Primary tabs
-
4.2 முற்காலப் பாண்டிய மன்னர்கள்
முற்காலப் பாண்டியர் என்று அழைக்கப்படுகின்ற பாண்டிய மன்னர்களைப் பற்றி இங்கு நாம் காண இருக்கின்றோம். முற்காலப் பாண்டியரில் முதன்மையானவன் பாண்டியன் கடுங்கோன் ஆவான்.
4.2.1 பாண்டியன் கடுங்கோன் (கி.பி. 575-600)
இப்பாண்டியன் தென்பாண்டி நாட்டிலிருந்து வந்து களப்பிரருடன் போர் செய்தான். போரில் வெற்றி பெற்றுப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான். மாவீரனான கடுங்கோன் அருகிலுள்ள சிற்றரசர்களை போரில் வென்று ஒரு பேரரசனாக விளங்கினான். இவனை வேள்விக்குடிச் செப்பேடுகள், பல்யாகச் சாலை முதுகுடுமிப் பெருவழுதி வழிவந்தவன் எனக் கூறுகின்றன. இவனது ஆட்சி கி.பி.575 முதல் 600 வரை நீடித்ததாகக் கருதப்படுகின்றது.
4.2.2 மாறவர்மன் அவனி சூளாமணியும் அவனது மகனும் (கி.பி. 600-640)
மாறவர்மன் அவனி சூளாமணி கடுங்கோனின் மைந்தன் ஆவான். இவன் (கி.பி. 600 - 625) காலத்தில் தமிழகத்தின் வட பகுதியில் பல்லவர் ஆட்சி நிலவியது. அப்போது பல்லவ மன்னனாகச் சிம்ம விஷ்ணு (கி.பி. 575-615) ஆட்சி செய்து வந்தான். சிம்ம விஷ்ணு பாண்டியரை வென்றதாக இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசாக்குடிப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே பாண்டியப் பல்லவப் போர் மாறவர்மன் அவனி சூளாமணி காலத்தில் துவங்கியது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவனது காலம் முதல் பாண்டிய மன்னர்கள் மாறவர்மன், சடையவர்மன் என்னும் பட்டங்களைப் புனைந்து கொண்டார்கள்.
மாறவர்மன் அவனி சூளாமணி என்ற பாண்டிய மன்னனின் மகன் செழியன் சேந்தன் (கி.பி. 625-640) ஆவான். இம்மன்னன் சேரர்களை வென்றதால் வானவன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றான். இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டியரும், பல்லவரும் தங்களது ஆட்சியைத் தமிழகத்தில் விரிவுபடுத்துவதற்காக ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டிருந்தனர். செழியன் சேந்தனின் பல சிறப்புப் பெயர்களை வேள்விக்குடிச் செப்பேடுகள்
குறிப்பிடுகின்றன. இப்பாண்டிய மன்னன் சாளுக்கியருடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டான். இதனால் பல்லவரின் பகைமை தற்காலிகமாகக் குறைந்தது என்பர். செழியன் சேந்தன் ஆட்சியின் இறுதிப் பகுதியில் சீனப் பயணியான யுவான் சுவாங் பல்லவரின் தலைநகரான காஞ்சிக்கு வந்திருந்தார். அவர் பாண்டிய நாட்டிற்குப் புறப்படும் சமயத்தில் அந்நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது என்றும், அதனால் செழியன் சேந்தன் இறந்தான் என்றும் காஞ்சி மக்கள் தம்மிடம் கூறியதாகத் தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
4.2.3 மாறவர்மன் அரிகேசரி (கி.பி. 640-670)
செழியன் சேந்தன் இறந்த பின்னர் அவனது மகன் மாறவர்மன் அரிகேசரி என்பவன் அரியணை ஏறினான். மாறவர்மன் அரிகேசரி ஒரு சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். இம்மன்னன் பல போர்கள் செய்து பல வெற்றிகளை அடைந்தான். என்பதனை வேள்விக்குடிச் செப்பேடுகள் மூலம் அறியலாம். இம்மன்னன் சேர, சோழ, பல்லவ மன்னர்களைப் போரிலே வென்றான்.
