்களும், வேறு பெருமக்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதும் தெரியவருகிறது.

    • அதிகாரிகள்

    பல்லவர் ஆட்சியல் பல நிருவாகத் துறைகள் காணப்பட்டன. அதுபோன்ற துறைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். ரகசியகர்த்தா என்ற உயர் அதிகாரி பல்லவ அரசருக்கு அந்தரங்கச் செயலாளராக விளங்கினான். வருவாய், நிலவரித்திட்டம், நில அளவை போன்ற துறைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவுவதற்குக் கிராம அதிகாரி, கால்நடை அதிகாரி, வன அதிகாரி, படை அதிகாரி போன்றோர் செயலாற்றினர். சாசனங்களைச் செப்பேடுகளில் பொறிக்கும் பொறுப்பை மேற்கொண்டிருந்த அலுவலர் தபதி எனப்பட்டான். தானங்களையும், நிவந்தங்களையும் ஆவண வடிவத்தில் எழுதுபவன் காரணத்தான் அல்லது காரணிகன் எனப்பட்டான். இன்று கிராமங்களில் கர்ணம் எனக் கூறுப்படுபவன் காரணிகனே ஆவான்.

    • நாட்டுப் பிரிவுகள்

    பல்லவர் ஆட்சியில் நிருவாக நலன் கருதிப் பல நிலப் பிரிவுகளாகப் பேரரசு பிரிக்கப்பட்டிருந்தது. பேரரசு மண்டலங்களாகவும், மண்டலங்கள் கோட்டங்களாகவும், கோட்டங்கள் நாடுகளாகவும், நாடுகள் ஊர்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன.

    மண்டல நிருவாகம் ஆளுநர்களின் தலைமையின் கீழ் இருந்தது. நாளடைவில் இவ்வாளுநர்கள் வழிவழியாக அம்மண்டலங்களை வழிநடத்திச் செல்லலாயினர். ஒரு காலகட்டத்தில் பல்லவப் பேரரசின் வடக்கிலும் தெற்கிலும் பகைவர்கள் அதிகமாக நெருங்கிக் கொண்டிருந்த காரணத்தால் இந்த ஆளுநர்களுக்குப் பல்லவப் பேரரசர்கள் அதிக அதிகாரம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    3.1.2 உள்ளாட்சி முறை

    சோழர்கள் காலத்தில் கனிந்த ஊராட்சி முறை சங்க காலத்தில் முளைத்துப் பின் பல்லவர், பாண்டியர் ஆட்சிக் காலங்களில் வளர்ந்து கொண்டிருந்தது எனலாம். பல்லவர் காலத்தில் நாடுகளிலும், ஊர்களிலும் சபைகள் அல்லது அவைகள் காணப்பட்டன. ஒவ்வொரு சபையிலும் மக்கள் பிரதிநிதிகள் ஆகிய உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் ஆள்வார் அல்லது பெருமக்கள் என அழைக்கப்பட்டனர். கல்வி அறிவு உடையவர்கள் அதுபோன்ற பொறுப்பில் இருந்தனர். ஊர் அவையில் பல பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவும் வாரியம் எனப்பட்டது. அவ்வகையான வாரியங்களுள் ஏரிவாரியம், கோயில் வாரியம் முதலியன முக்கியமானவைகளாக இருந்தன. அவ்வாரியங்கள் தனித்தனி நிருவாகப் பொறுப்பினை ஏற்றிருந்தன. பொதுவாகப் பெருமக்கள் என்று அழைக்கப்படும் ஆள்வார் ஊரின் உழவுத் தொழிலுக்கான பாசனம், கோயில் பணி, அறங்கூறல் முதலிய பல்வேறு பணிகளைக் கவனித்து வந்தனர்.

    • வரி

    நாட்டினை நல்ல முறையில் நடத்திச் செல்ல வேண்டும் என்றால் அந்நாட்டிற்கு வருவாய் தேவை. இந்த வருவாய் இன்றியமையாதது என்பதை உணர்ந்த பல்லவப் பேரரசர்கள் பதினெட்டு வகையான வரிகளை நாட்டு மக்களிடம் இருந்து வசூலித்தனர். இதற்கான சான்றுகளை நாம் அவர்களது பட்டயங்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

    சான்று:

    தென்னை, பனை, பாக்கு ஆகிய மரங்களைப் பயிரிடும் உரிமை பெற அரசாங்க வரி விதிக்கப்பட்டது.

    கள் இறக்கவும், சாறு இறக்கவும், பனம்பாகு காய்ச்சவும், கடைகளில் பாக்கு விற்கவும் வரி விதிக்கப்பட்டது.

    நூல் நூற்போர், வலைஞர், ஆடை நெய்வோர், கால்நடை வைத்துத் தொழில் செய்வோர் வரி செலுத்தி வந்தனர்.

