தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- கல்வியும் இலக்கியமும்

  • 3.6 கல்வியும் இலக்கியமும்

    கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர்

    (அப்பர், நான்காம் திருமுறை 4.43 431 3)

    என்று அப்பர், தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் கல்வியைக் கரைகண்ட சான்றோர் வாழும் காஞ்சி நகர் என்று பொருள். இத்தகைய சிறப்பு வாய்ந்த காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட பல்லவப் பேரரசில் கல்வி, இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சியைக் காணமுடிகிறது.

    3.6.1 கல்வி

    தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பல்லவர் காலம் வடமொழியின் பொற்காலம் எனலாம். ஏனெனில் பல்லவ மன்னர்களது ஆதரவு இம்மொழிக்குக் கிடைத்தது. வடமொழிக் கல்லூரிகள் பல்லவ நாட்டில் நிறுவப்பட்டன. இதற்குச் சான்று காஞ்சிக் கடிகைக் கல்லூரி, பாகூர்க் கடிகைக் கல்லூரி ஆகியவை ஆகும். இக்கல்லூரிகளில் புராணங்கள், அறநூல்கள், தருக்கம், இலக்கணம், தரிசனங்கள், சித்தாந்தம், ஆயுர்வேத மருத்துவம், செய்யுள், நாடகம், இசை, ஓவியம் முதலிய பாடங்களில் கல்வி போதிக்கப்பட்டன. சைவ, வைணவ மடங்களிலும் கல்வி புகட்டப்பட்டது.

    குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பல்லவர் காலத்தில் சமணர்களது பள்ளிகளும், பௌத்தர்களது விகாரங்களும் கல்வி நிலையங்களாக விளங்கின எனலாம். இக்கல்வி நிலையங்களில் சமயக் கருத்துகள், தத்துவக் கருத்துகள் என்பனவும், தர்க்கம், காவியம், இலக்கணம் முதலியனவும் போதிக்கப்பட்டன.

    பல்லவ மன்னர்கள் வடமொழியை ஆட்சி மொழியாகக் கொண்டனர். இதனால் தமிழில் வடமொழி கலக்கலாயிற்று. இதன் விளைவாகத் தோன்றியதே மணிப்பிரவாள நடை (தமிழும் வடமொழியும் சரிக்குச் சரியாகக் கலந்த மொழிநடை).

    3.6.2 இலக்கியம்

    கொங்குவேள் என்பவர் பெருங்கதை என்னும் இலக்கியத்தை எழுதினார். முத்தொள்ளாயிரம் என்னும் இலக்கியமும் இக்காலத்தில் எழுந்தது என்பர். மாபுராணம் என்னும் யாப்பு நூலும் இக்காலத்தில் படைக்கப்பட்டதேயாகும்.

    திவாகரனார் எழுதிய திவாகர நிகண்டு, பிங்கல முனிவர் எழுதிய பிங்கல நிகண்டு என்பன இக்காலத்துப் படைப்புகளேயாகும்.

    பொதுவாகக் கூறவேண்டும் என்றால், பல்லவர் காலம் தமிழ் இலக்கிய உலகில் புதுமையைக் கண்டது எனலாம். அதே சமயத்தில் அகம், புறம் தழுவிய சங்க கால இலக்கிய மரபு மறைந்தது எனலாம்.

    அந்தாதி, உலா, பரணி முதலிய புதியவகை இலக்கியங்கள் தோன்றின.

    நந்திக்கலம்பகம் என்னும் நூல் மூன்றாம் நந்திவர்மன் மேல் பாடப்பட்டதாகும். இவன் காலத்திலே பாரத வெண்பா என்னும் மற்றொரு நூலும் தோன்றியது. இதனைப் பாடியவர் பெருந்தேவனார் ஆவார். முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாசப் பிரகசனம் என்ற நாடகத்தை வடமொழியில் எழுதினான்.

    • பக்தி இலக்கியம்

    சமயங்களை வளர்த்த பக்தர்கள் பாடிய பாடல்களே பக்தி இலக்கியம் ஆகும். சங்க காலம் தொட்டுத் தமிழர் சமயப் பற்றுடையவராக இருந்தாலும் பல்லவர்கள் காலத்தில்தான் பக்தி இலக்கியங்கள் தோன்றலாயின. இப்பக்தி இலக்கியத்தை இரு வகையாகப் பிரிக்கலாம்.

    1. சைவ இலக்கியம்

    2. வைணவ இலக்கியம்

    • சைவ இலக்கியம்

    தேவாரம், திருவாசகம், திருக்கோவையார் போன்ற இலக்கியங்கள் பல்லவப் பேரரசின் காலத்தில் பல்லவ நாட்டிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் பாடப்பட்டு அவை திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன.

    • வைணவ இலக்கியம்

    பன்னிரு ஆழ்வார்கள் பல்லவ நாட்டிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்தும் வைணவப் பாடல்களைப் பாடி திருமாலைத் துதித்தனர். அவ்வாறு பாடப்பட்ட பாடல்களைத் தொகுத்து நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்ற நூலை உருவாக்கினர்.

    • பிற இலக்கியங்கள்

    பதினெண் கீழ்க்கணக்கில் தொகுக்கப்பட்டுள்ள சிறுபஞ்சமூலம், ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது, நாலடியார், ஆசாரக் கோவை ஆகியவை சமணர் படைத்த இலக்கியங்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 29-10-2019 18:34:20(இந்திய நேரம்)