தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- பொருளாதார நிலை

 • 3.3 பொருளாதார நிலை

  பல்லவப் பேரரசர்கள் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேளாண்மையை விரிவுபடுத்தினர். இதனால் பிற காலங்களைப் போன்று பல்லவர் காலத்திலும் தமிழகத்தின் பொருளாதாரம் வேளாண்மையைச் சார்ந்து இருந்தது.

  3.3.1 வேளாண்மை

  ஒவ்வொருவருக்கும் நிலம் அளந்து பிரிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு நிலங்களைப் பெற்றிருந்தவர்களில் அரசர், மிராசுதாரர் ஆகியோரும் அடங்குவர். அரசர் பெற்றிருந்த நிலம் அடை என்றும், மிராசுதாரர் பெற்றிருந்த நிலம் பயல் என்றும் வழங்கப்பட்டன. மிராசுதாரருக்குச் சொந்தமான பயல் எனும் நிலத்தை உழவர்கள் உழுது பயிர் விளைச்சல் செய்தனர். இதில் பாதியை மிராசுதாரருக்கு அவ்வுழவர்கள் அளித்தனர். இவ்வாறு பயல் நிலங்களை உழுவதற்கு அரசாங்கம் உழவர்களுக்கு உரிமை வழங்கிவந்தது. இவ்வுரிமை அவ்வப்போது மாற்றப்பட்டும் வந்தது.

  • பாசன வசதி

  பல்லவர்கள் காடுகளை அழித்து அவற்றை விளைச்சல் நிலமாக்கினர். நீர்ப்பாசனத்திற்காக ஏரிகளையும், கால்வாய்களையும், கிணறுகளையும் வெட்டினர். இப்பல்லவப் பேரரசர்கள் வெட்டிய நீர் நிலைகளில் இராச தடாகம், திரளய தடாகம், மகேந்திர தடாகம், சித்திரமேக தடாகம், பரமேசுவர தடாகம், வைரமேகன் தடாகம், காவேரிப்பாக்கம் ஏரி, மருதாடு ஏரி முதலியன குறிப்பிடத்தக்கவை ஆகும். மேலும் காவிரி ஆறு, பாலாறு முதலிய ஆறுகளிலிருந்து நீரைக் கொண்டு செல்லப் பல கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன. அவை ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப் பெயர் பெற்றன. அவற்றும் வைரமேகன் வாய்க்கால், பெரும்பிடுகு வாய்க்கால் என்பன குறிப்பிடத்தக்கவை ஆகும். பெரிய கால்வாய்களிலிருந்து நீரை எடுத்துச் செல்லச் சிறுசிறு கால்வாய்கள் பல்லவ நாடெங்கும் அமைக்கப்பட்டிருந்தன. கல்லணையின் நீர் பாய்ந்த இடங்களில் கல்லணைக் காணம் என்னும் தனிவரி வசூலிக்கப்பட்டது.

  ஊர்ச்சபையின் தனிக்குழுவான ஏரிவாரியம் நீர்நிலைகளையும், நீரோடைகளையும் கண்காணித்து வந்தது.

  • பயிர்கள்

  நெல்லையும், பிற தானியங்களையும் விவசாயிகள் சாகுபடி செய்தனர். எண்ணெய் வித்துகள், பருத்தி, வாழை, மருக்கொழுந்து முதலியனவற்றையும் பயிரிட்டனர். தென்னை, பனை, கமுகு, மாமரம் ஆகிய மரங்களையும் வளர்த்தனர். இதுபோன்ற விளைச்சலால் பல்லவ நாடு தன்னிறைவு பெற்று விளங்கியது எனலாம். ஒவ்வொரு ஊரிலும் பொதுக்களங்கள் இருந்தன. அவற்றைப் பயன்படுத்துவது என்றால் வரிகொடுத்தல் அவசியமாக இருந்தது.

  • கிராம வாணிகம்

  பல்லவர் காலத்தில் மக்கள் பெரும்பாலும் சிற்றூர்களில் வாழ்ந்து வந்தனர். நன்செய் புன்செய் நிலங்கள், குளங்கள், புறம்போக்கு நிலங்கள், சிற்றூர்ப் பொது நிலங்கள், கடைவீதிகள், கோயில்கள், சுடுகாடுகள் முதலியன எல்லாச் சிற்றூர்களிலும் இருந்தன.

  பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் கிராமங்களில் சந்தைகள் இருந்தன. இச்சந்தைகளில் தேங்காய், நெய், எண்ணெய், சர்க்கரை, காய்கறிகள், வெற்றிலை, பாக்கு முதலியவை விற்கப்பட்டன. இப்பொருட்களை வாங்குவதற்குச் செம்பாலும், வெள்ளியாலும், பொன்னாலும் செய்யப்பட்ட நாணயங்களைப் பயன்படுத்தினர். ஊரில் உள்ள வாணிகர்கள் கிராமங்களில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கி விற்றுப் பொருள் ஈட்டினர்.

  கோயில் போன்ற இடங்களுக்கு அருகில் வாணிபம் செய்வதற்கு அரசின் அனுமதி பெறுவது இன்றியமையாதது.

  3.3.2 தொழில்

  பிராமணர்களைத் தவிர பிற சாதியினர் எல்லோரும் தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். நூல் நூற்றல், ஆடை நெய்தல், மட்பாண்டம் செய்தல், ஆபரணம் செய்தல், தங்க வேலை, மர வேலை, உலோக வேலை, கால்நடை வளர்த்தல், பதனீர் இறக்குதல், பனம்பாகு செய்தல், எண்ணெய் எடுத்தல் முதலிய தொழில்களைக் குடிமக்கள் செய்து வந்தனர்.

  கப்பல் கட்டும் தொழிலும், மீன் பிடித்தலும் பிற தொழில்களாகும். ஒவ்வொரு தொழிலைச் செய்வோரும் தனித்தனியாக அரசிற்கு வரி செலுத்தி வந்தனர்.

  3.3.3 அயல்நாட்டு வாணிபம்

  பல்வேறு தொழில்களைச் செய்தோர் உற்பத்தியைப் பெருக்கியதால் அயல்நாட்டு வாணிபம் வளம் பெற்றது. உள்நாட்டில் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லச் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. மகாபலிபுரம், காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்கள் வழியாக அயல்நாட்டு வாணிபம் நடைபெற்றது. பல்லவர் காலத்தில் தமிழகம் கிழக்கிந்தியத் தீவுகளுடனும், சயாம், சீனா முதலிய நாடுகளுடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது. அயல்நாட்டுடன் வாணிபம் செய்வோர் வாணிபத்தில் தங்களுக்குக் கிடைத்த இலாபத்தில் பாதியை அரசிற்குக் கொடுத்து வந்தனர். அதற்கு மகமை எனப் பெயரிடப்பட்டிருந்தது. தென்னிந்திய வணிகர்கள் சயாமில் குடியேற்றம் அமைத்திருந்தனர். அதேபோல் சீனாவைச் சேர்ந்த வணிகர்கள் நாகப்பட்டினத்தில் குடியேற்றம் அமைத்திருந்தனர். இதன் காரணமாகப் பல்லவ மன்னர்களும் சீன அரசர்களும் ஒருவருக்கொருவர் தூதுவர்களை அனுப்பி நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டனர்.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - I

  1.
  மன்னன் எவைகளுக்குத் தலைவனாக விளங்கினான்?
  2.
  அமைச்சர்களின் முக்கியமான கடமைகளில் ஒன்றாக விளங்கியது எது?
  3.
  ரகசிய கர்த்தா என்பவர் யார்?
  4.
  மண்டல நிருவாகம் யார் தலைமையின் கீழ் இருந்தது?
  5.
  ஆள்வார் என்பவர் யார்?
  6.
  பல்லவப் பேரரசர்கள் எத்தனை வகையான வரிகளை நாட்டு மக்களிடமிருந்து வசூலித்தனர்?
  7.
  நில அளவைகளில் ஏதேனும் இரண்டு கூறுக.
  8.
  பெருநகரங்களில் இருந்த நீதிமன்றங்கள் எவ்வாறு கூறப்பட்டன?
  9.
  பூதி விக்கிரம கேசரி என்பவன் யார்?
  10.
  பயல் யார் கண்காணிப்பில் இருந்தது?
புதுப்பிக்கபட்ட நாள் : 02-11-2019 13:14:55(இந்திய நேரம்)