அரிகேசரி சோழருடன் போர் புரிந்து ஒரே நாளில் அவர்களை வென்று அவர்களுடைய உறையூரைக் கைப்பற்றிக் கொண்டான். அப்போரின் இறுதியில் பாண்டியருக்கும் சோழருக்கும் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்படி அரிகேசரி சோழ வேந்தனின் மகளான மங்கையர்க்கரசியாரை மணந்து கொண்டான். இதனால் பாண்டிய, சோழ நாடுகளுக்கு இடையில் நல்லுறவு ஏற்பட்டது.
மாறவர்மன் அரிகேசரி கொடும்பாளூரை ஆண்ட களப்பிரர்களையும், பாண்டிய நாட்டின் தென் பகுதியில் ஆட்சி புரிந்து வந்த குறுநில மன்னரான பரவர் என்பாரையும் வென்று அடக்கினான். மேலும் சேரர்களையும் அவர்களுக்குத் துணை நின்ற குறுநில மன்னர்களையும் அடக்கினான். இதனால் இம்மாறவர்மன் அரிகேசரிக்குச் சேரர்களும் குறுநில மன்னர்களும் திறை செலுத்தினர்.
அரிகேசரி முதலில் சமண சமயத்தைத் தழுவியிருந்தான். அவனது மனைவி மங்கையர்க்கரசியார் ஒரு சிவபக்தர். அவர் தம் கணவனைத் திருஞான சம்பந்தர் துணையுடன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார்.
பாண்டியன் அரிகேசரி காலத்தில் வாணிபம் வளம் பெற்று விளங்கியது. பாண்டிய நாட்டில் உப்பும், முத்தும் மிகுதியாகக் கிடைத்தன. மேலும் அருகில் உள்ள தீவுகளிலிருந்து எல்லாம் முத்துக்கள் சேகரித்துக் கொண்டு வரப்பட்டன. முத்துக்களை அயல்நாடுகளுக்கு எடுத்துச் சென்று விற்றுப் பாண்டிய நாட்டினர் பெருஞ்செல்வம் ஈட்டினர்.
இம்மன்னனுக்குக் கூன் பாண்டியன், சுந்தர பாண்டியன் என்னும் வேறுபெயர்களும் இருந்தன.
சான்று :
மின்னார் மௌலிச் சத்துரு சா
தன பாண்டியன் ஆம் விறல்வேந்தன்
இன்னான் மகன் கூன் பாண்டியன் ஆம்
இவன் தோள் வலியால் இசைமிக்கான்(திருவிளையாடல் புராணம்,3108:3-4)
(மௌலி-மணிமுடி; சத்துரு சாதன பாண்டியன்-கூன் பாண்டியனின் தந்தை.)
அன்னது ஒரு காரணத்தால் சௌந்தரிய பாண்டியன் என்றாகி
(திருவிளையாடல் புராணம், 3173:1)
(சௌந்தரிய பாண்டியன் – சுந்தர பாண்டியன்)
இவன் சமண சமயத்தைத் தழுவியிருந்தபோது, கூன் விழுந்த முதுகினை உடைய காரணத்தால் கூன் பாண்டியன் என்று பெயர் பெற்றிருந்தான் என்பதையும், திருஞான சம்பந்தர் துணையால் சைவ சமயத்திற்கு மாறியதும், சிவபெருமான் திருவருளால் கூனல் நீங்கி நிமிர்ந்து, சுந்தர (அழகிய) வடிவத்தைப் பெற்றதால் சுந்தர பாண்டியன் என்று பெயர் பெற்றான் என்பதையும் மேலே காட்டிய திருவிளையாடல் புராணப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
இம்மன்னன் அரிகேசரியைப் பெரிய சின்னமனூர்ப் பட்டயங்கள் அரிகேசரி பராங்குசன் எனக் குறிப்பிடுகின்றன.
