தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- சமய நிலை

  • 3.5 சமய நிலை

    பல்லவ மன்னர்கள் இந்து சமயத்தைப் பின்பற்றி வந்தனர். இருப்பினும் பல்லவப் பேரரசின் காலத்தில் சமணம், பௌத்தம் போன்ற மதங்களும் இருந்து வந்தன. பல்லவ மன்னர் சிலர் இந்து மதத்தைத் தழுவியிருந்தபோதும் சமணம், பௌத்தம் போன்ற மதங்களையும் ஆதரித்தனர். ஒரு சில நேரங்களில் சமயச் சச்சரவுகளும் பல்லவ ஆட்சியில் நடைபெற்றதாகத் தெரிகிறது.

    காஞ்சி, வள்ளியமலை, பொன்னூர், திருக்காட்டுப்பள்ளி, சேந்தமலை, நாகமலை, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் சமணர் இருக்கைகளும், பள்ளிகளும் இருந்தன. அண்டை நாடான பாண்டிய நாட்டின் மதுரையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சமணம் தழைத்திருந்தது. சேர நாட்டின் தென்பகுதியான வேணாட்டிலும் சமணம் பரவியிருந்தது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இந்து சமயம் மறுமலர்ச்சி அடைந்த காரணத்தால் சமணத்தின் வளர்ச்சி குன்ற ஆரம்பித்தது.

    பல்லவர் காலத்தில் தமிழகத்தின் வடபகுதியில் பௌத்தம் வளர்ச்சியுற்றிருந்தது. குறிப்பாகக் காஞ்சி மாநகரம் பௌத்தத்தின் இருப்பிடமாக இருந்தது. அங்குப் பௌத்தக் கோயில்கள் இருந்தன. மணிமேகலையில் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன.

    யுவான்-சுவாங் குறிப்பும் இதற்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது.

    3.5.1 பக்தி இயக்கம்

    இந்து சமயம் இழந்த நிலைமையை மீட்கவும், சமண-பௌத்த சமயங்களின் உயர்வைத் தாழ்வடையச் செய்யவும் தோன்றிய நாடு தழுவிய இயக்கமே பக்தி இயக்கம் ஆகும். அதில் சைவ சமய நாயன்மார்களும், வைணவ சமய ஆழ்வார்களும் பங்கு கொண்டனர். தமிழகத்துச் சமய வரலாற்றில் பல்லவர் காலம் குறிப்பிடத்தக்க திருப்பத்தைக் கண்டது. கி.பி. 7ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்து சமயம் வீழ்ச்சியைத் தழுவியது. எவ்வாறு எனில் பல்லவ மன்னர்கள் சமண-பௌத்த சமயத்திற்கு ஆதரவு அளித்தனர். இருப்பினும் சமண-பௌத்த சமயங்களில் நிலவிய தமிழ்ப் பண்பிற்கு முரண்பாடான சமய வழக்கங்கள் பிற்காலத்தில் இந்து மதம் தழைப்பதற்கு வழிவகுத்தன. சமய எழுச்சி காரணமாகப் பல்லவர் காலத்தில் மன்னரையும், மக்களையும் பாடும் நிலை மாறி, இறைவனையும், இறைவனின் அடியார்களையும் பாடும் வழக்கம் தோன்றியது.

    சைவம், வைணவம் என இரு பெரும்பிரிவாக இந்துமதம் விளங்கியது. சிவனை வழிபட்டோர் சைவம் என்றும், விஷ்ணுவை வழிபட்டோர் வைணவம் என்றும் கூறிக் கொண்டனர்.

    • சைவம்

    பல்லவப் பேரரசு அமைந்திருந்த காலத்தில் அதாவது கி.பி. 7,8 ஆம் நூற்றாண்டுகளில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் போன்ற சிவனடியார்கள் இந்து மதத் தத்துவத்தை எடுத்துரைத்துச் சைவ சமயத்தை வளரச் செய்தனர். முதலாம் மகேந்திரவர்மனைச் சமண சமயத்திலிருந்து சைவசமயத்திற்குத் திருநாவுக்கரசர் மாற்றினார். இம்மன்னன் தன் பெயரிலேயே குணபதீச்சுரம் என்ற கோயிலை எழுப்பினான் என்று பெரியபுராணம் கூறுகிறது. குணபரன் என்பது மகேந்திரவர்மனைக் குறிக்கும் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகும். இச்செய்தியைத் திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது.