    நிலங்கள் அளந்து திட்டமிடப்பட்டன. நிலங்களை அளப்பதற்குத் தனி அதிகாரிகள் இருந்தனர். அரசின் வருவாயில் நிலவரியே முக்கிய இடத்தை வகித்தது.

    சில சமயங்களில் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டம் அதாவது அபராதம் மூலமாகவும் அரசாங்கத்திற்கு வருவாய் வந்தது.

    கோயில்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிலங்களுக்குத் தேவதான நிலம் என்று பெயர். இதுபோன்ற நிலங்களுக்கு வரிவிலக்கு இருந்தது.

    • நில அளவைகள்

    பல்லவர் காலத்தில் விளங்கிய நில அளவைகள் குழி, வேலி என்பன. குறிப்பிட்ட நிலத்தை அளந்து, கள்ளி, கல் போன்றவற்றை நட்டு அதன் எல்லைகளை வகுத்தனர். மேலும் கலப்பை, நிவர்த்தனம், பட்டிகா, பாடகம் என்பனவும் நில அளவைகளாக வழங்கின. நிவர்த்தனம் என்பது 100 அல்லது 125 முழம் அளவுள்ள ஒரு கோல், இது நிலத்தை அளப்பதற்காக அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

    • முகத்தல் அளவைகள்

    முகத்தல் அளவைகளாகக் கருநாழி, நால்வாநாழி, மாநாய நாழி, பிழையா நாழி, நாராய நாழி, உழக்கு மற்றும் சிறிய அளவைகளான பிடி, சோடு, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் என்பனவும் பயன்பட்டன.

    • நிறுத்தல் அளவைகள்

    பொன் நிறுக்கும் அளவைகளாகக் கழஞ்சு, மஞ்சாடி என்பன இருந்தன.

    • நாணயங்கள்

    பல்லவர் காலத்து நாணயங்கள் பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும் செய்யப்பட்டிருந்தன.

    • நீதித்துறை

    பல்லவப் பேரரசில் நீதித்துறையின் தலைமையிடத்தை மன்னரே வகித்தார். கோட்டங்களிலும், கிராமங்களிலும் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காஞ்சி போன்ற பெரு நகரங்களில் இருந்த நீதிமன்றங்கள் அதிகரணங்கள் எனப் பெயர் பெற்றன. அவற்றின் தலைவர்கள் அதிகரண போசகர் எனப்பட்டனர். சிற்றூரில் இருந்த நீதிமன்றங்கள் கரணங்கள் எனப்பட்டன. அதன் தலைவர்கள் கரண அதிகாரிகள் எனப்பட்டனர். சிற்றூரில் இருந்த மன்றங்களில் வழக்குகளை ஆட்சி (Traditional evidence), ஆவணம் (Document evidence), அயலார் காட்சி (Eye witness) ஆகிய சான்றுகளின் அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்புக் கூறினர்.

    • படை

    கதம்பர், சாளுக்கியர், பாண்டியர் ஆகியோர் பல்லவப் பேரரசினைச் சிதைவுறச் செய்வதற்கு முயன்று கொண்டிருந்த காலம் அது. இதன் காரணமாகப் பல்லவ மன்னர்கள் சிறந்த படை ஒன்றினைப் பெற்றிருந்தனர். அதில் காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை, மிக வலிமை வாய்ந்த கப்பல்படை ஆகிய நால்வகைப் படைகளும் இருந்தன. படைக்கு மன்னர் தலைமை வகித்தார். அவரோடு வீரமும், போர் ஆற்றலும் மிக்க சேனைத் தளபதிகளும் இருந்தனர். சிம்மவர்மன் காலத்தில் விஷ்ணுவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் வாதாபி கொண்ட பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்), இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் உதய சந்திரன், மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் பூதி விக்கிரமகேசரி என்னும் கொடும்பாளூர்ச் சிற்றரசன் ஆகியோர் சிறந்த படைத்தலைவர்களாக விளங்கிப் பல்லவ நாட்டைக் காத்தனர். மகாபலிபுரம் வழியாகக் குதிரைகள் அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. மகாபலிபுரம், காவிரிப் பூம்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் கப்பல் படையை இயக்குவதற்கு உதவின. மாமல்லனான நரசிம்மவர்மன் இலங்கை நாட்டு மானவன்மனுக்கு அரசுரிமை கிடைக்க ஈழத்தின் மீது படையெடுத்தான். போர்க் காலங்களில் பல்லவப் பேரரசின் பேராண்மையை ஏற்றுக் கொண்ட சிற்றரசர்கள் பேரரசருக்குப் படை உதவி அளித்தனர்.

    சிறந்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் நல்ல முறையில் அமர்த்திப் பல்லவ பேரரசர்கள் நாட்டில் அமைதி காத்து வந்தனர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-11-2019 13:02:57(இந்திய நேரம்)