4.2.4 கோச்சடையன் ரணதீரனும், அவனது மகனும் (கி.பி. 670-765)
கோச்சடையன் ரணதீரன், மாறவர்மன் அரிகேசரிக்குப் பின்னர் பட்டம் எய்தினான். இவனும் தனது ஆட்சிக் காலத்தில் (கி.பி. 670-710) பல போர்களைச் செய்து வெற்றி கண்டான். இவன் தென்னகத்தில் இறைமையைப் பெறுவதற்குப் பல மன்னர்களுடன் போரிட வேண்டியிருந்தது. இவனது வெற்றியைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. ரணதீரன் சேரர், சோழர், கொங்கர், கர்நாடர், ஆய்மன்னர் போன்றோரைப் போரில் வென்றான். சேரரை வென்றதால் வானவன் என்றும், சோழரை வென்றதால் செம்பியன் என்றும், கர்நாடரை வென்றதால் மதுர கருநாடகன் என்றும், கொங்கரை வென்றதால் கொங்கர் கோமான் என்றும் புகழப்பட்டான். இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டின் ஆதிக்கம் மேலும் பெருகியது. ரணதீரன் சாளுக்கியரை முறியடித்ததாகவும் தெரிகிறது.
கோச்சடையன் ரணதீரனின் புதல்வன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கி.பி. 710-765) ஆவான். தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்தான். அதற்கு முன்பே பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும் கொங்கு நாட்டு உரிமை பற்றிப் பகைமை ஏற்பட்டிருந்தது. இக்காரணங்களால் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் இவனது ஆட்சியின்போது பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தான். இப்போரில் பாண்டியன் வெற்றியடைந்தான்.
கோச்சடையன் ரணதீரன் தனது நாட்டை விரிவுபடுத்த எண்ணி வடக்கில் உள்ள மாளவ நாட்டை நோக்கிப் படையெடுத்தான். இப்போரிலும் வெற்றி பெற்றான். பின்னர் மாளவநாட்டு மன்னரின் மகளை மணந்து கொண்டான்.
அதன் பின்னர்க் கங்கருடன் போர்புரிந்து வென்று, அவர்ளைக் கப்பம் கட்டச் சொல்லி, கங்க மன்னரது மகளான பூசுந்தரியை மணம் செய்து கொண்டான். இவனது ஆட்சியில் பாண்டிய நாடு உயர்வடைந்தது எனலாம்.
இம்மன்னனுக்கு முதலாம் இராசசிம்மன், தேர்மாறன் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவன் சிறந்த சிவ பக்தனாகவும் விளங்கினான். வேதங்ளைக் கற்றுத் தேர்ந்த பிராமணர்களுக்கு மிகவும் உதவினான். கர்ப்ப தானங்களும், துலாபார தானங்களும் செய்து உயர்வடைந்தான்.
4.2.5 நெடுஞ்சடையன் பராந்தகனும் அவனது மகனும் (கி.பி. 765-792)
நெடுஞ்சடையன் பராந்தகன், பராங்குச மாறவர்மனுக்கும், பூசுந்தரிக்கும் மகனாகப் பிறந்தவன் ஆவான். இன்றைய தஞ்சை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய பரந்துபட்ட பாண்டியப் பேரரசினை அவன் தனது தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டான். இவன் கி.பி 765 முதல் 790 வரை அரசாண்டான்.
பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்காகப் பெரும்படையுடன் வந்தான். காவிரியின் தென் கரையிலுள்ள பெண்ணாகடம் (இவ்வூர் தஞ்சைக்கு அருகில் உள்ளது) என்னும் ஊரில் கடும்போர் நடைபெற்றது. இறுதியில் பாண்டிய மன்னனே வெற்றி வாகை சூடினான். இதனால் கோபம் கொண்ட இரண்டாம் நந்திவர்மன் சேர மன்னன், கொங்கு நாட்டு அரசன் ஆகியோருடனும், ஆய்வேள் என்ற பொதிகைமலைத் தலைவனுடனும், தகடூர் அதிகமானுடனும் கூட்டினை ஏற்படுத்திக் கொண்டு போர் தொடுக்கலானான். இதிலும் பாண்டியரே வெற்றி கண்டனர். இப்போரில் கொங்குநாட்டு அரசன் கைதியாகப் பிடிபட்டான்.