    திருநாவுக்கரசர் கூன் பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனையும் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார். திருநாவுக்கரசரே சமணத்திலிருந்துதான் சைவத்திற்கு மாறியவர் ஆவார். சுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில், கடல் சூழ்ந்த உலகெல்லாம் காண்கின்ற பெருமான் காடவர் கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் என்று தாம் வாழ்ந்த காலத்து ஆட்சி புரிந்துவந்த பல்லவ மன்னனைக் குறிப்பிடுகின்றார்.

    • வைணவம்

    வைணவ சமயம் சங்க காலத்தில் தமிழ் நாட்டில் பரவியிருந்தது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

    மாயோன் மேய காடுறை உலகம்

    (தொல்காப்பியம்,அகத்திணையியல், 5:1)

    மாயோன் மேய ஓண நன்னாள்

    (மதுரைக்காஞ்சி::591)

    இதுபோலச் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை வாயிலாகத் திருமாலின் பெருமை அறியக் கிடக்கின்றது. வைணவர் திருமாலை முழுமுதல் கடவுளாக எண்ணினர். வைணவ நெறிமுறைகளையும், திருமாலின் பெருமைகளையும் பக்தியுடன் நாடு முழுவதும் பரப்பியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். பல்லவர் ஆட்சிக் காலத்தில் வைணவம் கிளர்ச்சியுற்று எழுந்தது. இதற்குப் பல்லவ மன்னர்கள் பெருமாள் கோயில்களைக் கட்டி எழுப்பியதே காரணமாகும். வைணவ சமயம் பல்லவ நாட்டில் தோன்றிச் சோழ நாட்டில் வளர்ந்து பாண்டிய நாட்டில் மலர்ச்சியுற்றது எனலாம்.

    பல்லவர் காலத்தில் தோன்றிய ஆழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார் போன்றோர் ஆவர். இவர்கள் பெரும்பாலும் மயிலாப்பூர், காஞ்சிபுரம், மகாபலிபுரம், திருமழிசை போன்ற பல்லவ நாட்டு ஊர்களில் பிறந்தவர்கள் ஆவர்.

    பல்லவ மன்னர்களும் திருமாலுக்குக் கோயில் கட்டலானார்கள்.

    3.5.2 பக்தி இயக்கத்தின் விளைவுகள்

    சைவ வைணவத் தத்துவக் கருத்துகள் வளர்ச்சியடைந்தன. அவை தமிழகம் எங்கும் பரவின. பக்தியில் ஆழ்ந்த அறிஞர் பெருமக்கள் தோன்றினர். அவர்கள் சமயப் பண்புகளை மக்களிடையில் பரப்பினர். முதன் முதலில் கூட்டாகச் சேர்ந்து இறைவனை வணங்கிப் பாடும் முறை தோன்றியது எனலாம்.

    இயல், இசை என்னும் இரு கலைகளும் நன்கு வளர்ச்சியுற்றன.

    தமிழில் இலக்கிய வளர்ச்சி காணப்பட்டது. பல புராண இதிகாசக் கதைகள் தமிழ் இலக்கியத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. குறிப்பாக வட மொழிச் சொற்கள் தமிழில் கலக்கலாயின.

    நாயன்மார்கள், ஆழ்வார்கள் முயற்சியால் இந்து சமயம் ஏற்றம் பெற்றது. சமணம், பௌத்த சமயங்கள் தாழ்வடைந்தன. இதற்குப் பக்தி இயக்கமே காரணம் எனலாம்.

    பல்லவர் காலத்தில் இந்துமதம் புத்துயிர் பெற்றவுடன் கோயில்கள் எழுப்பப்பட்டன. இதனால் சிற்பக்கலை, ஓவியக்கலை போன்ற துறைகள் வளர்ச்சி கண்டன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-10-2019 18:25:46(இந்திய நேரம்)