நெடுஞ்சடையன் பராந்தகன் பாண்டிய நாட்டின் தென்பால் அமைந்துள்ள வேணாட்டின் மீது படையெடுத்துச் சென்று அங்கிருந்த யானைகளையும், குதிரைகளையும், பெருஞ்செல்வத்தினையும் கைப்பற்றினான். இவற்றுடன் வேணாட்டையும் கைப்பற்றினான். ஆய் நாட்டு அரசன், வேணாட்டு மன்னனுடன் உறவுவைத்து இருந்ததால் அம்மன்னனையும் நெடுஞ்சடையன் பராந்தகன் வெற்றி கண்டான். மேலும் முத்தரையர்களையும் வென்றான். இவ்வாறு ஒருவர்பின் ஒருவராக வென்று பல்லவர் கூட்டினை உடைத்தான். இதன் மூலம் இம்மன்னன் மிக வலிமையுள்ளவன் எனத் தெரிய வருகிறது. இவனது காலத்தில் பாண்டியரின் ஆட்சி திருச்சி, தஞ்சை, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இம்மன்னன் மற்றப் பாண்டிய மன்னர்களைப் போல் அல்லாது வைணவ நெறியைக் கடைப்பிடித்தான். திருமாலுக்கு என்று காஞ்சிவாய்ப் பேரூரில் கோயில் ஒன்றைக் கட்டினான். வைணவக் கோயில்களுக்கு நன்கொடைகள் அளித்தான். மதுரைக்குக் கிழக்கே ஆனைமலையில் விஷ்ணுவுக்குக் கோயில் அமைத்தான். கோயிலைச் சுற்றி அக்கிரஹாரங்களைக் கட்டி வேதியருக்கு இலவசமாக அளித்தான். வேற்று நாட்டிலிருந்து கிடைத்த செல்வங்களை எல்லாம் அறப்பணிக்கெனச் செலவிட்டான். கொடைகள் பல வழங்கிப் புகழ் பெற்றான். இவன் வைணவ நெறியைக் கடைப்பிடித்தாலும் சைவ சமயத்தாரைத் துன்புறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சடையன் பராந்தகன் சாசனங்களையும், கல்வெட்டுகளையும் வெளியிட்டு உயர்வடைந்தான். இவன் தனது ஆட்சிக்கு வந்த மூன்றாவது ஆண்டில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேள்விக்குடிச் செப்பேட்டினை வெளியிட்டான். இவன் ஜதிலா பராந்தகன், வரகுண மகாராஜா, மாறன் சடையன், நெடுஞ்சடையன் என்னும் பட்டங்களைப் புனைந்து கொண்டான்.
நெடுஞ்சடையன் பராந்தகனை அடுத்து, அவன் மகன் இரண்டாம் இராசசிம்மன் ஆட்சிக்கு வந்தான். இவன் இரண்டு ஆண்டுகள் மட்டுமே (கி.பி. 790-792) ஆட்சி புரிந்தான். இவனுடைய ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை
4.2.6 முதலாம் வரகுண பாண்டியன் ( கி.பி. 792-815)
பாண்டிய நாட்டின் அடுத்த மன்னனாக முதலாம் வரகுண பாண்டியன் ஆனான். இவன் இரண்டாம் இராசசிம்மனின் மகன் ஆவான்; நெடுஞ்சடையன் பராந்தகனின் பேரன் ஆவான். இவன் பல்லவ மன்னனான தந்திவர்மனைப் போரில் வென்றான். இதன் மூலம் தொண்டை நாட்டில் தென்பெண்ணை ஆறு வரையுள்ள பகுதிகளில் பாண்டியரின் ஆதிக்கம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் தஞ்சைப் பகுதியில் ஆட்சி செய்த முத்தரையரையும் வென்று அடக்கினான்.
இவன் சைவ நெறியைக் கடைப்பிடித்தான். இவனது தொண்டினைப் பற்றிப் பட்டினத்து அடிகளும், நம்பியாண்டார் நம்பியும் புகழ்ந்து பாடியுள்ளனர். அதோடு இல்லாமல் மாணிக்கவாசகப் பெருமான் புகழ்ந்து பாடும் பெருமையினையும் இவன் பெற்றுள்ளான்.
இவன் அறப்பணியிலும் சிறந்து விளங்கினான். சிராப்பள்ளி இறைவனுக்குத் திருவிளக்குகள் எரிப்பதற்கு நிவந்தமாக 125 கழஞ்சு பொன் அளித்தான். அம்பாசமுத்திரத்துக் கோயிலுக்கு 240 பொற்காசுகள் நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாக வழங்கினான். இவனுக்குச் சடையவர்மன், மாறன் சடையன் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவன் காலத்துக் கல்வெட்டுகள் சோழ நாடு முழுவதும் கிடைத்துள்ளன. இதை நோக்கும்போது இவனது ஆதிக்கம் சோழநாட்டிலும் பரவியிருந்தது என வரலாற்று ஆசிரியர் கூறுகின்றனர்.
4.2.7 சீமாறன் சீவல்லபன் (கி.பி. 815-862)
முதலாம் வரகுண பாண்டியனுக்குப் பின்னர் அவனது புதல்வனாகிய சீமாறன் சீவல்லபன் ஆட்சிக்கு வந்தான்.
சீமாறன் சீவல்லபன் விழிஞம் என்றும் ஊரில் சேர நாட்டு மன்னனை வெற்றி கொண்டான். விழிஞம் என்பது திருவனந்தபுரத்திற்கு அண்மையில் உள்ளது. இங்கு நடைபெற்ற போரில் சேரமன்னன் உயிர் இழந்தான்.
முதலாம் சேனன் என்னும் மன்னன் ஈழத்தை ஆண்டு வந்தான். அப்போது சீமாறன் சீவல்லபன் அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அங்கே உள்ள புத்த விகாரங்களிலிருந்த பொன்னால் ஆகிய படிமங்களையும் பிறபொருள்களையும் சூறையாடினான். அச்செல்வங்களைப் பாண்டிய நாட்டிற்கு எடுத்து வந்தான். தோல்வியடைந்த முதலாம் சேனன் பாண்டிய மன்னனுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். இதன் விளைவாகச் சேனனுக்கே பாண்டிய மன்னன் அவனது ஈழ நாட்டை வழங்கினான்.
சீமாறன் சீவல்லபன் ஆண்ட காலத்திலேதான் பல்லவ நாட்டை மூன்றாம் நந்திவர்மன் ஆண்டு வந்தான். அவன் ஒரு சிறந்த வீரனாக இருந்தான். தனது மூதாதையர்கள் பாண்டிய மன்னர்களிடம் தோல்வியுற்றதை மனதில் கொண்டு பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தான். இப்போரில் மூன்றாம் நந்திவர்மன் வெற்றி கொண்டான். இதன் விளைவாகப் பாண்டியரது நாடு தனது வடக்குப் பகுதியை இழந்து விட்டது. இப்போர் தெள்ளாறு என்னுமிடத்தில் நடைபெற்றது.
தெள்ளாற்றுப் போர் நடைபெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு குடமூக்குப் போர் நடைபெற்றது. குடமூக்கு என்பது இந்நாளில் உள்ள கும்பகோணத்தைக் குறிக்கும். இப்போரில் மூன்றாம் நந்திவர்மனையும் அவனுக்கு உதவியாக இருந்த கூட்டு அரசர்களையும் சீமாறன் சீவல்லபன் புறமுகுது காட்டி ஓடுமாறு செய்து வெற்றி பெற்றான். இவ்வெற்றியின் மூலம் பாண்டியனது பெயர் சற்று மேலோங்கியது.
சீமாறன் சிறிது காலம் கழித்துப் பல்லவ மன்னனான நிருபதுங்கவர்மனுடன் போர் புரிந்தான். இதில் நிருபதுங்கவர்மன் வெற்றி அடைந்தான். இதன் மூலம் பாண்டியன் சோழ நாட்டின் வட பகுதியை இழந்தான். இப்போர் அரிசிற்கரை என்னுமிடத்தில் நடந்தது.
சீவல்லபன் வடக்கில் ஓயாமல் போரில் ஈடுபட்டிருந்ததால் பாண்டிய அரியணையைக் கைப்பற்றுவதற்கு மாயப் பாண்டியன் என்பவன் சூழ்ச்சி செய்தான். அவன் இலங்கை வேந்தன் இரண்டாம் சேனனை அணுகி மதுரை மீது படையெடுக்குமாறு அவனைத் தூண்டினான். ஈழப்படை மதுரையைத் தாக்கி, சீவல்லபனை மதுரையை விட்டு ஓடுமாறு விரட்டியது என்று மகாவம்சம் கூறுகிறது.
சீமாறன் சீவல்லபனுக்குச் சடையன் மாறன் என்ற பெயரும் உண்டு. இவனது வரலாற்றைச் சின்னமனூர்ச் செப்பேடுகளும், தளவாய்புரச் செப்பேடுகளும் மேலும் சில கல்வெட்டுகளும் கூறுகின்றன.
4.2.8 இரண்டாம் வரகுண பாண்டியன் (கி.பி. 862-885)
சீமாறன் சீவல்லபன் இறக்கும்போது மதுரை மாயப்பாண்டியனின் ஆட்சியின் கீழ் இருந்தது. சீவல்லபனின் மூத்த மகன் வரகுணவர்மன் என்பவன் ஆவான். இவனே பிற்காலத்தில் இரண்டாம் வரகுண பாண்டியன் எனப்பட்டான். இவ்விரண்டாம் வரகுண பாண்டியன் பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனுடன் உறவு வைத்துக் கொண்டு பாண்டியப் பேரரசை மாயப்பாண்டியனிடமிருந்து மீட்டுக் கொண்டான். இதனால் பாண்டியருக்கும் பல்லவருக்கும் சிலகாலம் நட்புறவு நிலவியது.
இரண்டாம் வரகுண பாண்டியன் தன் தந்தை இழந்த சோழ நாட்டுப் பகுதியை மீண்டும் அடைய எண்ணி அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெற்றி கொண்டான். இதனால் அவனுக்குக் காவிரிக்கு வடக்கேயுள்ள இடவை என்னும் நகர் கிடைத்தது. இப்போரில் சோழ இளவரசனான ஆதித்த சோழன் இரண்டாம் வரகுண பாண்டியனை எதிர்த்துப் போர் புரிந்தும் அவனால் வெற்றி பெறமுடியவில்லை.
இவ்வாறு வெற்றி பெற்றதால் வரகுண பாண்டியனின் செல்வாக்கு உயர்வடைந்தது. இதனால் பல்லவ நாட்டிற்கு ஆபத்து வரும் என எண்ணினான். அபராசிதவர்மன் என்னும் பல்லவ மன்னன். எனவே அவன் பெரும்படையுடன் வரகுண பாண்டியனுடன் போர் புரியச் சென்றான். கங்க அரசன் முதலாம் பிருதிவிபதியும், சோழ இளவரசன் ஆதித்த சோழனும் பல்லவ மன்னனுக்கு உதவியாகச் சென்றனர். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்புறம்பயம் என்னும் இடத்தில் பாண்டியப் படைக்கும் பல்லவக் கூட்டுப் படைக்கும் இடையே போர் நடைபெற்றது. இப்போரில் கங்க அரசன் முதலாம் பிருதிவிபதி கொல்லப்பட்டான். ஆயினும் அபராசித வர்மனும், ஆதித்த சோழனும் போரில் வெற்றி பெற்றனர். இரண்டாம் வரகுண பாண்டியன் தோல்வியடைந்தான். தோல்வி அடைந்த வரகுண பாண்டியன் சோழ நாட்டில், தான் கைப்பற்றியிருந்த பகுதியை விட்டுவிட்டு மதுரைக்குத் திரும்பினான். இவ்வெற்றியால் மகிழ்ந்த அபராசிதவர்மன் ஆதித்த சோழன் தனக்குச் செய்த உதவிக்காக, அவனுக்குச் சோழ நாட்டில் உள்ள சில ஊர்களைப் பரிசாக வழங்கினான்.
இரண்டாம் வரகுண பாண்டியன் நிறைய அறப்பணிகளைச் செய்தான். இதற்குச் சான்றாக, இம்மன்னன் சுமார் 1400 பொற்காசுகளைத் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாள் வழிபாடு நடத்துவதற்கு நிவந்தமாக வழங்கினான். இதனால் இவன் திருச்செந்தூர் முருகனின் மீது பக்தி கொண்டிருந்தது தெரியவருகிறது.
4.2.9 பராந்தக பாண்டியனும் அவனது மகனும் (கி.பி. 885-920)
இரண்டாம் வரகுண பாண்டியனது இறுதிக் காலத்தில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இதில் அவனது தம்பி பராந்தக பாண்டியன் (கி.பி.885-900) ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான்.
பராந்தக பாண்டியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் வேணாட்டு அரசனை வெற்றி கொண்டான் என்று கூறப்படுகிறது. அதோடு கொங்கு நாட்டின் மீதும் படையெடுத்து வெற்றி கொண்டான்.
இவனது வெற்றிகளையும், அறச் செயல்களையும் தளவாய்புரச் செப்பேடுகள் வாயிலாக அறிய முடிகின்றது. இம்மன்னன் தேவதானங்களும், பிரமதேயங்களும், பள்ளிச் சந்தங்களும் அளித்து உயர்வடைந்தான்.
மூன்றாம் இராசசிம்மன்(கி.பி. 900-920), பராந்தக பாண்டியனுக்கும், சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன். இவன் ஆட்சிக்கு வந்தபின் தஞ்சை, கொடும்பாளூர் ஆகிய இடங்களை ஆண்ட மன்னர்களை வென்றான். இச்சமயத்தில் சோழர்கள் நன்கு வலிமை பெற்றிருந்தனர். சோழர்கள் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து வெற்றி பெற்றனர். இப்போருக்காகப் பாண்டிய மன்னன் இலங்கை அரசன் ஐந்தாம் காசிபன் உதவியை நாடியும் பயன் இல்லாமல் போயிற்று. இதன் காரணமாகப் பாண்டிய நாடு சோழர் வசமானது.
4.2.10 வீரபாண்டியன் (கி.பி.946-966)
இவன் மூன்றாம் இராசசிம்மனின் மைந்தன் ஆவான். இவன் தன் தந்தை இழந்த பாண்டிய நாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றுவதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்திருந்தான். அப்போது இராஷ்டிரகூட நாட்டை ஆண்டுவந்த மூன்றாம் கிருஷ்ணன் சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். தக்கோலம் என்னும் இடத்தில் நடந்த போரில் மூன்றாம் கிருஷ்ணன் சோழர்களை வெற்றி கொண்டான். மேலும் சோழ நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் வலுவிழந்த சோழர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் வைத்திருந்த பாண்டிய நாட்டைத் தொடர்ந்து பாதுகாக்க முடியாத நிலையில் இருந்தனர். இத்தருணம் பார்த்து மூன்றாம் இராசசிம்மனின் மைந்தன் வீரபாண்டியன் சோழர்களைப் போரில் தோற்கடித்து மதுரையை மீட்டுக் கொண்டான். ஆயினும் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் பகைமை ஓய்ந்த பாடில்லை. சோழ நாட்டை ஆண்டு வந்த சுந்தரசோழன் என்பவன் தன் மைந்தன் ஆதித்த கரிகாலனுடன் படையெடுத்துச் சென்று வீரபாண்டியனோடு சேவூர் என்னும் இடத்தில் போரிட்டான். கி.பி. 966இல் நடைபெற்ற அப்போரில் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனைக் கொன்றான். இப்போர் வெற்றிக்குப் பின்னர், மீண்டும் மதுரை சோழர்களின் கைவசம் வந்தது.
இதன் விளைவாகப் பாண்டிய நாடு கி.பி. 966 முதல் சோழ நாட்டுப் பேரரசின் ஒரு மண்டலமாக மாறியது. இது சோழ நாட்டு ஆளுநர்களால் நிருவாகம் செய்யப்பட்டுவந்தது. இத்துடன் முற்காலப் பாண்டியர் வரலாறு முடிவுற்றது எனலாம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I